இதழ் 61

பரியாரியார் Vs அய்யர் – 10

ஆச்சியை மருத்துவம் பார்க்க வந்த பரியாரியார் அய்யரின் தங்கை சரோஜா மடியில் பேச்சு மூச்சின்றி கிடக்கிறார். அங்கே தன் மகனுடன் வந்த பரியாரியார் மனைவி பரமுவும் அழுது கொண்டே பரியாரியாருக்கு மற்றப் பக்கம் வந்து இருந்து அழத் தொடங்கினாள். சரோஜாவினதும் பரமுவினதும் அழுகைச் சத்தம் அங்கே ஒரு துக்கம் நடந்துவிட்டதை ஊருக்கே சொல்லிவிடுவதாய் இருந்தது. ஊரவர்கள் ஆச்சிக்கு தான் ஏதோ நடந்துவிட்டதாக பேசிக் கொண்டார்கள். ஆனால் அங்கே ஆச்சி உடலில் சில அசைவுகள் ஏற்படத் தொடங்கின. ஆச்சியின் மூடிய கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

எல்லா கண்களும் பரியாரியாரையே மொய்த்துக் கொண்டிருந்தாலும் ஆச்சியின் உடல் அசைவுகளை அய்யர் கவனித்து விட்டார். மெல்லச் சென்று ஆச்சியின் கைகளைப் பற்றினார். ஆச்சியின் பொக்கை வாய் எதையோ சொல்ல முனைந்தது. தன் காதை ஆச்சி வாய்க்கு கிட்ட கொண்டு போனார். ஆனால் சொல்வது விளங்கவில்லை. ஆனால் கண்களால் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. கண்ணீரின் ஈரத்தால் ஆச்சியின் கண்கள் இளகியிருக்க வேண்டும்(மனமும் தான்). மெல்ல மெல்ல தன் கண்களை திறந்தாள். தரையில் தன் மகள் மடியில் படுத்திருந்த பரியாரையும் சரோஜாவையும் மாறி மாறி பார்த்தாள். ஆச்சியின் மனமும் இளகிக் கொண்டிருப்பதை அய்யரால் உணர முடிந்தது.

அப்போது திடீரென ஆச்சியை சரோஜா ஒரு பார்வை பார்த்தாள். அப்பப்பா… ஆயிரம் கோபங்கள் நிறைந்த அக்கினிப் பார்வை அது. சிவனின் மூன்றாம் கண்ணும் தோற்று விடும். சரோஜாவின் அந்த பார்வையை ஆச்சியால் எதிர்கொள்ள முடியவில்லை. கண்களை மீள மூடி ஆச்சி அழுகையை தொடர்ந்தாள். உடனே தன் பார்வையை அய்யர் பக்கம் திருப்பினாள். அய்யராலும் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

“எல்லாரின்ட வாழ்க்கையையும் நான் கெடுத்துட்டன். ” என ஆச்சி புலம்பத் தொடங்கிவிட்டாள். அய்யர் தடுத்தும் ஆச்சி புலம்புவதை நிறுத்தவில்லை. மரணப் படுக்கையில் எல்லோருக்கும் தாங்கள் செய்த தவறுகள் ஞாபகத்திற்கு வரும். அதனை நினைத்து வருந்தி, அந்த பாவங்களுக்கு பரிகாரம் தேட முனைவார்கள். இதனை சுடலை ஞானம் என்று சொல்வார்கள். அந்த சுடலை ஞானம் தான் இப்போது ஆச்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த சுடலை ஞானம் விடலை ஞானமாக எப்போதோ வந்திருந்தால் சரோஜாவினதும் பரியாரியாரினதும் வாழ்க்கை அவர்கள் நினைத்தது போல் அமைந்திருக்கும். ஆம்! உங்கள் ஊகம் சரிதான். சொல்லாமல் விட்ட இன்னொரு காதல் கதையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அய்யர் வீட்டு ஒரே பெண் வாரிசு சரோஜா. செல்லமாக வளர்ந்தவளை விட்டுப்பிரிய மனமின்றி வீட்டோடு மாப்பிள்ளை பார்த்தனர் வீட்டுக்காரர். இதற்கு மேலும் தாமதித்தால் நிலைமை எல்லை மீறிப் போய்விடும் என்பதை அறிந்து தனக்கும் பரியாரியாருக்குமான காதலை வீட்டுக்காரர் முன்னிலையில் போட்டுடைத்தாள். அப்போதும் நிலைமை எல்லை மீறித்தான் போய் இருந்தது. அப்போது மட்டுமல்ல எப்போது அவள் சொல்லி இருந்தாலும் அய்யர் வீட்டுக்காரர் சம்மதித்திருக்கப் போவதில்லை. வீட்டிற்குள்ளேயே வளர்ந்த செல்லப்பிள்ளை என்பதால் வெளியில் பாதீனியமாய் பரவியிருந்த சாதீய ஏற்றத் தாழ்வுகளை அவள் அறிந்திருக்கவில்லை. பள்ளியிலும் சாதிகள் இல்லையடி பாப்பா என்று தான் சொல்லித்தந்து இருந்தார்கள். அவ்வாறு சொன்ன பாரதியின் படம் வீட்டிலும் இருந்தது. “ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது” என்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

