இதழ் 61

முன்னாள் காட்டு ராஜா பேசுகிறேன்

திரைப்படங்கள் எதார்த்தத்தை ஏளனம் செய்பவை என்பதை “சிங்கம்னா சிங்கிளாகத்தான் வரும்” என்கிற திரைப்பட வசனமும் உறுதி செய்கிறது. நாங்கள் தனித்தவர்கள் அல்ல. கூட்டமாகவே வாழ்வோம். எங்கள் குழுவில் 15 முதல் 40 சிங்கங்கள் வரை இருக்கும். இதில் குட்டிகளும், பெண்சிங்கங்களும் தான் அதிகம். இவை அனைத்தையும் தலைமை தாங்க ஒரு ஆண் சிங்கம் மட்டுமே இருக்கும்.

அப்படியொரு கூட்டத்தில்தான் நான் குட்டியாக இருந்தேன். மெல்ல மெல்ல இரைகளை வேட்டையாட பழகிக் கொண்டேன். எவ்வளவு பொறுமையாக பதுங்க வேண்டும்? எப்போது பாய வேண்டும்? இரை மீதான முதல் தாக்குதல் எவ்வளவு பலமானதாக இருக்க வேண்டும்? என்பவற்றைப் பற்றியெல்லாம் நான் நன்கு அறிந்து கொண்டேன் என்பதை அறிந்து கொண்ட என் கூட்டத்தினர் ஒரு நாள் என்னை விரட்டி விட்டார்கள். திரும்ப அந்த கூட்டத்திற்குள் சென்றேன். என்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் கூட்டத்தின் எல்லைக்குட்பட்ட காட்டிற்கு என் தந்தை ராசா என்பதால் நான் அவருக்கு பின் ராசாவாக முடியாதாம். நாட்டைப்போல் இங்கே குடும்ப அரசியல் செய்ய முடியாது.

விரட்டப்பட்ட நான் எனக்கான ஆட்சியை தேடிப்பிடிக்க வேண்டும். எனவே, இன்னொரு ஆண் சிங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று, அந்த சிங்கத்துடன் நேரடியாக ஒற்றைக்கு ஒற்றையாக சண்டை போட்டு வெல்ல வேண்டும். நாட்டில் நடப்பது போல அரசர்களின் ஆட்சியதிகாரத்திற்காக மக்களை சண்டையிடச் சொல்ல முடியாது. நான் பலதடவை எண்ணுவதுண்டு. பகுத்தறிவெனும் ஆறாம் அறிவு இருப்பதாக கூறும் மனிதன் யாரோ அரசனாவதற்கு தன்னுயிரை மாய்க்கிறானே? ஆனால் ஐந்தறிவே உள்ளதாக கூறப்படும் நாங்கள் அப்படியில்லை. எங்களுக்கு ஆட்சி வேண்டும் என்றால் நாங்கள் தான் சண்டை போட வேண்டும். எங்களுக்காக எங்கள் பிரசைகள் உயிரிழக்க மாட்டார்கள். அவர்கள் குடும்பம் அவர்களை இழந்து துன்பப்பட மாட்டார்கள்.

அப்படி ஒரு சண்டையில் கொஞ்சம் வயதான ஒரு கிழட்டு சிங்கத்தை வென்று விட்டேன். அந்த சிங்கம் தன்னை கொன்று விடும்படி கேட்டது ஏன் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை. ஆனால் அரசனாகப்போகும் வெற்றிக் களிப்பில் நான் அதைக் கொன்று விட்டேன். இப்போது நான் அந்த கூட்டத்திற்கு ராஜா. அந்த கூட்டத்தினர் புதியவனான என்னை எதிர்க்கவில்லை. என் வீரத்திற்கு மதிப்பளித்து என்னை ஏற்றுக் கொண்டார்கள். என் நகத்தால் என் எல்லையை கீறிக்கொண்டேன்.

