இதழ் 62

வலி சுமந்த பொழுது…!

அன்று 2019 டிசம்பர் இருபத்தைந்து. மாலை ஆறு மணி. சூரியன் மறைந்துகொண்டிருந்தான். பறவைகள் இரைதேடி முடித்து இருப்பிடம் நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. எனக்கு இரவு ஏழு மணிக்குப் பாடசாலையில் மேலதிக கணித வகுப்பு இருந்தது. புத்தகப் பையை எடுத்துத் தோளில் போட்டபடி எனது சைக்கிளை எடுத்து மெல்ல மெல்லப் பாடசாலையை நோக்கி மிதிக்கத் தொடங்கினேன். சற்று நேரத்தில் பாடசாலையை அடைந்து விட்டேன். இருட்டிவிட்டாலும் அங்குள்ள மின்குமிழ் வெளிச்சத்தில் என் நண்பர்கள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பது கண்களுக்குத் தெரிந்தது. நான் வருவதை என் நண்பன் ரவியும் கண்டுவிட்டான்.

‘டேய்… தாரு…. வாவன்டா விளையாடுவம்…. வா… வா…”

‘இல்லடா நீங்கள் விளையாடுங்கோடா… நான் கணிதப்பாட வீட்டு வேலை செய்யாம வந்திட்டன்… அதுதான் செய்யப் போறன்டா…”

‘ஐயோ.. ஓமடா.. நானும்தான் செய்யோணும்… பொறு பொறு நானும் வாறன்.”

என்றபடி அவனும் என் பின்னால் ஓடி வந்தான். இருவரும் வகுப்பறைக்குச் சென்று கணிதபாட வீட்டு வேலைகளைச் செய்துமுடித்தோம். செய்து முடித்ததும்தான் தாமதம் மீண்டும் ரவி விளையாடப் போய்விட்டான். நானும் அவன் பின்னால் சென்றேன். செல்வதற்கிடையில் கணித பாட ஆசிரியரின் வருகையைச் சொல்லும் விதமாக அவரின் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. உடனே அனைத்து நண்பர்களும் வகுப்பறைக்கு ஓடிச்சென்று தத்தம் இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். பின் ஒன்றும் நடக்காததுபோல் அமைதியாய் இருந்து, கொப்பிகளைத் தட்டத் தொடங்கினர். அந்த நேரத்தில் ஆசிரியரும் வகுப்புக்குள் வந்து சேர்ந்தார். அவர் வந்தவுடன் அனைவரும் எழுந்து அவருக்கு வணக்கம் கூறி அமர்ந்தோம். வந்தவர் ஏதோ நோய் பரவுவதாக முன்னால் இருந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். சீனாவிலிருந்து ஏதோ வைரஸ் நோய் பரவி வருவதாகக் கதைத்துக் கொண்டிருப்பது விளங்கியது.

‘டேய் தாரு… சீனாவில இருந்து ஏதோ வைரஸ் பரவுதாமடா… அவங்கள் ஏதோ பாம்பு, வெளவால்களத் திண்டதால அதிலயிருந்து பரவுதாம்…”

‘அது தொத்தினா என்ன செய்யுமாமடா?”

‘அது பரவினோடன மூச்சுத் திணறி ஆக்கள் செத்துப்போடுவினமாமடா…”

என்று அவன் எனக்குச் சொல்லி முடிப்பதற்குள், ஆசிரியர் மேலும் தொடர்ந்தார்.

‘பிள்ளைகள் இண்டைக்குச் செய்தி பாத்தனீங்களோ?”

‘ஓம் சேர்”
எனச் சிலர் குரல் கொடுத்தனர்.

