இதழ் 60

பொன்னியின் செல்வனும் வரலாறும்

அறிமுகம்

பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர்களுள் ஒருவராகச் சிறப்புப் பெற்ற சோழர்களின் ஆட்சியை தமிழகத்தில் மீள நிறுவியவன் விசயாலய சோழன் ஆவான். இவன் வழிவந்த முதலாம் பராந்தகன் ஆட்சிக்காலத்தில் சோழ அரசு வலிமை பெறத் துவங்கியது. முதலாம் பராந்தகனுக்குப் பின் அவனது இரண்டாவது மகனான கண்டராதித்தன் பொ.ஊ. 955ல் சோழநாட்டின் மன்னனாக முடிசூட்டிக்கொண்டான். இவன் திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மருள் ஒருவனாவான். மேலும், சிதம்பரக் கோயிலின் கூரையைப் பொன்னால் வேய்ந்தவனும் இவனே. இவன் தனது வாழ்நாளில் சமயப் பணிகளில் பெரும்பாலான காலத்தைச் செலவிட்டதால் இவனது ஆட்சியதிகாரம் வலுவிழந்திருந்தது. இவ் வாய்ப்பைப் பயன்படுத்தி வடக்கே இராட்டிரகூடர்கள் தொண்டைமண்டலப் பகுதியை மீளத் தமது ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர். தெற்கே பாண்டியர் சோழர்களின் மேலாதிக்கத்தை உதறித்தள்ளி தமது பாண்டியநாட்டை மீட்டுக் கொண்டனர். இதனால், சோழநாட்டின் பரப்பு சுருங்கியது. கண்டராதித்தன் வீரநாரணி எனும் மங்கையைத் திருமணம் செய்துகொண்டான். எனினும் இவர்கட்குக் குழந்தைபேறு வாய்க்கவில்லை. மேலும், கண்டராதித்தன் பட்டத்துக்கு வருமுன்பே, இவனது மனைவி இறந்துவிட்டாள். கண்டராதித்தன் தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் மழவரையர் மரபில் வந்த செம்பியன்மாதேவியை இரண்டாம் முறையாகத் திருமணம் புரிந்தான். இவர்களிருவருக்கும் ஒரு புதல்வன் பிறந்தான். இவனே மதுராந்தகன் எனவும் உத்தமன் எனவும் பின்னாளில் அறியப்பட்டான். கண்டராதித்தனின் இறுதிக்காலத்தின் போதும் மதுராந்தகன் சிறு குழந்தையாயிருந்தமையால் நாட்டின் எதிர்காலத்தைக் கருதி தனது தம்பியான அரிஞ்சயனுக்குப் பட்டம் சூட்டுவித்தான். மேலும், அரிஞ்சயனுக்குப் பின் சோழநாட்டின் ஆட்சியதிகாரம் அரிஞ்சயனின் வழிவந்தோருக்கே கிடைக்கும் வழிசெய்தானெனவும் தெரிகிறது. பொ.ஊ. 956ல் ஆட்சிப்பீடமேறிய அரிஞ்சயன் ஓராண்டிலேயே ஆற்றூர் எனுமிடத்தில் இறந்து “ஆற்றூர்த் துஞ்சிய தேவர்” எனும் பெயர் பெற்றான். இவனுக்கும் வைதும்பராயர் மகளான கல்யாணிக்கும் பிறந்த இரண்டாம் பராந்தகன் அரிஞ்சயனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தான். இவன் சுந்தர சோழன் எனவும் அழைக்கப்பட்டான். இரண்டாம் பராந்தகனுக்கும் திருக்கோவலூர் மலையமான் புதல்வியாகிய வானவன் மாதேவிக்கும் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுள் முதலாமவன் ஆதித்த கரிகாலனும், இவனுக்குப் பின் குந்தவையும் இறுதியாக இராசராசன் எனும் பெயருடன் பின்னாளில் அரியணையேறிய அருண்மொழிவர்மனுமாவர். இரண்டாம் பராந்தகன் தனது ஆட்சிக்காலத்தில் சோழநாட்டை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டான். வடக்கே தனது பாட்டனான முதலாம் பராந்தகன் ஆட்சிக்காலத்தில் இழந்த தொண்டைமண்டலத்தை இராட்டிரகூடரிடமிருந்து மீளக் கைப்பற்றினான். மேலும், தெற்கே பாண்டியர் ஆளுகையில் இருந்த மதுரையையும் கைப்பற்றிக் கொண்டான்.

