இதழ் 58

ஐபிஎல் 2023க்கான புதிய விதிகள்

உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் எம்சிசி விதிகளுக்கு அமைய நடைபெறுவது வழமை. இருப்பினும் அவற்றிற்கு மேலதிகமாக சில விதிகள் உள்வாங்கப்படுவதும் உண்டு. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் தொடரில் மூன்று புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது; இருப்பினும் கடந்த ஆண்டுக்கான தொடரில் அதில் ஒரு விதி கைவிடப்பட்டது. அதே போல் இம்முறை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளிற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சில புதிய விதிகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக விளையாடும் பதினொருவர் அணியின் விபரம் நாணய சுழற்சியின் போது அணித் தலைவர்கள் தமக்கிடையே அணி விபரங்களை பகிர வேண்டும். ஆனால் இப்போது அணித்தலைவர் நாணய சுழற்சியின் பின்னர் தனது அணியில் மாற்றம் செய்யமுடியும். அத்துடன் அறிவிக்கப்படும் அணியில் விளையாடும் பதினொருவர் உட்பட மேலதிகமாக ஐந்து வீரர்கள் என 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்படும். அதாவது ஒரு அணி இரு 16 பேர் கொண்ட அணியினை தெரிவு செய்யும், பின்னர் நாணய சுழற்சியின் பின்னர் அவர்கள் முதலில் துடுப்பாடப் போகிறார்களா? இல்லை, பந்துவீசப்போகிறார்களா? என்பதை பொறுத்து இரண்டில் ஒரு அணியை அறிவிக்க முடியும். இதன் மூலம் நாணய சுழற்சியால் ஏற்படும் பாதிப்பை ஓரளவு நிவர்த்தி செய்ய முடியும். இதே போன்ற விதி தென்னாப்பிரிக்கா ரி20 லீக்கில் பயன்படுத்தப்பட்டு போட்டி முடிவில் நாணய சுழற்சியின் தாக்கம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது; ஆனால் அங்கு 13 வீரர்கள் அறிவிக்கப்பட்டு நாணய சுழற்சியின் பின் பதினொருவர் அணி அறிவிக்கப்பட்டது.

அடுத்த விதியானது ஏற்கனவே பிக்பாஸ் தொடரில் பயன்படுத்தப்படுகிற விதியாகும்: தாக்கம் செலுத்தும் வீரர் (Impact Player) விதி. அதாவது மேலதிகமாக அறிவிக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒரு வீரர் இனை பதினொருவர் அணியில் சேர்க்க முடியும். அணித்தலைவர், ஆட்டம் ஆரம்பிக்க முன்னதாகவோ, ஒரு பந்து பரிமாற்றத்தின் பின்னரோ மற்றும் ஒரு வீரர் ஆட்டமிழந்ததன் பின்னரோ மாற்றம் செய்யமுடியும். உதாரணமாக ஒரு துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தால்/ ஓய்வுபெற்றால், அந்த வீரரை இன்னோர் துடுப்பாட்ட வீரரால் மாற்றம் செய்யலாம். அந்த வீரர் துடுப்பாட முடியும் ஆனால் முதலில் தேர்வு செய்யப்பட்ட ஒரு பந்து வீச்சாளர் துடுப்பாடமாட்டார்; இதுவே ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசியதன் பின் மாற்றப்பட்டால் புதிதாக உள்ளே வருபவர் முழுமையாக நான்கு பந்து பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
அத்துடன் தாக்கம் செலுத்தும் வீரர்களாக இந்திய வீரர்கள் மட்டுமே இருக்க முடியும்; நான்கு வெளிநாட்டு வீரர்கள் பதினொருவர் அணியில் இடம்பெறவிடின் மட்டுமே தாக்கம் செலுத்தும் வீரர்களாக வெளிநாட்டு வீரர்கள் இருக்கமுடியும். மேலும் இந்த விதியை போட்டியின் எந்த நேரத்திலும் பயன்படுத்த முடியும்.

இவற்றை விட மேலும் சில விதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
• நோ-போல் மற்றும் வைட்-போல் என்பவற்றுக்கும் மேன்முறையீடு செய்ய முடியும்.
• ஏற்றுக்கொள்ள முடியாத விதமாக களத்தடுப்பாளர் அசைந்தால் உதிரி ஐந்து ஓட்டங்கள் உடன் அந்த பந்துவீச்சு நிராகரிக்கப்படும்.
• குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிடின் நான்கு வீரர்களே 30-யார் வட்டத்திற்கு வெளியே நிற்க முடியும்.

தாக்கம் செலுத்தும் வீரர் விதி தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் ஆஸி அணித் தலைவரும் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரும் ஆன ரிக்கி பாண்டிங், இவ் விதியால் ஏழாம் இலக்கத்தில் தேர்வு செய்யப்படுகின்ற தனியே துடுப்பாட்ட/ பந்துவீச்சு வீரராக பிரகாசிக்க முடியாத சகலதுறை வீரர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றார். ஏனெனில் போட்டியின் தன்மையை பொறுத்து பதினொருவர் அணியில் மாற்றம் செய்யமுடியும்.

இவ் மாற்றங்களின் செயற்பாட்டையும் இவற்றை எவ்வாறு அணிகள் பயன்படுத்தப் போகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

ஆடல் கலையே தேவன் தந்தது..

Thumi202121

ஆய்வு அரசர்கள்-2022

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 07

Thumi202121

Leave a Comment