இதழ் 62

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது உள நன்நிலை

உளநன்நிலை என்பது:
உள நன்நிலை என்பது ஒவ்வொரு தனியனதும் உள ஆரோக்கியத்தைக் குறிக்கின்றது. சாதாரணமாக ஒவ்வொரு தனியனும் தன் வாழ்நாட்களை சீரான முறையில் பேணிக் கொள்வதற்கு உடல் ஆரோக்கியத்தோடு உள ஆரோக்கியமும் இன்றியமையாததாகும். இதன்படி, கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் திறம்பட நிகழ்வதற்கு ஆசிரியர்களதும் மாணவர்களதும் உள நன்நிலை மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது.

உள நன்நிலை வரைவிலக்கணங்கள்:
 “உள நன்நிலை என்பது தம் வாழ்வில் ஏற்படும் அழுத்தங்களை அவர்களது சூழலுக்கு ஏற்ப எதிர்கொள்ளும் தன்மையாகும்”.(WHO)
 “மக்கள் நேர்மறை உணர்வுகள் மற்றும் மகிழ்வான உணர்வுளை அனுபவிப்பதனால் தோற்றம் பெறுவதே உள நன்நிலை ஆகும்”. (Diener , 2000)
 “தன்னாட்சி, சூழல் தேர்ச்சி, தனிப்பட்ட வளர்ச்சி, பிறருடனான நேர்மறை உணர்வுகள், வாழ்க்கை நோக்கம், மகிழ்வான உணர்வு ஆகிய ஆறு பரிமாணங்களால் ஆனதே உள நன்நிலை ஆகும்”. (Carol Ruff )

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது உள நன்நிலையை மேம்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்.
பொதுவாகவே ஒவ்வொரு தனியன்களும் நபருக்கு நபர் வேறுபட்ட நடத்தைகளை வெளிப்படுத்துவதை நாம் அவதானிக்கின்றோம். சிலர் நல்ல ஆரோக்கியமானவர்களாகவும் பலராலும் விரும்பப்படும் நபர்களாகவும் காணப்படுவர். இதற்கு பிரதான காரணம் அவர்களது உள நன்நிலையானது பிறருடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட நிலையில் காணப்படுகின்றமையே ஆகும். கீழ்க் குறிப்பிட்டுள்ள காரணிகள் மாணவர்களதும் ஆசிரியர்களதும் உள நன்நிலையை மேம்படுத்துவதில் பங்காற்றுகின்றன.


 பரம்பரைக் காரணிகள்: பரம்பரை அலகுகள் வழியாக உயிரியல் சார்ந்து கடத்தப்படும் நேர்நிலையான ஆளுமைப்பண்புகள், அழகான ஆரோக்கியமான உடற்கட்டமைப்பு, பிறப்பிற்கு முன்னரான சீரான போசாக்கு முதலியவற்றை குறிப்பிடலாம்.

 சிக்கல்களற்ற குடும்ப உறவுகள்: பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான சிறந்த தொடர்பாடல், புரிந்துணர்வு, அன்பு, ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல், ஒத்துணர்வு முதலிய பண்புகள் காணப்படுகின்ற குடும்ப பின்னணியானது மாணவர்களதும் ஆசிரியர்களதும் உள நன்நிலையை மேம்படுத்துவதில் பங்காற்றுகின்றன.

 சிறந்த கல்விச் சூழல்: மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாதகமானதும் பாதுகாப்பானதும் விருப்பத்துக்குரியதுமான மனரம்மியமான முன்பள்ளிச் சூழல், பாடசாலைச் சூழல், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் வகுப்பறைச் சூழல் ஆகியன அவர்களது உள நன்நிலையின் மேம்பாட்டிற்கு உதவுகின்றன.

 தேவைகளின் நிறைவு: அடிப்படைத் தேவைகளாகிய உணவு, நீர், வீடு, உடை முதலியனவும் அன்பு, பாதுகாப்பு, கணிப்பு [பிறரது கணிப்பும் சுய கணிப்பும்], சுகாதாரம் மற்றும் கற்றல் வாய்ப்புகள் முதலியன நிறைவேற்றப்படுகின்ற மாணவர்களும் ஆசிரியர்களும் எந்தவித சிக்கல்களும் இல்லாத காரணத்தால் சிறந்த உள நன்நிலையுடன் காணப்படுவர்.

இவற்றோடு சிறந்த உடல் ஆரோக்கியம், நல்ல நண்பர்களும் சக ஊழியர்களும், பொருளாதார வசதி, ஆன்மீக வழிகாட்டல், சமுதாயத்தில் நிலவும் அமைதியும் சமாதானமும், சமூக அமைப்புக்களது உதவிகள் முதலிய காரணிகளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது உள நன்நிலையை மேம்படுத்துவதில் பங்காற்றுகின்றன.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது உள நன்நிலையை பாதிப்பதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்.


மாணவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது பிரதான செயற்பாடு கற்பதாகும். கற்றல் செயற்பாட்டில் இடர்கள் ஏற்படுகின்ற போது அதன்வழியாக மாணவர்களது உள நன்நிலை பாதிக்கப்படுகின்றது. அத்தகைய காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன.


