இதழ் 59

சித்திராங்கதா -56

நம்புகிறேன்…

நல்லூர்க்கோட்டை அரண்மனையின் அந்தப்புரத்திற்கு அருகில் புதிதாய் ஒரு சிறைக்கூடம் உருவாகியிருந்தது. அது மற்ற சிறைக்கூடங்களை மாதிரி அல்லாமல் கொஞ்சம் விசேடமாக அமைக்கப்பட்டிருந்தது.

யாருக்காக அந்த விசேட சிறைக்கூடம் என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். நல்லை அரண்மனையில் தனிப்பெருங் கலாராணியாய் அரங்கேற்றம் காண காத்திருந்த ஆடலரசி சித்திராங்கதா தான் இன்று அதே அரண்மனையில் விசேட சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள்.

சிறைப்பிடிக்கப்பட்ட சித்திராங்கதாவை சந்திக்க ராணி மஞ்சரிதேவி சிறைக்கூடம் நோக்கி வந்திருந்தார். சிறைக்கூடத்தின் மேற்சுவரில் நனைந்த கண்கள் குத்தி நிற்க சித்திராங்கதா ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். அவள் சிந்தனையை குழப்பிய ஆரவார ஓசைகளில் மகாராணி மஞ்சரிதேவி வருகிறார் என்பதை அறிந்து கொண்டாள்.

‘வாருங்கள்… நல்லை இராச்சியத்தின் மகாராணியே வாருங்கள்.. தங்கள் இராச்சியத்தில் முதன்முதலாய் ஒரு மங்கையை – அதுவும் ஆடற்கலையின் அதிரூப சுந்தரியை சிறைப்பிடித்திருக்கும் விந்தையை காண ஆவலோடு வந்தீர்களா… வாருங்கள்… காணுங்கள்….’ என்று கூறுகையில்
சித்திராங்கதாவின் கண்கள் பெரிதாய் விரிந்திருந்தன.

மலர்ந்த முகம் மாறாமல் அவள் அருகில் வந்து அமர்ந்தார் மஞ்சரி தேவி.
‘சித்திராங்கதா.. நீ ஆடலிலும் அழகிலும் அதிரூபசுந்தரி தான்… அதை இந்த நல்லைதேசப் பெண்கள் எவராலும் மறுக்க முடியாது. இப்போது சிறையில் உன்னை வைத்திருப்பது கூட உன்னைப் போன்ற பொக்கிசத்தை நாம் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே. ஆம் சித்திராங்கதா உன்னை காக்க எண்ணியே உண்மையில் உன்னை சிறைப்பிடிக்க நேர்ந்தது என்பதை மறந்துவிடாதே மகளே..’

‘மகளா..? யாருக்கு யார் மகள்? நீங்கள் என் தாயா? அல்லது உங்கள் வயிற்றில் பிறந்தவள் நானா? உங்கள் மகளாக இருந்தால் இப்படித்தான் சிறையில் வைத்து அழகு பார்த்திருப்பீர்களா ராணி… அல்லது நீங்கள் சொன்னமாதிரி சிறையில் வைத்துத்தான் காவல்காத்திருப்பீர்களா தங்கள் மகளை… என் தாய் என்றோ இறந்து விட்டாள். அவள் இறந்ததற்குப் பிறகு இவ்வையத்தில் எனக்கு தாயென்று யாருமில்லை. இனி புதிதாய் யாரும் எனக்கு தாயாக பிறக்கவும் தேவையில்லை. தாங்கள் இந்த நாட்டின் மகாராணி. தங்கள் நாட்டில்- தங்கள் இராச்சியத்தில் கைதுசெய்யப்பட்ட முதல் பெண் கைதி நான். அவ்வளவே நமக்கான உறவாகும்.’

