இதழ் 59

கவிஞர் முல்லையின் ‘கண்ணீரில் கரைந்த தேசம்’ : ஓர் அறிமுக நோக்கு

இளம் எழுத்தாளர், இளவல் சதீஸ் முருகையா அவர்கள், எழுத்தில் புதுமைகளைப் புகுத்தும் எழுத்தாற்றல் கைவரப்பெற்ற ஆசிரியராகத் திகழ்கின்றார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை: திரியாய்க் கிராமத்தின் பாரம்பரியத்தில் தோன்றியவர். ஆயினும் போர்ச்சூழல் தந்த இடப்பெயர்வினால், வன்னி மண்ணில் பிறந்து வளர்ந்தவர். வன்னி மண் பலவிதத்திலும் இவருக்குப் பல அனுபவங்களையும், ஆளுமைகளையும் வழங்கியுள்ளது. சிறுவயதிலிருந்தே பல ஆற்றல்களையும் பெற்று வளர்ந்து வருகின்றார். சிறப்பாக எழுத்தாற்றல் மிக்க இவர், அதில் தன்னை ஈடுபடுத்திச் சிறப்பான படைப்புக்களை எழுதுபவர். பள்ளிப் பருவத்திலிருந்தே நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகியவற்றை எழுதத் தொடங்கியவர். இன்று இளைஞனாக இளந்துடிப்புடன் புதியபுதிய உத்திகளைக் கைக்கொண்டு பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றார்.

அண்மையில் இவர் ‘ஆறிப்போன காயங்களின் வலிகள்” (2021) என்ற கவிதை நூலையும், ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடு” (2022) என்ற ஆய்வுக் கட்டுரை நூலையும் எழுதியுள்ளார். இதில் ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடு” என்ற ஆய்வுநூல் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா கடந்த 25.06.2022ஆம் திகதி யேர்மனி, டோட்முண்ட் நகரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் சதீஸ் முருகையா அவர்கள் மெய்நிகர்வழியாகப் பங்குகொண்டு கண்ணுற்றதோடு, ஏற்புரையினையும் வழங்கியிருந்தார். இவ்விழாவில் இவரின் ‘ஆறிப்போன காயங்களின் வலிகள்” என்ற கவிதை நூலின் பார்வையும், அறிமுகமும் இடம்பெற்றமை குறிப்பிடக்கூடியதாகும்.

இவ்வரிசையில் இவரால் எழுதப்பட்ட ‘கண்ணீரில் கரைந்த தேசம்” என்ற நாவல் பெரும் சிறப்புக்குரியதாகும். இந்நூலினையும் ‘யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்” மூலம் வெளியீடு செய்வதற்கு முன்வந்த ஆசிரியருக்கு மனம் மகிழ்ந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நாவல் இலங்கைத் தேசத்தில் வாழ்ந்த தமிழ்மக்களின், விடிவை நோக்கிய நீண்ட நெடிய போராட்டப் பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களின் வரலாற்று நிகழ்வுகளை, நிழலாக இருந்து உண்மைகளைக் கூறும் கதையாக அமைந்துள்ளது. பகலவன் ஒளியில் பகீரெனத் தெரியும் வெளிச்சம்போல் இந்நாவலும் நடந்தவற்றைத் தெளிவாக எடுத்துக்கூறும் கதையாக அமைந்துள்ளமை மிகச்சிறப்பானதாகும்.

இந்நாவல் முழுமையும் ஒரு கதை சொல்லியின்மூலம் சொல்லப்படும் கதையாக உருவாக்கம் பெற்றுள்ளது. போர்க்காலச் சூழலில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறிய வயது மாணவனே கதை சொல்லியாக உள்ளான். அந்த மாணவன், தான் நடந்து – கடந்து வந்த பாதைகளில் நடந்தவைகளையும், கண்டவைகளையும், கேட்டவைகளையும் தானே சொல்லுவதாகவும், தன்னுடனும், மற்றவர்களுடனும், அக்கம்பக்கத்தில் சேர்ந்து கதைத்தவர்களின் உரையாடல்களையும் விளம்பி, நாவலை இறுதிவரை நகர்த்தியிருப்பது புதுமையும், சிறப்புமாகும்.

போர்க்காலச் சூழலில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைகளைச் சொல்லும் தன்மையும், போர் நடந்த களங்களில் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், விரக்திகள், சுமைகள் போன்றவற்றை வெளிப்படையாகக் கூறிய தன்மைகளும், இது ஒரு நியக்கதை என்பதைத் தெளிவாக்கியிருக்கின்றன. ‘போர்வெடியின் ஓசைகளில் வாழ்ந்தவர்களுக்கு எங்கிருந்து பயம் வரும்?” என்ற வினாவின்மூலம், ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியின் பாட்டில் வாழுகின்ற மக்களின் பயமில்லாத் தன்மையை ஆசிரியர் ஆணித்தரமாகக் காட்டுகின்றார்.

‘உண்மையில் போர் உக்கிரமடைந்து, அன்றைய நாட்களில் குடில்களுக்கு மேலே விழுந்து வெடித்து, அங்கிருந்தவர்கள் இறந்தாலோ, காயப்பட்டாலோ உறவுகள் மட்டுமே அந்த நேரத்தில் இருப்பார்கள். தப்பிய குடும்ப உறுப்பினர்கள் இறந்தவர்களை அதிலேயே அடக்கம் செய்துவிட்டுக் காயப்பட்டவர்களோடு வேறு இடம் நோக்கிச் செல்லும் நிலையையே பின்பற்றினார்கள். எங்கு பார்த்தாலும் ஒப்பாரியே மிஞ்சியிருந்தது. இதனால், தானும் தன்னைச் சார்ந்த குடும்பமும் தப்பினாலே போதுமென்ற மனநிலையே உருவாகியிருந்தது. எல்லா வீடுகளிலும் துன்பம் இருந்ததால், யார் துன்பத்தை யார்தான் ஆற்றிவிடப் போகிறார்கள்?” என்ற வரிகள் போன்று, அகதிகளான – அனாதைகளான மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தைக் காட்டும் பல வரிகள் இந்நாவலில் செறிந்துள்ளன.

போர்க்கால உண்மையைக் கூறும் அனுபவ வெளிப்பாடாகவே இந்நாவல் அமைந்துள்ளது. ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின் உண்மைகளை நம்மவர்களுக்கு மாத்திரமன்றி, உலகத்திற்கே சொல்லும் சாட்சிப்பதிவாக இந்நாவல் விளங்குகின்றது. எதிர்காலச் சந்ததியினர் இந்நாவலை வாசிக்கும் சந்தர்ப்பத்தில், இலங்கையில் வாழ்ந்த தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத் தன்மைகளையும், மக்கள் எதிர்கொண்ட அவலங்களையும் அறியகூடியதாக இருக்கும். ஈழத்துப் போரியலைப் பேசும் இந்நாவல், ஈழத்திலக்கிய உலகில் என்றும் நிலைத்திருக்கும்.

Related posts

“விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்” – ஓவிய கண்காட்சி

Thumi202121

சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை

Thumi202121

வெந்து தணிந்தது நாடு

Thumi202121

Leave a Comment