‘சீனாவில ஏதோ வைரஸ் பரவீற்றுதாம்…. அது இப்ப எல்லா நாட்டுக்கும் பரவுதாம். அந்த வைரஸ் உயிரைக் கொல்லுற வைரஸாம். நீங்கள் இனிக் கவனமா இருக்கோணும். மாஸ்க் போடோனும். கிட்டக்கிட்ட யாரும் நிண்டு கதைக்கக் கூடா…? “

என்று ஆசிரியர் கூறும்போதே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. அன்று எல்லோருக்கும் படிப்பில் அக்கறை இருக்கவில்லை. அந்த வைரஸை நினைத்துப் பயந்துகொண்டே வகுப்பை முடித்தோம். வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது நேரம், இரவு ஒன்பதைத் தாண்டிக்கொண்டிருந்தது. இரவு நேர நிலா வெளிச்சம் எங்கும் பரவி பகலாகத் தெரிந்தது. வானத்தில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இராக்குருவிகள் பறந்து வட்ட மிட்டுக்கொண்டிருந்தன. நட்சத்திரங்களும் மின்னி மின்னி ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் பார்த்தபடியே அமைதியாக வீட்டை வந்தடைந்தேன். வந்தவுடனேயே வகுப்பில் நடந்த விடயங்களை அம்மாவிடம் கூறிவிட்டேன்.

‘ஓமடா… தம்பி… பெடியளோட திரியுறனி கவனமப்பு… நாளைல இருந்து மாஸ்க் போட்டிற்று வகுப்புக்களுக்குப் போ…”

என்று அம்மா சொல்வது எனக்கு மிகுந்த பயத்தினை மேலும் உண்டுபண்ணியது. அன்று இரவுச் சாப்பாட்டு நேரம். வீட்டில் எல்லோரும் இந்த வைரஸ் புதினத்தைப் பற்றித்தான் கதைத்துக் கொண்டிருந்தோம். சாப்பாடும் பயத்தில் அவ்வளவாக இறங்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இரவுப் படிப்பும் எனக்கு அவ்வளவாக ஓடவில்லை. படிக்கும் எண்ணமும் வரவில்லை. மனது முழுக்க அந்த வைரஸ் பற்றிய பீதியே ஓடிக்கொண்டிருந்தது.

இரவுத் தூக்கமும் எனக்கு வருவதாக இல்லை. வகுப்பில் ஆசிரியர் கதைத்தவற்றையே நினைத்துக் கற்பனை செய்துகொண்டிருந்தேன். திறந்து கிடந்த ஜன்னல் இடைவெளிகளினூடாக வந்த குளிர் காற்று, என்னைத் தழுவித் தூங்க வைக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. சில்லென்ற அத் தென்றலின் தாலாட்டில் மெய்மறந்து தூங்கிவிட்டேன். கண்விழித்த போது விடிந்து விட்டது. எழும்பிச் சென்று முற்றத்து மாமரத்து ஊஞ்சலில் இருந்தபடி வானத்தை நோட்டமிட்டுக்கொண்டு இருந்தேன்.

‘டேய்.. தம்பி…. கால்முகத்தக் கழுவீட்டு வாவன்.. தேத்தண்ணி ஆத்தீட்டன்…”

என்று அம்மாவின் குரல் ஒலித்தோய்ந்தது.

‘பொறனணே… கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போறன்…”

என்ற படி அப்படியே காலைக் காட்சிகளை இரசித்துவிட்டு, வீட்டுக் குந்தில் இருந்த பற்பொடியை எடுத்துப் பல்லை மினுக்கியபடி கிணற்றடிக்கு நகர்ந்தேன். அள்ளி வைக்கப்பட்டிருந்த இரண்டு வேசன் தண்ணியில் மேல் கழுவி விட்டு மறுபடியும் வீட்டுக்குத் திரும்பினேன்.

‘அப்பனே சிவ சிவா..”
என்றபடி சுவாமி அறையிலிருந்து திறுநீற்றை எடுத்து நெற்றியில் பூசியபடி குசினுக்குள் சென்று அம்மா தந்த தேத்தண்ணியையும், நாலைந்து பிஸ்கட்டுகளையும் வாங்கிக்கொண்டேன். அப்போதுதான் சூரியன் எப். எம்மில் காலைச் செய்தி ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது. கொரோனா என்ற பெருந்தொற்றின் விளைவுகளையும், மக்கள் பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டிய அவசியமும் அதில் வலியுறுத்தப் பட்டுக்கொண்டிருந்தன. அவற்றைக் கேட்டபடியே புத்தகப் பைக்குள் அன்றைய பாடப் புத்தகங்களையும், கொப்பிகளையும் அடைஞ்சுகொண்டு, உடுப்பையும் மாற்றிக்கொண்டு பள்ளிக் கூடத்திற்குப் போவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தேன்.