நகம் என்னும் போதுதான் ஞாபகம் வருகிறது. எங்கள் வீரத்திற்கு எங்கள் உடல் பலமும், கூரிய எங்கள் பற்களும், அதனிலும் கூரிய நகங்களுமே போதும். எந்த ஆயுதமும் எங்களுக்கு அவசியமில்லை. சில மனிதர்கள் எங்கள் கைகளில் வாளை ஏந்தச் சொல்கிறார்கள். எங்கள் வாலை நம்பி சண்டை செய்தாலும், நீங்கள் தரும் வாளை நம்பி சண்டை செய்ய மாட்டோம். மனிதர்களே! ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்! சிங்கங்கள் வாளை ஏந்துவதில்லை!

ராஜாவான பிறகு நான் வேட்டைக்கு செல்வது குறைவு. எங்கள் கூட்டத்தில் உள்ள பெண் சிங்கங்களே வேட்டைக்கு செல்லும். வேட்டையாடி வரும் உணவை நான் உண்ட பின் மற்றவர்கள் உண்பார்கள். எல்லாரும் சமம் எனும் போலி வேசங்களுக்கு இங்கே இடமில்லை. ராசாவாக இருக்கும் வரை எனக்குரிய மரியாதை கிடைக்கும். அதற்காக எனக்குரிய கடமைகளையும் நான் செய்தாக வேண்டும். என் கூட்டத்திற்கோ, என் எல்லைப் பரப்பிற்கோ ஆபத்தென்றால் முதலாவதாக சண்டைக்கு போபவன் நானாகத்தான் இருப்பேன். என் கூட்டத்திலே யாருடைய உயிராவது எடுக்கப்படுகிறதென்றால் அதற்கு முதல் என் உயிர் பறிக்கப்பட்டிருக்கும்.

நாள் ஒன்றுக்குச் சராசரியாக 7 கிலோ உணவை உட்கொள்வோம். வரிக்குதிரை, எருமை போன்ற தாவரங்களை உண்ணும் பெரிய மாமிசங்களே எங்களுக்கு பிரியமானது. சில நேரங்களில் சிறுத்தை, சிறுத்தைப்புலி போன்றவற்றையும் உண்பதுண்டு. நாங்கள் அதிகம் தண்ணீர் அருந்துவது இல்லை. எங்கள் பார்வை மனிதனை விட ஆறுமடங்கு சிறந்ததாக இருக்கிறது. எனவே, இரவிலும் வேட்டையாட முடிகிறது. அதேபோல், எங்கள் நகங்கள் ஒன்றரை அங்குலம் வரை நீளமாக இருக்கும். ஒரு மணி நேரத்தில் 50 மைல் தூரத்தைக் கடக்குமளவு ஓடுவோம். எங்களால் 36 அடி நீளம் அளவில் குதிக்க முடியும். காட்டின் ராஜாவாக இருந்தாலும் நாங்கள் அடர்ந்த காடுகளில் வாழுவதில்லை. நிலப்பரப்பிலும், புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளிலுமே அதிகம் வாழ்வோம். அடர்ந்த காடுகளில் புலிகள் தான் வாழ்கின்றன. எங்கள் கர்ஜனையை 5 மைல் தொலைவு வரை கேட்க முடியும். இதன் மூலம் மற்ற சிங்கங்களிடம் தொடர்பு கொள்கிறோம்.