‘ஆத்திரப்படாதே சித்திராங்கதா… உன் இந்த முன்கோபந்தான் அனைத்தையும் ஆபத்திற்கு அழைத்துச் சென்றுவிடுமோ என்று உன்னையும் இந்த நாட்டையும் எண்ணி நான் அச்சங் கொள்கிறேன். உனக்கு இதுபோலொரு துர்பாக்கியத்தை அளிக்க யாருக்கும் இங்கு சம்மதமில்லை. ஆனால் தற்சமயம் எங்களிடம் வேறு வழியில்லை சித்திராங்கதா… நீ எதற்காக இப்படி பிடிவாதம் பிடிக்கின்றாய்? உனக்காக குறைவில்லாத விசேட விருந்துகள் வழங்க ஆணையிட்டிருந்தேன். எதையும் உண்ண மறுத்து விட்டாய் என்றாள் சேவகி.. பிடிவாதம் கொள்ளாதே பெண்ணே.. இந்த நாட்டிற்காக எத்தனையோ பேர் செய்த தியாகங்களில் உன் தியாகமும் ஒன்றெனக் கொள்.’

அவசரமாக ராணியை திரும்பிப்பார்த்தாள் சித்திராங்கதா.
‘தியாகமா? எது தியாகம் தேவி?.. சிறையில் ஓர் ஆடலரசியை அடைத்து வைத்துக் கொண்டு அவளை தியாகம் செய்யச் சொல்லி மன்றாடுவது ஒரு நாட்டின் மகாராணி செய்யும் காரியமா தேவி?.. தங்களை தலைசிறந்த ராணி என்று எல்லோரும் சொல்கிறார்கள்.. தங்களை காணாதவரை நானும் அதை உண்மை என்று தான் நம்பினேன். ஆனால் இப்போதுதான் தோன்றுகிறது. தேவி இராஜகாமினி வாழவேண்டிய வாழ்வை தட்டிப்பறித்திருக்கும் ஒரு மகாராணியைத்தான் நான் இப்போது சந்தித்திருக்கிறேன் என்று..’

‘சித்திராங்கதா… யாருடைய வாழ்க்கையை யார் தட்டிப்பறித்தது? உண்மையை முழுதாய் அறியாமல் வார்த்தைகளை உதிர்க்காதே. மாதரசி கல்யாணி தேவியைப்பற்றி நீ அறிவாயா? இன்று நல்லை சிம்மாசனத்தில் முடிக்குரிய ராணியாக… ஈடு இணையற்ற மகாராணியாக இருந்திருக்க வேண்டிய பெருமங்கையல்லவா அவர். அந்த மகாராணி வாழவேண்டிய பெருவாழ்வை அடியோடு அழித்த கூட்டத்தில் ஒருத்தி தான் நீ சொல்கிற இராஜகாமினி. அவளையா நீ நல்லவள் என்கிறாய்?’

‘எல்லா உண்மையும் நானும் அறிவேன் ராணி. யாருடைய வாழ்வு யாரால் அழிந்தது என்று தெளிவாகவே எனக்கு தெரியும். இராஜகாமினி தேவி பற்றி தாங்கள் சொல்கிற அபாண்டங்களை மேலும் நம்புமளவிற்கு முட்டாள் இல்லை நான்.’

‘உன் சித்தத்தினை அந்தளவிற்கு சீர்குலைத்திருக்கிறாள் அவள். அவள் அதில் கைதேர்ந்தவள்தான். சரி போகட்டும்.. அவளை குற்றவாளி என்று உன்னிடத்தில் நிரூபிப்பதில் எனக்கு எந்த அவசியமும் இல்லை இப்போது. ஆனால் நம் இராச்சியத்தின் நன்மையை பற்றி மட்டும் நீ என்றும் மறந்துவிடக்கூடாது சித்திராங்கதா. இந்த நல்லைமண் மேடைகளில் உன் இசையும் அசைவும் இணைந்து பெரும் பிரளயத்தை உண்டுபண்ணக்கூடிய சக்தி வாய்ந்தது என்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட கலையரசி நீ இப்படி நாட்டிற்கு களங்கமாற்றிவிடக்கூடாது பெண்ணே.. கொஞ்சம் சிந்துத்துப் பார்..’

