இதழ் 60

சித்திராங்கதா -57

மூல காரணி

ஈழ மணிபல்லவத்தின் வடக்கிலிருந்து ஒரு செய்தி தீயாய் பரவி வந்தது. ‘பறங்கியருடனான போரில் தஞ்சையிலிருந்து வந்த பெரும்படைத் தளபதி வருணகுலத்தான் இறந்துவிட்டானாம்’

நல்லைமக்களின் நம்பிக்கையை அந்த செய்தி வெகுவாகத் தடுமாற வைத்திருந்தது. அவர்களின் ஆதங்கங்கள் சனக்கூட்டங்களின் பேச்சுக்களில் வெளிப்பட்டன.

‘தஞ்சை வீரரது வியூகப்படி எல்லாம் சிறப்பாகதானே நடந்தேறியதாம். பறங்கியரது கடற்படை கூட முழுவதுமாய் தோற்கடிக்கப்பட்டதாமே. ஒலிவேராவின் தரைப்படை ஒரு அடி கூட முன்னகர முடியாமல் தன் பலத்தை பறைசாற்றிக் கொண்டிருந்த வருணகுலத்தானிற்கு இப்படியொரு ஆபத்து எப்படி சூழ்ந்திருக்கும்?

ஆபத்து அந்த வீரனின் முன்னால் வந்து எதிர் கொள்ள முடியுமா? பின்னாலிருந்து வந்த ஒரு துரோகத்தின் சதிதான் அந்த மாவீரனை கொன்று விட்டதாம். வன்னிப்படையினருடன் சிங்களப் படையினரும் இணைந்து சுதேசிகள் போல் நல்லைப்படையணிக்குள் புகுந்து வருணகுலத்தானை குறிவைத்திருக்கிறார்களாம். எதிர்பாராத தருணத்தில் மிக்கபிள்ளைஆராச்சியின் பின்னால் ஒளிந்திருந்த ஒரு வீரன் வருணகுலத்தான் புறமுதுகில் ஆழமாய் வேல்பாய்ச்சி விட்டானாம்.

என்ன அநியாயம் நிகழ்த்திவிட்டார்கள் எம் வன்னிப் படையினர். இவ்வையத்தில் இணையில்லாத வீரன் என புகழ்கொண்டவனை இப்படி சூழ்ச்சியாற்றி கொன்றுவிட்டனரே. பறங்கியர் நினைத்ததை எப்படியெல்லாம் சாதிக்கிறார்கள் பார்த்தீர்களா!

தஞ்சை வீரரை நேருக்கு நேர் போரிட்டு அவர்களால் வெல்லமுடியுமா என்ன? ஒருபோதும் முடிந்திராது அவர்களால். அதுதான் இப்படி அற்ப தந்திரங்களை உபயோகித்து அந்த மாவீரனை கொன்றுவிட்டனர்.

ஆனால் நினைவிருக்கிறதா? அன்றும் அப்படித்தானே, தஞ்சைவீரர் தஞ்சையிலிருந்து வந்த நாள் களிற்றின் மீதேறி அவர் ஊர்வலம் வரும் போது அந்த ஊமையன் அவர் மீது ஈட்டி வீசினானே..

ஆம்… ஆம்.. நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஈட்டியை தாங்கிப்பிடித்து தஞ்சை வீரரை காத்தது சேனாதிபதி மகிழாந்தகன் அல்லவா? இப்போது தஞ்சை வீரருக்கு இப்படியொரு ஆபத்து நேர்கையில் நம் சேனாதிபதி எங்கிருந்தார்?

சேனாதிபதியை தான் கோட்டைக்காவற் பணிக்காய் தஞ்சைவீரர் நியமித்துவிட்டுச் சென்றாராமே. அதனால்தான் நம் சேனாதிபதியும் களம்புகவில்லை. களத்தில் சேனாதிபதி இருந்திருந்தால் இப்படியொரு ஆபத்து தஞ்சைவீரருக்கு வந்திருக்குமா என்ன?

