இதழ் 60

பரியாரியார் Vs அய்யர் – 09

தன் சக்திக்குத் தகுந்த வேகத்தில் தேவையான மருந்துச் சரக்குகளை எடுத்து பையில் போட்டுக் கொண்டு, கட்டியிருந்த வேட்டியோடு, ஒரு சால்வைத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு புறப்பட ஆயத்தமானார் பரியாரியார்.

“நானும் வாறன். ஆச்சியைப் பார்க்கோணும் போல இருக்கு…”

கையில் குடையை எடுத்தவாறே பரமு கூறினாள்.

“நான் சைக்கிள்ல தான்டி போகப் போறேன். நீ பிறகு பரதனோட போய் பாரன்.”

“என்னது…? சைக்கிள்லயோ..?
உங்களுக்கே உடம்பு ஏலாது. இந்த சித்திரை வெயிலுக்க அவ்வளவு தூரம் சைக்கிள் எல்லாம் ஓட வேண்டாம்…. அய்யா உங்களுக்காகத்தானே ஓட்டோ அனுப்பியிருக்கிறார். அதில போட்டு வருவம். வாங்கோ.”

” ஹா.. ஹா.. வீட்டு வாசல் வரைக்கும் வந்து கத்திப்போட்டு, திமிர்ல ஓட்டோவும் அனுப்பி வைச்சிருக்கார். அதில நான் போவனென்டு நீ நினைச்சியோ? “

“சரி ஓட்டோ வேணாம். பரதனோடயாவது போங்கோவன். சொன்னா கேளுங்கோ”

“நான் சொல்லுறத நீ கேளு.. ஒருக்கா அங்க அனுப்பினதுக்கே அவன் உடைஞ்சு போய் வந்திருக்கான். அவன திருப்ப அனுப்பேலாது. பாவம் பிள்ளை. தாங்க மாட்டான். எனக்கு ஒன்னும் இல்லை. நான் போவன்.”

“போட்டுவாறன்னுதானே வழமையா சொல்லுவிங்கள்?”

“வாசல் வரைக்கும் வந்தவனை மறிச்சு கதைச்சிட்டு இருக்கிற மட்டும் சரியா பரமு?”

அந்த வார்த்தைக்குப் பிறகு பரமுவால் எதுவும் கதைக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே, இல்லை இல்லை மறைத்துக் கொண்டே வழியனுப்பி வைத்தாள்.

அய்யர் அனுப்பி வைத்த ஓட்டோ வாசலில் நின்றது. ஓட்டோக்காரனை போகுமாறு சைகை காட்டிவிட்டு, அய்யர் தனது ரெலி சைக்கிளை எடுத்து ஸ்ரான்டை தட்டினார். அவர் கால் பலத்திற்கு ஸ்ரான்ட் அசையவில்லை. மறுபடி மறுபடி இரண்டு முறை தட்டினார். அசையவே இல்லை. குனிந்து பக்கத்தில் இருந்த மரக்கட்டையை எடுத்து ஸ்ரான்ட் மீது ஒரு அடி அடித்தார். ஸ்ரான்ட் தட்டுப்பட்டது.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பரமு எதுவும் கதைக்கவில்லை. முடிவெடுத்து விட்டு செல்பவரிடம் முரண்பட்டு பயன் இல்லையென அமைதியாக நின்றாள். ஆனால் அவள் உள்ளம் பதைபதைத்தது. பரியாரியார் அய்யர் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

தன் கண்ணிலிருந்து பரியாரியார் மறையும் வரை பரியாரியாரையே பார்த்துக் கொண்டிருந்த பரமுவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டிருந்தது. அவர் அப்பாலே சென்றதும், நினைவு வந்தவளாக விரைவாகச் சென்று பரதனை எழுப்பினாள். உறக்கத்திலாவது நிம்மதி தேடிக் கொண்டிருந்தவனுக்கு தாயின் பரபரப்பு மேலும் பயத்தை ஊட்டியது. தனது மற்ற சைக்கிளை எடுத்துக் கொண்டு தாயையும் ஏற்றிக்கொண்டு அய்யர் வீட்டுக்கு பரதனும் புறப்பட்டான்.

தான் அனுப்பிய ஓட்டோ அய்யர் இல்லாமல் வருவது கண்டு, விரக்தியோடு கோபமும் இயலாமையும் சேர்ந்து என்ன செய்வதென்றே அய்யருக்கு தெரியவில்லை. அந்த ஊரில் வேறு வைத்தியசாலைகளும் இல்லை. வைத்தியரும் இல்லை. எமனோடு போராடிக் கொண்டிருக்கும் ஆச்சியை எங்கே கொண்டு செல்வது? யாரிடம் காட்டுவது? எப்படி காப்பாற்றுவது? அய்யர் முன்னால் விரிந்த ஆயிரம் கேள்விகளால் அவர் முகம் சுருங்கிவிட்டது.

“ஆச்சியின் நிலைமையை வடிவா சொன்னியா? ஏன் பரியாரியார் வரேலயாம்..? அவ்வளவு தடிப்பா அந்த மனுசனுக்கு..”

