வெறும் நாற்பது வயதுதான் ஆகிறது அவளுக்கு
ஆனாலும் தலை முழுதும்
ஆதிக்கம் செலுத்தின நரைமுடிகள்..
அவளின் வாழ்வைப் போலவே
வினாக்குறியாய் வளைந்துபோன முதுகு..
குழிக்குள் பதுங்கிடும் முயலாய் கருவிழி இரண்டும்..
தென்னைமர இடுக்கில் கூடுகட்டும் காகம்
வாயில் கொண்டு செல்லும் குச்சிகளாய் கை, கால்..
பாதம் இரண்டிலும் பாறை வெடிப்புகளாய்
பலவித கோடுகள்…
வழித்தெடுத்தாலும் வரமாட்டேன் என்பதாய்
என்பைப் போர்த்திய ஒற்றை நூலாடையாய்
சொற்பச் சதைக்கூட்டம்..
எதியோப்பியாவும் சோமாலியாவும்
பழுதில்லை என்று – இவளை
பார்ப்போர் கூறினாலும்
பனிக்கட்டியில் பதுக்கிய பருவகால மீனாய்
மரத்துப்போன அவள் கையிரண்டும் சொல்லும்
குளிரிலும் பனியிலும்
அட்டைக்கடியிலும் ஆள்வோரின் வெறுப்பிலும்
கண்காணியின் கடுமையிலும்
கொழுத்தும் பசிக்காய் கொழுந்து பறித்திடும்
உழைப்பாளி அவளென்று…
previous post