அதுவும் சரிதான். ஆனாலும் தஞ்சைவீரர் எப்படி அலட்சியமாக இருந்தார் என்பதுதான் புரியவில்லை? இது போல் பல ஆயிரம் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கண்டவரல்லவா தஞ்சைவீரர்? பறங்கியனின் எல்லா சூழ்ச்சிகளையும் தகர்த்தெறிந்து வென்ற தஞ்சைவீரரின் பராக்கிரமத்திற்கு என்னவாயிற்று? இப்படி நேருவானேன்..

அவரின் மாவீரம் அப்படித் தடுமாறிப்போக காரணமானதும் நம் நாட்டின் ஒரு பெண் தான் என்கின்றனர்.

ஒரு பெண்ணா? யாரது?

பெரு வணிகர் எச்சதத்தர் மகள் சித்திராங்கதா.

அவளா?? அந்த நாட்டியக்காரியா?

ஆம் அவளேதான்.. அவள் தான் இரகசியமாய் தஞ்சைவீரரை வன்னியருடன் கூட்டுச் சேரும்படி அழைத்துச் சென்றாளாம். அந்த மாவீரரும் மங்கையின் அழகில் சாய்ந்துவிடுகிற வாலிபர் தானே. அதுதான் விழுந்துவிட்டார் போலும். போரிற்குச் செல்ல முதலே நல்லை வேந்தர் பக்கமா? அல்லது வன்னியர் பக்கமா? என்றொரு பெருங்குழப்பத்தில் தான் போரைத் தொடங்கியிருக்கிறார் தஞ்சை வீரர். வன்னியரை எக்காலத்திலும் எதிரியாய் அவர் எண்ணம் கொள்ளவில்லை போலும். அதனையே வன்னியர் தமக்கு சாதமாக்கியுள்ளர் போலும். இந்த தடுமாற்றம்தான் தஞ்சைவீரரது மாவீரத்தையே நிலைகுலைய வைத்திருக்கிறது. அந்தக் குற்றத்திற்காக தான் மகாராஜா சித்திராங்கதாவை இரகசிமாய் சிறையும் வைத்துள்ளாராம்.’

வருணகுலத்தான் இறந்துவிட்டான் என்ற செய்தியோடு ஊர் வாய்களின் பேச்சுக்களும் வதந்திகளும் இப்படி எல்லையற்று வளர்ந்து கொண்டிருந்தது.

நல்லைக் கோட்டைக்குள்ளும் இந்த செய்தியும் வதந்திகளும் கட்டுப்பாடின்றி பரவியது. உண்மையை சொன்னால் நல்லைக் கோட்டைக்குள் இது ஒரு செய்தி அல்ல. இடி.

சங்கிலிய மகாராஜா ஆட்சிபீடமேறிய நாளிலிருந்து இது போலொரு மோசமான விடியலை அவர் சந்தித்திருக்க வில்லை. தஞ்சைவீரருக்கு ஏதேனும் சிறு ஆபத்து என்றிருந்தாலும் உடன் களம் புகுவேன் என்று அன்று தஞ்சை வீரரிடம் உரைத்த வார்த்தைகள் சங்கிலியமகாராஜாவின் உள்ளத்தை தீயாய் கருக்கிக் கொண்டிருந்தது.

களத்திலிருந்து ஒற்றர்கள் மூலமும் தெளிவாக எந்தத் தகவலும் வரவில்லை. ஊரிற்குள் பற்றிய வதந்திகள் கேட்டு பதறி களம் விரைய நினைத்த சங்கிலிய மகாராஜாவை மன்றாடித் தடுத்தனர் இராஜமந்திரியாரும் சேனாதிபதியும். தான் சென்று நிலவரம் உடன் அறிந்து வருவதாய் புறப்பட்டான் சேனாதிபதி மகிழாந்தகன். அவனும் இதுவரை எந்த செய்தியும் கொண்டுவரவில்லை.