தன்னைப்போல அசைவம் சாப்பிடாதவராய், தன் மனதுக்கு பிடித்தவராய் அமைந்துவிட்ட பரியாரியாரை காதலித்து விட்டாள். சாதிப் பிரச்சனை வருமென தெரிந்தும், சரோஜாவின் அழகிலும், குழந்தைத்தனத்திலும் தன்னை இழந்த பரியாரியாரும் காதலிக்க தொடங்கிவிட்டார். ஆனால் என்ன செய்வது அய்யர் வீட்டில் சிவப்புக் கொடி காட்டி விட்டார்கள். சரோஜா எவ்வளவோ முயன்றாள். முடியவில்லை. சரோஜாவின் அம்மாவான ஆச்சி இறுதிக்கட்ட ஆயுதமாக தன் உடம்பெல்லாம் பெற்றோல் ஊற்றி, நெருப்புப் பெட்டியை சரோஜாவிடம் கொடுத்து, தன்னை எரித்துவிட்டு விரும்பியவருடன் போகுமாறு கூறினாள். இப்படி ஒரு சம்பவத்தை எந்த மகளால் செய்ய இயலும். வீட்டவர்கள் காட்டியவரே சரோஜாவுக்கு வீட்டுக்காரர் ஆனான். சரோஜா தனது வீட்டிற்கு மனைவியாக வரும் போது காதலின் நினைவாக நடவேண்டும் என வாங்க வைத்திருந்த மகிழ மரத்தின் கன்றை அவள் நினைவாக தன் வீட்டு முற்றத்தில் பரியாரியார் நட்டார். சிறிது காலத்தில் பரியாரியார் வீட்டவர்கள் பார்த்த பரமேஸ்வரியை தன் காதல் கதை அனைத்தையும் சொல்லி கரம் பிடித்தார்.

வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லி நடந்த திருமணம் என்பதால் பரியாரியார் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. பரமு பரியாரியாரை புரிந்துகொண்ட மனைவியாக இருந்தாள். ஆனால் சரோஜா வாழ்க்கையோ அவளுக்கு துன்பங்களையே தந்தது. சரோஜாவின் கணவன் பெயரளவிலேயே அய்யர். களவாக மாமிசம் மட்டுமல்ல மதுவும் அருந்துவதும் சரோஜாவுக்கு தெரியவந்தது. இதைப்பற்றி அவள் கணவனை கேட்கும் போதெல்லாம் ” இழி சாதியை காதலிச்ச நீ எல்லாம் இதை கதைக்க கூடா. உன்ட குடும்ப மானத்தை காப்பாத்தினவன் நான்.” என்பதைச் சொல்லி அவளை மட்டுமல்ல சரோஜா வீட்டவர்களையும் அடக்கி வந்தான். கௌசல்யா பிறந்து மூன்று மாதங்களில் லண்டன் கோயில் ஒன்றில் பூசைக்கு வரச் சொன்னதாகவும், நல்ல சம்பளம் என்றும் போனவன்தான். திரும்பி வரவே இல்லை. அவனோடு இருப்பதை விட இல்லாமல் இருப்பது நல்லம் என்று சரோஜாவும் பேசாமல் விட்டுவிட்டாள். ஆனால் ஆச்சிக்குத்தான் பெரிய கவலை. அதை வெளிப்படுத்தினால் தன் தவறையும் ஒப்புக்கொள்ள வேண்டி வருமென்பதால் அந்த கவலையை புதைத்தே வைத்திருந்தாள். ஆனால் தன்னை காப்பாற்றிய பரியாரியார் பேச்சு மூச்சின்றி தன் மகளின் மடியிலேயே படித்திருப்பதை பார்த்ததும் ஆச்சியால் கட்டுப்படுத்த முடியவில்லை. கவலைகள் கண்ணீராய் பெருக்கெடுத்தன.