இவனது ஆட்சிக்காலத்தில் மதுரையை மூன்றாம் இராசசிம்மப் பாண்டியனின் மகனாகிய வீரபாண்டியன் ஆட்சி செலுத்தி வந்தான். பொ.ஊ. 953ல் சோழர்களுக்கும் வீரபாண்டியன் தலைமையிலான பாண்டியருக்குமிடையே நடைபெற்ற போரில் வீரபாண்டியன் சோழ மரபைச் சேர்ந்த இளவரசன் (முதலாம் பராந்தகனின் புதல்வனான உத்தமசீலி) ஒருவனைக் கொன்றிருத்தல் வேண்டும். வீரபாண்டியனின் ஆறாம் ஆட்சியாண்டிலிருந்து பின்வந்த பாண்டியநாட்டுக் கல்வெட்டுக்களில் இவன் “சோழன் தலைகொண்ட கோ வீரபாண்டியன்” என குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து இதனை உறுதிப்படுத்தலாம்.

(லெய்டன் பெரிய (ஆனைமங்கலச்) செப்பேட்டுத் தொகுதி)

எனவே, சோழ இளவரசன் ஒருவனின் இறப்புக்குக் காரணமான வீரபாண்டியனைப் பழிதீர்க்கும் எண்ணமும், பாண்டியநாட்டை மீளக்கைப்பற்றும் பேரவாவும் இரண்டாம் பராந்தகனுக்கு இருந்திருத்தல் வேண்டும். இவன் தனது மூத்த மகனாகிய ஆதித்த கரிகாலனோடு இணைந்து பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். சேவூர் எனுமிடத்தில் இடம்பெற்ற போரில் பாண்டியரும் அவர்களுக்கு உதவிபுரிய வந்த ஈழத்துப் படைகளும் சோழரிடம் தோல்வியுற்றன. வீரபாண்டியன் தலைமறைவானான். இப்போரில் ஈழத்து மன்னன் நான்காம் மகிந்தன் பாண்டியருக்கு உதவியாகப் பெரும்படையனுப்பியமை பற்றி ஈழத்தைத் தாக்கும் நோக்கில், இரண்டாம் பராந்தகன் பொ.ஊ. 965ல் தனது படைத்தலைவனும் கொடும்பாளூர் எனும் குறுநில மன்னனுமாகிய பராந்தகன் சிறிய வேளான் என்பவன் தலைமையில் பெரும்படையை அனுப்பினான். எனினும், அப்போரில் சோழப்படைகள் தோற்றதோடு படைத்தலைவனாகிய சிறிய வேளான் சாவைத் தழுவினார்.

சோழர் மீள்வெற்றியும் எதிர்பாராத திருப்பமும்

இத்தோல்வியின் விளைவாக வீரபாண்டியனும் மீண்டும் மதுரையைக் கைப்பற்றி ஆட்சிபுரியலானான். எனவே பாண்டியநாட்டை மீளக்கைப்பற்றும் நோக்கில் கொடும்பாளூர் வேள், தொண்டைநாட்டுச் சிற்றரசனாகிய பார்த்திபேந்திரவர்மன் மற்றும் தனது மகனான ஆதித்தகரிகாலன் தலைமையில் மீண்டும் ஒரு பெரும்படையை இரண்டாம் பராந்தகன் அனுப்பினான். பொ.ஊ. 966ல் சேவூர் எனுமிடத்தில் நடைபெற்ற இப்போரில் பாண்டியப் படைகள் தோற்கடிக்கப்பட்டதோடு, ஆதித்தகரிகாலன் வீரபாண்டியனைப் போரிலே கொன்றான். இவ்வீரச்செயலைப் போற்றி ஆதித்த கரிகாலன் பொ.ஊ. 966ல் இளவரசனாக அறிவிக்கப்பட்டான்.

