இதழ் 59

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -03

பிரச்சினைக்கூற்று

சமூகக் காரணி
ஒவ்வொருவரின் அறிவு, உளப்பாங்கு, நடத்தை என்பவற்றைத் தீர்மானிப்பதில் சமூகத்தினுடைய வகிபங்கு முக்கியமானது. அந்த வகையில் கொரோனா வைரஸ் குறித்து சமூகத்தவரது பார்வை ஊடகங்களின் கருத்து, விழிப்புணர்வின்மை, சமூகரீதியான தளர்வு நிலை, மக்கள் சமூகக் கட்டுப்பாடுகளை பின்பற்றாமை, சமூக மக்களின் நோக்கு நிலை என்பன இங்கு முக்கியம் பெறுகின்றன. மாணவர்களின் வாழ்வில் அதிகளவான நேரம் ஊடகங்களின் ஊடாகவே செலவு செய்யப்படுகின்றது. அதிலும் கொரோனாவிற்கு பின்னரான சூழலில் மாணவர்கள் இணையவழிக் கற்;கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியமை ஆனது மாணவர்களை ஊடகங்களுடன் பிணைத்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் பத்திரிகைகளின் மூலம் பெறப்படுகின்ற செய்திகள் உடனுக்குடன் இணையத்தளங்களிலும், இணையவழிக் குழுமங்கள் ஊடாகவும் கிடைக்க பெறுவதுடன் அவற்றின் வாயிலாக பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை வழங்குகின்ற அதே நேரம் அதனை ஓரு வேடிக்கை விடயமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றனர். இது மாணவர்களிடத்தே கொரோனா குறித்த தவறான புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்துவதோடு அது குறித்த அச்ச உணர்வுகளையும் அதே நேரம் மாணவர்களின் அலட்சியத்திற்கும் காரணமாகி விடுகின்றது.

சமூகத்தில் ஊரடங்குச் சட்டம் போட்ட போதும், இன்றைய நிலையில் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்வோம் என்ற கருத்து நிலையும் மக்களின் வறுமை நிலையும் மக்களை இயல்பான வாழ்க்கையிலேயே இயங்க காரணமாக அமைகின்றது. இதனால் வழமைபோல் சந்தைகள், கடைகள் திறக்கப்பட்டு வழமை போல் வேலைகள் இடம்பெறுகின்றது. இதனால் மாணவர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு இருப்பினும் அவை குறைக்கப்படுகின்றது.

அதே இந்தியா போன்ற நாடுகளில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக தெரு ஓரங்களில் ஓவியங்களை வரைதல், விழிப்புணர்வுச் செயற்பாடுகளை செய்தல் என்பன இங்கு இடம்பெறுவது குறைவாகவே காணப்படுகின்றது. அதற்கு மாறாக சமூகத்தில் கொரோனா என்பது வெறும் சளிக்காய்ச்சல், சாதாரண நோய் என்ற கருத்து நிலைகள் அதிகம் காணப்படுவதுடன் வறிய மக்களுக்கு கொரோனாவை விட தமது அன்றாட வாழ்க்கையை நடத்துவது குறித்த எண்ணப்பாங்கு அதிகளவு காணப்படுகின்றது. பொதுப் போக்குவரத்துக்கள் எந்தவித முற்பாதுகாப்பும் இன்றி வழமைபோல் இயங்குகின்றன. இதன் காரணமாக பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்கின்ற மாணவர்களுக்கும் சமூகத்தவர்களின் கருத்துக்களை கேட்பவர்களுக்கும் கொரோனா குறித்த அச்சம் குறைந்து அது சாதாரண நோய் என்கின்ற எண்ணப்பாங்கு அதிகரிக்கின்றது. இந்த வகையில் சமூகத்தில் ஓரு பங்கினரான மாணவர்களினுடைய சிந்தனை, நடத்தை, உளப்பாங்கு என்பவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றது.

