இதழ் 59

உழைப்பாளிகள் எல்லோருமே பங்காளிகள்

மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று என்கின்றனர். உணவு , உடை , உறையுள். இந்த மூன்றினால் மட்டும் ஒரு சமகால மனிதனை திருப்திப்படுத்த முடியுமா? அவனிற்கு உடற்பசிகளை விட மனப்பசிகள் அதிகம். அவன் மனப்பசிகளை பட்டியல் போட தொடங்கினால் நம் நாட்டின் காகித வறுமை இன்னும் கனத்துவிடும்.

ஆனால் சமரசம் செய்து கொள்ளாமல் வளர்கின்ற அவனது ஆசைகளை ஆடம்பரம் என்றோ அநாவசியம் என்றோ நாம் முற்றாய் புறந்தள்ளிவிட முடியாது. ஒரு வகையில் பார்த்தால் அவன் தன் ஆசைகளும் தேவைகளும் குறித்து அக்கறை கொள்ளாதிருந்தால் இன்றும் நாம் இலைதழைகளை கட்டிக்கொண்டு காட்டில் இடிக்கும் மழைக்கும் நடுங்கியபடி ஆகாரத்திற்காய் ஒரு மானைத் துரத்திக் கொண்டிருந்திருப்போம். நாம் இத்தனை தூரம் முன்னோக்கி வந்து விட்டோம் என்றால் அது மனிதனின் அடங்காத ஆசைகளை நோக்கிய பயணத்தால்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

மனிதன் ஓடிக்கொண்டிருந்தான் என்பது உண்மைதான். ஆனால் அவன் மட்டும் தனியாக ஓடினானா? ஒரு தனி மனிதனால் மட்டுமே இதை சாதிக்க முடிந்ததா? நிச்சயமாக இல்லை. எல்லா முயற்சிகளையும் ஒரே மனிதன் எடுக்கவில்லை. வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு துறையில் முயன்றார்கள். பலன் எல்லோருக்கும் பொதுவாய் கிடைத்தது.

மனிதன் சமூகமாக வாழத்தொடங்கியதன் தாற்பரியமும் இதுதான். எல்லாம் எல்லோராலும் முடியாது. ஆனால் எல்லாம் எல்லோர்க்கும் கிடைக்க வேண்டும். இந்த வழியில் தான் அவனிற்கு சமூகம் என்கிற சாதனம் கைகூடியது.

காலையில் நாம் அருந்துகின்ற தேநீர் தான் நமது காலையை புத்துணர்ச்சியாக்குகிறது என்றால் அதனை பயிரிட்டவர்கள் தொடங்கி கடைசியில் தேநீராய் எம் கைகளை அடையும் வரை உழைப்பின் நீளம் நீள்கிறது. நாம் செல்லும் பேருந்து, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருப்பிடம் என அனைத்துமே யாரோ ஒருவரது உழைப்பில் உருவானது என்பது யாவரும் உணர்ந்த உண்மைதான்.

இவற்றுக்கெல்லாம் நாம் பணம் கொடுக்கின்றோம் தானே என்பீர்கள். பணம் மனதை திருப்திபடுத்தும் ஒரு காகிதமே அன்றி அவர்கள் உழைப்பிற்கு அதை ஈடு சொல்ல முடியுமா? உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பதை உலகில் யாராலும் இங்கு கொடுக்க முடியாது.

நீங்களே சொல்லுங்கள். உங்களிற்கு தேவையான உணவை நீங்கள் மட்டுமே உற்பத்தி செய்தாக வேண்டும் என்றொரு நிலை வந்தால் என்ன செய்வீர்கள்? நமக்கான வாய்கரிசியை கூட நம்மால் உருவாக்கி வைக்க முடியுமா? நாம் வாழ்கிற வீட்டை நாம் மட்டும் தான் கட்டியாக வேண்டும் என்றானால் என்ன செய்வது? நம் கட்டிய வீட்டிலேயே இறுதியில் நம் கல்லறையை வைக்க வேண்டியதுதான். நாம் உடுத்தும் உடைகளை நாமே தறிக்க வேண்டுமென்றால் என்ன செய்வது? மறுபடியும் இலைதழைகள் தான். வேறு வழியில்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரு மனிதன் பிறக்கும் முன்னரே தயார் நிலையில் வைத்துக் காத்திருக்கிறது இந்த சமூகம்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் பேரின் உழைப்பையாவது பயன்படுத்தியிருப்பான் என்கிறது கிரெக்க தத்துவம்.

எட்டு மணி நேரம் உழைப்பு , எட்டு மணி நேரம் பொழுதுபோக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு என்ற குரல் அங்கிங்கெனாதபடி உலக நாடுகளில் ஒலித்த தினம் தான் மேதினம். அன்று ஒலித்தவர்களின் எண்ணற்ற குரல் வளைகள் நெறிக்கப்பட்டன.

ஒலித்த குரல்களின் உயிர்களைக் குடித்த குண்டுகள் பல. அடித்து நொறுக்கப்பட்டு முடமாக்கப்பட்ட உயிர்கள் பல.