எனினும், எதிர்பாராத ஒரு திருப்பமாக பொ.. 969ல் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்பட்டான்ஆதித்த கரிகாலனின் கொலை பிற்காலச் சோழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான நிகழ்வாகும். ஏனெனில், இரண்டாம் பராந்தகனுக்குப் பின்னர் சோழப் பேரரசின் மன்னனாக ஆதித்த கரிகாலனே பட்டத்து இளவரசனாக்கப்பட்டிருந்தான். இவனது கொலை சோழ மரபுவழியில் மாற்றங்களை உண்டாக்கியது. ஆதித்த கரிகாலனின் இறப்பால் சொல்லொணாத் துயருற்ற இரண்டாம் பராந்தகன் பொ.ஊ. 973ல் உயிர்நீத்தான். இரண்டாம் பராந்தகனுக்குப் பின் கண்டராதித்தனின் மகனாகிய மதுராந்தகன் உத்தம சோழன் எனும் பெயருடன் அரியணையேறினான்.

ஆதித்த கரிகாலனின் படுகொலையைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட புதினமே கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” ஆகும். இப்புதினம் “கல்கி” கிருட்டிணமூர்த்தியின் ஆக்கங்களுள் மிகவும் புகழ்பெற்றதாகும். எனினும், இப் புதினத்தில் கல்கி விவரித்துள்ள பல தகவல்கள் ஆசிரியரின் முழுப் புனைவாக இருப்பதால் வரலாற்றிலிருந்து மாறுபடுகின்ற தகவல்களை அடுத்து நோக்குவோம்.

(காந்தளூர்ச்சாலைப் போரைக் குறிப்பிடும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலிலுள்ள ராசராசன் கல்வெட்டு)

வரலாற்றோடு முரண்படும் பொன்னியின் செல்வன் புதினம்

பொன்னியின் செல்வன் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு புதினமேயன்றி ஒரு வரலாற்று ஆவணமன்று. இப் பிரிவில், இவ்வாய்வுக்குத் தேவையான பொன்னியின் செல்வன் புதினத்திலுள்ள சில தகவல்களின் உண்மைத் தன்மை ஆராயப்படுகிறது. முதலில், இப் புதினத்தில் காணப்படும் கற்பனைப் பாத்திரங்களைப் பார்க்கலாம். “ஊமை ராணி” எனக் குறிக்கப்படும் மந்தாகினி தேவி ஒரு கற்பனைப் பாத்திரமாகும். “கல்கி” கிருட்டிணமூர்த்தி இப் பாத்திரத்தை அமைப்பதற்கு அடிப்படையாய் அமைந்தது இராசராசன் தனது ஆட்சிக்காலத்தில் அமைத்த சிங்கள நாச்சியார் கோவிலாகும். எனினும், இக்கோவில் கண்ணகிக்கு அமைக்கப்பட்ட கோவிலாகும். பழங்காலத்தில் தமிழகமெங்கும் பரவியிருந்த கண்ணகி வழிபாடு, பிற்காலத்தில் சேர நாட்டிலும் ஈழ நாட்டிலும் மட்டுமே எஞ்சியிருந்தது. இதனால், கண்ணகித் தெய்வம் “சிங்கள நாச்சியார்” என அறியப்பட்டது. இராசராசன் தனது ஆட்சியின்போது கண்ணகி வழிபாட்டை மீண்டும் சோழநாட்டுக்குக் கொண்டுவந்து, கண்ணகிக்குக் கோவிலமைத்தான் [1]. இதனையே கல்கி அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு “ஊமை ராணி” எனும் கதாப்பாத்திரமாகப் புனைந்துள்ளார்.

எனவே, இரண்டாம் பராந்தகன் ஈழ நாட்டில் மந்தாகினி தேவி எனும் பெண்ணைச் சந்தித்துக் காதல் கொண்டதாகக் கல்கி குறிப்பிடுவது முற்றிலும் கற்பனையே. அத்தோடு, மந்தாகினியின் பிள்ளைகளாகக் குறிக்கப்படும் நந்தினியும், போலி மதுராந்தகனும் கூடக் கற்பனைப் பாத்திரங்களே. மந்தாகினியின் உடன்பிறந்தவராகக் கூறப்படும் வாணி அம்மையும், அவரது வளர்ப்பு மகனாகவும், உண்மையான மதுராந்தகன் எனவும் சித்தரிக்கப்படும் சேந்தன் அமுதனும் வளமான கற்பனையே. இதிலிருந்து, பொன்னியின் செல்வன் புதினத்தின் அடிப்படைக் கதைக்கரு முழுப் புனைவே என அறியலாம்.

