இதழ் 60

பயணங்கள் முடிவதில்லை

அடி மீது அடி வைத்து அயராத முயற்சியால் அறுபதையும் எட்டி விட்டோம். அனைவருக்கும் நன்றி.

அறுபதை அடைவது எம் இலக்கல்ல. ஆனால் நம் பாதையில் இது ஒரு முக்கிய மைற்கல் என்பதும் மறுப்பதற்கில்லை. வீதியோரங்களில் மைல் கற்களை கண்டிருக்கிறீர்களா? தூரங்களை சொல்லி ஓரமாய் நிற்கும் கல். உண்மை என்னவென்றால் மைல் கல்லோடு எந்த பயணமும் முடிவதில்லை. மைல்கல்லை இலக்கு வைத்து எந்த பயணமும் தொடங்குவதுமில்லை. ஆனால் இலக்கை நோக்கிய ஒவ்வொரு பயணத்திலும் மைல்கற்கள் அவசியமாகிறது. அக்கற்களே இலக்கை நோக்கி அழைத்துச் செல்கின்றன. பெரும் பயணத்தின் இடையிடையே சிறு சிறு நிம்மதிகளை தருகின்றன. நம்பிக்கைகளை இரட்டிக்கின்றன. இன்னும் முன்னோக்கி வேகமாய் அடிவைக்க பின்னிருந்து தள்ளுகின்றன.

வீதிகளில் வியப்புக்குறியாய் நிற்கும் மைல்கற்கள்தான், நாமா இத்தனை தூரம் பயணித்தோம் என்று எமக்கே வியப்பளிக்கின்றன. இந்த வியப்பில் ஆச்சரியத்தை விட பெற்றுக் கொண்ட அனுபவங்களே அதிகமாகும்.

எந்தப் பயணியும் திரும்பிவந்து மைல்கல்லிற்கு நன்றி சொன்னதில்லை. யாரும் வந்து சொல்கிற நன்றிக்கு மைல்கல் காத்திருப்பதும் இல்லை.

நம் காலத்திற்கும் முந்தி எத்தனை ஆண்டுகளாய் எத்தனை பேரை இந்த மைல்கற்கள் மார்தட்டி முன்னோக்கி அனுப்பி வைத்திருக்கும்?

நின்று இந்த மைல்கற்களை நாம் தான் வாசிப்பதாய் எண்ணுகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. உச்சிவெயிலடிக்கும் போதும் ஒற்றைக் காலில் தவமிருந்து இந்த மைல்கற்கள் தான் தம் கண்கள் கொண்டு வீதியை வாசிக்கின்றன.

மைல் கல்லின் கண் என்று எதைச் சொல்கிறேன் என்கிறீர்களா? அதன் மீது மை கொண்டு எழுதிய எண்ணும் எழுத்துமே அதன் கண்ணெனத் தகுகிறது. வீதி காகிதமாகிறது. எழுத்துக்களாய் – நடமாடும் மனிதர்கள் எத்தனையோ பேர் வந்து போகிறார்கள்.

இலக்கை நோக்கி வேகமாக ஓடுபவன் மைல்கல்லை ஆவலோடு பார்க்கிறான். அடியெடுத்து வைப்பதையே அல்லல் என்று கருதுபவன் மைல்கல்லை எரிச்சலோடு பார்க்கிறான். எல்லாரையும் இந்த மைல்கல் பற்றற்று வாசிக்கிறது.

ஒரு சிறுவன் என்ன நினைத்தானோ தெரியாது. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ஒரு தடியெடுத்து மைல்கல்லை விடாது அடித்தான். ஆசிரியரிடம் வாங்கிய அடியை மைல்கல்லிடம் பழிதீர்த்தானாம் அவன். எந்தப் பழியுணர்வும் இல்லாமல் அந்தச்சிறுவன் முன்னேற வாழ்த்தியது மைல்கல்.

ஒருவன் வர்ண சுவரொட்டியை ஒட்டிவிட்டுப் போகிறான். ஒரு நாய் காலைத்தூக்கி நனைத்துவிட்டுப் போகிறது. நிதானம் தவறாது அது எல்லோரையும் பொறுமையாக வாசித்துக் கொண்டிருக்கிறது.

வீட்டில் திண்ணை கூட இல்லாத ஒரு சிறுமி தன்மீது அமர்ந்து படிப்பதையும், தன்னை மிதித்து ஏறி உயரத்தில் நின்று உலகைப் பார்ப்பதையும் மகிழ்வோடு தாங்குகிறது மைல்கல். தன் உயரம் இன்னும் கூடுவதாய் அது கர்வமும் கொள்கிறது.