தன் சக்தி முழுவதையும் திரட்டி ஆச்சி கதைக்க முயன்றாள். அவள் முயன்றால் முடியாதது இருக்கமா? கதைத்தாள். பரியாரியார் மருந்து வேலை செய்தது.

“என பிள்ளை சரோ… என்னை மன்னிச்சிடு… உன்ட வாழ்க்கையை சீரழிச்சுப் போட்டன்… எனக்கெல்லாம் நல்ல சாவே வராது…”

ஆச்சி தட்டுத்தடுமாறி அழுதழுது சொல்லி முடிக்கவில்லை. பரியாரியார் தலையை மெல்ல நிலத்தில் கிடத்தி விட்டு, வெகுண்டெழுந்தாள் சரோஜா.

” என்னனை சொல்றாய்? நல்ல சாவே வராதோ.. ஹா… ஹா… சாகப்போறன்… சாகப்போறன்… என்டு சொல்லியே என்னை வெருட்டி என்ட வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டு, இப்ப திருப்பி என்ன நாடகம் போடுறா… வாழ்ந்து முடிச்ச உனக்கான்டி வாழவே தொடங்காத என்ட வாழ்க்கையை மாத்தச் சொன்னியே? சாதி சாதி என்டு உன்ட சாதீல வந்த உன்ட மாப்பிள்ளை என்ன செய்தான் என்டு பாத்தனீ தானே! என்ன பாதீலயே விட்டுட்டு போட்டான். “

இவ்வளவு வருசமா மனசுக்க வைச்சிருந்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்த்தாள் சரோஜா. ஆச்சியால் பதில் பேச முடியவில்லை. தன்னை நியாயப்படுத்த ஆச்சியிடம் அழுகையைத் தவிர எதுவுமே இல்லை. இந்த நேரத்தில் பரதன் பரியாரியார் நாடியைப் பிடித்து பார்த்து விட்டு, வாய் மீது வாய் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்துக் கொண்டிருந்தான். பரமு பரியாரியார் கால்களில் தன் உள்ளங்கையால் இறுக தேய்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் செய்ததெல்லாம் மன்னிக்கவே முடியாத பாவம். எனக்கு நரகம் தான் கிடைக்கும். என்ட மகளின்ட வாழ்க்கையை நானே நாசமாக்கிட்டனே.”

என விம்மி விம்மி அழுதாள் ஆச்சி. சரோஜாவும் விடவில்லை.

“நடிக்காத அம்மா.. சாதீ வெறி பிடிச்சு என்னத்த கண்டாய்? உன்ட சாதிக்காரரா உன்ன காப்பாத்தினவை? சாதீ வெறியில் யாரை வேண்டாமென்டியோ அவர் தானே உன்னை காப்பாத்தினது.”

“ஓமடி… நீ சொல்றதொல்லாம் சரி. எனக்கு விளக்குது. சாதிக் கொழுப்பில திரிஞ்சு என்ட மகளை வாழாவெட்டியாக்கினது தான் மிச்சம். நான் நடிக்கேல பிள்ளை. சாதி பார்க்கிற தப்பு. எனக்கு விளக்குது.”