‘இந்தா தம்பீ… மாஸ்க் ஒண்டு வேண்டீட்டு… மிச்சத்திற்கு இண்டைக்குக் கன்ரீன்ல ஏதாச்சும் வாங்கிச் சாப்பிடன்.”

என்றபடி ஐம்பது ரூபாய்க் காசையும், தண்ணீர்ப் போத்தலையும் அம்மா என்னிடம் தந்து வழியனுப்பிவைத்தார்.

‘அம்மா… பாய்…”
‘ஓம் தம்பீ… கவனம் தம்பீ…”

என்று அம்மா கூறும் வார்த்தைகள் என் பாதுகாப்பை நினைவுபடுத்தியது. நான் விரைவாகச் சைக்கிளை மிதித்துச் சென்றாலும், பள்ளிக்கூடத்திற்குப் பிந்திச் சென்றதன் அறிகுறியாகக் காலைப் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. சைக்கிளைப் பார்க்கில் விட்டுவிட்டுப் பிந்திச் சென்றவர்கள் நின்ற வரிசையில் ஓடிச்சென்று நின்றுகொண்டேன். அப்போது தான் தேவாரமும் ஒலித்து ஓய்ந்திருந்தது.

‘பிள்ளைகளுக்கு வணக்கம்….”
‘வணக்கம் சேர்..”

‘பிள்ளைகள் எல்லோரும் கேள்விப் பட்டிருப்பியள்…. இப்ப புதிய வைரஸ் பரவி வருகுதாம்… எல்லோரும் கட்டாயம் மாஸ்க் போடவேணும்.. நெருக்கமா நிண்டு கதைக்கக்கூடாது… அதுக்கேற்றமாதி எல்லோரும் பாதுகாப்பா இருக்க வேணும்… எல்லாரும் அடிக்கடி கையைச் சோப்போட்டுக் கழுவ வேணும்…. கழுவீட்டுத்தான் வகுப்புக்க வரோணும்…..”

என்று அதிபர் கூறிய கருத்துக்கள் எல்லோருக்கும் பயத்தினை உண்டுபண்ணுவதாகவே இருந்தது. நேரம் கடந்து இடைவேளை மணியும் ஒலித்தது. நாங்கள் மைதானத்திற்குச் சென்றோம். இன்று என் நண்பன் ரவி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. அதனால் விசராக இருந்தது. மைதானத்தில் அண்ணாக்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

‘அண்ணா நானும் வரட்டோ விளையாட?…”

‘ஓமடா… வா… வா… விளையாடுவம்..”

என்று கேட்டபோது, ஒரு அண்ணா குரல் கொடுத்து என்னையும் இணைத்துக் கொண்டார். விளையாட்டில் நேரம் சென்றதே புரியவில்லை. இடைவேளை முடிந்ததற்காய் 5ஆம் பாட வெல் ஒலித்துக்கொண்டிருப்பது எங்கள் காதுகளில் விழுந்தது. விளையாடிய வேகத்தில் வகுப்பறைக்குள் ஓடிக் குந்திக்கொண்டோம். பாடங்கள் நடந்தன. நேரங்களும் கடந்தன. பாடசாலை விட்டு வீடு திரும்பினேன். பள்ளிக்கூட உடுப்புக்களைக் கழற்றி மாற்றிவிட்டுக், கால், முகம் கழுவி வந்து மத்தியானச் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன். சாப்பிட்ட களைப்பில் முற்றத்து மாமர ஊஞ்சலில் சரிந்தேன். நல்ல காற்று வீசி என்னைத் தாலாட்டிக்கொண்டிருந்தது.

‘தம்பீ… எழும்படா…”

‘கொஞ்ச நேரம் கிடக்கிறன் பொறணே… நல்ல நித்திர வருது…”

‘ஒரே உதுக்குள்ளதான் கிடக்கிறாய்… ஐஞ்சு மணி ஆகீட்டு.. எழும்பு..”