‘எதிரிகள் எத்தனை புதிய ஆயுதங்கள் கொண்டும், வீழ்த்தும் வியூகங்கள் பல வகுத்தும் தாக்குதல்கள் நடத்தியிருந்தாலும் தஞ்சைவீரர் எல்லாவற்றையும் முறியடித்து வெற்றி கண்டிருப்பார். ஆனால் ஊர்மக்கள் சொல்வது போல் நம் நாட்டு சுதேச துரோகிகளால் இப்படி கண்ணிமைக்கும் கணத்தில் வருணகுலத்தான் உயிரிற்கு ஆபத்து சூழ்ந்தது என்கிற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை இராஜமந்திரியாரே… அந்த மிக்கபிள்ளையை நம்பி தஞ்சைவீரருடன் போரிற்கு அனுப்பி நான் தான் பெருங்குற்றம் புரிந்து விட்டேனா? தாயே வீரமாகாளி… என் காதுகளில் விழுந்த அந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் தேவி…’
என்று கைகூப்பி வேண்டினார் சங்கிலிய மகாராஜா.

‘அரசே,தஞ்சைவீரர் நாம் எல்லோரும் நினைப்பது போல் சாமான்ய வீரர் அல்ல. களத்தில் என்ன நடந்தது என்று என்னாலும் ஒன்றும் ஊகிக்கமுடியவில்லை. ஊமைக்காத்தவராயனால் கூட நிகழ்ந்ததை முழுதாய் அறிய முடியவில்லை. களத்தில் வருணகுலத்தானை காணவில்லை என்றே செய்தி வந்தது. தஞ்சைபடை வீரர்கள் மிகுந்த ஆவேசத்தோடு இருப்பதாயும் காத்தவராயன் கண்டுவந்த சொன்னான். களத்திற்கு விரைந்த மகிழாந்தகன் படை தான் இனி நல்ல செய்தியோடு வரவேண்டும் என்று நானும் காத்திருக்கிறேன் வேந்தே,

ஆனால் எம் நம்பிக்கை இன்னும் சாகவில்லை வேந்தே. இந்த வெள்ளெலிகளோ, கொடுந்துரோகிகளாலோ நம் தஞ்சைவீரரை ஒருபோதும் சாய்த்திருக்க முடியாது. பொறுமை காத்து அமைதி கொள்ளுங்கள் வேந்தே’

‘எப்படி பொறுமை காப்பேன் இராஜமந்திரியாரே, இதற்கு மேல் எதற்கு பொறுமை, நம் நாட்டவர்களே இப்படி மூடச்செயல் செய்ய துணிந்தனர் என்றால் இனி நிகழ என்ன இருக்கிறது? சொல்லுங்கள் இராஜமந்திரி? இனியும் என்ன பொறுமை வேண்டியிருக்கிறது எனக்கு?’

‘இனி நிகழப்போது என்ன என்பதை என்னாலும் நினைத்துப்பார்க்க முடியவில்லை வேந்தே. ஆனால் இனி நாம் செய்ய வேண்டிய முக்கிய காரியம் ஒன்றுள்ளது வேந்தே. யாரிற்கும் நிகரில்லா வீரரென தஞ்சையிலிந்து நம்குடி காக்க புறப்பட்டு வந்த வீரரிற்கு இந்த ஈழநாட்டு துரோகிகள் கொடுத்த பரிசை நினைக்கையில் நான் கூனிக்குருகுகிறேன் வேந்தே!

யாருக்காக படைதிரட்டி புறப்பட்டு வந்தாரோ அவர்களே தஞ்சைவீரர் உயிரை பறிக்க துணிந்தனர் என்று தஞ்சை இரகுநாதநாயக்கர் அறிந்தால் நம் இராச்சியம் குறித்து நாம் கர்வம் கொள்ள என்ன இருக்கிறது வேந்தே….

