இதழ் 61

அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு மனநோய் குறித்த சமூக பார்வை காரணமா?

பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் கூட “மனநோய்” என்றால் “பைத்தியம்” என்று கேவலமாக பார்க்கும் நிலை பரவலாக காணப்படுகிறது. மனநல மருத்துவர்களுக்கு கூட எமது சமூகம் உரிய அங்கீகாரம் வழங்குவதில்லை. மருத்துவர்களுக்கே இந்த நிலை என்றால் நோயாளிகளுக்கு?

மனநோய் குறித்த நமது சமூகத்தின் இந்த பார்வையால் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே சமூகத்தில் இருந்து சற்று விலகியிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வார்கள். இது அவர்களின் நோய்த்தன்மையை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

மனிதர்களுக்கு எந்தளவு உடல்நலம் முக்கியமோ, அந்த அளவுக்கு, ஏன்… அதைவிடவும் மனநலன் முக்கியம். நம்மில் பெரும்பாலோனோர் மனநலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பாரிய உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பலர் மனதளவில் மிகவும் தைரியமாக இருந்து அந்த நோயைக் குணமாக்கியுள்ள சம்பவங்களே இந்தக்கூற்றுக்கு ஆதாரங்கள்.

இந்த விஷயத்தில், திரைப்படங்களின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கிறது. பெரும்பாலான திரைப்படங்களில் மனநோயாளிகளை, ஒரு கொலையாளிபோலவும், கொடூரமானவர்போலவும் சித்திரிகிறார்கள். உண்மையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் அப்படிப்பட்டவர் இல்லை. அதேபோல் சினிமாவில் மின்னதிர்வு சிகிச்சை கொடுக்கும்போது அந்த நபர் மிகவும் துடிப்பது போலவும், கதறுவது போலவும் சித்திரித்திருப்பார்கள். இது மக்களிடையே ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அதில் துளி அளவும் உண்மையில்லை. ஒரு சாராசரி மனிதன் கையால் தொட்டு உணரக்கூடிய அளவிலான மிகச் சிறிய மின்னூட்டம் சில விநாடிகள் மயக்கநிலையில் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சையை எடுப்பதன் மூலம் வெகு விரைவாக மீண்டும் பழைய நிலைமைக்குப் பாதிக்கப்பட்டவர் திரும்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

எமது சமூகத்தின் நடவடிக்கைகளால் மனநோய் பாதித்தவரின் குடும்பத்தினரும் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகிறார்கள். அந்த வீட்டை, ‘பைத்திக்காரன் வீடு’, கிறுக்கன் வீடு’,மென்டல் வீடு’, `லூசுப் பையன் வீடு’ என்றெல்லாம் அடைமொழிவைத்து அழைப்பார்கள். இது அந்த வீட்டில் உள்ளவர்களை மனதளவில் பெருமளவில் பாதிக்கும். இது அந்த குடும்பத்தவரின் மனநிலையையும் பாதிக்கச் செய்து, அவர்களையும் மனநோயாளியாக்கி விடும்.

இதுபோன்ற எமது சமூகத்தின் செயற்பாடுகளால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் செல்ல தயங்குகிறார்கள். ஈரல், இதயம் பாதிக்கப்பட்டால் மருத்துவம் செய்வது போல்த்தான் மூளைக்கும் மருத்துவம் என்பதை நாம் உணர்வதில்லை. மூளையில் இயற்கையாக ஏற்படும் ரசாயன மாற்றங்களால் உண்டாகும் மனநலப் பிரச்னைக்கு ஏன் வெட்கித் குனிய வேண்டும்? சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயங்க வேண்டும்? இப்படித் தயங்கி சிகிச்சை எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டே இருந்தால், மனநோய் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஆரம்பகட்டத்திலேயே, மனநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடனேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், பிற்காலத்தில் ஏற்படப் போகும் பிரச்னைகளைப் பெருமளவுக்குத் தவிர்க்கலாம்.

சமகாலத்தில் மனதளவில் தைரியம் குறைந்த இளைஞர் தலைமுறை உருவாகி வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இப்போது அதிகரிக்கும் படித்த இளைஞர் தற்கொலைகளும் இதற்கு வலுச்சேர்க்கின்றன. மன நோய்க்கான அறிகுறிகள் உங்கள் நண்பர்களுக்கோ, உங்களுக்கோ தென்படுமானால் தைரியமாக அதற்கான சிகிச்சைகளை பூரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இந்த சமூகத்தின் மனநோய் மீதான பார்வை மாற வேண்டும்.

“திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்”

Related posts

விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்

Thumi202121

யாழில் நெசவுத் தொழிற்சாலை

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -05

Thumi202121

Leave a Comment