எண்களில் எப்போதுமே எங்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்று அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் சில எண்களை நாம் நன்றி எம்மோடு இயங்கும் மற்றும் எம்மை இயக்கும் இதயங்களுக்கு நன்றி சொல்வதற்காக எடுத்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் இந்த அறுபதை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
ஒரு முழுச் சக்கரத்தின் பூர்த்தியாக அறுபது தமிழில் விசேடம் பெறுகிறது. ஒன்று போல் அறுபத்தொன்றும் ஒரு புதுத் தொடக்கம். ஒன்றில் தொடங்கும் போது ஆசை, ஆர்வம் எல்லாம் நிறைய இருக்கும். அனுபவம் இருக்காது. ஆனால் அறுபத்தொன்று அவ்வாறு அல்ல. அனுபவம் நிறைய இருக்கும். ஆசை, ஆர்வம் ஆளுக்கேற்ப மாறுபடும்.அனுபவம் நிறைந்த தொடக்கமாக அறுபது ஆனது ஒன்றிலும் சற்று முதன்மை பெறுகிறது. இப்போது நாங்கள் அறுபது மின்னிதழ்களை வெளியிட்ட அனுபவமுள்ளவர்கள். இது ஆணவம் அல்ல. சமூகத்தில் எமக்கான அங்கீகாரத்திற்கான அடையாளம்.
இந்த அங்கீகாரம் துமி மின்னிதழுக்கானதாக இருக்க வேண்டுமென்பதையும் தாண்டி எமது எழுத்தாளர்களுக்கானதாக இருக்க வேண்டும். புதிய பேனாக்களாக எழுதத் தொடங்கியவர்கள் பலர் இப்போது அனுபவப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான சமூக அந்தஸ்து உரியவாறு கிடைக்கும் போதுதான் அவர்களும் தொடர்வதற்கான ஊக்கம் வரும். அதோடு மேலும் பல புதியவர்கள் எழுத ஆரம்பிப்பார்கள்.
எழுத்தாற்றல் மிக்க இளைய சமுதாயத்தை நோக்கிய எமது இந்த பயணம், அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கான நேரம் நெருங்குவதை உணர்கிறோம். அதற்கான வேலைத்திட்டங்களோடு எமது அடுத்த வட்டத்திற்தான பயணம் இனிதே தொடர்கிறது.
தமிழால் இணைந்தோம்…
துமியால் தொடர்வோம்..
1 comment