என்று அம்மா கூறியபோதுதான் நேரம் நித்திரையோடு கடந்தது புரிந்தது. எழும்பிச்சென்று முகத்தைக் கழுவிவிட்டு வந்து, அம்மா ஊத்தித் தந்த தேத்தண்ணியைக் குடித்துவிட்டு,

‘அம்மா… இண்டைக்கு ரவி பள்ளிக்கூடத்துக்கு வரேல்லயம்மா… என்னண்டொருக்கா எட்டிப் பாத்திட்டு வாறனணே….”
என்று அம்மாவிடம் கூறிவிட்டுச் சைக்கிளை எடுத்து மிதித்தபடி ரவியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். ரவியின் வீட்டுக்குச் செல்லும் வீதி அழகாகத்தான் காட்சி தந்தது. வீதியின் இருமருங்கும் மாஞ்சோலைகளும், தென்னந் தோப்புக்களும் நிறைந்திருந்தன.

‘ரவி… ரவி…. ரவி…”

‘ஓமடாப்பு… வாப்பு… உள்ள…”

ரவியின் அம்மாவின் குரலைக் கேட்டு சைக்கிளைத் தள்ளிச் சென்று தென்னை மரத்தில் சாத்திவிட்டு உள்ளே சென்றேன்.

‘ரவி நிக்கிறானா…? இண்டைக்குப் பள்ளிக்கூடமும் வரேல்;ல”

‘ஓமப்பு… இண்டைக்கு விதைப்புத்தானே அதுதான் தேப்பனோட வயலுக்குப் போய்வந்து உள்ளுக்க படுத்துக் கிடக்கிறான்.. கொஞ்சம் பொறு எழுப்பி விடுறன்.”

என்றபடி அவனுடைய அம்டமா வீட்டுக்குள் சென்று மறைந்தார். சிறிது நேரத்தில் ரவி கண்களைக் கசக்கியபடி வெளியில் வந்து சேர்ந்தான். வந்தவனை அழைத்துக்கொண்டு, பள்ளிக்கூட மைதானத்திற்குச் சென்று கிரிக்கெட் விளையாடிவிட்டு, வீடு திரும்புகையில் நேரம் மாலை 6.30ஐத் தாண்டிவிட்டது. இருள் கௌவியது. எல்லோரும் தங்கள் பணிகளை முடித்துவிட்டு வீடுகளை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டை அடைந்து கால், முகம் கழுவிவிட்டுப் பள்ளிக்கூட வீட்டுவேலைகளைச் செய்து முடித்தபின், இரவு உணவை உண்டுவிட்டுத் தூங்கிவிட்டேன்.

இப்படியே ஐந்தாறு நாட்கள் கழிந்தன. இப்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. பல பகுதிகள் முடக்கப்படுவதாகவும் செய்திகள் வந்தன. கொழும்பின் பல பகுதிகளில் லொக்டவுன் போட்டதாகவும், பல நூற்றுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகித் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், பலரின் இறந்த உடல்கள் உறவினர்களிடம் கொடுக்கப்படாமல் எரியூட்டப்படுவதாகவும் செய்திகள் பரவத் தொடங்கின. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் கொரோனாவின் பாதிப்புக்களே பேசப்பட்டன. அவற்றிலிருந்து தப்புவதற்காகப் பாதுகாப்புச் செயன்முறைகளையும் அரசு அறிவித்துக்கொண்டிருந்தது.

நாட்டில் முக்கியமான நகரப் பகுதிகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அத்தியவசியம் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்கு இடமளிக்கவில்லை. அதனால் எங்களுக்கும் பாடசாலை நிறுத்தப்பட்டது. வேறு மாவட்டங்களுக்குச் சென்று வந்தவர்களும் சந்தேகத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். எங்கள் ஊரிலும் இவ்வாறு பலர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர்.

போர்க்காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு இப்போது இக்காலத்திலும் சாதாரணமாகவே நடைமுறையில் இருந்தது. இதனால் வீதிகளுக்கு இறங்க முடியாத நிலை நிலவியது. இந்நோய்த் தொற்று ஏற்பட்டால் இறப்பு நிச்சயம் என்ற நிலையே இக்காலத்தில் இருந்ததது. இதனால் அனைவரும் பயத்துடன் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். தடிமல், காய்ச்சல் என்று வைத்தியசாலைக்குப் போவதற்குக்கூட எல்லோரும் பயந்தார்கள். ஆனாலும் நாங்கள் ஊர்ப் பெடியளோடு வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்தோம். படிப்புச் செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதனால் எங்களுக்கு விளையாட்டு மட்டுமே நாளைப் போக்காட்டப் பொழுதுபோக்காய் இருந்தது.