அடுத்து, பழுவேட்டரையர்கள் குறித்தான கல்கியின் புனைவை நோக்குவோம். கல்கி தனது புதினத்தில், பழுவேட்டரையர்கள் மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்டும் வகையில் சதி புரிவதாகப் புனைந்துள்ளார். எனினும், பழுவேட்டரையர் மரபினர் முதலாம் பராந்தகன் காலத்திலிருந்தே சோழ அரசின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்துள்ளனர். மேலும், அன்பில் செப்பேடுகளின் படி, முதலாம் பராந்தகனின் மனைவியும், அரிஞ்சய சோழனின் தாயுமாகிய சேர இளவரசி, பழுவேட்டரையர் மரபில் வந்தவளாவாள் [2]. அத்தோடு பழுவேட்டரையர்கள், இராசராசன் மற்றும் அவன் மகனாகிய இராசேந்திரன் காலத்திலும் கூட சோழருக்கு அடங்கிய சிற்றரசர்களாக ஆட்சி புரிந்ததோடு, இராசராசனின் மனைவியருள் இருவர் பழுவேட்டரையர் மரபினர் என்பதும் குறிப்பிடத்தக்கது [3]. எனவே, சோழப் பேரரசின் உற்ற தோழர்களாக விளங்கிய பழுவேட்டரையர் மரபினர் சோழ நாட்டுக்கெதிராகச் சதிச்செயல் புரிந்தனர் என்பதும் எவ்வகையிலும் ஏற்கத்தகாத கருத்தாகும்.

பொன்னியின் செல்வன் புதினம் குற்றம் சாட்டும் இறுதி மற்றும் முக்கிய நபர் மதுராந்தக உத்தம சோழனாவான். இதன் உண்மைத் தன்மை குறித்தும் ஆதித்த கரிகாலன் கொலையின் உண்மையான குற்றவாளிகள் குறித்தும் எஞ்சிய பகுதிகளில் ஆராய்வோம்.

ஆதித்த கரிகாலன் கொலையின் மர்மங்கள்

ஆதித்த கரிகாலனைக் கொன்றவர் யாவர் என்பதைத் தீர்மானிப்பது சற்றே சிக்கலானது. எனினும், சில கல்வெட்டு மற்றும் செப்பேட்டு ஆதாரங்கள் இச் சிக்கலைத் தீர்க்கத் துணை புரிகின்றன.

இவற்றுள் லெய்டன் செப்பேடுகள் பற்றி முதலில் பார்க்கலாம். லெய்டன் செப்பேடுகள் என்பன நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகரில் பேணப்பட்டு வருவதால் இவை இப்பெயர் பெற்றன. இரு தொகுதிகளாகக் காணப்படும் இவை முறையே லெய்டன் பெரிய செப்பேடுகள் மற்றும் லெய்டன் சிறிய செப்பேடுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றுள் லெய்டன் பெரிய செப்பேடுகள் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனுடன் போர் புரிந்தமை பற்றி தகவல்களைத் தருகின்றன. இச் செப்பேடுகளில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரத்துக்கு ஆனைமங்கலம் எனும் ஓர் ஊரை நிவந்தமாக அளித்தமை பற்றிக் கூறப்படுவதால் இவை “ஆனைமங்கலச் செப்பேடுகள்” எனவும் குறிப்பிடப்படுகின்றன. இதன் முதற்பகுதி சமசுகிருதத்திலும் இரண்டாம் பகுதி தமிழிலும் உள்ளது. இதிலுள்ள சமசுகிருதப் பகுதியில் ஆதித்த கரிகாலன் சிறுவயதினனாயிருக்கையிலேயே வீரபாண்டியனுடன் போர்புரிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்.

 திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சற்றே மாறுபட்ட செய்திகளைத் தருகின்றன. இச் செப்பேடுகளின் சமசுகிருதப் பகுதிகளிலுள்ள தகவல்களின் படி, இரண்டாம் பராந்தகனுக்குப் பின் ஆதித்த கரிகாலன் அரசுபுரிந்ததாகவும் போரிலே பாண்டியனைக் கொன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பின்வரும் தகவல்களை அது தருகிறது.

பாண்டியன் தலைகொண்டவனாகிய ஆதித்த கரிகாலன் விண்ணுலகைக் காணும் ஆசையினால் மறைந்தான். வலிமை மிக்க கலியின் கும்மிருட்டைப் போக்கும் நோக்கில் அருண்மொழிவர்மனையே மன்னானாகுமாறு அவன் மக்கள் வேண்டிக்கொண்ட போதும் அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை. அத்துடன் அரசு அறத்தின் படி, அரசுப் பதவியை விரும்பிய தனது சிற்றப்பாவாகிய மதுராந்தகரிடம் அரசுப் பொறுப்பை ஒப்படைத்தான். மதுராந்தகனாகிய உத்தம சோழன் தனக்கடுத்துப் பட்டத்துக்குத் தகுதியானவன் அருண்மொழியே எனக்கண்டு அவனை இளவரசனாக்கினான். உத்தம சோழனுக்குப் பின் அருண்மொழி வர்மன் முடிசூட்டிக்கொண்டான்.

ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய இன்றியமையாத தகவல்களைத் தரும் மூலம் உடையார்குடிக் கல்வெட்டுக்களாகும். இராசராசன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டின்போது வெட்டப்பட்ட இது தற்போதைய தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில் எனுமிடத்தில் உள்ளது. இக்கல்வெட்டு ஆதித்த கரிகாலன் ‘மேலக்கடம்பூர்’ எனுமிடத்தில் கொலைசெய்யப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. மேலும், இக்கொலைக்குற்றத்துக்காக “வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபை”யினால் சிலருடைய சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட்டு விற்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. அக்கல்வெட்டுத் தகவல்கள் பின்வருமாறு:

ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து என்று இப்பரிசுவரஇ ஸ்ரீமுகத்தின் மேற்பட்ட மலையனூரான் ஆன பாப்பனச்சேரி ரேவதாச கிரமவித்தனும் இவன் மகனும் இவன்றாய் பெரிய நங்கைச்சாணியும் இம்மூவரிதும் ஆன நிலம் ஸ்ரீ வீரநாராயன சதுர்வேதி மங்கலத்து மிப்பிடாகை தேவமங்கலம் ஆன பட்டில நிலம் ஸ்ரீவீரநாராயண சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கல் வெண்ணையூர் நாட்டு வெண்ணையூருடையான் நக்கன் அரவணையானான பல்லவ முத்தரைய மகன் பரதனான வியாழகஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலம் பழம்படி இரண்டே முக்காலே ஒருமாவும் அகமனை ஆறும் ஆக இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்தி ருகழஞ்சு பொன் குடுத்து விலைகொண் டிவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷநாயற்று நாயற்றுக்கிழமை பெற்ற புரட்டாசி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் கோயில் முன்பு மூவாயிரத்தரு நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிச தம் படி நாழி நெல்லும் ஆட்டைவட்டம் ஒரு காகம் நிசதம் பதினைவர் பிராமணர் உண்பதற்கு ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன் அரையன் பரதன் ஆன வியாழகஜமல்ல பல்லவரையனேன் இதர்மம் ரஷிகின்ற மகாசபையார் ஸ்ரீபாதங்கள் என் தலை மேலன

இராசகேசரியாகிய முதலாம் இராசராசனின் இரண்டாம் ஆட்சியாண்டில் நடைபெற்ற ஒரு நில விற்பனை தொடர்பான தகவல்களை இது தருகின்றது. இக் கல்வெட்டின்படி, ஆதித்த கரிகாலனைக் கொன்றோர் சோமன், ரவிதாசன், பரமேசுவரன் மற்றும் ரேவதாச கிரமவித்தன் ஆகிய நால்வராவர். இவர்கள் அனைவரும் உடன்பிறந்தவர்களாவர்.