மலைபோல் நம்பியிருந்த வீரனை இப்படி மாயத்திட்டங்களால் மண்ணில் சாய்க்க எண்ணி விட்டனரே கொடுந்துரோகிகள்.
வன்னியன் சூழ்ச்சிகளை இதுவரை பொறுத்தது நம் குற்றம்தான் வேந்தே. அவனிற்கு முறையாட பாடம் அன்று வன்னியர் விழாவிலேயே கொடுத்திருக்க வேண்டும். அவனை இனியும் விட்டு வைக்க கூடாது.
அத்தோடு எல்லாவற்றையும் தொடக்கி வைத்தவள் அந்தப்பேதைப்பெண் சித்திராங்கதா அல்லவா? அவளி்ல்லை என்றால் வன்னியத்தேவனால் வருணகுலத்தானை நெருங்கியிருக்க முடியுமா? அவளது அடங்காத்தனம் – அதை கண்டிக்காமல் விட்ட எம் அலட்சியம் இன்று என்ன விளைவிற்கு அழைத்து வந்துவிட்டது பார்த்தீர்களா வேந்தே…

நம் எதிரிகளை விட இந்த தேசத்து களைகளையே முதலில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நாம் கிள்ளி எறிய வேண்டும். இல்லாவிட்டால் எம் படைத்திறன் எத்தனை பலமாய் இருந்தாலும் எம்மால் பறங்கியனை சாய்க்க முடியாமலே போகும். அந்த வன்னியத்தேவன் இந்த ஈழத்தை விட்டே கிள்ளிஎறியப்பட வேண்டியவன். அதற்கு முதல் நம் சிறையில் அடைபட்டு கிடக்கிறாளே சித்திராங்கதா அவளிற்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டும். இனி இதுபோல் இங்கு சூழ்ச்சிகளில் ஈடுபட எவரிற்கும் துணிவு வராதபடி ஒரு பாடம் புகட்ட வேண்டும் வேந்தே’

தஞ்சை வீரரிற்கு என்ன ஆனது என்கிற ஆதங்கம் எல்லோருக்கும் என்ன வேகத்தில் உருவானதோ அதே வேகத்தில் சித்திராங்கதா மேலும் எல்லோர்க்கும் பெருங்கோபம் மூண்டது. வன்னியரோடு பகை வளர்க்க வருணகுலத்தான் விரும்பாததற்கு சித்திரங்கதாவே காரணம் என எல்லோரும் நம்பினார்கள். வன்னியரை பகைவனாய் எண்ணாமல் அலட்சியமாய் இருந்ததாலே தஞ்சை வீரர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்பதே அனைவரும் கண்டெடுத்த உண்மையாகி இருந்தது.

சங்கிலிய மகாராஜாவின் பேரவை அவசரமாக கூடியது. மந்திரிமார்கள், மாகாண அதிகாரங்கள், கூடவே மஞ்சரி தேவி, மாருதவல்லி எல்லோரும் வருணகுலத்தானிற்கு என்ன ஆனது என்ற பெரும் பரபரப்போடு அவையில் கூடியிருந்தனர். பெருங்கூட்டம் அங்கு கூடியிருந்தாலும் ஒரு விதமான சோகத்தின் அமைதியும் அந்த அவையை இறுக்கமாக பற்றியிருந்தது.

விலங்குகள் பூட்டப்பட்ட பெருங்குற்றவாளியாய் சித்திராங்கதா அந்த அரசவைக்கு வரவழைக்கப்பட்டாள். அங்கிருந்த யாரும் கற்பனையிலும் நினைத்துப் பார்த்திரா காட்சி அது.