எங்கள் சகோதரி, தாய், மகளுடன் உறவு கொள்வதில்லை. மனைவி என்று ஏற்றுக்கொள்ளும் சிங்கங்களுடன் மட்டுமே உறவு கொள்வோம். எமது இரத்த உறவு என்பதை வாசனை மூலம் கண்டறிந்து கொள்வோம். பெண் சிங்கங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு பிரசவத்தில் இரண்டிலிருந்து ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. அவை நான்கு மாதங்கள் கருவைச் சுமக்கும். குட்டியை ஈன்றெடுக்கும் முன் தண்ணீருக்கு அருகில் பாதுகாப்பான இடங்களைப் பெண் சிங்கங்கள் தேர்ந்தெடுக்கின்றன.
குட்டிகள் 6 நாட்களுக்குப் பின் தான் கண்விழிக்கும். மேலும், அவற்றுக்கு 1 ஆண்டுக்குப் பின்னரே பற்கள் முளைக்கின்றன. எனவே அத்தனை நாட்களும், அவை தாயின் அரவணைப்பிலேயே இருக்கும். குட்டிகளை வளர்ப்பதிலும், ஆண் சிங்கங்கள் பொறுப்பேற்பதில்லை. ஆனால், மற்ற விலங்குகளிடம் இருந்து குட்டிகளைப் பாதுகாப்பதில் ஆண் சிங்கங்களின் பங்கு உள்ளது.

ஒரு சண்டையில் வென்று ராஜாவானால் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்யலாம் என்கிற நியதி எல்லாம் காட்டுக்குள் இல்லை. அடுத்த சண்டை அடுத்த நாளே நடந்து என் பதவி பறிக்கவும் படலாம். என்னை விட ஒரு வீரனை சந்திக்கும் வரைதான் நான் ராஜா. நானும் அப்படி ஒரு வீரனை சந்திக்கும் நாள் வந்தது. எனக்கு சற்றே முதுமை வந்துவிட்டது. முன்பு போல் சண்டை செய்ய முடியவில்லை. அந்த இளம் சிங்கத்திடம் தோற்று விட்டேன். அது என்னை கொல்லவில்லை. நானும் உயிர் மேல் உள்ள ஆசையில் என்னை கொல்லுமாறு கேட்கவில்லை. சில நாளில் மனிதர்கள் விரித்த வலையில் வசமாக மாட்டிக் கொண்டேன். பின்னால் இருந்து வந்த ஒரு மயக்க ஊசி என்னை மூர்ச்சையாக்கியது. கண் திறந்த போது ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்தேன். என் பலத்தையெல்லாம் பறித்து விட்டார்கள். தினமும் வரும் மாமிசத்தில் கலந்துள்ள பொருட்கள் என் வீரத்தை கொஞ்சம் கொஞ்சமாக பறித்தன. அந்த உணவு நான் உயிர் வாழ மட்டும் தான். அந்த கூண்டுக்குள் சிங்கமாக அல்ல சிங்கத்தோல் போர்த்த பூனையாக, அவர்கள் சொல்வதை செய்து வாழ்ந்து வருகிறேன்.

நாட்டில் ஒரு தடவை மந்திரியாக இருந்தாலே போதும். முன்னாள் மந்திரிகள் என்று இறக்கும் வரை ராஜ வாழ்க்கை வாழலாம். ஆனால் நான் முன்னாள் ராஜா. வீரம் இருக்கும் வரைதான் ராஜா. இப்போது வயதாகி விட்டது. அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான் என் வாழ்க்கை. அவர்கள் சொன்னதை செய்தால் தான் சாப்பாடு.

இதோ அட்டையில் பார்க்கிறீர்களே! இந்த தடியை நான் தாண்டியாக வேண்டும். மழை பெய்வதை எல்லாம் நான் காரணமாக்கி தப்ப முடியாது. அதிகபட்சம் பதினாறு ஆண்டுகள் தான் எங்கள் ஆயுட்காலம். எனக்கு இப்போது பதினைந்து முடிகிறது. இருக்கும் வரை நான் ராஜாவாக இருக்க முடியாது. ஆனால் சிங்கமாக இருந்து விட வேண்டும். மனிதர்களே! நீங்கள் எங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அதில் அரசியலும் ஒன்று!

Related posts

பரியாரியார் Vs அய்யர் – 10

Thumi202121

என்ரை ஐயோ…!

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -05

Thumi202121

Leave a Comment