“ஹா… ஹா… உனக்கு விளக்குதா? நல்லா சொல்லுவாய். நான் நம்ப மாட்டன்.”

“சாவைப் பாத்திட்டு வந்திருக்கிறன் பிள்ளை. சத்தியமா சொல்றேன். என்ன செய்தால் நம்புவாய்?”

“இந்தா… உன்ட பேத்தி… அய்யர் வீட்டு வாரிசு… கௌரவம்… கௌசல்யாவை இன்னொரு சாதீல கல்யாணம் பண்ணி கொடுப்பியா..?”

சரோஜா இப்படி கேட்பாளென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆச்சி மௌனமானாள். கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சரோஜா விடவில்லை.

“பாத்தீயா அம்மா. பம்மத் தொடங்கீட்டாய். நீ எல்லாம் மாறவே மாட்டாய்.”

“நல்ல மாப்பிள்ளையா இருந்தா கட்டிக் கொடுக்கலாம் பிள்ளை”

ஆச்சி இப்படி சொல்வாள் என்று அந்த ஊரில் யாரும் கனவிலும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். அய்யர் விறைத்துப்போய் பார்த்துக் கொண்டிருந்தார். சரோஜா விட்டுவிடவில்லை. ஒரு முடிவோடே தொடர்ந்தாள்.

“நல்ல மாப்பிள்ளையா? ஹா.. ஹா… நீங்க பாத்தத விடவா….?”

“சரி.. நீயே இந்த முறை உன்ட மகளுக்கு மாப்பிள்ளையை பார். நான் உயிரோட இருந்தா நானே நடத்தி வைக்கிறன்.”

சரோஜா எதிர்பார்த்த பதிலை ஆச்சியிடமிருந்து பெற்றுக் கொண்டாள். இப்படி ஒரு உதவி செய்ய சரோஜாவுக்கு ஒருவரும் கிடைக்கவில்லை. ஆனால் கௌசல்யாவுக்கு சரோஜா கிடைத்திருந்தாள். பரதனின் சிகிச்சையாலோ என்னவோ பரியாரியாரும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்தார்.

இன்று நடந்ததில் எது உண்மை, எது நாடகம் என்று கௌசல்யாவுக்கு எதுவுமே புரியவில்லை. உண்மைக் காதலை நிலைநிறுத்த சில பொய்கள், சில நாடகங்கள் தேவைப்படும். அவை சதியல்ல! லீலை! காதல் லீலை! தமிழ்ச் சாதி பாகுபாடுகளால் பிரிந்து போன இரு காதலர்கள் தங்கள் பிள்ளைகளின் காதலை சேர்த்து வைக்க நடத்திய நாடகத்தில் சிலர் தெரிந்தே நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். பலர் தெரியாமலே நடித்திருக்கிறார்கள். அது யார் யார் என்ற குழப்பம் எல்லோருக்குமே இருக்கிறது. குறிப்பாக கௌசல்யாவுக்கு. பரதன் மேல் தனக்கு வந்த காதலிலேயே அம்மாவின் பங்கும் இருக்குமோ என்று அவள் ஐயப்பட்டாள். ஆனால் அதைப்பற்றி அவள் ஆராய வெளிக்கிடவில்லை. பரதனுடனான தன் காதல் கல்யாணம் எனும் அங்கீகாரத்தை பெறும் ஆனந்தத்தை அனுபவிக்கவே அவளுக்கு நேரம் போதுமாக இருந்தது.

பரியாரியாருக்கு காதலிக்கும் போது சரோஜா கொடுத்த காதல் பரிசான அந்த மகிழ மரத்தின் கொப்பு முறிந்த இடத்தில் இருந்து புதிதாக ஒரு கிளை முளைவிட்டிருந்தது. பரியாரியார், சரோஜா காதல் பரதன், கௌசல்யா வழியே நீள்கிறது…

(முற்றும்)

Related posts

என்ரை ஐயோ…!

Thumi202121

அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு மனநோய் குறித்த சமூக பார்வை காரணமா?

Thumi202121

முன்மாதிரியான செயற்பாடு

Thumi202121

Leave a Comment