இதழ் 61

என்ரை ஐயோ…!

அன்று வெள்ளிக்கிழமை. நேரம் ஏழு மணியிருக்கும். ஜன்னலினூடாக வந்த சூரியக் கதிர்கள் என்னைச் சூடேற்றி எழுப்பிக்கொண்டிருந்தன. தூக்கம் கலைந்து எழுந்தேன். கண்களைக் கசக்கிக்கொண்டு வானை நோக்கியபடி வெளி யேறினேன். நீலம் படர்ந்திருந்த வானத்தில் பறவைகள் ஆங்காங்கு பறந்துகொண்டிருந்தன. குருவிகளின் கீச்சிடும் சத்தம் என் காதுகளை மேலும் இனிமையாக்கியது. விவசாயிகள் மாட்டு வண்டில்களில் தத்தம் வயல்களுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். வேறு தொழிலுக்குச் செல்வோர்களும் தங்கள் பணிகளின் நிமித்தம் எங்கோ பயணித்துக் கொண்டிருந்தார்கள். பாடசாலை மாணவர்கள் நடந்தும், சைக்கிள்களிலும் பள்ளிக்குச் செல்லும் காட்சிகளும் தென்பட்டன. பலர் பேருந்தின் வருகைக்காகப் பேருந்து நிலையத்தில் குழுமி நின்றனர். அந்நிகழ்வுகளைப் பார்த்து இரசித்தபடி என் கடமைகளைச் செய்யப் புறப்பட்டேன்.

அம்மம்மாவுக்குத் தேவையான நீரைக் கிணற்றில் அள்ளிக் கொடுத்துவிட்டு, சாமி அறையிலிருந்து விபூதியையும் எடுத்துவந்து கொடுத்தேன்.

‘அப்பனே பிள்ளையாரப்பா! நீதானப்பா எல்லாரையும் காப்பாத்த வேணும்…”

என்று சொல்லியபடி விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டதைப் பார்த்தபடியே என் கடமைகளுக்காகப் நான் புறப்பட்டேன். காலைக்கடனை முடித்துவிட்டு, பற்தூரிகையோடு மீண்டும் கிணற்றடிக்குச் சென்றுகொண்டிருக்கையில்…..

‘தம்பீ… தம்பீ…..”

அப்பா தொலைவிலே கூப்பிடும் சத்தம்.

‘ஓமப்பா…. வாறன்! வாறன்…”

என்றபடி ஓடிச்சென்று பார்த்த போது வயலுக்கு நீர் இறைத்துக் கொண்டிருக்க, எங்கள் தோட்டக் கிணற்றில் பூட்டப்பட்டிருந்த பெரிய மோட்டரிலிருந்து நீர் அருவியாகக் கொண்டிக்கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, ஒரு குளியல் போடவேண்டும் என்ற ஆசை மனதுக்குள் தோன்றியது. ஆனாலும் அப்பா பேசுவார் என்ற பயத்தோடு, அவரின் தேவைகளை நிறைவேற்றிவிட்டு, முகம் கழுவியபடி வீட்டுக்கு வந்தேன். விபூதி தரித்துக் கடவுளை வேண்டிவிட்டு, வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.

‘தம்பீ…. இந்தா பால்!”

அம்மா சுடச்சுடக் கொண்டு வந்த தேநீரைக் குடித்த படியே அம்மம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின் அப்பாவுக்காகப் போத்தலில் ஊற்றித் தந்த தேநீரை எடுத்துக்கொண்டு வயலை நோக்கிப் புறப்பட்டேன். வயலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையின் இருமருங்கும் கால்வாய்களில் நீர் ஓடுகின்ற சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. கால்வாய்களின் அருகுப்பகுதிகளில் தென்னந் தோப்புக்களும், வயல்வெளிகளும் காணப்பட்டன. சின்னஞ் சிறுவர்கள் அவ்வாய்க்காலில் குதித்துக் குளித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தொலைவில் தூண்டில் போட்டுக் கொண்டிருப்பதும் தெரிந்தது. இவற்றினைப் பார்த்தபடியே வயலுக்கு நகர்ந்துகொண்டிருந்தேன். மனம் இனிமையான பொழுதை அனுபவித்துக்கொண்டிருந்தது.

‘அப்பா இந்தாங்கோப்பா…!”