‘போதும் நிறுத்துங்கள் ராணி….’ அவளுடைய தொனியில் எதிரிலிருப்பது ராணி என்பதை அவள் மறந்திருந்தாள்.

‘களங்கமாற்றியது நானா? அல்லது நல்லை வேந்தரா என்பதை தாங்கள் சிந்தியுங்கள் கொஞ்சம்.. அரங்கேற்றத்தை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியது யார்? நிறுத்தப்பட்ட பின்னும் மேலும் மேலும் துன்புறுத்தி இன்று சிறையில் கொண்டு வந்து என்னை அடைத்து வைத்திருப்பது தங்கள் துணைவரல்லவா? இதுவரை இந்த ஈழத்தில் எந்தப்பெண்ணும் செய்யாத அப்படி என்ன முதல் குற்றத்தை நான் செய்தேன்…?? சொல்லுங்கள் ராணி.. சொல்லுங்கள்…
நீங்கள் என்ன கூறினாலும் என் மனம் இதை நிச்சயம் ஏற்காது. என்னோடு சேர்த்து என் கலை – புகழ் – பெருமை – அத்தோடு இதுவரை நான் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் கூடவே இன்று சிறையில் அடைத்து விட்டீர்கள்… இனி இந்த ஆடலரசியிடம் என்ன இருக்கிறது தாங்கள் அபகரிப்பதற்கு? சொல்லுங்கள் ராணி…
ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் தான் உயிர் வாழ உத்தரவாதம் என்று நினைத்திருந்தேன். எல்லாவற்றையும் பொறுத்து அந்த ஒன்றை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தேன். ஆனாலும் எந்த பதிலும் தெரியாமல்- எந்த மறுமொழியும் அறியாமல் அந்த நம்பிக்கையும் காற்றில் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து காணமல் போய்க் கொண்டிருக்கிறது’ அவள் குரல் அடைத்தது பேசமுடியாமல்..

‘போரிற்குப் புறப்பட்டுவிட்ட தஞ்சை வீரரைப் பற்றிச் சொல்கிறாயா?’ வெளிப்படையாகக் கேட்டார் மகாராணி.

‘ம்…. தாங்கள் ராணி அல்லவா? தங்களை விடவா நான் தந்திரக்காரி. தங்களிடமா என்னால் சூசகமாக பேச முடியும்? தாங்கள் அறியாத எதையுமா நான் புதிதாக கூற போகிறேன்..’

‘நானும் வெளிப்படையாக கேட்கிறேன் சித்திராங்கதா. வருணகுலத்தான் தலை சிறந்த வீரன்.. அவன் இந்த நாட்டிற்காக படையெடுத்து வந்தவன். அவனை இப்படி எம் அழிவை நோக்கிய வழியில் வழிப்படுத்துவது சரி என்று நீ நினைக்கிறாயா? எதிரிகளை அந்த அளவிற்கு நம்புகிற நீ ஏன் இந்த இராச்சியத்தின் நன்மைகளை பற்றி மட்டும் சிந்திக்க மறுக்கிறாய் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது உண்மையில்’

‘என் போக்கு உங்களிற்கு ஆச்சரியமாக இருக்கிறது…. இந்த மங்கையை இப்படி சிறையில் அடைத்த உங்கள் துணைவரின் வீரம் உங்களிற்கு ஆச்சரியமாக இல்லை. அப்படித்தானே ராணி.. உங்களிற்கு சரி என்று தோன்றுவது எவ்வளவு பெரிய அபத்தமாக இருந்தாலும் உங்களிற்கு ஆச்சரியமாக தெரியாது. ஆனால் எனக்கு சரி என்று படுகிற ஏதோ ஒரு சிறுசெயல் உங்களிற்கு அத்தனை ஆச்சரியமாக தெரிகிறது. அப்படித்தானே..’
ராணியின் கண்களை உற்று நோக்கி கேட்டாள் சித்திராங்கதா.

