இதழ் 59

சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை

இலங்கைப் பூர்வீக வரலாற்றின்படி எமது சமுகம் தமக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்து தன்னிறைவானவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அவரவர்கள் செய்த தொழில்களை இன்று “முயற்சியாண்மை” என பிரத்தியேகமான துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வியாபார முயற்சிகள் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்துவருகின்றது. இருப்பினும் வேறு வளர்ந்துவரும் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது மிகக் குறைந்தளவே இவர்கள் இருந்துவருவது குறைபாடாக உள்ளது. தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் ஆவார். அத்தொழில் முயற்சியில் வரக்கூடிய சிக்கல்களுக்கு தம் துணிகர முயற்சி மற்றும் யோசனையைக் கொண்டு செயல்படும் பொறுப்புடையவராக இவர் திகழ்கிறார். இவரை முயற்சியாளர் என்றும் கூறலாம். தொழில்முனைவோர் ஆத்மார்த்தமான விருப்பத்துடன் கூடிய தலைவராக இருந்து நிலம், தொழிலாளி, மற்றும் முதலீடு ஆகியவற்றை இணைத்து சந்தையில் புதிய பொருட்கள் அல்லது சேவைகளை தொடர்ந்து உருவாக்குகிறார். ஆங்கிலத்தில் தொழில் முனைவோர் என்ற பதமானது தனது அதீத முயற்சியின் மூலம் நிறுவனத்தை நடத்தி செல்லும்போது ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் பொறுப்பானவரே தொழில் முனைவோர் எனப்படுகின்றது. அதாவது முயற்சியாளர் என்பதைக் குறிக்கிறது. 1800 ஆம் ஆண்டில் பிரெஞ்சு பொருளாதார வல்லுநர் ஜீன் பப்டைசடே தொழில் முனைவோர் என்ற சொல்லுக்கு புது விளக்கம் அளிக்கலாம் என்று நம்பினார். யார் ஒருவர், குறிப்பாக ஒரு ஒப்பந்ததாரர், ஒரு நிறுவனத்தை எடுத்து நடத்துகிறாரோ தொழிலாளிக்கும் முதலீட்டிற்கும் ஒரு பாலமாக இருக்கிறாரோ அவரே தொழில் முனைவோர் என்று அவர் கூறுகிறார். முயற்சியாண்மை தொடர்பான கோட்பாட்டின் வரைவிலக்கணங்கள் அபிவிருத்திப் போக்கில் இருந்து காலத்துக்குக் காலம் பல வெளியிடப்பட்டுள்ளன. முயற்சியாளர் என்பது பிரேஞ்சு மொழிச்சொல்லின்; (Entrepreneur) என்பதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. பிரேஞ்சு மொழியியல் அறிஞரான Cantllon என்பவர் முயற்சியாளர் என்ற எண்ணக்கருவினை அறிமுகப்படுத்தும் போது புதிது புனைபவர்இ முதல் உற்பத்தியளர்இ தூண்டுபவர்இ இடர் தாங்குபவர்இ உடமையாளர் என விளக்குகின்றார். சில வேளை முகாமையாளர் என்ற பதமும் கையாளப்படுகின்றது.
முயற்சியாளர் சந்தை வாய்ப்புகளைக் கண்டறிந்து தமது மூலதனத்தைத் திறம்பட பயன்படுத்துகிறார். அது மட்டுமல்லாது தன் பகுதியில் நடைபெறும் மாற்றங்களிலும் பங்கெடுத்துக்கொள்கிறார். முயற்சியாளர்கள் தன்னம்பிக்கையுள்ளவர்களாகவும் தொழில் சார்ந்த சவால்கள் மற்றும் நிதிச் சவால்களை எதிர்கொண்டு வாய்ப்புகளைப் பெறுவதில் ஆர்வமுடன் இருப்பவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