கொண்டு வந்த தேநீரை அப்பாவிடம் கொடுத்துவிட்டு, அருகிலிருந்த மண்வெட்டியை எடுத்து வயலுக்கு நீர் பாய்ச்சத் தொடங்கினேன். அப்போதுதான் தனு அவனுடைய அப்பாவுடன் வயல்களைப் பார்வையிட்டபடி வந்து சேர்ந்தான்.

‘டேய்! மச்சான்.. இண்டைக்கு ஒட்டிசுட்டான் சிவன் கோயில் தேராமடா! போவம் வாறியே?”

‘உண்மையாவோடா..?”

‘ஓமடா! உம்மையாத்தான்.எல்லாப் பொடியளும் விடியவே போறாங்களடா..”

‘சரி வயலப் பாத்திட்டு வா. ஆத்தில குளிச்சிட்டுப் போவம்.”

தனுவோடு கதைத்துவிட்டு நான் வீட்டுக்கு வந்து, எனது ஆடைகளை மின்னழுத்தியால் அயன் பண்ணிவிட்டு, ஆற்றுக்குப் போவதற்குத் தயாராகினேன். எங்கள் வயல் காணிக்குப் பக்கத்தில்தான் பேராறு ஓடுகிறது. வருடத்தில் எப்போதும் வற்றிவிடாமல் ஓடுவதால் அங்குதான் நாங்கள் அதிகம் குளிப்பதுண்டு.
‘டேய்! வாறியோ வேகமா. நான் வந்திட்டன்.”
‘வல்லாம் நில்லுடா. வல்லாம்.”

தனுவின் சத்தம் கேட்டது. உடனே அடுப்படியில் நின்ற அம்மாவை நோக்கி ஓடினேன்.

‘அம்மா.. இண்டைக்குக் கோயிலுக்குப் போப்போறம்.. ஆத்தில குளிக்கப் போகட்டா?… தனு வந்திருக்கிறான்.”

‘விடியக்காலத்தால ஆத்துக்குப் போறியளோ? கொப்பர் வந்தா பேசுவேர். கவனமா குளிச்சிட்டு வேகமா வாங்கோ..”

அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டபடியே தனுவோடு ஆற்றை நோக்கி ஓடினேன். எங்களின் பின்னால் தனுவின் நாய்க்குட்டி கண்ணம்மாவும் ஓடிவந்து கொண்டிருந்தது. கண்ணம்மா என்றால் தனுவுக்கு உயிர். தனுவெண்டால் கண்ணம்மாவுக்கு உயிர். ஓடி வந்த கண்ணம்மா தனுவின் தோள்களில் பாய்ந்து ஏறிக்கொண்டது. ஒற்றையடிப் பாதையினூடாக ஆற்றை நோக்கிப் பயணித்தோம். ஆற்றைச் சூழ்ந்திருந்த இயற்கைக் காட்சி எங்களை அமைதிப்படுத்தியது. ஆற்றங்கரையின் நீளத்திற்கும் மருத மரங்கள் காணப்பட்டன. அவற்றுக்கிடையே மாமரங்களும் நின்றிருந்தன. குரங்குகள் மாங்காய்களைப் பறித்து நாசம் செய்து கொண்டிருந்ததை அவதானித்தோம். குட்டிக் குரங்குகள் அங்கும் இங்கும் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. பறவைகளும் பழுத்திருந்த பழங்களைத் தின்று கொண்டிருந்தன. அதைப்பார்த்த எனக்கும் மாங்காய் சாப்பிட வேண்டும்போல் வாய் ஊறியது. சற்றும் யோசிக்காமல் உடனே பக்கத்தில் நின்ற தனுவை ஏற்றி மாங்காய் பறித்துக்கொண்டேன்.

‘டேய் வீட்டபோய் உப்பும் தூளும் எடுத்துட்டு வாடா.. செமயா இருக்கும்..”

தனுவின் வார்த்தையைக் கேட்டபடி வீட்டை நோக்கி ஓடினேன். சிரட்டையில் உப்பும், தூளும் எடுத்து வந்தேன். பறித்த மாங்காய்களை ஆற்றுநீரிலே நன்கு கழுவிய பின் மாமரத்திலே குத்தி மாங்காய்களை உடைத்துக்கொண்டோம். உடைத்த துண்டுகளை உப்புத்தூளுடன் தொட்டுத் தொட்டுத் தின்னும்போது சொர்க்கம் தெரிவதை உணர்ந்தேன். அது கறுத்தக்கொழும்பான் மாங்காய் என்ற படியால் அவ்வளவு சுவையாக இருந்தது.

