இதழ் 59

சீர்படுத்தும் சிறைச்சாலை நூலகங்கள்

குற்றத்திற்கான தண்டனைக்கு முக்கியத்துவம் வழங்குமளவிற்கு நாம் குற்றவாளிகளின் கல்வி, புனர்வாழ்வு மற்றும் தண்டனைக் காலத்தைப் பயனுள்ள முறையில் செலவிடுதல் என்பன பற்றி அக்கறைப்படுவதில்லை. குற்றவாளிகளை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் அடிப்படை நோக்கமே அவர்கள் திருந்தி வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். சிறைக்கூடங்கள் குற்றவாளிகளை மேலும் குற்றவாளிகளாக்கும் இடங்களாக இருக்கக் கூடாது. அதோடு தகவல்களை அறிவது ஒருவனது உரிமை. அந்த உரிமை சிறைச்சாலைக்குள்ளும் உயிர் வாழ வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு கைதியின் வாழ்க்கையும் அனுபவங்களின் ஊற்று. அதனால்த்தான் வெளிநாடுகளில் சிறைவாசிகள் பலர் புத்தகங்களை, சுயசரிதைகளை எழுதியிருக்கிறார்கள். சிறைச்சாலைக்குள் வாசிப்பதற்கு நிறையக் கைதிகள் இருக்கிறார்கள். அதேநேரம் அவர்கள் வாசிக்கவும் நூல்கள் அவசியம். பிழையான சேர்க்கைகளாலும், சரியான வழிகாட்டலும் இன்றி தடம்மாறி குற்றம் புரிந்து தண்டனை அனுபவிக்கும் கைதிகளில் ஒரு சிலரையாவது புத்தகங்கள் மாற்றிவிடக் கூடுமல்லவா? தண்டனைக்காலம் முடிவடைந்து அவர்கள் வெளிவரும் போது அவர்கள் எண்ணங்களும் செயல்களும் மேம்படக்கூடுமல்லவா?

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2500 புத்தகங்களைக் கொண்டு 08.04.2023 அன்று திறக்கப்பட்ட இந்த நூலகம் இலங்கையின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட சிறைச்சாலை நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. நூலகங்களும் இருக்கின்றன. ஆனால் மனிதர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் புரட்டப்படாத பக்கங்களோடு நூல்களும், வற்றிய வாசகர்களோடு நூலகங்களும் காணப்படுகின்றன. ஆனால் சிறைச்சாலையில் அப்படியில்லை. அவனுக்கு அங்கே நிறைய நேரம் இருக்கிறது. அங்கே புத்தகங்களும் இருந்துவிட்டால் தெரிந்தோ தெரியாமலோ அவன் அப்புத்தகங்களை வாசிக்க தொடங்கி விடுவான். இந்த வாசிப்பின் மீது ஒரு நாட்டம் வந்துவிட்டால் குற்றச் செயல்கள் மீதான அவனது நாட்டம் குறைந்துவிடும்.

இலங்கையில் சிறைச்சாலை நூலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடனேயே இயங்குகின்றன. அவை பெரும்பாலும் நூலக நியமங்களுக்கேற்ப ஒழுங்கமைக்கப்படுவதில்லை. நன்கொடை மூலம் கிடைக்கும் நூல்கள் மற்றும் தளபாடங்களை கொண்டவையாகவே அவை காணப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றில் முதன் முதலாக ஒழுங்கமைக்கப்பட்ட நூலகம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. பல தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தினர் இந்தச் சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர். இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு, ஆலோசனைகளையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பல்கலைக்கழகங்களின் சமூக பங்களிப்பு பேசு பொருளாகியுள்ள இந்த காலத்தில் யாழ் பல்கலைக் கழகத்தின் இந்த முயற்சிக்கு துமி தலை வணங்குகிறது. கைதிகளின் புனர்வாழ்விற்கும், நேர் சிந்தனைகளுக்குமான நூல்களை மட்டுமே அங்கே கிடைக்கச் செய்ய வேண்டியதும் முக்கியமானது. நூல்கள் அன்பளிப்பு செய்பவர்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். வாசிக்கும் கைதிகளின் வாழ்வில் சில நூல்கள் திருப்புமுனையாக அமையலாம். அவற்றையும் ஆவணப்படுத்துங்கள். வரப்போகும் வாசகர்களுக்கு அந்த ஆவணம் வழி காட்டியாக அமையலாம்.

Related posts

சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை

Thumi202121

“விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்” – ஓவிய கண்காட்சி

Thumi202121

இலங்கையில் மிகப்பெரிய வெளிநோயாளர் பிரிவு

Thumi202121

Leave a Comment