ஓட்டோக்காரனிடம் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டு எரிந்து விழுந்தார் அய்யர்.

“நான் எல்லாம் சொன்னான் ஐயா! எல்லாத்தையும் கேட்டுட்டவர். என்னைப் போகச்சொன்னார். ஏன் வரேல என்டு தெரியேல. எங்கேயோ போறதுக்கு சைக்கிள்ல வெளிக்கிட்ட மாதிரி கிடந்தது?”

” எங்கயோ போறதுக்கோ.. தனக்கு ஏலாது என்டுதானே பெடியன அனுப்பினவர். சைக்கிள்ல ஊர் சுத்த மட்டும் ஏலுமோ? வருத்தக்கார மனுசன் என்டு தானே ஓட்டோவும் அனுப்பி வைச்சனான். இந்த மனுசன் இவ்வளவு வஞ்சம் வைச்சு பழகும் என்டு நான் கனவிலும் நினைக்கேல. பரமுவாவது சொல்லி அனுப்பியிருக்கலாமல்லோ”

தன் இயலாமையை அய்யர் கொட்டிக் கொண்டிருந்த போது கேற் அடியில் சைக்கிள்ச் சத்தம் கேட்டது. பரியாரியார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அய்யருக்கு சந்தோசத்தில் அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. ஆனால் வெளிக்காட்டவில்லை.

சைக்கிளை விட்டு இறங்கிய பரியாரியார் உடம்பு வியர்த்துப் போய் இருந்தது. அவர் இயலாமையை அவர் உடல் அசைவுகள் நன்றாகவே வெளிப்படுத்தின. அதைக் கவனித்த அய்யர் அவரின் மருந்துப்பையை வாங்க கைகளை நீட்டினார். ஆனால் பரியாரியார் அய்யரைப் பொருட்படுத்தாமல் நேராக ஆச்சியின் அறைக்குச் சென்றார். பரியாரியார் வருவதைக் கவனித்த அய்யரின் தங்கை சரோஜா வேகமாக ஆச்சியின் அறையை விட்டு வெளியேறினாள்.

ஆச்சியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார் பரியாரியார். துடிப்பு குறைந்து கொண்டே வருவது தெரிந்தது. மூடியே கிடந்த கண்களைத் தன் விரல்களால் திறந்து பார்த்தார். அவை ஒரு பக்கமாக சொருகிப் போய் கிடந்தன. அதோடு ஆச்சி சேடமும் இழுத்துக் கொண்டிருந்தார். கொண்டுவந்த பையில் இருந்து சில பச்சிலைகளை எடுத்து கௌசல்யாவிடம் கொடுத்து அரைத்துக் கொண்டு வரும்படி அனுப்பினார். பச்சிலைகளை வாங்கிக்கொண்டு அம்மியடிக்கு கௌசல்யா போனாள். பின்னாலேயே பதறியடித்து வந்த சரோஜா அந்த இலைகளை வாங்கி தானே அம்மியில் அரைக்கலானாள். சரோஜாவில் திடீரென ஏற்பட்ட பதட்டமும், காலையிலிருந்தே ஆச்சியோடு நின்றவள் திடீரென ஓடி ஒளிந்தமையும் கௌசல்யாவுக்கு சந்தேகத்தை வரவைத்தன.

“அம்மா! ஆச்சியோட நிக்காம ஏன் இப்படி பின் பக்கம் வந்து நிக்கிறீங்க?”

சரோஜா ஒன்றுமே பேசவில்லை…
திரும்பத்திரும்ப கௌசல்யா கேட்டும் சரோஜாவிடம் பதிலேதும் இல்லை. கௌசல்யாவின் சந்தேகம் அதிகமானது. தொடர்ந்து தாயைக் கேட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அந்த இடத்திற்கு வந்த அய்யர்,

“என்ன பிள்ளை கத்திக்கொண்டு நிக்கிறாய்? சரோஜாட்ட வாங்கி நீ அரைக்கலாமல்லோ.. நேரமாகுது. கெதியா கொண்டு வரட்டாம்.”

“நீங்கள் வேற மாமா.. நான்தான் அரைக்க கொண்டுவந்தனான். அம்மா, வாங்கி தான் அரைச்சுக்கொண்டு இருக்கிறா. வாயும் திறக்கிறா இல்லை” கொட்டித்தீர்த்தாள் கௌசல்யா

“பச்சிலை அரைக்கேக்க கதைச்சா மருந்து பலிக்காது. தெரியாதா உனக்கு..? ” என்று சொல்லி விட்டு அம்மியில் அரைத்துக் கிடந்த இலைகளை எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொண்டு ஆச்சியின் அறைக்கு விரைந்தார்.

அம்மாவின் மௌனத்திற்கான காரணத்தை அறிந்துகொண்டாலும், தன் கேள்விக்கான பதில்களை அறியாத கௌசல்யா திரும்ப தாயிடம் கேட்க நினைத்தாள். ஆனால் ஏற்கனவே பதில் கிடைக்காத கேள்விகள் பல அவளிடம் அம்மாவுக்காக இருந்தன. அந்தக் கணக்கில் இவற்றையும் வரவில் வைப்பதுதான் இந்த நேரத்தில் சரியான அணுகுமுறை என்று எண்ணி அமைதியாய் ஆச்சி அறைக்கு நடந்தாள் கௌசல்யா.