திடீரென ஆற்றில் பெரிய சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.

‘டேய்! கண்ணம்மா ஆத்துக்குள்ள விழுந்துட்டடா…”

என்று சொல்லி முடிப்பதற்குள் தனு சற்றும் யோசிக்காமல் தான் பாசத்தோடு வளர்த்த கண்ணம்மாவைக் காப்பாற்ற ஆற்றினுள் குதித்து விட்டான். நானோ என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாரையும் காணவில்லை. நாய்க்குட்டியைக் காப்பாற்றச் சென்ற தனுவோ ஆற்றுப் பள்ளத்தினுள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தான். எனக்கோ நீச்சல் தெரியாது. அவனுக்கும்தான்.

‘ஐயோ!… ஐயோ! ஓடியாங்கோ! ஓடியாங்கோ!”

என்று வீரிட்டுக் கத்தினேன். எவரும் வரவில்லை. கண்ணம்மாவையும், தனுவையும் எப்படிக் காப்பாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. உடம்பு பயத்தால் நடுங்கியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. சற்றுநேரத்தில் பெரிய ஆற்றுச்சுழி அவனை அடித்துச்செல்ல ஆரம்பித்தது. உடனே நான் அவன் செல்லும் பக்கமாகப் பெரிய கட்டை ஒன்றை எடுத்துப் போட்டேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை. நாய்க் குட்டியையும் காணவில்லை. பின் தனுவையும் காணவில்லை. தண்ணீருக்குள் தாழ்ந்து போனான். எனக்குப் பயம் இன்னும் அதிகரித்தது. பயத்தில் கத்திக்கொண்டு நின்றேன். திடீரென தாண்டுபோன தனு ஆற்றுக்குள் இருந்த மருத மர வேரைப் பிடித்துக்கொண்டு கிடந்தான். உடனே வயல்வெளிக்கு ஓடினேன். அப்போது யாரோ வயலுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தார்கள். உடனே அண்ணனை அழைத்துக் கத்தியபடி ஆற்றங்கரையை நோக்கி ஓடினேன். அண்ணனின் உதவியுடன் தனு மீட்கப்பட்டான். அவனுடைய கண்கள் மூடியிருந்தன. நான் செத்துவிட்டான் என்றே நினைத்தேன். உடனே அண்ணன் அவனுடைய வயிற்றை அமத்திக் கொண்டிருந்தார். தண்ணீரைக் கனக்க குடித்துவிட்டதால் தனுவின் வாய்க்குள்ளிருந்து நீர் வெளியேறியது.

‘வற்றாப்பிளைத் தாயே இவன் தப்பிடோனும்மம்மா…. தப்பிடோனுமம்மா…!”

மனதுக்குள் வற்றாப்பளைக் கண்ணகித்தாயை வேண்டினேன். தனுவும் கண் விழித்தான். இப்போதுதான் எனக்கு நிம்மதி வந்தது. இருவரும் சற்று ஓய்வெடுத்தபின் வீட்டை நோக்கி நகர்ந்தோம். எங்களுடைய உள்ளத்தில் கண்ணம்மாவின் நினைவே வந்துகொண்டிருந்தது. வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறினோம். ஆனால் ஆற்றில் தனு தாண்ட செய்தியைக் கூறவில்லை. தனு வீட்டிலும் இதைத்தான் கூறினோம். கண்ணம்மாவின் இழப்பு எல்லோரையும் கலங்க வைத்தது. கவலையுடன் இருவரும் கோவிலை நோக்கிச் சைக்கிள்களில் பயணித்தோம். இன்று ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம் கோவிலில் தேர்த்திருவிழா. வீதிகளில் நிறைந்த மக்கள் கூட்டம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வீதிகளில் சொகுசுக் கார்களும், பெரிய பெரிய வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. சனங்கள் மாட்டு வண்டில்களிலும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இவற்றைப் பார்த்தபடியே நாங்களிருவரும் கண்ணம்மாவின் பிரிவுத்துயரோடு கோவிலை வந்தடைந்தோம்.