முயற்சியாண்மை என்ற சொல், வியாபாரத்திற்கான புதிய வாய்ப்பைக் கண்டுபிடித்து, அந்த வாய்ப்பைப் பயன்படுத்த வளங்களைத் தேடி, ஒன்று சேர்த்து, வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திசெய்து, இலாபம் தேடுவது என்ற நீண்ட விளக்கம் கொண்டது. சந்தை பொருளாதாரங்களில் முயற்சியாண்மை ஏற்படுவது இயற்கை, ஏனெனில் அங்குதான் அதனை வளர்த்தெடுப்பதற்கான சூழல் நிலவுகிறது. முயற்சியாண்மை ஆபத்து நிறைந்தது, புதிய தொழில்கள் தோல்வியடைவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே ஆபத்தை தாங்குவது தொழில் முனைவோர்களின் முக்கிய திறன். புதிய கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்துவது, தன்னம்பிக்கை, ஊக்கத்துடன் உழைத்தல், இலட்சியத்தை அடையும் தீவிரம், இவை எல்லாம் தொழில் முனைவோருக்குத் தேவை. சிறந்த தொழில் முனைவுக்கு சரியான வியாபார திட்டமிடல் அவசியம். நுகர்வோரின் தேவையைக் கண்டறிவதும், அதைப் பூர்த்தி செய்ய புதிய வியாபார அணுகு முறையை வடிவமைத்து செயல்பட திட்டமிடல் அவசியம். எனவே, ஒரு புதிய வியாபாரத்திற்கான ஆதி முதல் அந்தம் வரையான வியாபாரத் திட்டம் தேவை.

ஒவ்வொரு வியாபாரத் திட்டத்திலும் முயற்சியாளரின்;, புதிய வியாபாரத்தின் சிறப்புகள் இருந்தாலும், எல்லா வியாபாரத் திட்டத்திலும் சில பொது அம்சங்கள் இருக்கின்றன. திட்டத்தின் சுருக்கம், வியாபாரப் பொருள் அல்லது சேவையின் விபரம், தொழில் திட்டம், எதிர்கால நிதி நிலை மற்றும், தேவைப்படும் கடன் அல்லது முதலீட்டு அளவு, பொருள்ஃசேவை சந்தைப்படுதுவது பற்றிய குறிப்புகள் அவசியமாகும். கடன் அல்லது வெளியிலிருந்து முதலீடு வேண்டும் என்றால் அதற்கான அறிக்கை தெளிவாக இருக்கவேண்டும். கடனுக்கான வட்டியை எந்த காலத்தில் எவ்வளவு செலுத்த முடியும், வெளி முதலீட்டிற்கு எந்த காலத்திலிருந்து ஈவுத் தொகை கொடுக்கப்படும் என்ற விபரங்களும் தேவை. பொருளாதாரங்கள் வளர முயற்சியாண்மை அவசியம். குறிப்பாக சிறு முயற்சியாண்மை தான் அதிக வேலைவாய்ப்பையும், உற்பத்தியையும் கொடுக்கின்றன. பலருக்கு முயற்சியாண்மை திறன் இருப்பதும், அதனை கண்டறிந்து வளர்ப்பதும், அதற்கான சூழலை ஏற்படுத்துவதும் சமூக பொருளாதாரத முன்னேற்றத்திற்கு முக்கியம். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முயற்சியாண்மையானது பிரதான பங்களிப்பினை வழங்குகின்றது. குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய, நடுத்தர கைத்தொழிலினூடாக பாரிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

கைத்தொழில் அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கல் ஆகிய குறிக்கோள்கள் முயற்சியாண்மையின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளன. ஆகவேதான் முயற்சியாண்மையானது கைத்தொழில் அபிவிருத்திக்கான உள்ளீடாக அமைகிறது. அதன் வெளியீடாக பொருளாதார அபிவிருத்தி, வேலையற்ற இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கல், தலா வருமானத்தை அதிகரித்தல், உயர்ந்த வாழ்க்கைத் தரம், அதிகரித்த தனிநபர் சேமிப்பு, வரி வருமானம் மற்றும் சமமான பிரதேச அபிவிருத்தி என்பனவற்றைப் பெற முடியும். முயற்சியாண்மையானது புதிய வணிகங்களைத் தோற்றுவிப்பதனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றது. இந்நிலைமை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும். குறிப்பிட்ட வணிகத்தின் அல்லது துறையின் உருவாக்கமானது அது சார்ந்த ஏனைய வணிகங்களுக்கு அடித்தளமிடுவதுடன் அது மேலும் பொருளாதாரத்திற்கு வலுவூட்டும். உதாரணமாக இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்தின் அறிமுகமானது அதனுடன் இணைந்த தகவல் அழைப்பு மையம், வலையமைப்பு மற்றும் மென்பொருள், வன்பொருள் வழங்குனர் சேவைகள் என்பன தழைத்தோங்க வழிவகுத்தது. மிக முக்கியமாக தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஏனைய ஏராளமான துறைகள் இன்னும் நன்மையடைகின்றன.