அய்யர் கொண்டுவந்த அரைத்த பச்சிலைகளின் சாற்றைப் பிழிந்து ஆச்சியின் வாயில் விட்டார் பரியாரியார். இலைச் சக்கைகளை நெற்றியிலும் உள்ளங்கால்களிலும் வைத்து ஒத்தடம் கொடுக்குமாறு கௌசல்யாவிடம் பரியாரியார் கொடுக்கத் திரும்பிய போதுதான் எல்லோரையுமே திடுக்கிட வைக்கும் அந்த சம்பவம் நடந்தது.

பரியாரியார் பச்சிலைச் சக்கைகளை கொடுத்த கையோடு அப்படியே கீழே விழுந்தார். கௌசல்யா பதறிவிட்டாள். அவள் கத்திய சத்தத்தால் வீதியால் போனவர்கள் கூட உள்ளே வந்திருப்பார்கள். ஆச்சிக்கு ஏதோ நடந்து விட்டதென அய்யர் விழுந்தடித்து ஓடினார். ஆனால் அங்கே விழுந்து கிடந்தது பரியாரியார். அய்யர் திகைத்துவிட்டார். என்ன செய்வதென்றே அவருக்கு தெரியவில்லை.

இந்த சத்தங்களால் குழப்பமடைந்த சரோஜா பொறுமையிழந்து ஆச்சியின் அறைக்கு விரைந்து வந்தாள். அங்கே பரியாரியார் வாயால் நுரை கக்க விழுந்து கிடக்கும் காட்சியை கண்டு அதிர்ந்து விட்டாள். அவளுக்கு உலகமே ஒரு கணம் நின்றுவிட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்களால் கண்ணீர் பெருக்கெடுத்தது. கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏதோ… ஒன்று அவளை தடுத்தது.

ஆனால் அந்த தடுப்புக்களை எல்லாம் மீறி விரைந்து சென்று பரியாரியார் கையைப் பிடித்து, நாடியைப் பார்த்தாள். எல்லோருக்கும் நாடி பார்க்கும் பரியாரியாருக்கு சரோஜா நாடி பார்க்கிறாள். எந்த துடிப்பும் இல்லை. தான் நாடி பார்ப்பதில் தவறேதும் இருக்குமோ என்ற ஒரு அசட்டு நம்பிக்கை. பரியாரியார் நெஞ்சில் தன் காதை வைத்து இதயத் துடிப்பை கேட்கத் துடிக்கிறாள். என்ன செய்வது? நெஞ்சில் எந்த துடிப்பும் இல்லை.

கண்ணீர் தாரை தாரையாக சரோஜா கண்களிலிருந்து வந்து கொண்டே இருந்தது. பரியாரியார் தலையை தன் மடியில் வைத்து விக்கி விக்கி அழத் தொடங்கினாள். ஏதோ புலம்ப முனைந்தாள். ஆனால் பேச்சு வரவில்லை. தன் தாய் பரியாரியாருக்காக இப்படி அழுவதைப் பார்த்த கௌசல்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. சமீபகாலமாக தன் தாயின் நடவடிக்கைகள் யாவுமே கௌசல்யாவுக்கு புதிராகத்தான் இருந்தது.

அய்யருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உடம்பு இயலாத மனுசனை அழைத்து பிழை விட்டுவிட்டோமோ என்று கவலைப்பட்டார். யாருக்கும் எதாவதென்றால் பரியாரியாரை அழைப்பதுதான் அந்த ஊரின் வழமை. இன்று அந்த பரியாரியாரே மூச்சுப் பேச்சின்றி படுத்திருக்கிறார். யாரை வைத்து மருத்துவம் பார்ப்பது? குழம்பி நின்றார் அய்யர். அப்போது தான் பரியாரியார் மகன் பரதன் ஞாபகம் அய்யருக்கு வந்தது. அவனை அழைத்து வருவோமென அய்யர் திரும்பினால் அவனும் அவனது தாய் பரமுவும் அங்கே வந்து ஆச்சியின் அறை வாசலில் விறைத்துப் போய் சிலையாய் நிற்கிறார்கள்.

பரியாரியார் அய்யரின் தங்கை சரோஜா மடியில் பேச்சு மூச்சின்றி கிடக்கிறார். அதை பரியாரியார் மகனும் மனைவியும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒரு கணம் பரியாரியார் தவிர அங்கே நின்ற அனைவர் முகத்திலும் ஒரு புதுவித பதற்றம் தொற்றிக் கொள்கிறது. பல ஆண்டுகளாக வலிந்து புதைக்கப்பட்ட இரகசியம் ஒன்று வெளிவருவதற்கு எத்தணிக்கிறது.

முடிச்சுக்கள் அவிழும்…

Related posts

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -04

Thumi202121

யார் இந்த மதீஸ பத்ரன

Thumi202121

அங்கீகாரங்களை பெற்றுக்கொடுப்போம்

Thumi202121

1 comment

Leave a Comment