வந்தவுடன் மிதிவண்டிகளை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டுக் கோயிலுக்குள் சென்றோம். இராஜகோபுரம் எங்களை வரவேற்கும் படி அழகாக இருந்தது. தேர் இழுப்பதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இராஜ கோபுரத்தை வணங்கிபடி உள்ளே சென்றோம். கோயிலைச் சுத்தி வணங்கிவிட்டுக் கடைபோட்டிருக்கும் பக்கம் சென்றோம். அங்கும் சனங்கள் கூடி நின்றார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்குமிங்கும் திரிந்தபடி தமக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குக் கோயில் நிகழ்வுகள் மகிழ்ச்சியையே தரவில்லை. தனுவுக்கு மனது முழுவதும் கண்ணம்மாவின் நினைவே ஓடிக்கொண்டிருந்தை உணர்ந்தேன்.

பக்த அடியவர்கள் பலவிதமான நேர்த்திகளைச் செய்யும் வண்ணம், கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார்கள். பாற் காவடி, பன்னீர்க் காவடி, தீர்த்தக் காவடி, தூக்குக் காவடி, கற்பூரச்சட்டி, பாற்செம்பு, பறவைக் காவடி என நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஐஸ்கிறிம் வாங்கிச் சுவைத்தபடி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தோம். நேரமும் சென்றுகொண்டிருந்தது.

காலை ஒன்பது மணியிருக்குமென நினைக்கிறேன். தேர் இழுக்க ஆரம்பித்துவிட்டது. நாங்களும் ஓடிச்சென்று தேர் வடத்தினைப் பிடித்துக் கொண்டோம். அங்கே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருந்த அண்ணாமார்களும், அக்காமார்களும் கலாசார ஆடைகளில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு சிறுவன் தொலைந்ததாக அறிவிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் அழும் சத்தத்தையும் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு சனம் இன்று கூடி, தேர்த்திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்களும் தேரினை இழுப்பதில் ஆர்வமாக இருந்தோம்.

திடீரெனத் தனுவின் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. எடுத்துக் காதில் வைத்துக் கலோ… கலோ… என்றான் ஒன்றும் விளங்கவில்லை. அம்மா என்று என்னிடம் சொல்லியபடி கொஞ்சத்தூரம் நகர்ந்து சென்று ஏதோ பேசிக் கொண்டிருந்தான். நானும் அவனருகில் ஒடிச்சென்றேன்.

‘டேய் கண்ணம்மா காலொண்டு முறிஞ்சபடி நடக்கேலாம வீட்டு முத்தத்தில இழுத்து இழுத்துக் கிடக்காமடா…. வாடா போவம்….”

என்று சொல்லியபடி சைக்கிள் பார்க்கை நோக்கி ஓடினோம். சைக்கிள் பார்க்கிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு, அவனை முந்திபடி தார்றோட்டுக்கு ஏறி வேகமாக மிதிக்கத் தொடங்கினேன். என் பின்னால் தனுவும் வேகமாகவே வீதியைக் கடந்துகொண்டிருந்தான். திடீரெனப் பாரிய சத்தம். திரும்பிப் பார்த்தேன். தனுவைக் காணவில்லை. அதில் நின்ற சனங்களெல்லாம் தலையில் கைவைத்தடி ஓடினார்கள். சைக்கிளை நிறுத்தித் தள்ளிவிட்டு நானும் அவர்களின் பின்னால் ஓடிச்சென்றேன். பெரிய டிப்பர் ஒன்று நடுவீதியில் நிறுத்தப்பட்டிருந்தது. டிப்பரின் சில்லுக்குள் சைக்கிள் நசுங்கிக் கிடக்க, இரத்தம் பரவி வீதியையையே சிவப்பாக்கியது. சன நெரிசலுக்குள்ளால் உள்நுழைந்து அருகில் சென்றேன்.

‘என்ரை ஐயோ!… தனு… எங்கள விட்டிற்றுப் போட்டியேடா….”

என்று கண்ணீர் பெருகத் தலையில் அடித்துக் கதறியபடி மல்லாக்காய் நிலத்தில் சரிந்தேன். சில்லுக்குள் நெரிபட்டுச் சிதைந்துபோன தனுவின் உடலும் துடிதுடித்து ஓய்ந்துபோக, அவனது விழிகளும் நெற்றிக்குள் புதைந்தபடி வெள்ளை பிரட்டிக் கிடந்தன…….

******************

Related posts

இந்தியாவில் மிகப்பெரிய இரயில் விபத்து

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -05

Thumi202121

முன்மாதிரியான செயற்பாடு

Thumi202121

Leave a Comment