 பரம்பரைக் காரணிகள்: இதனுள் பரம்பரை வழியாக கடத்தப்படும் நோய் நிலைமைகள், உடற்குறைபாடுகள் மற்றும் ஆளுமைக் கோளாறுகள் முதலியவற்றை குறிப்பிடலாம்.

 குடும்பக் காரணிகள்: குடும்ப வறுமை, பெற்றோரது அரவணைப்பின்மை, குடும்பத்தில் நிலவும் தீவிர ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் குழந்தைகளை மிகவும் செல்லமாக வளர்த்தல் முதலியவற்றை குறிப்பிடலாம்.

 பாடசாலைச் சூழல்: பாடசாலைகளில் கட்டுப்பாடின்மை, மாணவர்களின் திறமைகளுக்கு அப்பாற்ப்பட்ட வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்தல், பாடசாலையின் பௌதீகச் சூழலின் குறைபாடுகள். உ+ ம் : தூய்மையான மலசலகூடம் இன்மை, பாதுகாப்பான குடிநீர் வசதி இன்மை.

 ஆசிரியர்களது தவறான நடத்தைகள்: ஆசிரியர்கள் மாணவர்களது குடும்ப பின்னணியை அறியாதிருத்தல், பின்தங்கிய சூழலில் இருந்து வரும் மாணவர்களை கவனத்தில் எடுக்காமை முதலியன மாணவர்களது உள நலனைப் பாதிக்கின்றன.

 தேவைகள் நிறைவேற்றப்படாமை: மாணவர்களது அடிப்படத் தேவைகளாகிய பசி, தாகம், தூக்கம், ஓய்வு, பாதுகாப்பு, அன்புத் தேவை முதலியன நிறைவேற்றப்படாத போது அவர்களது உள நன்நிலை பாதிக்கப்படுகின்றது.


இவற்றோடு மாணவர்கள் மத்தியில் காணப்படும் மூடப்பழக்கவழக்கங்கள், நவீன கற்றல் உபகரணங்களைப் பற்றிய அறிவின்மை, கற்க ஆயத்தப்படச் சிரமப்படல், பயிற்சியின்மை, தன்னம்பிக்கையின்மை, இலக்கு நிர்ணயிக்காமை, ஆர்வமின்மை மற்றும் உடல்நலக்குறைவு முதலியவற்றையும் குறிப்பிடலாம்.

மாணவர்களைப் போலவே ஆசிரியர்களது உளநன்நிலையும் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.
 குடும்பக் காரணிகள்: குடும்பத்தில் காணப்படும் அதிகரித்த வேலைகள், குடும்பத்தில் நிலவும் வன்முறைகள்.

 பால்நிலை சார் காரணிகள்: முன்பள்ளிகளிலும் ஆசிரிய தொழில் ஆட்சேர்ப்பிலும் பெரும்பாண்மையாக பெண் ஆசிரியர்களே உள்வாங்கப்படல், சேவை மூப்பு அடிப்படையில் பெண் ஆசிரியர்களுக்கு பொறுப்பு வழங்கப்படும் போது ஆண் ஆசிரியர்கள் ஒத்துழையாத சந்தர்ப்பங்கள்.

 அதிகரித்த மாணவர் எண்ணிக்கை: இதனால் தொடர் மதிப்பீட்டை வழங்குவதில் சிரமப்படல், பிறழ்வான நடத்தைகளுடைய மாணவர்களைக் கையாள்வதில் போதிய ஆதரவு கிடைக்காமை முதலிய சிக்கல்களால் ஆசிரியர்களது உள நன்நிலை பாதிக்கப்படுகின்றது.

 வேலைச்சூழல்: வகுப்புக்களில் போதியளவு காற்றோட்டமின்மை, வெளிச்சமின்மை, இடவசதியின்மை, ஆளணி வசதிகளின் பற்றாக்குறை மற்றும் துணைச் சேவைகளின் போதாமை.

இவை தவிர ஆளிடைத் தொடர்பாடல் சிரமங்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தினரிடமிருந்து வரும் குழப்பத்தை ஏற்படுத்தும் கோரிக்கைகள், வேலைப்பளு, இடமாற்றம், குறைந்த ஊதியமும் தாழ்ந்த சமுதாய மதிப்பும், பிறபணிச்சுமைகள், உயர் அலுவலகர்களின் தேவையற்ற குறுக்கீடு மற்றும் பொருத்தமற்ற கலைத்திட்டம் முதலியவற்றையும் குறிப்பிடலாம்.

ஆசிரியர்களதும் மாணவர்களதும் உள நன்நிலை பாதிக்கப்படுவதனால் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பின்னடைவு ஏற்படுகின்றது. அத்தோடு எதிர்காலத்தில் சிறந்த நற் பிரஜைகளை உருவாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படுகின்றது. குறித்த பாதிப்புக்கள் இனங்காணப்பட்டு தீர்க்கப்படாதவிடத்து குறித்த தனியனில் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதோடு சுற்றி இருப்பவர்களையும் ஒட்டுமொத்த பாடசாலைச் சூழலையும் பாதிக்கும். எனவே, இத்தகைய காரணிகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Related posts

நான்காம் கைத்தொழில் புரட்சிக்குள் நுழைந்துவிட்டதா உலகம்?

Thumi202121

கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2023 – 2

Thumi202121

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா!

Thumi202121

2 comments

Leave a Comment