இதழ் 60

இலக்கை எய்த இறையருளை வேண்டுகிறோம்

“துமி”யின் ஐம்பதாவது மலரை முகர்ந்து மகிழ்ந்த நினைவு உள்ளம் முழுவதும் கமழ்ந்துகொண்டிருக்கையிலேயே அறுபதாவது மலர் எமது கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. மாதந்தோறும் முதல் நாளே நம்மைத் தேடி துமி வந்துவிடுவான். வழமையான, சுவை மிகு அம்சங்களைச் சுமந்துகொண்டு வந்து நிற்பான். அதனால் வாசகர் அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பது வழமை.

அதுமட்டுமல்ல. “இருள் பரவிவருகிறது. இருள் எவ்வாறேனும் அகல வழி ஏதேனும் தென்படுகிறதா?” எனத் தவித்தவர்களின் கண்களுக்கு ஓர் ஒளிப்பொட்டு தெரிந்தாலும் நிம்மதியும் மகிழ்வும் கலந்து அவர்களுள் ஊற்றெடுக்குமல்லவா? அதையொத்த மனநிலை “துமி”யின் வரவால் எமக்கும் ஏற்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் திசை காட்டுவோரின் நோக்கங்களை அறியாது அவர்கள் சுட்டிய அழகொளிர் மின்னிருக்கைகளிலும் தருமப் பொறிகளுள்ளேயும் சிக்கி அழிவதைக் கண்டு கலங்கியோருக்கு “துமி” விடிவெள்ளியாக ஒளிர்ந்து ஆறுதல் தருகிறது.

பல்துறை சார்ந்த இளைஞர்கள், சமுதாயத்தின் நலனையே நோக்கமாக்க கொண்டு தம் சகோதர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆக்கங்களை உருவாக்கி  ஒன்று சேர்த்து “துமி”யில் தந்துவருகின்றனர். இதனால் நம் எதிர்காலம் ஓரளவேனும் வளமுறும் என்ற நம்பிக்கை எம் மனங்களுக்கு சிறிது தெம்பூட்டுகிறது.

ஐம்பதாவது இதழில் “இலக்குகளை அடைவோம்” என பதிவு செய்து தம் உறுதியை வெளிப்படுத்தி அனைவரையும் அதில் இணையுமாறு கோரியிருந்த துமி குழுமத்தினர் நோக்கத்தை அடையும் பாதையில் முன்னேறி வருகின்றனர். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறோம். அதே வேளையில் ஏனையோரது ஒத்துழைப்பு போதியளவு கிடைக்கிறதா? என்ற ஐயமும் தோன்றுகிறது.

ஆய்வின் அரசர்கள் போட்டியை நடத்தியதை இவர்களது செயலூக்கத்திற்கு ஓர் உதாரணமாக இங்கு கூறலாம். இவர்களது நோக்கம் பரிபூரண வெற்றி பெற ஏனையோரின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானதாகும். அதனை வழங்கவேண்டியது எமது கடமை. நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போதுதான் பயன் கிடைக்கும். அத்துடன் திசைமாறிச் சென்றுகொண்டிருக்கும் இளையோரின் திறன்களை வாய்க்காலமைத்து நெறிப்படுத்தி அவர்களும் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம்.

“துமி” வெற்றி நடை போட்டு தன் இலக்கை எய்தி சிறப்புற்றோங்க அருள்புரியுமாறு எதனுள்ளும் நின்றியங்கும் இறையருளை வேண்டுகிறோம்.

Related posts

இலங்கை செய்திகள்

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 09

Thumi202121

சித்திராங்கதா -57

Thumi202121

Leave a Comment