இதழ் 62

பழந்தமிழரின் அடையாளம் வேல்!

தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே போர் முறைகளில் சிறப்புக் கொண்டிருந்தனர் என்பதற்கு சான்றாக தொல்காப்பியத்தில் பண்டையப் போர் பற்றிப் பலக் கருத்துக்கள் காணப்படுகின்றன. நிலப்பகுதிக்கு ஏற்பவே போர்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை ‘புறத்திணையியல்’ வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், மனிதனின் நாகரிக வளர்ச்சியின் அடிப்படையில் போர்களுக்கானக் காரணமும் வளர்ந்து வந்திருக்கிறது.

உதாரணமாக, ஆதியில் வாழ்ந்த குறிஞ்சி மக்களுக்கு அவர்கள் பழக்கப்படுத்தியக் கால்நடைகளே முக்கியம். எனவே, குறிஞ்சியில் ஆநிரைகளை கவர்தல், அதனை மீட்டலுக்குமான போர்கள் நடைபெற்றுள்ளன. பின்னர், குழுவாக வாழத் தொடங்கிய வளர்ச்சி நிலையான முல்லையில், தம்மை மதியாத வேந்தனை எதிர்த்தும், காட்டு வளம் மீது கொண்ட ஆசையின் காரணமாகவும் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. வேளாண்மை நாகரிகமும், ஊர்கள் கூடிய நாடு எனும் கலாச்சாரமும் வளர்ந்த மருத நிலப்பகுதியில் சொத்தாகக் கருதப்பட்ட எயிலை முற்றுகையிட்டு நாட்டைக் கைப்பற்றுதலும், எயிலைக் காத்துத் தம் நாட்டைப் பாதுகாத்தலுக்குமான போர்கள் நடத்தப்பட்ட வரலாற்றை அறிய முடிகிறது. ஒரு தேசமென உருவான பின்னர், நாட்டின் வலிமையைப் பறை சாற்றும் அம்சமாக வர்த்தகம் பார்க்கப்பட்டது. எனவே, உற்பத்தி பெருக்கம், கடல் வாணிபம் மற்றும் பண்டமாற்று ஆகியனவே யார் அப்பகுதியில் ஆள்வது என்பதை நிர்ணயித்தன. எனவே, நெய்தல் நிலத்தில் வலிமை குறித்தப் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. சேர, சோழ மற்றும் பாண்டியர் காலத்தில் இவ்வகைப் போர்கள் குறித்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவ்வாறு, நான்கு வகைப் போர்கள் நிகழ்ந்ததாகத் தொல்காப்பியத்தின் புறத்திணையியலில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சிகள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், மெய்கீர்த்திகள், நாணயங்கள், பயணக் குறிப்புகள், ஆவணங்கள் எனப் பலவற்றிலும் போர் முறைகளைப் பற்றியத் தகவல்களைக் காண முடிகிறது. மேலும், சங்க இலக்கியங்களில் எண்ணற்றப் பாடல்கள் போர் நிகழ்வுகளைக் குறித்து பாடப் பட்டுள்ளன.

தமிழரின் அடிப்படை முக்கருவிகளாக வில், வேல், அம்பு ஆகியன பண்டைக் காலம் தொட்டே அமைந்திருந்தன. அவற்றைத் தயாரிக்கவும், சரி செய்து கொள்ளவும் பல தயாரிப்பு நிலையங்களைத் தமிழர் வைத்திருந்தனர். திறனொழிந்த படைக்கருவிகளை அப்படியே விட்டுவிடாது மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தமிழர் கற்றிருந்தனர். முற்றிலும் பயனாகாதப் படைக்கருவிகளைப் படைவீடுகள் அமைக்கப் பயன்படுத்திக் கொண்டனர். இது போன்றப் பலச் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

“வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும்
தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய”

என்றத் தொல்காப்பிய பாடல், கரிப்படை (யானைப்படை), பரிப்படை (குதிரைப்படை), தேர்ப்படை, காலாட்படை என்ற நான்கு வகை நிலப்படைகளை எடுத்துக் கூறுகிறது. வில், அம்பு, அம்பறாத்தூணி என்ற மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாகத் தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர். “கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்” என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒளவையார் பாடிய பாடல் ஒன்று, இந்த மூன்றுக் கருவிகளையும் ஒருங்காகக் காட்டுகிறது.

“மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல்
செறிப்பு இல் நின் வேல் கண்டவர்
தோல் கழியொடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடுப் பரந்த
நின் மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது”

என்றப் புறநானூற்றுப் பாடல் முக்கருவிகளும் ஓர் அரசனிடத்தில் இருந்தமையை விளக்குகிறது. இதன் மூலம், தமிழர்கள் போர் கலையின் உச்சத்தை அடைந்ததை அறிய முடிகிறது.
மேலும், வில், வாள், வேல் ஆகியன முதன்மைப் போர் கருவிகளாக இருந்துள்ளன. அவற்றோடு சேர்த்து இன்னும் பலவகைக் கருவிகள் இருந்துள்ளதை இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. அவற்றுள் சில: வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் ஆகியன. போர்க் கருவிகளே இத்தனை இருந்திருந்தால், போர்கள் எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்பதை கற்பனைக் கூட செய்ய இயலாது. பாகுபலியின் பிரமாண்டங்களுக்கும் அப்பால் எமது வாழ்வியல் இருந்திருக்கிறது என்பதே உண்மை.

பல படை கருவிகள் இருந்தாலும் வேல்ப்படைக்கு உள்ள சிறப்புகள் வேறு எந்தப் படைக் கருவிக்கும் அன்று இருந்திருக்கவில்லை என்பதை நாம் இங்கு அறுதியிட்டுக் கூறலாம். தமிழ் மன்னர்களின் தனித்த ஆயுதம் வேல் ஆகும். வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ‘வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது! ஆகவே, வேல் என்றால் வெற்றி!
வேலும் ஈட்டியும் வெவ்வேறு ஆயுதங்கள். வேலின் முகம் அகன்று விரிந்திருக்கும். ஈட்டியின் முகமோ குறுகி இருக்கும். வேல் ஆயுதத்தை மன்னர்களும் படைத்தலைவர்களுமே ஏந்துவார்கள். ஆனால் ஈட்டியை அனைத்துப் போர் வீரர்களும் வைத்திருப்பர். பகைவனில் இருக்கும் சிறந்த போர் வீரனுக்கே வேலை எறிவார். எல்லோருக்கும் இந்த வேலை எறிவது இல்லை என்பது இங்கு ஒரு சிறப்பு அம்சமாக காணப்படுகின்றது.

கருங்கடை, மரக்காழ், பலகை, திண்பிணி, சுரை, வடிமணி, இலை, கதுவாய், நுதி, நீறு, புலியுறை, தாலி ஆகிய இந்தப் பன்னிரெண்டு சொற்களும் வேலின் உறுப்புகளைக் குறிப்பதும், அது தொடர்புடைய அடையாளங்களைக் குறிப்பதும் ஆகும்.
ஆளுயரத்தில் வீரர்கள் பயன்படுத்திய வேல் உறுதியான மரக் கம்பினையே கொண்டுள்ளது. அதன் கீழ்ப் பகுதியில் இரும்பினால் ஆன பூண் இருக்கும். அது கருங்கடை எனப்படுகிறது. ஒவ்வொரு வீரனின் உயரத்திற்கும் ஏற்ப அவனது மேற்கழுத்து வரையிலான கம்பின் உச்சியில் மரம், செம்பு, பித்தளை, இரும்பு அல்லது தங்கத்தினால் ஆன சதுரப்பலகை பொருத்தப்பட்டிருக்கும். அந்தப் பலகைச் சதுரத்தின் அகலம் ஒரு சாண். சதுரப் பலகையின் மேற்புற நடுவில் ஒரு துளை இடப்பட்டு அதில் சுரை இடப்பட்டிருக்கும். பலகையின் கீழ்ப்புறம் தாமரையின் மடல் போன்றும் சிறிய கட்டுப்பகுதியில் குடம் போன்றும் அக்குடத்தின் கீழ் தாழி என்ற பகுதியும் தூண்களில் உள்ளது போன்று கடைசல் செய்து வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். அந்தத் தொங்கல் ஒரு குழாய் போல வார்க்கப்பட்டு அதில்தான் வேல்கம்பின் நுனிப்பகுதி நன்கு செருகிப் பொருத்தப்பட்டிருக்கும். அது திண்பிணி எனப்படுகிறது.

