இதழ் 61

பாடசாலைகளில் விழுமியக் கல்வியின் முக்கியத்துவம்

மனித வாழ்வை செம்மையானதாகவும் அர்த்தமுள்ள வகையிலும் வாழ்வதற்கு மனித விழுமியங்கள் அறக்கருத்துக்கள் என்பன துணை செய்கின்றன. மனித வாழ்வினை வளமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் செம்மையான வகையில் வாழ்வதற்கும் விழுமியங்களும், அறக்கருத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விழுமியம் என்பது தனிமனித வாழ்விலும்,சமூக வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகும்.மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை விழுமிய பண்புகள் நம் வாழ்வில் பயணிக்கின்றது.குறிப்பாக மனித விழுமியங்களான அன்பு, பரிவு, இரக்கம், நேர்மை, ஒழுக்கம், உதவிசெய்தல், அகிம்சை என பல உள்ளன. “கல்வியில் கிடைக்கப்பெறும் நன்மை யாதெனில் நல்ல மனிதனை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களை நல்ல முறையில் செயலாற்றவும் செய்கிறது” என்ற கிரேக்க மெய்யியலாளர் பிளேட்டோவின் கருத்திற்கு இணங்க விழுமியப் பண்புகளை வளர்ப்பதிலும், விழுமிய கல்வியை கோட்பாட்டு ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் வழங்குவதிலும் பாடசாலையின் வகிபங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

இன்றைய மாணவர்களே நாளைய சமூகத்தை ஆள்பவர்களாக வளரப்போகின்றனர். ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து முதலில் சந்திக்கின்ற சமூகம் பாடசாலை சமூகமேயாகும். அது மட்டுமன்றி தமது வாழ்க்கைக்குரிய பண்புகளையும் எதிர்காலத்திற்கான கல்வியையும் முறையாக கற்றுக் கொள்கின்ற தளமும் பாடசாலையே ஆகும். ஒரு பிள்ளை பாடசாலை சென்றதும் அவனுக்கு அனைத்தும் ஆசிரியர்களாகி விடுகின்றனர். இவ் ஆசிரியர் மாணவருக்கு வெறுமனே ஏட்டுக்கல்வியை அல்லது புத்தக கல்வியை மட்டும் வழங்க முடியாது வழங்கவும் கூடாது.


தற்காலத்தில் தொழிநுட்பம் ஆட்கொண்டுள்ள உலகில் மாணவர்களை விழுமியத்தில் வளரச் செய்வது என்பது மிகவும் கடினமான செயலே ஆகும். ஆனால் இப்பணியை முழுமையாக பேணிக்காத்து முழுமையாகவும் கட்டுப்பாடுடனும் வழங்கக்கூடிய அதிகாரமளிக்கப்பட்ட ஒரே இடம் பாடசாலையே ஆகும். பாடசாலையில் கற்கும் நல்ல பழக்கங்களினாலேயே மாணவர்கள் சமூகத்திற்கு சென்ற பிறகு செயற்படுத்தப்போகின்றனர். அதனால் பாடசாலையில் வழங்கப்படும் விழுமிய பண்பு மிக முக்கியமானதே.

எமது கல்வி வரலாற்றை பார்த்தால் ஆரம்ப காலங்களில் குருகுலம் சென்று கல்வி கற்று வந்தனர். அக்காலத்தில் மாணவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாவும். குருவினுடைய சொல்லை தெய்வ வாக்காகவும் பணிந்து கல்வி கற்கும் மாணவர்களாகவும் இருந்தனர். உதாரணமாக ஏகலைவனைக் கூறலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாகரீகமும் தொழிநுட்பமும் வளர்ச்சியடைந்த காலத்தில் சமூகம் மற்றும் மாணவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் செயற்பாடுகளும் மாற்றமடைந்துள்ளன. தற்காலத்தில் மாணவர்களின் வாழ்க்கைமுறை முற்றாக மாற்றமடைந்துள்ளதை காணலாம். எல்லா மாணவர்களுக்கும் குடும்பச் சூழல் வளமானதாக அமைவதில்லை. வறுமை, பெற்றோர்களை இழந்த நிலை, கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பமாக மாறிவிட்டன. பெற்றோருக்கு வேலைப் பளு, தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் பாவனை, தகாத நண்பர் கூட்டம், தந்தையின் அறிவுரை மற்றும் வழிகாட்டல்இ தாயின் அரவணைப்பு என்பன சரியாக கிடைக்காமை என பல குடும்ப சூழ்நிலைகளுடன் அனேக மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றனர். இவ்வாறான பின்புலங்களை கொண்ட மாணவர்களாலும் சமீப காலமாக நடைமுறை பாதிப்புக்கள் பல ஏற்படுகின்றன. மாணவர்களிடத்திலே போதைப்பொருள் பாவனை, மாணவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள், கீழ்படியாமை, பாடசாலைக்கு எதிரான வன்முறைகள் என்பன அதிகரித்துவிட்டன என்றே சொல்லாம்.

இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து எமது சமூகத்தை மாணவர்களை பாதுகாக்கும் வகையில் சில வழிமுறைகள் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு ஆசிரியரும் பாடசாலையில் தாம் கற்பிக்கும் மாணவர்களை சிறந்த நற்பிரஜையாக உருவாக்க இலட்சியத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற வேண்டும். விழுமியப் பண்புகளை கலைத்திட்டத்தின் ஊடாகவும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலமாகவும் வளர்க்க தேவையான தேர்ச்சிக்களை புத்தாக்கம் செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர் மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் விழுமிய பண்புகளை மாணவர்களிடையே ஏற்படுத்தும் பங்கு மிக முக்கியமானதாகும்.

அதுமட்டுமன்றி தத்தமது சமய ஒழுகலாறுகள் மற்றும் சமய கருத்துக்களை,அற விழுமியங்களை பிள்ளைகளின் வாழ்க்கை செம்மையாக்கும் வகையில் வழங்க வேண்டும்.மேலும் பாடசாலைகளில் விழுமிய பண்புகளை பேணி ஒழுகும் பிள்ளைகளை பாராட்டும் விதமான ஊக்குவிப்புக்களை வழங்க வேண்டும். அதே போல் நெறி பிறழ்வான நடத்தைகளை கண்டித்தும் அதன் ஆபத்தினை உணர்த்தி நற்பண்புகளை அவர்களிடம் விதைக்க வேண்டும். ஒருவன் நல்ல விழுமிய பண்புகளை கொண்டிரா விட்டால் அவன் எவ்வளவு கற்றாலும் அவன் கற்ற கல்வி பூச்சியமே. அதேவேளை வாழ்வில் அவர் நல்ல விழுமியப்பண்புகளை பின்பற்றி வாழ்வாரேயானால் உலகம் அவரை போற்றும் அதை உதாரணமாக்கி தம் வாழ்வை வாழ்ந்த பெரி;யாளர்களாகிய அப்துல்கலாம், அன்னைதெரேசா, ஜவகர்லால் நேரு போன்றோர் பற்றிய அறிவையும் விளிப்புணர்வுகளையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் கல்வியின் மகத்துவத்தையும் மனித வாழ்வின் உன்னத தன்மையையும் விளக்கி கற்றுக்கொடுக்க வேண்டும். உதாரணமாக :- “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது மற்றும் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”. அது மட்டுமன்றி உலகில் விழுமியப் பண்புகளை வழங்குவதில் சமய புனிதநூல்கள் மிக முக்கியமாவை என்றே கூற வேண்டும். இவை மனித ஒழுக்க விழுமியங்களுக்கு தனி சிறப்புரிமையே கொடுத்துள்ளன. கிறிஸ்தவர்களது திருவிவிலியம், இந்துக்களின் வேத ஆகமங்கள், இஸ்லாமியர்களின் திருக்குறான், பௌத்தர்களின் திரிப்பிடம் என அனைத்து புனித நூல்களுமே நாம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விழுமியப் பண்புகளை மிக அழகாக கூறியுள்ளன. இவற்றை எம் மாணவர்கள் பாடசாலையில் ஒரு பாடவிதானமாக கற்கின்றனர்.


