இதழ் 59

பரியாரியார் Vs அய்யர் – 08

பங்குனி உத்திரம் நடந்து மூன்று நாட்கள் கடந்து விட்டது. ஆனால் சரோஜா அன்று நடந்தது எதையும் பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை. தங்கள் காதல் பரிமாறப்பட்ட சந்தோசத்தைக் கூட அந்த ஜோடிகளால் கொண்டாட முடியவில்லை. தாயிடம் முறையாக அகப்பட்டு விட்டோம் என்பதை உணரமுடிகிறது. ஆனால் தாய் அது பற்றி எதுவுமே கேட்கவில்லை. மாறாக தங்களையும் தங்கள் காதலையும் காப்பாற்றியிருக்கிறாள்.

இந்தக் குழப்பங்களிலிருந்து விடுபடாவிட்டால் கௌசல்யாவுக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது. நான்காம் நாள் காலை மரக்கறி வாங்க சந்தைக்குச் செல்ல ஆயத்தமான தாயுடன் தானும் செல்வதற்கு கௌசல்யா புறப்பட்டாள். எதற்காக கௌசல்யா வருகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாதளவிற்கு சரோஜா குழந்தையில்லைத்தானே.

“நீ ஆசைப்பட்டது நடக்கணும் என்டா கொஞ்சம் பொறுமையா இரு. என்னை நம்பு. மற்றபடி இப்ப எதுவும் கேக்காதே. “

என்று சொல்லிவிட்டு கௌசல்யாவை விட்டு விட்டுத் தனியாகவே சந்தைக்கு சென்றாள் சரோஜா. குழப்பம் தீரா விட்டாலும் அம்மா தந்த நம்பிக்கை அப்போது அவளுக்கு போதுமாய் இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையோடு தான் அவள் ஐந்து ஆண்டுகள் கடக்க வேண்டுமென்று அவளுக்கு அப்போது தெரியவில்லை. இடையில் கௌசல்யாவின் பிடிவாதத்தால் பரதன் தன் பெற்றோருக்கும் சொல்லி சம்மதத்தை வாங்கியிருந்தான். ஆக இன்றுவரை இவர்களின் காதல்கதை தெரிந்தவர்கள் என்றால் கௌசல்யாவின் அம்மா சரோஜா, பரதனின் அம்மா பரமு, பரதனின் அப்பா பரியாரியார். இந்த மூவருக்கும் தான் தெரியும்.

கொழும்பு கம்பஸ்ஸில் கொம்புயூட்டர் படிப்பு கிடைச்சதால கௌசல்யா அங்க போனதால பரதன் அவளை இப்ப அடிக்கடி பார்ப்பதில்லை. அதாலயும் தான் பரியாரியார் தான் போகாம பரதனை ஆச்சிக்கு வைத்தியம் பார்க்க அனுப்பி வைத்தவர். ஆச்சிக்கு உடல்நிலை சரியில்லாததால் கௌசல்யா வந்திருக்கிறாள் என்பது பரியாரியாருக்கு தெரிந்திருந்தது. ஆச்சியை மருத்துவம் பார்க்கப் பரியாரியார் போகாததற்கு அவருக்கும் உடம்பு சரி இல்லாததும் காரணம் தான் என்றாலும் நீண்ட நாட்களின் பின்னர் கௌசல்யாவை பார்க்கட்டும் என்றுதான் பரியாரியார் பரதனை அனுப்பி வைத்திருந்தார்.

அங்கே அய்யர் வீட்டில் நீண்ட நாட்களின் பின்பு அந்த கண்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. நான்கு கண்களும் குளமாகிவிட்டன. ஆச்சியைப் பார்க்க வந்தவர்கள் யாரும் நல்லவேளை இவர்களை பார்க்கவில்லை. ஆச்சிக்காக கௌசல்யா அழலாம்; வைத்தியம் பார்க்க வந்த பரதன் அழுவது தான் மூன்றாம் ஆளுக்கு அதிசயமாகத் தெரியும். பிறகு அந்த அழுகைக்கு ஆயிரம் கதை கட்டவென்றே ஊரில் ஒரு கூட்டம் இருக்கிறது. நல்லவேளை, ஒருவரும் பார்க்கவில்லை.

பரதனால் நீண்ட நேரம் அய்யர் வீட்டில் இருக்க முடியவில்லை. இவ்வளவு நாளாக சேமித்து வைத்த காதலையெல்லாம் கௌசல்யாவிடம் கொட்டித் தீர்த்து விட வேண்டும் போல் இருந்தது. ஆனால் சாதி வெறி பிடித்த ஊர்ச்சனத்திடம் இப்போது பிடிபட்டு விட்டால் தன் காதலை தானே குழிதோண்டி புதைப்பது போலாகிவிடுமென்பதால் அமைதியாக இருந்தான். வந்த வேலையைப் பார்த்து விட்டு விரைவாக வெளியேறினான். அவன் உடம்பு தான் வெளியேறியதே தவிர உயிர் அங்கே தான் இருந்தது.

அந்த இறுகிய மனத்தோடும், நனைந்த விழியோடும் வந்தவனைப் பார்த்துவிட்டுத்தான் இயலாமல் வாங்கில் படுத்திருந்த பரியாரியார் இந்த பழைய கதைகளை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களும் நனையத் தொடங்கின.

அப்போது படலையடியில் ஒரு ஓட்டோ வந்து நின்றது. மகிழ மரக் கொப்பை வெட்ட மகேந்திரம் அனுப்பின ஆட்கள் வந்திருப்பதாக நினைத்தாள் பரமு.

ஆனால் ஆட்டோ அனுப்பியது மகேந்திரம் அல்ல! அய்யர்…!

ஓட்டோக்காரன் சொன்னது எல்லோரையும் தூக்கிவாரிப் போட்டது.

“ஆச்சிக்கு சேடம் இழுக்குதாம்… ஐயா உங்களை கூட்டிட்டு வரச் சொன்னார்..”

அதிரும்….

Related posts

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -03

Thumi202121

வெந்து தணிந்தது நாடு

Thumi202121

கவிஞர் முல்லையின் ‘கண்ணீரில் கரைந்த தேசம்’ : ஓர் அறிமுக நோக்கு

Thumi202121

Leave a Comment