‘ராணி இந்த நாட்டின் அழிவிற்காக நான் போராடுவதாக கூறுகிறீர்களே.. அதை மட்டும் திருத்திக் கொள்ளுங்கள்.. என் செவிகளில் விழும்படி இன்னொருமுறை அப்படிக் கூறாதீர்கள். இந்த நாடு மீது நான் கொண்ட பற்றை உங்களிடம் விளக்க எனக்கு அவசியமில்லை. வல்லோர்கள் சேர்ந்து என் நாட்டை காக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லோர்களால் இந்த நாடு அழிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு குடிமகளாய் இந்த நாட்டிற்கு நான் செய்ய வேண்டியதை செய்வேன். இராச்சியத்தில் இருக்கும் தாங்கள் தங்கள் இராச்சியத்தை காக்க நினைப்பீர்கள். நான் என் நாட்டையும் மக்களையும் காக்க நினைக்கிறேன். எனக்கு சரி என்று தோன்றுவதை செய்ய எனக்கு போதிய அறிவு இருக்கிறது. தங்களைப்போல் இராச்சியம் என்ற கூட்டுக்குள் என் சிந்தனையை முடக்க முடியாது. எனக்குத் தெரிகிறது. நான் செல்கிறவழி- சித்திக்கின்ற வழி சரியென்றே என்றும் நம்புகிறேன். யாரும் என்னை நம்பாவிட்டாலும் அது பற்றி எனக்குக் கவலை இல்லை… தஞ்சை வீரரும்….’
அதற்கு மேல் பேசமுடியாதவளாய் சித்திராங்கதாவின் கண்கள் கலங்கின.

கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு மகாராணியை நோக்கிக் கேட்டாள். ‘ராணி.. எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் தங்களிடம்.. இன்று சிறையில் சித்திராங்கதா இருக்கிறாள் என்பதை தஞ்சைவீரருக்கு மட்டும் தெரிவித்துவிடாதீர்கள். தெரிந்தால் ….. தெரிந்தால் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியாது. அவர் என்ன நினைக்கிறார் என்பதையும் அறியேன் நான். ஆனால் இந்த விடயம் அவரிற்கு தெரியாமல் இருப்பது தான் எனக்கும் என் காதலுக்கும் இன்னும் உயிர் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாய் நினைக்கிறேன். தயவு செய்து சொல்லி விடாதீர்கள் ராணி….’

‘உன் ஆழமான காதலை உணர்கிறேன் சித்திராங்கதா. தங்கள் காதல் வெற்றி பெற வேண்டும். அதில் யாருக்கும் மறுப்பு இல்லை.இருக்கக் கூடாது’

‘நீங்களா கூறுகிறீர்கள் தேவி? இன்று கூறுகிறீர்கள்; நாளை? நாளைய சூழலில் தங்கள் நாக்கும் வாக்கும் எப்படிமாறும் என்று யாருக்குத் தெரியும்? நல்லை அரசவையில் தங்கள் மகாராஜா நினைப்பது மட்டும்தானே நடக்கும். மகாராஜா ஒருவேளை தன் திருமகளிற்கும் தஞ்சைவீரரிற்கும் திருமணம் நடத்தி வைக்க நினைத்தால் கூட தாங்களும் அதற்கு ‘ஆம்’ என்று தானே சொல்வீர்கள். இன்று என்னிடம் கூறியதை எல்லாம் அன்று மறந்து விடுவீர்கள் அல்லவா தேவி?’

‘ராஜாவின் மகளா? ராஜாவின் திருமகள் என்று யார் இருக்கிறார் இங்கு?’ஆச்சரியமாக கேட்டார் ராணி.

