இதழ் 62

சித்திராங்கதா -57

ஓலையும் பெட்டியும்

‘மகிழாந்தகா.. விரைந்து சொல்.. தஞ்சை வீரர் நலமுடன் உள்ளார் என்ற நற்செய்தியை அவையோர் கேட்க உரத்துச் சொல்…’

‘வேந்தே.. நடந்த உண்மை கூறுகிறேன்.. பொறுமை பேணுங்கள்..’

அவையோர் அனைவரும் மகிழாந்தகன் சொற்களுக்காய் விழிமூடாது காத்திருந்தனர். எல்லோரையும் சுற்றிப்பார்த்தவாறே மகிழாந்தகன் பேசத் தொடங்கினான்.

‘அரசே.. நம் சுதேசிகள் வருணகுலத்தானை மறைந்திருந்து தாக்க ஒரு திட்டம் வகுத்திருந்தனர். ஒலிவேராவின் பறங்கிப் படை தஞ்சை வீரரின் வீரத்தில் கதிகலங்கி நின்ற வேளையிலே நம்படையில் சில சுதேசிகளால் இப்படியொரு துரோகம் வருணகுலத்தானிற்கு எதிராக இழைக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் நல்லை வீரமாகாளி எம்முடன் உள்ளாள் என்பதை மீண்டும் உணர்த்திவிட்டாள்.

மறைமுகமாக தாக்க வந்தவனை தடுத்து நிறுத்தி வருணகுலத்தானை காத்தருளியது வேறுயாருமில்லை அரசே. மிக்கபிள்ளை ஆராச்சிதான்.. ஆம் அரசே… யார்மீது ஐயங் கொண்டிருந்தோமோ அந்த மிக்கபிள்ளை ஆராச்சிதான் அவ்விடம் தக்க செயல் ஆற்றி தஞ்சைவீரரை எந்த ஆபத்தும் நெருங்காமல் காத்துள்ளான். வேல் கொண்டு தாக்க வந்த சுதேச வீரனை தன் கரத்தினாலே தடுத்து கணத்திலேயே அவன் உயிரை பறித்துள்ளான் மிக்கபிள்ளை’

நல்லை அரசவையில் அந்தச் செய்தியின் எதிரொலிப்பு அங்கு கூடியிருந்த அத்தனை பேரின் உள்ளத்தையும் நிம்மதியில் நிரப்பியது.

‘அன்னை வீரமாகாளியே… உன் மக்களை நீ கைவிடப் போவதில்லை என்பதை நிரூபித்து விட்டாய் தாயே… தஞ்சைவீரர் காக்கப்பட்டார் என்பது எமக்கு வெறுஞ் செய்தியல்ல. இந்த நல்லைமண்ணின் பிரார்த்தனையை நீ நிறைவேற்றிவிட்ட சாட்சியாகும் தாயே… அவையோரே… தஞ்சை வீரரிற்கு எதுவும் ஆகவில்லை… அவர் நலமுடன் உள்ளார். ஆம்… நலமுடன் உள்ளார்’ சங்கிலிய மகாராஜா களிப்பு மிகுதியில் அவையோரை நோக்கி உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார்.

அரசி மஞ்சரிதேவி, மாருதவல்லி தொட்டு அவையிலிருந்த எல்லோரும் கைகூப்பி வீரமாகாளி தேவிக்கு மனதால் நன்றி சொல்லி நின்றனர். தரையில் விழுந்து கிடந்த சித்திராங்கதாவில் மட்டும் அந்தச் செய்தி எந்த அசைவையும் உண்டாக்க வில்லை. அவள் தலை குனிந்தே இருந்தது.

‘அப்படியாயின்.. களத்தில் தஞ்சைவீரர் இல்லாமல் போனது ஏன் சேனாதிபதி?’ இன்னும் நம்ப மறுக்கும் தொனியில் கேட்டார் இராஜமந்திரியார்.

‘ஆம் .. நேற்றுவரை களத்தில் தஞ்சைவீரர் இருக்கவில்லைதான். மறைமுகமாக தஞ்சைவீரர் தாக்கப்பட்டு இறந்துவிட்டதாய் பரவிய செய்தி உண்மை என்றே பறங்கியரும் நம்பத் தொடங்கிவிட்டனர். அதையே சாதகமாக்கி தலைமறைவாகி வியூகம் வகுத்தார் தஞ்சை வீரர்.

ஆயுதபலம் கூடிய எதிரியை குறைந்த படையோடு திடீரெனத் தாக்கும் கரந்தடித்தாக்குதலை எம்மண்ணில் தஞ்சைவீரர் தொடக்கிவைத்துள்ளார்.

இன்று அவர் திடீரென களம்புகுந்து நிகழ்த்திய தாக்குதல் பறங்கியர் கண்களை நிலைகுலையச் செய்து விட்டது. சற்றும் எதிர்பாராத தாக்குதலால் பறங்கிப்படை நிதானம் தவறியது. நமக்கான வெற்றியை மேலும் உறுதிசெய்யவே தஞ்சைவீரர் தகவல் ஏதும் கூறாது தலைமறைவானதாக தங்களிடம் உடன் தெரிவிக்கச் சொன்னார். அதற்காகவே களத்தில் என்னை நிற்க அனுமதியாது உடன் கோட்டைக்கு விரையுமாறு அனுப்பி வைத்தார் தஞ்சைவீரர். அவரை நேரில் கண்டே உண்மை அறிந்து வருகிறேன். இனி தஞ்சை வீரர் நலன் குறித்து எந்த ஐயமும் வேண்டியதில்லை இராஜமந்திரியாரே..