முயற்சியாண்மையானது நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பங்களிப்பு செய்கின்றது. முயற்சியாளர்களினால் அறிமுகம் செய்யப்படும் புதிய கண்டுபிடிப்புகள், மேம்படுத்தப்பட்ட பொருட்கள், சேவைகள் என்பன புதிய சந்தையை உருவாக்கவும் அபிவிருத்திக்கும் வருமானத்தை அதிகரிக்கவும் துணை புரிகின்றன. அரசினால் இத்தேசிய வருமானம் ஏனைய பின்தங்கிய துறைகளிலும் மனித மூலதனத்திலும் முதலீடு செய்ய உதவுகின்றது. எவ்வாறு முயற்சியாண்மையானது பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துகின்றதோ அதேபோல் சமுகமாற்றத்தினை உருவாக்குவதற்கும் காரணமாய் அமைகின்றது. சமூக மாற்றத்திற்கான முயற்சியாளர்களை பிரதேச மட்டத்தில் இனங்கண்டு வலுவூட்டுவதன் மூலம் முயற்சியாண்மையினூடாக சாதகமான சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் பொருளாதாரத்திற்கும், உள்நாட்டு, தேசிய மற்றும் பிராந்திய ரீதியான, சமூகப் பிரச்சினைகளுக்கும் புத்தாக்கத் தீர்வுகளை வழங்குகிறது. சமூக முயற்சியாண்மை கொள்கை வகுப்பாளர்களுக்கும், அக்கறை செலுத்துபவர்களுக்கும் நன்மையளிப்பதுடன் சமூக மற்றும் சூழல் முறைமையையும் பலப்படுத்துகிறது. மேலும் முயற்சியாளர்கள் சமூக அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்தல் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதினூடாக மேலதிக சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றனர். இதற்கு உதாரணமாக பில் கேட்ஸ் போன்ற பிரசித்தி பெற்ற முயற்சியாளர்கள் தமது செல்வத்தினை கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் போன்ற நல்ல விடயங்களுக்காக செலவு செய்வதனை இங்கு குறிப்பிடலாம்.

இன்று இலங்கையைப் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தொழிலின்மை என்பது பாரிய சவாலாக உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2018 ஆம் ஆண்டறிக்கையின்படி தொழிலின்மை வீதமானது 4.2 ஆகக் காணப்படுவதுடன் வயதினடிப்படையில் நோக்கும் பொழுது 15-19 வயதுப் பிரிவினரின் தொழிலின்மை வீதம் 21.1 ஆகவும் 20-29 வயதுப்பிரிவினரிடையே 13.5 வீதமாகவும் காணப்படுகின்றது. இதன் மூலம் துடிப்புள்ள ஒரு இளம் சமுதாயம் வேலையற்ற நிலையில் இருப்பதனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். அதேவேளை பாலின அடிப்படையில் நோக்குவோமாயின் ஊழியர் படையிலுள்ள ஆண்களின் தொழிலின்மை வீதமானது 2.9 ஆக காணப்படுவதுடன் பெண்களின் தொழிலின்மை வீதமானது 6.5 ஆகவும் காணப்படுகின்றது. இங்கு பெண்களின் வேலையின்மையானது பாலின சமத்துவமின்மையினை ஏற்படுத்துவதுடன் பெண் முயற்சியாளர்களை உருவாக்குவதன் தேவையினை உணர்த்துகின்றது. ஆகவே முயற்சியாண்மையினை ஊக்குவித்து முயற்சியாளர்களை உருவாக்குவதன் ஊடாகவே வேலையின்மை வீதத்தை குறைக்க முடியும்.
முயற்சியாண்மையினை ஊக்குவிக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எண்டர்பிரைஸ் சிறிலங்கா எனும் திட்டத்தை முயற்சியாண்மை சமூகத்தை நிறுவுவதற்கான தூரநோக்குடன் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறிய நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கமும் அவற்றை மேம்படுத்தலும், விவசாய சமூகத்தை வலுப்படுத்தலும் மற்றும் வறுமையை ஒழித்தலும், இளைஞர் மற்றும் யுவதிகளை வலுப்படுத்தல், ஏற்றுமதியை மேம்படுத்தலும் விநியோக சங்கிலியை விருத்தி செய்தல் மற்றும் சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்தல் ஆகிய குறிக்கோள்களை அடைய எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 100,000 முயற்சியாளர்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். உள்நாட்டு முயற்சியாளர்களை உலக சந்தைக்குள் நுழைவதற்கான இயலுமையை வழங்குவதற்காக தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினூடாக ஆலோசனையையும் வழிகாட்டலையும் வழங்குகின்றது. எவ்வாறாயினும் 2018ம் ஆண்டின் உலக முயற்சியாண்மைச் சுட்டியின் பிரகாரம் இலங்கை 137 நாடுகளிடையே 90வது நிலையில் உள்ளது. இச்சுட்டியானது 14 உபகூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இவற்றில் அதிகூடிய பங்களிப்பை 95 வீதத்தால் உற்பத்தி புத்தாக்கமானது வழங்குவதுடன் ஆகக் குறைந்த பங்களிப்பை தொழிநுட்ப உறிஞ்சல் 5 வீதமாகவும் வழங்குகின்றது. எனவே இலங்கை அரசானது முயற்சியாண்மை செயற்பாட்டில் தொழிநுட்பரீதியான ஆலோசனைகளையும் வளங்களையும் வழங்குவதனூடாக இச்சுட்டியில் மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.