சித்திராங்கதா சிரித்தாள்.

‘தாங்கள் இப்போது கொள்கிற ஆச்சரியம் ராஜாவின் திருமகளை பற்றியா அல்லது அது சித்திராங்கதாவிற்கு தெரிந்தது பற்றியா என்பதை நான் அறியேன். ஆனால் என் மனதின் அச்சத்தை தாங்கள் அறிவீர்கள் என்று அறிவேன். இந்த அச்சத்தின் ஆழத்தில் என் காதலே வேரூன்றி நிற்கிறது. எல்லா வகையிலும் என்னை உருக்குலைத்தாலும் என்னிடம் அது மட்டுமே மிச்சமிருக்கும். நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் அதில் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அதை உணர்ந்தால் விலகிச் செல்லுங்கள். இந்த சிறையை விட்டு விலகுங்கள். மகாராணி அதிக நேரம் சிறையில் ஒரு கைதியுடன் நேரங்கழிக்க வேண்டியதில்லை. செல்லுங்கள்.’

‘பெண்ணே..வருணகுலத்தான் உன் மீது கொண்ட காதலின் உண்மையையும், நீ வருணகுலத்தான் மீது கொண்ட காதலின் ஆழத்தையும் நாங்கள் யாரும் ஒருபோதும் மறுதலிக்க முடியாது. உன் காதல் உன்னை இந்தளவிற்கு பயமுறுத்தத்தேவையில்லை. தேவையற்ற அச்சங்களை அகற்றிவிடு சித்திராங்கதா. உன் அச்சத்தை மறந்து துணிச்சலோடு இந்த நாட்டின் நன்மையை பற்றி மட்டும் யோசி. என்னை நீ தாராளமாக நம்பலாம்.’
சித்திராங்கதாவின் உள்ளத்து அச்சமே அவளை தவறான காரியங்கள் செய்ய வைக்கிறது என்பதை ராணி மஞ்சரி தேவி உணர்ந்து கொண்டார்.

‘போதும்…போதும்.. நம்புகிறேன்… நம்புகிறேன்… தாராளமாக தங்களை நம்புகிறேன் ராணி. நம்புவது மட்டுமே இந்த சித்திராங்கதாவிற்கு பழக்கமானது. அன்று அரங்கேற்றம் நிகழ்வதாய் அரசர் இட்ட ஆணையை நம்பினேன். ஆனந்தமாய் அன்று அரங்கேற்றத்திற்கு தயாரானேன். தாயற்ற எனக்கு என்றும் துணை என் தந்தை என்று நம்பினேன்.
புரவியில் வந்த பெருவீரர் எனக்கானவர் என்று முழுதாய் நம்பினேன். நம்பினேன்.. நம்புகிறேன். நம்ப மட்டும் தானே இந்த நாட்டிய கலாராணிக்குத் தெரியும்..’

சித்திராங்கதாவால் இதற்கு மேல் பேச முடியவில்லை. தேகமும் உள்ளமும் பலமிழந்து போனது. அவள் ஆகாரம் எடுத்தே எத்தனை நாள் என்று யாருக்குத் தெரியும்.

அந்தவேளைதான் ராணியிடம் அவசரமாக ஒரு தகவலை தெரிவிக்க சேவகி ஒருத்தி சிறைவாசலில் வந்து நின்றாள்.

அவள் கொண்டு வந்த செய்தி என்ன? அதை சித்திராங்கதா தாங்கிக் கொள்வாளா?

‘போரில் சதிகாரர்களால் தஞ்சைவீரன் வருணகுலத்தான் வீரமரணம் எய்தி விட்டானாம்’

Related posts

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -03

Thumi202121

வினோத உலகம் – 24

Thumi202121

“விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்” – ஓவிய கண்காட்சி

Thumi202121

Leave a Comment