உத்தம சோழனின் தொடர்பு

ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பில் சில வரலாற்றாய்வாளர்கள் உத்தம சோழனைக் குற்றவாளியாகக் கருதுகின்றனர். எனினும், உத்தம சோழனுக்கு இக்கொலையில் தொடர்புண்டா எனச் சற்று நோக்குவோம். 

  • திருவாலங்காட்டுச் செப்பேடுகளின் படி, ஆதித்த கரிகாலனின் பின்பு தனது சிற்றப்பனாகிய மதுராந்தக உத்தம சோழனே அரசுபுரியும் வகையில் இராசராச சோழன் தனது உரிமையை விட்டுத்தந்தான் என அறியமுடிகிறது. மதுராந்தகனும் தனக்குப் பின் அரசனாக இராசராசனுக்குப் பட்டம் கட்டுவித்தான்.
  •  முதலாம் இராசராச சோழன் தன்னுடைய மகனுக்கு மதுராந்தகன் என்றே பெயரிட்டான். இவனே, பின்னர் இராசேந்திர சோழன் எனும் பட்டத்தோடு இராசராசனுக்குப் பின் அரியணையேறியவனாவான்.
  • உத்தம சோழனின் மகனாகிய மதுராந்தகன் கண்டராதித்தன் என்பாரை இராசராசன் தனது ஆட்சியின் கீழ் கோயில்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் அமர்த்தியிருந்தான். கோயில் நிர்வாகங்களைக் கண்காணித்து தவறிழைத்தோருக்குத் தண்டனை வழங்குதல் இவனுக்கான பணியாக இருந்தது.
  • உடையார்குடிக் கல்வெட்டுக்கள், இராசராசன் பட்டத்துக்கு வந்த இரண்டாம் ஆட்சியாண்டின் நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும், இக் கல்வெட்டு ஆதித்த கரிகாலன் கொலைக்கான தண்டனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட உடைமைகளின் விற்பனை தொடர்பானதேயன்றி, ஆதித்த கரிகாலன் கொலை வழக்கின் விசாரணையோ அல்லது தீர்ப்போ தொடர்பானதல்ல.

உத்தமன் ஆதித்த கரிகாலனின் கொலையில் தொடர்புற்றிருந்திருப்பின் ஆதித்த கரிகாலன் தம்பியாகிய அருண்மொழிவர்மன் கட்டாயம் உத்தமனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்க வாய்ப்புண்டு. உத்தம சோழன் தனது அண்ணனாகிய ஆதித்த கரிகாலனைக் கொலைசெய்வித்தது உண்மையானால், அவன் பெயரையே இராசராசன் தனது மகனுக்கும் இட்டிருப்பானா என்பதும் ஐயத்துக்கிடமானதே. மதுராந்தக உத்தம சோழன், தனது அண்ணனாகிய ஆதித்த கரிகாலனைக் கொன்றது உண்மையாயின், மதுராந்தகன் மகனுக்குத் தனது ஆட்சியில் உயர் அதிகாரிப் பொறுப்பை இராசராசன் வழங்கியிருப்பானா என்பதும் ஈண்டு நோக்கற்பாலது. எனவே, உத்தம சோழனுக்கு இக்கொலையில் தொடர்புண்டா என்பது ஐயத்துக்கிடமானது. மேலும், உத்தம சோழன் குற்றவாளியாக்கப்படும் பட்சத்தில், மேலுள்ள ஆதாரங்களின் படி, இராசராச சோழனும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தான் என்றே கருதவேண்டியுள்ளது.

மதுராந்தகனுக்கு ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்பிருப்பதாகக் கருதும் ஆய்வாளர்கள் மதுராந்தக உத்தம சோழன் ஆட்சியில் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை என வாதிட்டுத் தமது கருதுகோளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். எனினும், மதுராந்தக உத்தம சோழன் பதினைந்து ஆண்டுகள் என்னும் குறுகிய காலம் மட்டுமே ஆட்சியில் இருந்தான் என்பதை நாம் இங்கு கருத்திற் கொள்ள வேண்டும். மேலும், உடையார்குடிக் கல்வெட்டுக்கள், இராசராசன் பட்டத்துக்கு வந்த இரண்டாம் ஆட்சியாண்டில், தண்டிக்கப்பட்ட கொலையாளிகளின் உடைமைகளின் விற்பனையைப் பற்றிக் கூறுவதால், உத்தம சோழன் ஆட்சியிலேயே இக் கொலைவழக்குக்கான விசாரணைகள் தொடங்கியிருத்தல் வேண்டும். உத்தம சோழன் ஆட்சிக்காலத்திலேயே கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, மேற்போந்த வாதங்கள் மதுராந்தக உத்தம சோழன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்துக்கு எதிராக உள்ளன.