வீதிகளில் மக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு ஊரடங்கு போடப்பட்டாலும், இக்காலத்தில் நாங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கவில்லை என்றுதான் சொல்லத் தொன்றுகின்றது. அந்தளவிற்கு கிளித்தட்டு, கிட்டிப்புள், கிரிக்கெட், வொலிபோல் என்று பல விளையாட்டுக்கள் வீடுகளில் விளையாடப்பட்டுக் கொண்டிருந்தன. பொழுது போக்குக் கருதி வீட்டுத்தோட்டம் அமைத்துப் பலர் பொழுதைக்கழித்துப் பயன் பெற்றனர்;. சுகாதாரப் பணியாளர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து நோய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஊர் ஊராக வழங்கிக் கொண்டிருந்தனர்.

‘மக்களுக்கு ஓர் அன்பான அறிவித்தல். கொடிய தொற்று நோயிலிருந்து தப்புவதற்காக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அனைவரும் வீடுகளில் முடங்கி இருக்கும் வண்ணம் அன்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அவசியத் தேவைகளுக்கு மாத்திரமே வீட்டிலிருந்து ஒருவர் வெளியில் சென்றுவரமுடியும். ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக் கப்பட்டுள்ளது…”

என்று பொலிஸ் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் இணைந்து ஜீப் வண்டியில் அறிவித்துக்கொண்டு செல்வது தெளிவாகவே கேட்டுக்கொண்டிருந்தது.

‘தம்பி….. விளையாட்டெண்டு இனி வெளிக்கிடுறத நிப்பாட்டீற்று வீட்ட இரு… றோட்டில திரியிற எல்லாரையும் பொலிஸ் புடிச்சிட்டுப்போறானாம். சும்மா பொடியளோட திரிஞ்சு கொரோனாவக் கொண்டந்திடாத… அந்த வைரஸ் இப்ப யார் யாருக்கு இருக்கெண்டே தெரியா..”

அம்மாவும் தன் பங்கிற்குப் பேசிவிட்டுக் குசிக்குள் சென்றார்.

‘போணேயம்மா.. வீட்டுக்க ஒரே எப்பிடி இருக்கிற.. விசராக் கிடக்கணே… ரவி வீட்ட போய் அவனோட விளையாடப்போறன்.. வேற எங்கயும் போகேல…”

என்று சொல்லியபடி, வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வயல் வெட்டைக்குள்ளால் சென்று ரவியின் வீட்டை அடைந்து, ரவியுடன் கிட்டிப்புள் விளையாடிவிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்து நேரத்தைக் கழித்தேன். சில நேரங்களில் ஆற்றோரங்களில் நிற்கின்ற காட்டுமாங்காய் பறித்து உப்புத் தூள் போட்டுச் சாப்பிடுவதும் எங்கள் வழமையான செயற்பாடாகவே இருந்தது. இப்படியே காலங்கள் கடந்தன. ஓரிரண்டு மாதங்கள் ஓடின. நோயின் உக்கிரம் மேலும் அதிகரித்து நாடே முடங்கியது. காய்ச்சல் என்று போனால் கூட பிசிஆர் எடுக்கிறார்கள் என்ற பயத்தில் அனைவரும் வைத்தியசாலைக்குச் செல்லவே அஞ்சினர். காய்ச்சல் என்றாலும், தடிமல் என்றாலும் பக்கத்து வீடுகளுக்குக் கூடத் தெரியாமல் வீடுகளில் கைமருந்துகளைப் பாவித்தபடி முடங்கிக் கிடந்தனர்.

