ஈழத்தில் துமி என்ற பெயரில் அருமையான ஒரு மாதாந்த சஞ்சிகை ஒன்று இளைய தலைமுறை மூலமாக வெளிவந்து கொண்டிருப்பதை யாவரும் அறிவார்கள். யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் ஏனைய இளையவர்களையும் இணைத்து தங்களுடைய வேலைப்பழுக்களோடும், கல்விச் செயற்பாடுகளோடும் இந்த கைங்கரீயத்தையும் தொடங்கி இன்று துமி என்ற இந்த இதழ் மக்கள் மத்தியில் பலத்த செல்வாக்கை பெற்றிருக்கிறது.
இதனுடைய அறுபதாவது மலர் வெளிவருவது என்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வளவு சிறப்பாக வேகமாக என்ன பொருளாதார சூழ்நிலைகள் இருக்கலாம், மற்றது இயற்கை சூழ்நிலைகள் இருக்கலாம், அவற்றைத் தாண்டி காலம் தவறாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
சிறுவர்களுக்கான செய்திகள் தொடக்கம் வரலாற்றுத் தகவல்கள், இலக்கிய கட்டுரைகள், தொடர் நாவல்கள், விளையாட்டுகள் சார்ந்த கட்டுரை, சமூகத்தில் உள்ள இன்றைய விடயங்கள் தொடர்பான சிறப்பு செய்திகள் இவற்றை உள்ளடக்கிய இந்த அருமையான இதழியியலாக எம் மத்தியில் வெளிவரும் துமி தமிழ் உலகத்துக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம் என்று தான் கூற வேண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் மல்லிகை, ஜீவநதி , சிரித்திரன் இப்படி பல மலர்கள் மாதாந்தம் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த வரிசையில் இந்த இளையவர்களின் துமி இதழும் தொடர்ச்சியாக வெளிவருவது மனமகிழ்வைத் தருகிறது.
இணையதளம் ஊடாக இந்த துமி வெளிவருகின்ற போது அது தேசம் கடந்து, கண்டம் கடந்து, பல ஆயிரம் வாசகர்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. துமி மலர் 60ஆவது மலரைச் சந்தித்து இருக்கின்றது பாராட்டுக்குரியது. தொடர்ந்து இடைவிடாமல் துமி நம் சமூகத்தை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று கேட்டு இறைவனை பிரார்த்தித்து துமி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நல்லாசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அமைகிறேன்.