குடும்பச் சூழல்
மாணவர்களின் கொரோனா குறித்த அறிவு, உளப்பாங்கு, நடத்தை என்பதில் குடும்பச்சூழல் பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது. இந்த வகையில் பெற்றோரின் தொழில், கல்விநிலை, குடும்பத்தின் பொருளாதார நிலை, குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டு இருத்தல் என்பன இங்கு முக்கியம் பெறுகின்றன. குடும்பத்தில் உறுப்பினர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பின் அவர்கள் கொரோனா சூழலுடன் வாழ பழகியவர்களாக இருப்பார்கள். இந்த வகையிலே குறித்த ஆய்வு பிரதேசத்தில் மாணவர்களின் பெற்றோர் வேலைக்குச் செல்பவர்களாகவும், விவசாயம் செய்பவர்களாகவும் அதே வேளை கூலி வேலைக்கு செல்பவர்களாகவும் இருப்பதனால் இங்கு கற்கின்ற மாணவர்களின் கொரோனா குறித்த ஆய்வு, நடத்தை, உளப்பாங்கு என்பன வேறுபடுகின்றன. தமது ஊருக்குள்ளேயே சிறு சிறு கூலி வேலைகளுக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு பெரிதும் கிடைக்கப்பெறுவதில்லை. அதிலும் அவர்களின் குடும்ப நிலை காரணமாக இணைய வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியாமையும் இதற்கான முக்கிய தடையாக காணப்படுகிறது. மேலும் விவசாயம் செய்பவர்கள் தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது கொரோனா குறித்த பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. எனவே இவ்வாறான சூழ்நிலைகளில் இருக்கும் மாணவர்களின் கொரோனா குறித்த நடத்தை வேறுபட்டு அமைகின்றது.

தனிப்பட்ட காரணி
மாணவர்களின் கொரோனா குறித்த நடத்தையில் மாணவர்களுடைய தனிப்பட்ட காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அந்த வகையிலே மாணவர்களின் அறிவுத்திறன் அலட்சியப்போக்கு, சமூகக்கட்டுப்பாடுகளை பின்பற்றாமை, அச்சஉணர்வு, விழிப்புணர்வின்மை என்பன குறிப்பிடத்தக்கவை. இந்த வகையிலே ஒரு விடயத்தை ஆராய்ந்து அறியும் திறனுடைய மாணவர்கள் கொரோனா வைரஸ் குறித்த அதிகளவு அறிவினைக் கொண்டிருப்பதுடன் அதற்கான சிறந்த நடத்தையைக் கொண்டவர்களாகவும் காணப்படுவர். அதே சமயம் புதிய விடங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் குறைந்த மாணவர்களிடம் கொரோனா பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் குறைவான ஈடுபாட்டினைக் காட்டுவதனால் அவ் மாணவர்களிடம் கொரோனா குறித்த விழிப்பணர்வு மற்றும் அறிவு, உளப்பாங்கு, நடத்தை என்பன வேறுபட்டதாகக் காணப்படும். அதே போன்று இன்றைய காலகட்டத்தில் இணையத்தளங்களின் ஊடாக அதிகளவான மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளினை மேற்கொள்வதற்குப் பதிலாக கொரோனா தொடர்பில் வேடிக்கையான பல காட்சிப்படுத்தல்களை மேற்கொள்கின்றனர். இதனால் மாணவர்களிடம் கொரோனா குறித்த தீவிரத்தன்மை குறைவடைவதுடன் கொரோனா குறித்த கவனயீனமும் ஏற்படுகின்றது. இதனால் மாணவர்களின் நடத்தை உளப்பாங்கு என்பன வேறுபடுத்தப்படுகின்றது.

பாடசாலைச் சூழல்
இதே போன்று மாணவர்களின் பாடசாலைச் சூழலும் கொரோனா குறித்த மாணவர்களின் அறிவுஇ உளப்பாங்குஇ நடத்தை என்பவற்றில் தாக்கம் செலுத்துகின்றன. நண்பர்களின் சேர்க்கை, கொரோனா குறித்த ஆசிரியர்களின் கருத்து நிலை, தெரிவு செய்யும் பாடம், கட்டுப்பாட்டுத் தளர்வு போன்றன இதில் முக்கியமானவை. கொரோனா நோய் பரவல் குறித்த தவறான புரிதல் கொண்ட நண்பர்களின் சேர்க்கையானது கொரோனா பற்றிய சரியான தகவல்களை தெரிந்து கொள்வதிலும் உளப்பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அதே போன்று ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் போன்றவர்கள் கொரோனா குறித்துக் கொண்டிருக்கும் கருத்து நிலை மாணவர்களின் கொரோனா குறித்த பார்வையைத் தீர்மானிப்பதாகக் காணப்படுகின்றது. அத்துடன் சமூகத்தில் கொரோனா பற்றிய தெளிவான விளக்கத்தினை மாணவர்கள் கொண்டவர்களாக இருப்பினும் பாடசாலைக்குள் கொரோனாவிற்கான முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத போது கொரோனா குறித்த மாணவர்களின் உளப்பாங்கு நடத்தை என்பன பாடசாலைக்குள் மாற்றப்படுகின்ற நிலை ஏற்படுத்தப்படும்.

Related posts

பாட்டுப் பாடவா?

Thumi202121

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்

Thumi202121

இலங்கையின் உருளைக்கிழங்கு சிப்

Thumi202121

Leave a Comment