சுயமுயற்சியாண்மையானது ஒரு சிறந்த வியாபார முயற்சியாகவே என்றும் கருதப்படுகின்றது. இது எந்த வயதானாலும் முழு சவால்களையும் மற்றும் ஆபத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் தைரியத்தினைக்கொடுக்கும். கடினமாகவும் மேலதிகமாகவும் தமது நேரத்தினைப் பயன்படுத்தி உழைப்பவர்களே அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதுபோல இங்குள்ளவர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி நிதியைக் கையாளுதல், முடிவெடுக்கும் சக்தி, புதிய எண்ணங்களை பரிட்சிப்பதற்கான சுதந்திரம் இவை அனைத்துக்கும் மேலாக சுயதிருப்தி ஆகியன நாம் சுயமாகத் துவங்கும் வேலையில் அல்லது தொழிலில் கிடைக்கும் நன்மைகளாகும். இன்னொருவருக்கு கீழே வேலை பார்க்க விரும்பாத ஒருவருக்கு இந்த தொழில் முயற்சியாண்மை ஒரு இலகுவான விடயமாக இருக்கும். ஏனெனில் ஒரு வெற்றிகரமான முயற்சியாளன் தனக்கு விரும்பிய பல நடவடிக்கைகளை, மாற்றங்களை மற்றும் வளர்ச்சியை செய்யக்கூடியவர்களாக இருப்பர்.இன்னும் எமது கண்ணுக்கு தெரியாத பல காரணங்கள் தொழில் முயற்சியாண்மையின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்கின்றன. அதில் முக்கியமானதொன்று ஒருவர் எந்தவித அச்சமும் இன்றி துணிவுடன் தோல்வியே இல்லாமல் திட்டமிடலுடன் எடுக்கப்படும் நடவடிக்கைகளாகும். அதேநேரம் தொழில் முயற்சியாளர் அவருடைய வியாபாரம் தொடர்பாக பரிபூரண விழிப்பும் மற்றும் தெளிவும் கொண்டிருத்தல் மிக முக்கியமாகும். சிறுவியாபாரத்தினை துவங்குவதாக இருந்தாலும் அந்த வியாபாரத்தின் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்கள், நிதித்தகவல் நிலவரங்கள் எம்மிடமுள்ள வரவுசெலவுத்திட்டம், நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆபத்துக்கள் போன்றவற்றுடன் இன்னும் தொடர்புடைய பல விடயங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியமாகும்.

முயற்சியாண்மையானது பொருளாதாரமொன்றில் முக்கியத்துவம் பெறுவதாக அமைகின்றது. நாட்டில் பயன்டுத்தப்படாமல் காணப்படும் வளங்களை உற்பத்தித்துறையில் உட்புகுத்தி வினைத்திறனாக செயற்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தலாம். முதலாளித்துவ பொருளாதாரமொன்றில் தனியுரிமையின் செல்வாக்கினை தடுத்து போட்டி நிலைமைகளை உருவாக்கி அதன் மூலம் பொருளாதாரத்தினை மேம்படச் செய்யலாம், ஊழியச் செறிவுடைய உற்பத்தியினை அதிகரிக்கச் செய்வதன் மூலம் அதிகளவான வேலைவாய்ப்பு வசதிகளை வழங்கல், நாட்டில் பல்வேறு பிரதேசங்களுக்கிடையில் சிறிய அளவில் காணப்படும் வளங்களை உற்பத்தித் துறையில் ஈடுபடுத்தல், வரையறுக்கப்பட்ட சந்தையையுடைய வியாபார செயற்பாடுகளில் நிறுவன கருமங்களை செயற்படுத்தல், அரசாங்கத்தின் மாற்றமடையும் பொருளாதார கொள்கைக்கு ஏற்ப இசைவான சிறியளவான நிறுவனங்களின் செயற்பாடுகளை உறுதிப்படுத்தல், பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் பாதுகாத்தல், அந்நியச் செலாவனியை குறைந்தளவு பயன்படுத்தும் நிறுவன கருமங்களை விருத்தியடையச் செய்தல், குறைந்தளவு மூலதனத்துடன் வியாபார முயற்சிகளை உருவாக்கல், சிறிய நடுத்தர நிறுவனங்களின் செயற்பாட்டிற்கு அரசினால் வழங்கப்படும் உதவிகளையும் ஊக்குவிப்புக்களையும் சிறந்த முறையில் பயன்படுத்தல், உள்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் துறைகளை விருத்தியடையச் செய்தல், பேரளவு உற்பத்தி நிலையங்களை நிறுவுதலுக்கு அடிப்படையை வழங்குதல்.