பார்ப்பனர் தொடர்பு

மேற்போந்த ஆய்வுகளின் மூலம் பொன்னியின் செல்வன் புதினத்தினூடாகக் குற்றவாளிகளாக்கப்பட்ட எவருமே ஆதித்த கரிகாலனின் கொலையுடன் தொடர்புபடவில்லை என்பது தெளிவு. எனவே, ஆதித்த கரிகாலனை உண்மையில் கொன்றோர் யாவர் எனத் தற்போது ஆராய்வோம். உடையார்குடிக் கல்வெட்டுக்கள் கொலையாளிகளை மிகத் தெளிவாகவே அடையாளங் காட்டியுள்ளது. அவர்களது பெயர்களை நாம் தெளிவாக அறியக்கூடியதாயுள்ளது. இக் கொலையாளிகளின் அடையாளங்களையும் இக் கல்வெட்டே மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இக் கல்வெட்டின்படி கொலையாளிகளுள் ஒருவனான ரவிதாசன், “பஞ்சவன் பிரம்மாதிராஜன்” என்னும் பட்டப்பெயரைக் கொண்டுள்ளான். சோமன் என்பவனின் பட்டம் கல்வெட்டில் சிதைந்துள்ளது. அதேபோல, பரமேசுவரன் என்பவன், “இருமுடிச்சோழ பிரம்மாதிராஜன்” எனும் பட்டத்தைக் கொண்டுள்ளான். இவ்விரு பட்டங்களும் முறையே பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் அரசு உயர் பதவிவகித்த பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களாகும். எனவே, ரவிதாசன் மற்றும் பரமேசுவரன் ஆகிய இருவரும் முறையே பாண்டிய மற்றும் சோழ நாட்டுப் பார்ப்பன உயரதிகாரிகள் என்பது திண்ணம். மேலும், சோமன் என்பவனின் பெயர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இவனும் பாண்டிய நாட்டுப் பார்ப்பன உயரதிகாரியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் மிகுதியாக உண்டு. நான்காமவனான ரேவதாச கிராமவித்தன் என்பவன் இவர்களின் உடன்பிறந்தானாக இருப்பதனால், இவனும் ஒரு பார்ப்பனன் ஆவான். மேலும், இவன் பாப்பனச் சேரி எனுமிடத்தில் வசித்ததாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இம் முடிவுக்கு மேலும் வலுச்சேர்க்கிறது.