ஆற்றில் ஒரே குளித்து விளையாடியதன் பயனாய் எனக்கும் தடிமல் பிடித்தது. ஆவி பிடிச்சும் நிற்கவில்லை. எனக்குத் தடிமல் வந்தால் ஒரு வாட்டுவாட்டிப் போவதுதான் வழக்கம். அது சாதாரணமாகவே எனக்கு வருவது. ஆனால் இந்தக்காலத்தில் இது சாதாரணமான தடிமல் என்று யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்குக் கொரோனா எல்லோருக்கும் மரண பயத்தினை ஏற்படுத்திவிட்டது. நாட்பட்ட தடிமல் என்பதால் காய்ச்சலும் லேசாக ஓரிரண்டு நாட்கள் அடிக்கத் தொடங்கியது. இதனால் ஒன்றும் செய்ய முடியாமல் அம்மா வைத்தியசாலைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடனேயே பீசிஆர் எடுத்துவிட்டு என்னைத் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் தெரிந்தது எனக்கும் கொரோனா என்று. எங்கள் வீடு அமைந்திருக்கும் பகுதியையும் அப்படியே ஊரோடு தனிமைப்படுத்தினார்கள்.

தனிமைப்படுத்தல் மையத்திற்குச் சென்றபோதுதான் என் ரவியும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் ஒருகிழமையாகச் சிகிச்சைபெற்று வருவதை அறிந்தேன். ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கட்டில்கள்; தூரத்திற்குத் தூரம் வைக்கப்பட்டிருந்தன. எங்கள் கட்டிலிலிருந்து சுமார் மூன்று மீற்றர்கள் தூரத்தில் கண்ணாடிப் பொலித்தீனால் மறைப்புப் போடப்பட்டிருந்தது. அதற்கு அங்கால் நின்றபடியே வைத்தியர்களும், தாதியர்களும் எங்களின் உடல் நிலைமைகளைச் சோதித்தனர். மருந்துகளையும் வழங்கினர். மருத்துவ சேவைகளை வழங்குபவர்கள்கூட அருகில் வர அஞ்சினர். நான் கொண்டுவரப்பட்ட அன்றே, ஐந்தாறு பேர் இங்கு இறந்துவிட்டதாகவும், அவர்களின் உடல் எரியூட்டப் படுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அருகிலிருந்தவர்கள் கூறினார்கள்.

நான் படுத்திருக்கும் கட்டிலில் இருந்தவரும் இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். எனக்குப் பயம் அதிகரிக்கக் காய்ச்சலும் அதிகரித்து உடம்பெல்லாம் சோர்வுற்றுப்போனது. பசி எடுக்கவில்லை. நெஞ்சுக்குள் சளி சத்தம்போடுவது மூச்சிழுத்து விடும்போது தெரிந்தது. பனடோலும், சுடுதண்ணியுமே தந்தார்கள். மூச்செடுக்கச் சிரமப்படும்போது ஆவிபிடித்தார்கள். நாட்கள் நகர என் நிலைமையும் மோசமடைந்தது. பசியின்மையால் சாப்பிட முடியவில்லை. நெஞ்சுக்குள் சளி முட்டியதால் மூச்சு இறுகிப்போனது. செயற்கைச் சுவாசமே இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. நோய்க்குரிய மருந்து இன்மையால் அருகிலிருந்த பலர் இறந்து போனார்கள். நானும் இறப்பின் நிலைமையில் இருப்பதை என் மனம் உணர்ந்து கொண்டது.

‘நான் தப்பமாட்டன்… இனி எப்பிடி அம்மாக்களப் பாப்பன்… என்ர அப்பாவ எப்பிடிப் பாப்பன்…. செத்தா என்ர பொடியக்கூடி வீட்ட குடுக்கமாட்டாங்கள்… கடவுளே…..”

என்று மனம் புலம்பிக்கொண்டிருக்க… என் நெஞ்சு உயர்ந்து தாழ்ந்து செயற்கைக் காற்றில் இயங்க மறுத்துத் திணறிக்கொண்டிருந்தது.

‘என்ரை அம்மா…. என்னத் தனிய விட்டிற்றுப் போட்டிங்களே…”

என மனதிற்குள் அழுதுபுலம்ப, அரைவிழி திறந்து கண்ணீரை வடித்;துத் தலையணையை நனைத்துக்கொண்டிருந்த என் வலதுபக்க ஒற்றைக்கண்ணில், யாரோ இருவர் ரவியின் உடலைப் பொலித்தீனால் சுற்றியபடி தள்ளிச்செல்வது தெரிந்தது….

*******************

Related posts

சின்னத்திரையால் சீரழியும் பெண்கள்

Thumi202121

வினோத உலகம் – 27

Thumi202121

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா!

Thumi202121

Leave a Comment