மூன்றாம் உலகப்போர் என ஒன்று நடந்தால் அது நீருக்கானதாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. ஆம்! உலகமெங்கும் நீருக்கான போர் என்பது ஆரம்பித்துவிட்டது. தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரான கேப் டவுன் நகரம் நீர் வற்றிப்போன நகரமாக 2018 இல் அறிவிக்கப்பட்டது. காவிரியாறு தொடக்கம் நீருக்கான பிரச்சினைகள் இந்தியாவிலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்டு, ஆறுகள், மலைகள், குளங்கள், நிலத்தடி நீர் என இயற்கையின் அரவணைப்பில் இருந்த இலங்கையிலும் இப்போது தண்ணீருக்கான தகராறுகள் தலைதூக்கி வருகின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இந்துமா மன்றத்தால் நடைபெற்ற அமரர். கந்தையா நீலகண்டன் அவர்களின் நினைவுப் பேருரையில் பொறியியலாளர் ச.சர்வராஜா கலந்து கொண்டு யாழ்ப்பாண நீர் எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களையும் எமக்கான வாய்ப்புக்களையும் பற்றிய ஆழமான அதேநேரம் தெளிவான உரை ஒன்றை ஆற்றினார்.
நிலத்தடி நீர் வளத்தை நம்பிய யாழ்ப்பாணத்தின் நீர் நுகர்ச்சியில் மழை நீர் வீண் விரயமாவது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை குறிப்பிட்ட பொறியியலாளர் காணாமல் போயுள்ள யாழ்ப்பாண குளங்களை மீள அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார். சனத்தொகை அதிகரித்து வரும் சூழலில் எதிர்காலங்களில் நீருக்கான கேள்வி இன்னும் பன்மடங்காகும் எனக்குறிப்பிட்டவர் கடலோடு நாம் கலக்கவிடும் மழைநீரை சேமிக்கும் வழிகளை நாம் அமுல்ப்படுத்தினால் அதன் மூலமே எமது நீர்த்தேவைகள் முழுவதையும் பூர்த்தி செய்வதோடு, எஞ்சும் நீரை ஏற்றுமதியும் செய்யலாம் எனக் குறிப்பிட்டார்.
கைகளில் மழை நீரான வெண்ணெய் இருக்கிறது. நாங்கள் போத்தல் தண்ணீருக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். நீர் வளமேயில்லாத நாடுகளான அரபு நாடுகளும், சிங்கப்பூர் போன்ற நாடுகளும் கூட அடுத்த ஐம்பது வருடத்திற்கான நீர்த் தேவைக்கான திட்டங்களோடு இருக்கும் போது, எல்லா வளமும் இருந்தும் எந்தவித திட்டத்தோடும் நாங்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
அரசு செய்ய வேண்டிய பல வேலைகளை இப்போது நாட்டில் தொண்டு நிறுவனங்களும், தனியார் அமைப்புக்களும் தான் செய்து கொண்டிருக்கின்றன. எனவே மழை நீரை கடலோடு கலக்க விடாமல் சேமிக்கும் திட்டங்கள் பற்றிய உரையாடல்கள் அதிகமாக நடக்க வேண்டும். இதன் முக்கியத்துவம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். மாரி காலத்திற்கு முன்பே குளங்கள் தூர்வாரப்பட வேண்டும். தேவையான இடங்களில் புதிய குளங்களுக்கான முன்மொழிவுகளும் துறைசார் வல்லுநர்களினால் பரிந்துரைக்கப்பட வேண்டும். பல்வேறு தளங்களில் இயங்கும் அமைப்புக்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் இத்திட்டத்திற்காக உழைக்க முன்வர வேண்டும் என்பதேயே தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களோடு துமி கேட்டுக்கொள்கிறது.
நீர் இன்றி அமையாது நீர்..
1 comment