ஒரு வீரன் ஒரே கம்பில் வேறு வேறு வடிவம் மற்றும் எடையுள்ள பலகைகளைத் தேவைக் கேற்ப மாற்றி மாற்றிப் பொருத்திப் பயன்படுத்தியிருக்கிறான் என்று தெரிகிறது. ஆனால் பலகையின் சதுர வடிவத்தை மட்டும் என்றுமே மாற்றியது இல்லை. பலகைகளின் நான்கு மூலைகளிலும் சிறிய மணிகள் தொங்கவிடப் பட்டிருந்தன. அவை வடிமணி என அழைக்கப் பெற்றன. பலகையானது மடை என்ற சொல்லாலும் குறிப்பிடப்படுகிறது. வேலின் இலைப் பகுதியின் கூர்மையான இருபகுதிகளும் கதுவாய் என்று அழைக்கப்படுகின்றன. அதன் மேற்புற நுனியும் அதன் கூரிய வடிவமும் நகத்தின் கூர்மை போன்று உள்ளமையால் நுதி என்று அழைக்கப்படுகிறது.

வேல் ஒளி பொருந்தியதாகவும் இருபுறமும் திருநீறு பூசப்பட்டும், வேப்பிலை போன்ற அடையாளங்கள் பொருந்தியும் இருந்ததை அறிய முடிகிறது. வேலின் பலகையின் கீழான கழுத்துப் பகுதியில் தாலிக் கட்டாக ஒரு கயிறு கட்டப் பெற்று, அந்தக் கயிற்றின் எச்சம் கொசுவமாக மடிக்கப்பட்டு வீரனின் இடுப்பில் செருகப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. வேலை எடுத்தெறிந்தவுடன் மீண்டும் எடுத்துப் பயன்படுத்த அக்கயிறு பயன்பட்டிருக்கும் என்று தெரிகிறது. கடலிலும், காட்டிலும், போரிலும் ஒற்றை வேலைப் பயன்படுத்தும் வீரனுக்குக் கயிறும் கட்டாயம் தேவைப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

ஒரு ஆயுதமாக எம் மத்தியில் வேல் வழக்கொழிந்து போனாலும் தமிழரின் வழிபாட்டியலோடு இன்றுவரை தொடர்ந்து வேல் வந்திருக்கிறது. நன்றி மறவாமல் எமக்கு உதவும் எல்லாவற்றையும் வழிபடும் முறையைக் கொண்டவர்கள் தமிழர்கள். உலகைக் காட்டும் சூரியன், காற்றையும் மழையையும் தரும் மரங்கள், உழவுக்கு உதவும் மாடுகள் என்று சகலவற்றையும் வழிபட்டவர்கள் பல வழிகளிலும் தமக்கு உதவும் ஆயுதங்களையும் வழிபட்டார்கள். இதன் விளைவாக இன்று யுத்த களங்களில் வேலைக் காணாவிட்டாலும் ஆலயத் தலங்களில் வேலைக் காண முடிகிறது.

தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகனின் கையில் வேல் ஆயுதமாக இருப்பதும், வேலை முருகனின் அடையாளமாகவே வழிபடும் வழக்கம் தமிழருக்கு இருப்பதும் வேலுக்கும் தமிழருக்குமான நெருக்கத்திற்கான நடைமுறை ஆதாரங்கள். முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

அந்த வகையில் ஈழத்தின் முக்கிய ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும், தொண்டமனாற்றின் கரையில் உள்ள செல்வச்சந்நிதியான் திருத்தலத்திலும் கருவரையில் வேல் தான் மூலமூர்த்தியாக வழிபடப்படுகிறது. அலங்காரக் கந்தனாகவும், அழகுக் கந்தனாகவும் போற்றப்படும் நல்லூர்க் கந்தன் வேல் வடிவமாக திருவீதிவலம் வரும் அழகை அட்டையில் பாருங்கள். பொன் ஆபரணங்களாலும், மலர் மாலைகளாலும் எமது பழந்தமிழர் பண்பாட்டு மரபு அலங்கரிக்கப்பட்டு வேலாக கற்பூர ஜோதியோடு சங்கமிக்கும் காட்சி உங்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

இந்த வேல் தமிழைக் காக்கும்! இந்த வேல் தமிழரைக் காக்கும்! இந்த வேல் தமிழ் வரலாற்றைக் காக்கும்! இந்த வேல் தமிழ் மரபைக் காக்கும்! ஆயுதங்கள் அழிப்பதற்கல்ல! காவல் செய்வதற்கு என்பதை சொல்லி நிற்கிறது நல்லூரான் வேல்! இனியொருமுறை வேலை வணங்கும் போது ஆண்டவனாக மட்டும் பார்க்காமல் பழந்தமிழரின் அடையாளமாகவும் கருதி வணங்குங்கள். இதனை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

“வேல் உண்டு வினையில்லை”

Related posts

விழித்தவரெல்லாம் பிழைத்துக்கொள்வர்

Thumi202121

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா!

Thumi202121

கடுமையான தண்டனைகள் தேவை

Thumi202121

Leave a Comment