சங்கிலிய மகாராஜா ஆக்ரோசமாக ஆசனத்தை விட்டு எழுந்தார்.
‘ஒரு பெண்ணிற்கு இப்படி விலங்கிட்டு நம் அரசவைக்கு அழைத்து வருவது நம் இராச்சியத்திலே இதுதான் முதல்முறை. ஆனால் இவள் ஒரு பெண் என்பதையே மறக்க வைக்குமளவிற்கு கொடுஞ்செயலாற்றியுள்ளாள் என்பதை என்னால் மறக்கமுடியாது. இன்று நாம் எல்லோரும் இப்படித் தத்தளித்து நிற்க வித்திட்டவளும் இவள் தான். தஞ்சைவீரரிற்கு என்ன நேர்ந்தது என்பது தெளிவுற தெரியவில்லை. சுதேசிகள் வருணகுலத்தான் உயிரை காவுகொண்டர் என்பது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதே எம் அனைவரதும் பிரார்த்தனை. ஒருவேளை அது உண்மையாக இருந்தால் நம் நாட்டிற்கு கொடும்பழி வந்து சேர காரணமான துரோகி இதோ இவள்தான். பொல்லாப்பறங்கியனுடன் கூட்டுச்சேர்ந்த வன்னியனுடன் வருணகுலத்தானையும் இணைக்க இரகசியமாய் தன் மாயவலையில் அந்த மாவீரனை வீழ்த்தி சூழ்ச்சிகள் பல புரிந்திருக்கிறாள் இந்தப்பாதகி. இவள் இப்பாதகம் ஆற்றாமல் இருந்திருந்தால் வன்னிவேந்தனால் வருணகுலத்தானை நெருங்கியிருக்கவே முடியாது. இன்று தஞ்சை வீரரின் உயிரிற்கே வன்னியத்தேவனால் ஆபத்து வந்தது உண்மையென்றால் அதற்கு மூலதுரோகியே இதோ இந்த ஆடலரசி சித்திராங்கதா தான். இவளை போன்றோரை இனியும் மன்னித்து பெருங்குற்றம் புரிய மாட்டேன். இவளையும் வன்னியத்தேவனையும் இனியும் பொறுத்தருள்வது எம் முட்டாள் தனமாகும்’.

சங்கிலிய மகாராஜாவின் நிதானம் எங்கோ தொலைந்துவிட்டது. வருணகுலத்தானிற்கு என்ன ஆனது என்பதை அறியும் வரை அவரை எதனாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அவரது பேச்சு உணர்த்தியது.

மஞ்சரிதேவியும் மாருதவல்லியும் பதைபதைப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்ன நிகழப் போகிறது என்பது புரியாமல் எது நிகழ்ந்தாலும் ஏதும் செய்ய முடியாதவர்களாய் அவர்கள் இருவரின் கண்களும் கண்ணீரால் நிரம்பியது.

ஆனால் சித்திராங்கதாவின் செவிகளில் அரசரின் அந்த வார்த்தைகள் விழுந்தனவோ தெரியவில்லை. அவள் செவிகள் அடைத்து விட்டது போல் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண் பார்வையும் பூமியை விட்டு நிமிரவில்லை.

‘எதுவும் பேசாமல் நின்றால் நீ செய்தது தவறல்ல என்றாகுமா பேதைப் பெண்ணே? நீ செய்தது இதுவரை மன்னிக்கப்பட்டது போல் இனிமேலும் முடியாது. பதில் சொல் பெண்ணே… குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா சொல் பெண்ணே? நீ செய்த குற்றத்தின் விளைவை இப்போதாவது உணர்ந்தாயா மூடப் பெண்ணே.. மாவீரனிற்கு இப்படியொரு நிலை வரவா ஆசைப்பட்டாய்? இதற்கா நல்லை அரசையே எதிர்த்து சதி செய்தாய்? பதில்
சொல்!’ என்று இராஜமந்திரியாரின் குரலும் ஆவேசமாய் ஒலித்தது.

அவள் அப்போதும் எதுவும் பேசவில்லை. பேசுவதற்கு அவளிற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் அசையாமல் பூமியை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்.