தங்கள் இன்னுயிரை ஈந்து அவர்கள் தந்த அந்த எட்டு மணி நேர உத்திரவாதத்தால் தான் இன்று உலகத் தொழிலாளர்கள் அனைவரும் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி கடந்து போன மனித சமுதாயத்தின் எண்ணற்ற தியாகங்களால் தான் இன்றைய மகிழ்வான வாழ்வு நமக்கு சாத்தியமானது.

பூமியில் பிறக்கும் போதே முதன்முதலாய் தொட்டு அரவணைத்த தாதிப் பெண் தொடங்கி அனைவரினதும் உழைப்பிற்கு கடன்பட்டவர்களாகவே நம் வாழ்வு தொடங்குகிறது. அந்தக் கடனை எம் வாழ்வு முடிவதற்குள் அடைப்பது என்பதுதான் எம் வாழ்வின் திறந்த சவால்.

உழைப்பது என்பது எம் ஊதியத்திற்காக அல்ல. நம் கடனை அடைப்பதற்காக என்பதை நாம் எப்போதும் சிந்தையில் நிறுத்தி வைக்க வேண்டும். இயற்கையில் எதுவும் தன் உழைப்பை தனக்காக வைத்திருப்பதில்லை. எந்த நதியும் தனது நீரைக் குடிப்பதில்லை. எந்த மரமும் தன் கனிகளை தான் உண்ண வைத்திருப்பதில்லை. எந்த விளக்கும் தன் ஒளியை தனக்காக மறைத்துக் கொண்டதல்ல. ஆனால் மனிதனிற்கு மட்டும் தனக்கு என வைத்துக் கொள்ளும் ஒரு விபரீத பழக்கம் உள்ளது. இந்த மனித சமுதாயத்தில் தான் ஒரு கடனாளி என்பதை அவன் பல நேரங்களில் மறந்து விடுகிறான். அவன் உழைப்பது என்பதை தன் கடனை அடைக்க என்று அவன் உணர்ந்து கொண்டால் உழைப்பை எண்ணிய கர்வமோ பணத்தை எண்ணிய பற்றோ அவனிடத்தில் தங்காது.

மேற்கத்திய நாடுகளின் தொழிலாளர் குறித்த பார்வைக்கும் நம் இனத்தின் தொழிலாளர் குறித்த பார்வைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. அங்கே தொழில் என்பது ஒரு சாபம். வேறுவழியின்றி மேற்கொள்ளப்படும் ஒரு கடின சூழல். அதிலிருந்து பெறும் விடுப்பே சந்தோஷம். ஏனெனில், மேற்கத்திய இறையியலும் தொழில் செய்வதை, உழைப்பதை ஒரு சாபமாகவே கருதுகிறது. மேற்கத்திய இறையியல் காட்டும் சொர்க்கத்தில் யாரும் உழைக்க தேவையில்லை.

ஆனால், நம் இனத்தில் எம் முன்னோர்களிடத்தில் உழைப்பு என்பது ஒரு படைப்பூக்கச் செயல். இறைவனே ஆதி தொழிலாளிதான்.

தொழில் என்பது இங்கு வழிபாடு. உழைப்பு ஒரு சாதனை. தன் உழைப்பால் உணவு உற்பத்தி செய்து, வியர்வையால் உணவை இங்குள்ளோர் உருவாக்குவர். அங்கனம் உருவாக்கிய உணவை நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல் அனைவரும் பகுத்துண்ண பகிர்ந்தளிப்பர். அதுவே அவர்களது ஆத்மசாதனையாக எண்ணுவர்.அந்த உழைப்பில் தெரியும் ஆத்ம திருப்தியை தரிசிக்க விரும்பினால் அட்டையை பாருங்கள். உணர விரும்பினால் கர்வம் ஒழித்து கடன் என கருதி உழைக்கத் தொடங்குங்கள்.

நம்மை போல உழைத்து நமக்காகவும் உழைக்கும் எல்லோருக்கும் உழைப்பாளர் தினம் என்றொரு நாள் விடுமுறை கிடையாது. உங்கள் வீட்டு சமயலறையோ நாற்று நட்ட வயல் வெளியோ உழைப்பாளர் தினத்திற்காய் விடுமுறை எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு நாளுமே இவர்களுக்கு உழைப்பாளர் தினம் தான்!! உழைத்தால் தான் அவர்களிற்கு அது ஒரு தினம்.

இது எல்லோருக்குமான உலகம். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும். இந்த மே தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கேள்வி இது. நம் கடனை அடைக்க நாம் முயற்சிக்க தொடங்குவோம். அனைத்து உழைப்பாள நண்பர்களுக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்!

Related posts

இலங்கையின் உருளைக்கிழங்கு சிப்

Thumi202121

வினோத உலகம் – 24

Thumi202121

வெந்து தணிந்தது நாடு

Thumi202121

Leave a Comment