‘மகிழ்ந்தோம் சேனாதிபதி .. தஞ்சைவீரர் மீது கொண்டிருந்த நம்பிக்கை விஸ்வரூபமெடுத்து விரிகிறது இப்போது..
நல்லைதேசம் எக்காலத்திலோ செய்த புண்ணியம் தான் இன்று இப்படியொரு வீரர் நம்முடன் துணையுள்ளார். எல்லாவற்றையும் அந்த வீரமாகாளி நன்றாகவே நடத்துகிறாள்… வெற்றி நமக்கே…’
இராஜமந்திரியார் கோசம் அரண்மனை சுவர்களிலெல்லாம் ஆவேசமாக பட்டுத் தெறித்தது.

மகிழாந்தகன் அரசரை நோக்கி ஏதோ ஒரு விடயம் சொல்ல எத்தணித்தான்.
‘அரசே..நாம் எல்லோரும் செய்த புண்ணியம் தஞ்சைவீரர் வந்து எம்மைக் காப்பது என்றால் அத்தகைய வீரருக்கு நாம் இழைக்கும் பாவத்தை பற்றி நிச்சயம் சிந்திக்க வேண்டுமல்லவா வேந்தே..’

‘என்ன சொல்கிறாய் மகிழாந்தகா… புரியவில்லை’

‘இதோ.. சிறை விலங்குகள் பூட்டப்பட்டு இந்தப் பெருஞ்சபையில் கைதியாய் கிடக்கின்றாளே தஞ்சைவீரரது ஆசைநாயகி.. இவளைப்பற்றித் தான் கூறுகிறேன் வேந்தே.. இதுவா தஞ்சை வீரருக்கு நாம் செய்யும் கைம்மாறு.. என் பேச்சில் தவறிருந்தால் மன்னியுங்கள் வேந்தே.. ஆனால் இதை கூறாமல் என்னால் இருக்கமுடியவில்லை. எதுவும் கூறாமல் இருப்பதே தவறென்று உணர்கிறேன் இத்தருணம்’.

மன்னர் பேசவில்லை.. பதிலாக இராஜமந்திரியார் பேசினார்.
‘மகிழாந்தகா.. இவளை சாதரண பெண் என்று நினைந்து நீ வருந்திகிறாய். ஆனால் இவள் இட்ட ஆரம்பமே எல்லாவற்றையும் இன்று ஆபத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. தஞ்சைவீரருக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் அது இவளால் மட்டுமே என்பதையறிந்தும் இவளை தண்டிக்காமல் விடுவது எப்படி சேனாதிபதி?’

‘இராஜமந்திரியாரே.. தங்களைப்போல் அறிவாற்றல் எனக்கில்லை. ஆனால் தஞ்சைவீரரின் உள்ளத்தை பற்றி மட்டும் தாங்கள் அறியவில்லையா? மிக்கபிள்ளை ஆராச்சி மீது நமெல்லோரும் நம்பிக்கையற்று இருக்கையில் தஞ்சைவீரர் தானே அவன் வீரத்தையும் நோக்கத்தையும் முழுதாய் நம்பினார். இன்று நிகழ்ந்ததை பார்த்தீர்களா? மிக்கபிள்ளையினால் தானே நம் தஞ்சைவீரர் காக்கப்பட்டுள்ளார். நம் தேசத்திற்கு வர இருந்த பெருங்களங்கம் அவனால் தானே அகன்றிருக்கிறது. தஞ்சைவீரரின் மதி நுட்பத்திற்கு இதைவிடவா சான்று வேண்டும்? தஞ்சைவீரர் சித்திராங்கதாவின் மாயவலையிலோ சதிவேலையிலோ விழுந்து கிடக்கும் சாதாரணர் அல்ல. அவர் சித்திராங்கதாவை ஆதர்சமாக நேசிக்கின்ற பெருவீரர். அவர் எந்த மடத்தனமும் அப்படி ஆற்றமாட்டார். தாங்கள் இங்ஙனம் ஆற்றுவதை அறிந்தால்தான் அவர்மனம் வேதனை கொள்ளும். அரசே… தங்களை வேதனைப்படுத்த இதனை அவையில் நான் கூறவில்லை. இவ்விடம் இதைக் கூறுவதற்கு காரணம் என்னிடம் இருக்கிறது. தஞ்சைவீரர் என்னிடம் சொன்னவைகளை கொண்டே கூறுகிறேன். எந்தக்குற்றமும் செய்யாதவள் இந்த ஆடலரசி. இவளை இங்ஙனம் நாம் துன்புறுத்துவது தஞ்சைவீரருக்கு நாம் செய்கிற அவமரியாதை போலாகும். ஆம் வேந்தே… அதை நிரூபிக்க தஞ்சைவீரர் தங்களிடம் இரகசியாய் வழங்குமாறு என்னிடம் தந்த ஓலையை இந்த அவையிலேயே உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்த அவை உண்மையறிய வேண்டும். மேலும் இதோ இந்தப் பெட்டியை சித்திராங்கதாவிற்காய் வருணகுலத்தார் வழங்கினார். ஆடலரசி அவையில் இருப்பது பற்றி தஞ்சைவீரர் அறிந்திருக்க மாட்டார்.’


அந்தப்பெட்டியை மகிழாந்தகனுடன் வந்த தஞ்சைப்படைவீரன் ஒருவன் சித்திராங்கதாவின் அருகில் கொண்டு போய் வைத்தான்.

ஓலையை வாசிக்கும்படி ஆணையிட்டார் அரசர்.

ஓலையை திறந்து வாசிக்க ஆரம்பித்தான் அந்த வீரன்.

தொடரும்….

Related posts

கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2023 – 2

Thumi202121

யாழில் ஒட்டப்பட்ட விசித்திரமான சுவரொட்டி.

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -06

Thumi202121

Leave a Comment