அது மட்டுமன்றி பாடசாலையில் சமத்துவம், சகோதரத்துவம் என எல்லோரும் சமமானவர்கள் என வலியுறுத்தும் விதத்திலாக சீருடை அணிந்து செல்கின்றனர். ஒவ்வொரு வெள்ளிகிழமைகளிலும் காலை கூட்டத்துடனான சமய ஆராதனைகள் விசேடமாக நடைபெறுகின்றன. பெரியோரை மதித்தல் மற்றும் உதவி செய்தல், அன்பாக பழகுதல், இயற்கையை பேணுதல், ஏழைகளுக்கு உதவுதல் ஒழுக்கமாக வாழுதல் என விழுமிய கருத்துக்களை கூறும் பாடத்திட்டங்கள் உள்ளடக்கியதாக பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சினால் இலவசமாக அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.

உதாரணமாக:- ஆத்திச்சூடி, நன்நூல், குறுந்தொகை, திருக்குறள் போன்ற அறக் கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் தமிழ் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.நல்ல விழுமியம் கூறும் சமய பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.
அது மட்டுமன்றி எமது நாட்டை பொறுத்தவரையில் சமயக்கல்வி மாத்திரமே கலைதிட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளது. விழுமிய கல்வியோ, பாலியல் ரீதியான கல்வியோ கற்பிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சமய கல்வி இல்லை. மாறாக விழுமிய கல்வி மட்டுமே உண்டு. இது எங்கள் மதம் சிறந்தது உங்கள் மதம் சிறந்தது அல்ல என்ற வேறுப்பாட்டை விதைத்து விடும். ஆனால் விழுமிய கல்வி மட்டுமே சிறந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நற்பண்புகளை போதிக்கின்றது.

மாணவர்களிடையே விழுமியத்தை, விழுமிய பண்புகளை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் வெறுமனே கற்றுக் கொடுப்பதில் மாத்திரம் நின்று விடாமல் விழுமிய பண்புகளை தம்வாழ்வில் செயலில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஆசிரியர்கள் மனவெழுச்சி, சமூக அக்கறை தேசிய நலன்கள் மற்றும் நவீன மயமாதலுக்கு ஏற்ற வகையில் உலகத்தோடு ஒத்து வாழ்பவர்களாக நிகழ வேண்டும்.

“மனிதன் யாருமே தவறு செய்வதில்லை தவறு செய்ய காரணம் அவன் சரி, பிழை பற்றி அறிந்திராத காரணமே” என்று கூறும் ஒழுக்கவியலின் தந்தை சோக்ரட்டீஸ் கருத்துக்களுக்கு அமையவே மாணவர்களும் அவர்களுக்கு சமூகத்திற்கு ஏற்ற விழுமிய பண்புகளையும் அறக்கருத்துக்களையும் விழுமியக்கல்வியின் அவசியத்தையும் விளக்கி கூறி நாட்டிற்கும் சமூகத்திற்கும் நற்பிரஜைகளை பாடசாலைகள் உருவாக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தை எடுத்துக் கொண்டால் அனைத்து பெற்றோரும் தமது பிள்ளைகள் வைத்தியர், பொறியியலாளர் என உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர தம் பிள்ளை சிறந்த ஒழுக்கமுள்ள பிள்ளையாக வளர்கிறானா என அவதானிப்பது குறைந்து கொண்டு செல்கின்றது. அந்த நிலை மாற்றமடைந்து பாடசாலைகள் வெறுமனே பரீட்சைகளுக்கு மாத்திரம் மாணவர்களை தயார்படுத்தும் நிறுவனமாக அல்லாமல் சிறந்த மனிதனை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இப்பணியை ஆசிரியர்களும், அதிபர்களும், பாடசாலை, சமூகம் மற்றும் பெற்றோரும் பொறுப்பாக அன்றி தமது கடமையாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது நாட்டில் வன்முறையற்ற, போதைப்பொருள் பாவனையற்ற துஷ்பிரயோகங்களற்ற ஒற்றுiமையும் நல்லிணக்கமும் மிக்க சமூகத்தை விருட்சமாக உருவாக்க விழுமிய கல்வியை பாடசாலைகளில் வித்தாக இட்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முயற்சி எடுப்போம்.

Related posts

முன்மாதிரியான செயற்பாடு

Thumi202121

அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு மனநோய் குறித்த சமூக பார்வை காரணமா?

Thumi202121

வினோத உலகம் – 26

Thumi202121

Leave a Comment