மூலதனப்பற்றாக்குறை, தொழில்நுட்பம் பற்றிய பற்றாக்குறை, சந்தை சம்பந்தமான சாத்திய எண்ணக்கருயின்மை, சந்தை பற்றிய பழக்கமுடையவரின் பற்றாக்குறை, வியாபாரம் பற்றிய அறிவின்மை, ஊக்கப்படுத்தல் இன்மை, நேர அழுத்தம் அல்லது குழப்பமான நிலை, சட்டஒழுங்கு விதிகளின் இறுக்கமின்மை, தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் இறுக்கமான தன்மை என்பன ஒரு முயற்சியாண்மைக்கு தடையாக அமைந்திடினும் மேலும் சில பிரச்சினைகளும் காணப்படுவதனை நோக்கலாம்.

முகாமைத்துவ பிரச்சினை அல்லது குறைபாடு என்ற வகையில் முயற்சியாளனுடன் நேரடியாகத் தொடர்புபட்ட பிரச்சினையே முகாமைத்துவ பிரச்சினையாகும். அதாவது முயற்சியாளன் குறித்த சந்தை வாடிக்கையாளரை அடையாளம் காணமுடியாமை. விலையிடல் உபாயங்களை தேர்ந்தெடுப்பதில் போதிய அறிவின்மை காணப்படல். வியாபார அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் பகிர்ந்தளிக்க முடியாததுடன் எதிர்காலம் தொடர்பான போதிய திட்டமிடல்களை செயற்படுத்தாமை என்பன முகாமைத்துவ குறைபாடுகளுக்கு இட்டுச் செல்பனவாக அமைகின்றன. போதிய நிதி வசதியின்மையும் நிதி நிறுவனங்களால் தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்படும் நிதியானது எல்லா முயற்சியாளர்களை சென்றடையாமையும் காணப்படுகின்றது. இதனால் நிறுவனங்கள் நிதிப்பிரச்சினையை எதிர்கொள்கின்றன. சந்தைப்படுத்தல் பிரச்சினை என்று கூறும் பொழுது சிறிய உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை தளம்பல் அடைவதனாலும் அவற்றிற்கான போட்டிப் பொருட்கள் அதிகளவில் காணப்படுவதனாலும் இம்முயற்சியாளர்களின் உற்பத்தி முயற்சிகள் பாதிப்படைகின்றன.

வணிகத்தில் புதிதாக நுழைபவர்கள் உத்வேகம் பெற அதற்குரிய வழிகாட்டிகளைப் அவதானிக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு தொழில் தலைவர்களின் வெற்றிக் கதைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வழிகாட்டிகளைக் கொண்டிருக்க, ஒருவர் அவர்களை தனிப்பட்ட முறையில் அறியாமல் இருப்பது சிறப்பானது. எழுச்சியூட்டும் கதைகள் மற்றும் சுயசரிதைகளைப் படிப்பது இவ்வர்த்தகத்தில் உண்மையான பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைகளில் ஒன்றாகும். உண்மையில், ஒரு நபர் கல்வியில் இருந்து கற்றுக் கொள்ளும் அனைத்து கோட்பாடுகளையும் விட வெற்றிகரமான தலைவர்களைப் படிப்பதன் மூலம் அதிக தகவல்களைச் சேகரித்து அறிவைப் பெறலாம்.

எனவே, வீழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, தனிநபர் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முயற்சியாண்மை மிகச் சிறந்த வழி என்பதை இந்தக் கட்டுரை பரிந்துரை செய்கிறது. ஆழமறிந்து காலை விட்டால் அதிக இலாபங்களைப் பெறலாம்.

Related posts

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரபலங்கள்

Thumi202121

இலங்கையில் மிகப்பெரிய வெளிநோயாளர் பிரிவு

Thumi202121

கீரிமலையில் நாவலர்

Thumi202121

Leave a Comment