அபயம், சிவபூமி அறக்கட்டளைகளுடன் இணைந்து துமி அமையம் யா/வட்டு இந்துக் கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கான ஓவியப் போட்டியையும் கண்காட்சியையும் 03.04.2023 நடாத்தியிருந்தனர்.
யா/ வட்டு இந்துக் கல்லூரி அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலாநிதி. செஞ்சொற்செல்வர். ஆறு. திருமுருகன் அவர்கள் கலந்து சிறப்பித்து மாணவர்களின் ஓவியங்களை பார்வையிட்டு இரசித்ததோடு, மாணவர்களை ஆற்றுப்படுத்துகின்ற சிறப்புரை ஒன்றையும் வழங்கி, பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் சிலவற்றையும் அன்பளிப்பாகவும் வழங்கினார்கள்.
கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வலிகாமம் வலய வழிகாட்டல் ஆலோசனைப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி. பி. சுதேஷ்குமார் அவர்களும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்கள்.
வட்டு இந்துக் கல்லூரியின் சமூக நெறிக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் “விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்” எனும் கருப்பொருளில் மூன்று பிரிவுகளில் எழுபத்தைந்து ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் சித்திர பாட ஆசிரியர்களைக் கொண்ட நடுவர் குழாமால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஓவியங்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வுகள் யாவும் அபயம் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்புடன் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.