இம்முடிவுக்கு மேலும் வலுச்சேர்ப்பது காந்தளூர்ச் சாலைப் போராகும். இப்போர் இராசராசன் பட்டத்துக்கு வந்த நான்காம் ஆட்சியாண்டில், அதாவது பொ.ஊ. 988ல் நிகழ்ந்ததாகும். மேலும், இராசராசன் ஆட்சிக்கு வந்த பின்னர் அவன் தொடுத்த முதலாவது போரும் இதுவேயாகும். இப்போரில் சோழர்கள் பெற்ற வெற்றி சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது. இராசராசனின் நான்காம் ஆட்சியாண்டு, அதாவது பொ.ஊ.988 மற்றும் அதற்குப் பின்னரான இராசராசனின் பெரும்பாலான கல்வெட்டுக்களில் “காந்தளூர்ச் சாலைக் கலமறுத்த” எனும் சொற்றொடர் இடம்பெற்றிருப்பதைக் கொண்டு இதனை நாம் அறிந்துகொள்ளலாம் [4][5]. தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் கண்டெடுக்கப்பட்ட இராசராசனின் கல்வெட்டொன்றில் “சாலைய் கலமறுத்து அங்குள்ள மலைஆளர் தலை அறுத்த” எனும் சொற்றொடர் காணப்படுகிறது [6]. இதிலிருந்து, காந்தளூர்ச் சாலை என்பது சேரர் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்பதை அறிந்து கொள்ளலாம். சாலை என்பது பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்ட, ஆயுதம் தாங்கிய, “சதிரர்” என அழைக்கப்படுகின்ற, பார்ப்பனர்களுக்கான பல்நோக்குப் பயிற்சி மையங்களாகும். இம்மையங்களில், வேதப் படிப்புக்களும் இராணுவப் பயிற்சிகளும் கற்றுத் தரப்பட்டன [7]. இச் சாலை எனும் பயிற்சி மையத்தை இராசராசன் தாக்கியதற்கான காரணம் என்னவென உறுதியாகத் தெரியவில்லை. எனினும், இந் நிகழ்வை ஆதித்த கரிகாலனின் படுகொலையோடு பொருத்திப் பார்க்கும்போது, சில விடயங்கள் புலப்படுகின்றன. இக் காந்தளூர்ச் சாலைப் பயிற்சி மையத்தில், ஆதித்த கரிகாலனைக் கொன்ற பார்ப்பனர்கள் பயிற்சி பெற்றிருக்கக் கூடும். இதன் மூலமாக, இராசராசன் தனது அண்ணனின் படுகொலைக்குப் பழிதீர்க்கும் விதமாக இப்போரை நிகழ்த்தியிருக்கக் கூடும்.

முடிவுரை

இவ்வாய்வின் ஊடாக, சோழ மற்றும் பாண்டிய நாட்டைச் சேர்ந்த அரசு உயர்பதவி வகித்த நான்கு பார்ப்பனர்களே ஆதித்த கரிகாலனைப் படுகொலை செய்தனர் என்பது ஐயந்திரிபற உறுதியாகின்றது. அடுத்து, இவர்கள் இப்படுகொலையைப் புரிந்ததற்கான காரணங்களை ஆராய்வோம். இக் கொலையில் பாண்டிய நாட்டுப் பார்ப்பனர்களின் தொடர்பு இருப்பதனால், வீரபாண்டியனின் கொலைக்குப் பழிதீர்க்கும் விதமாக இப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கக் கூடும். அதேவேளை, சோழ நாட்டுப் பார்ப்பனர்களின் தொடர்பு, இம்முடிவில் ஐயங்களைத் தோற்றுவிக்கிறது. ஆதித்த கரிகாலன், வைதீக மதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒருவனாகவும், பார்ப்பனர்களின் அரசு மேலாதிக்கத்தை விரும்பாதவனாகவும் இருந்திருக்கக் கூடும். இதன் விளைவாக, ஆதித்த கரிகாலன் அடுத்து சோழநாட்டின் பட்டத்துக்கு வருவதை விரும்பாத பார்ப்பனர்கள் இப் படுகொலையைப் புரிந்திருக்கலாம் என்பது இன்னொரு வாதமாகும். இந் நோக்கு, இப்படுகொலையில் சோழநாட்டுப் பார்ப்பனரின் தொடர்பை விளக்கும் விதத்தில் உள்ளது. எனினும், இதுவும் ஒரு கருதுகோளே. இதனை உறுதிப்படுத்துவதற்கு மேலும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. முடிவாக, ஆதித்த கரிகாலனைப் படுகொலை புரிந்தோர் சோழ மற்றும் பாண்டிய நாட்டுப் பார்ப்பனரென்பது உறுதியானாலும், அவர்கள் இப்படுகொலையைப் புரிந்ததற்கான நோக்கங்கள் இன்னும் தெளிவற்றவையாகவே உள்ளன. இது தொடர்பிலான அடுத்த கட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு உரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகையில் இப் படுகொலை தொடர்பான மேற்போந்த ஐயங்கள் நீக்கப்படலாம்.

வரலாற்றுத் தகவல்களின் படி…

பொன்னியின் செல்வன் நாவலின் படி…

Related posts

வினோத உலகம் – 25

Thumi202121

அங்கீகாரங்களை பெற்றுக்கொடுப்போம்

Thumi202121

சித்திராங்கதா -57

Thumi202121

Leave a Comment