வேகமான உலகில் இந்த மைல்கற்கள் இனி அநாவசியம் என்றனர் சிலர். அவசியம் என்றனர் சிலர். எனக்கு அது பற்றி தெரியாது என்று அமைதியாய் நின்றது மைல்கல்.

காட்டு வழியொன்றில் கையடக்கத் தொலைபேசியை நம்பி இளைஞனொருவன் வந்தான். சமிக்ஞை கெட்டு ஓரிடத்தில் அவனை கதியற்று நிறுத்திவிட்டது கைத்தொலைபேசி. இடி இடித்தது. மழை பெய்தது. அது புயலாய் மாறியது. திசை மறந்து போனவனிற்கு ஒரு மின்னல்வெட்டு இந்த மைல் கல்லைக் சுட்டிக் காட்டியது. வந்து விழுந்து வணங்கிவிட்டு அது சொன்ன வழியில் சென்றான்.

ஒருவன் மைல்கல்லை நின்று பார்க்க நேரமில்லாமல் வேகமாகச் சென்று கொண்டிருந்தான். இத்தனை அவசரமாய் அவன் எங்கு செல்கிறான். அவன் அடைய விரும்பும் இலக்குதான் என்ன? அவன் இலக்கு அவனுக்காவது தெரிந்திருக்க வேண்டும் என்று தனக்குள் அனுதாபப்பட்டது மைல்கல்.

எங்கோ கம்பத்தில் ஏறுகிற ஒரு கொடியின் நிறம் மாறும் போது மைல் கற்களிலும் சாயம் பூசுகிறார்கள். எத்தனை விதமாய் நிறம் கொண்டாலும் அது தன் மண்ணில் கொண்ட பிடிப்பை விடுவதில்லை. கொஞ்சமாய் தான் நகர்ந்தாலும் தன் பணி பொய்த்துவிடும் என்பதை அது மறப்பதில்லை. அணுவளவும் அசையாமல் இருப்பதில் பெருமை மைல் கல்லிற்கு மட்டுந்தான்.
அது தான் முன்னேற விரும்புவதில்லை. பிறரை முன்னேற்றவே விரும்புகிறது. ஆனால் கொடி பிடிப்போர் அப்படியில்லை. அவர்களுக்கு மண்ணில் பற்றும் இல்லை. மற்றவர் முன்னேற்றத்தில் அக்கறையும் இல்லை. கல்லாகிப் போனவர்களே! அந்த கல்லைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள்.

மக்களைப் போல் அல்ல மைல்கல். நொடிக்கொரு தரமாய் அடிக்கடி மாறி நடிக்கும் மானிடரின் நடத்தையை விட கொண்ட பிடி விடாது நிற்கும் மைல்கல் இன்னும் இன்னும் பெரிய ஆச்சரியமே!

ஒரு பொடியன் வந்தான். மைல்கல்லைக் கண்டதும் ஒரு பெரிய கல்லைத் தேடினான். மைல்கல்லிற்கு நேரே குறிவைத்து தன் காலால் கல்லை எட்டி உதைத்தான். அவன் ஏன் அப்படிச் செய்தான்?

மைல்கல்லின் மீது அவனுக்கு அப்படி என்ன காழ்ப்பு? முன்னேற விரும்பாத ஒருவன் எல்லோரையும் முன்னேற வைக்கும் மைல்கல்லை எண்ணி ஆத்திரம் கொண்டானா? அல்லது முன்னேற துணை நின்றவர்களுக்கு எல்லாம் இந்த உலகம் தந்த மரியாதையை தருவதற்காக கல்லெடுத்து எறிந்தானா?

கண்ணுடையர் என்போர் கற்றோர் என்றால் தன் கண்கொண்டு இந்த வையத்தை அளந்து வைத்துள்ள மைல்கல்லும் கற்றோருள் அடக்கம்தானே. கல்லாதவரே அதனை இன்னும் ‘கல்’ என்று சொல்லுகின்றனர்.

சற்றுப் பொறுங்கள்… அந்த அட்டையில் இருக்கும் அறுபதாவது மைல்கல் ஏதோ சொல்கிறது..

“பயணங்கள் முடிவதில்லை”

Related posts

தமிழ்நாட்டில் இருந்து துமிக்கு அன்பு வாழ்த்து

Thumi202121

யார் இந்த மதீஸ பத்ரன

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 09

Thumi202121

Leave a Comment