அமைச்சர் ஒருவர் தொடர்ந்தார். ‘சபையை அவமதிக்காதே பெண்ணே, இன்று தஞ்சை வீரன் இறந்துவிட்டான் என்ற செய்தி…’

‘ஐயோ….’
அதற்கு மேல் யாரையும் பேச அனுமதிக்காமல் கத்தியபடி தரையில் வீழ்ந்தாள் சித்திராங்கதா.

தரையில் வீழ்ந்தபடி தலை நிமிராமலே அவள் பேசத்தொடங்கினாள்.
‘பெரியோர்களே, அவையோர்களே… நீங்கள் எல்லோரும் சொல்வது சரி… நான் தான் குற்றவாளி… நான் தான் நீங்கள் சொல்வது போல் ‘துரோகி’, இனியும் எதற்கு இந்த துரோகியை உயிரோடு வைத்துள்ளீர்கள்… என்னை கொன்றுவிடுங்கள்.. இந்த சபையிலேயே என்னை கொன்றுவிடுங்கள்….’

‘அப்படியென்றால் தஞ்சைவீரரை வன்னியர்பக்கம் சாட முயன்றது நீதான் என்பதை ஏற்கிறாயா? இன்று ஒருவேளை தஞ்சைவீரன் இறந்தது உண்மையென்றால்

‘ஐயா போதும் நிறுத்துங்கள்…’ குனிந்திருந்த அவள் தலை கூறிய அமைச்சரின் கண்களை நோக்கி இமைக்கும் நொடியில் திரும்பியது. அந்த பார்வையில் அதற்கு மேல் பேசமுடியாமல் ஊமையானார் அமைச்சர்.

‘ஐயா பெரியோர்களே. உங்கள் அனைவரையும் மன்றாடிக் கேட்கிறேன். இந்த செய்தியை இனி என் செவிகளில் சொல்லாதீர்கள். அப்படிச் சொல்வதாயின் அதற்கு முதல் என் உயிரை எடுத்துவிடுங்கள். என் … என்….. தஞ்சைவீரரிற்கு எந்த ஆபத்தும் சூழ்ந்திருக்காது. நான் நம்ப மாட்டேன். அவர் இல்லாத உலகில் என் சுவாசம் எஞ்சியிராது. உண்மை எனக்குத் தெரியும். உங்கள் உண்மைகளை நீங்கள் கண்டறிய முன் உங்களை மன்றாடிக் கேட்கிறேன். தாமதிக்காதீர்கள்… என்னை கொன்றுவிடுங்கள்… அரசே… மன்றாடிக் கேட்கிறேன் என்னைக் கொன்றுவிடுங்கள்’

‘வேண்டாம் அரசே வேண்டாம்.. ஆத்திரத்தில் முடிவெடுக்காதீர்கள்… மகிழாந்தகன் வரும் வரை சிறிது பொறுமை கொள்ளுங்கள் பிரபு’ அரசர் முன் கைகள் கூப்பி வேண்டினார் மஞ்சரி தேவி. மாருதவல்லியும் கூடவே கண்கள் கலங்க கைகள் கூப்பி நின்றாள்.

மாருவல்லியின் அந்த மன்றாட்டத்தை பார்த்த மகாராஜாவால் என்ன செய்வதென்றே புரியவில்லை.
நிதானத்தை வேண்டி பெருமூச்செறிந்தார்.

குழப்பத்தில் மன்னர் மௌனம் காத்த வேளை தஞ்சை படை வீரர்கள் இருவருடன் அவசரமாய் மகிழாந்தகன் அவையை நோக்கி வந்து சேர்ந்தான்.

முடிச்சுக்கள் அவிழும்…

Related posts

அங்கீகாரங்களை பெற்றுக்கொடுப்போம்

Thumi202121

வினோத உலகம் – 25

Thumi202121

தமிழ்நாட்டில் இருந்து துமிக்கு அன்பு வாழ்த்து

Thumi202121

Leave a Comment