- உள ஆற்றுப்படுத்தல் அறிமுகம்
மனித இனம் ஆரம்பமான நாளிலிருந்தே உள ஆற்றுப்படுத்தலும் வளர்ந்து வந்துள்ளது. உள ஆற்றுப்படுத்தலானது உளவளத்துணை, உளநல உதவி, ஆற்றுப்படுத்தல், சீர்மியப்படுத்தல், ஆற்றுப்பணி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. உள ஆற்றுப்படுத்தல் என்பது துணைநாடி தனது அக மற்றும் புற வளங்களை ஒன்றிணைத்து நெறிப்படுத்தித் தன் தேவையை பூர்த்தி செய்தலையும் பிரச்சினையைத் தீர்த்தலையும் குறிக்கின்றது. வண.பிதா எஸ்.டேமியன் அடிகளார் உள ஆற்றுப்படுத்தலை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.
“பிரச்சினைகளோடு வருபவரை ஏற்று மதித்து கசப்பான அனுபவங்களை முழுமையாகப் பகிர உதவி அவரது உணர்வுகளுக்குள் புகுந்து அவரது ஏக்கங்களையும் தேவைகளையும் ஆசைகளையும் அறிந்து அவரது பிரச்சினையின் உண்மைநிலையை அவராகவே அறியச் செய்து அப்பிரச்சினைக்கு தீர்வுகாண வழிப்படுத்தி அவரது ஆற்றலை அவரோடு இணைந்து சோதித்து பிறரோடு நல்லுறவுகளைக் கட்டியெழுப்பி அவரது ஆற்றலை உணர்ந்து முழுமையான வாழ்வு வாழச் செய்யும் கலையே உளவளத்துணை ஆகும்”.
1.2) தமிழ் சமுதாயம் ஓர் பார்வை
மக்களது உளநலம், உளசமூகப் பிரச்சினைகள் என்று நோக்கும் போது மக்களோடு சேர்த்து சமுதாயமும் உட்படுத்தப்படுகின்றது. சமுதாயம் மக்களால் உருவாக்கப்பட்டது. அதேசமயம் மக்கள் தம் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவர்கள்.
தமிழ் சமுதாயத்தைப் பொருத்த மட்டில் மக்கள் குடும்பங்களாக வாழ்கின்றனர். தனிமனிதர், குடும்பங்கள், சமுதாயம் என்பன ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாக காணப்படுகின்றன. இதன்படி தமிழ் சமுதாயத்தில் உள ஆற்றுப்படுத்தலின் சவால்கள் குற்த்து ஆராய்வதற்கு முன் தமிழ் சமுதாயத்தின் கட்டமைப்புக்களையும் நடத்தைகளையும் விளங்கிக் கொள்ளல் முக்கியமாகின்றது.
இலங்கை தமிழ் சமூகம் அதன் வளமான வரலாறு, கலாசாரம் மற்றும் மத நம்பிக்கைகளால் தாக்கம் செலுத்தும் தனித்துவமான கட்டமைப்பு மற்றும் நடத்தை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில முக்கிய அம்சங்கள் (சமூக படிநிலை, குடும்பம் மற்றும் உறவுமுறை, பெண்களின் பங்கு, மொழியும் அடையாளமும், மத வேறுபாடு, கல்வி மற்றும் நிபுணத்துவம் , கலாசார மரபுகள்) காணப்படுகின்றன. இந்த குணாதிசயங்கள் இலங்கைத் தமிழ் சமூகத்தைப் பற்றிய பொதுவான புரிதலை வழங்கும் அதே வேளையில், சமூகத்திற்குள் மாறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, இலங்கைத் தமிழ் சமூகம், குறிப்பாக உள்நாட்டுப் போர் காலங்களில், இன மோதல்கள் மற்றும் இடப்பெயர்வுகளின் சிக்கலான இயக்கவியலால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரணிகள் சமூக கட்டமைப்புகள் மற்றும் நடத்தைகளை வடிவமைத்துள்ளன.
1.3) தமிழ் சமுதாயத்தில் உள ஆற்றுப்படுத்தலின் சவால்கள்
உள ஆற்றுப்படுத்தல் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் சமுதாயத்தில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. அத்தகைய சவால்களை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
1.3.1) சமுதாய நடைமுறைகள் சார் சவால்கள்
1.3.2) சமுதாய மக்களது தனிப்பட்ட மனப்பாங்கு சார் சவால்கள்
1.3.3) தமிழ் சமுதாய உள ஆற்றுப்படுத்துனர்கள் சார் சவால்கள்
1.3.4) ஏனைய சவால்கள்
இவற்றை தனித்தனியாக நோக்குவதன் மூலம் மேலதிக விளக்கத்தைப் பெறமுடியும்.
1.3.1) சமுதாய நடைமுறைகள் சார் சவால்கள்
முழு உலகிலும் பல்வேறுபட்ட சமுதாயக் குழுக்கள் காணப்படுகின்றன. அவற்றில் தனித்துவமானதும் காலத்தால் முந்தியதுமான சமுதாயமாக தமிழ் சமுதாயம் விளங்குகிறது. தமிழ் சமுதாயத்திற்கென்றே தனித்துவமான பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரங்கள் முதலியன இவ் உள ஆற்றுப்படுத்தல் சேவைக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் சவாலாக அமைகின்றன.
- கலாசார வேறுபாடுகள் : தமிழ் சமுதாயமானது இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியம் முதலிய மத வேறுபாடுகளையும் சாதிப் பாகுபாடுகளையும் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ளது. இந் நிலையில் ஆற்றுப்படுத்துனர்களுக்கும் துணைநாடிகளுக்கும் இடையிலான கலாசார வேறுபாடுகளானது அவர்களது பயனுள்ள பகிர்வுகளில் தவறான புரிதல்களை உருவாக்குகின்றன.
- மொழித்தடை : தமிழ் சமுதாயத்தில் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட வழக்குச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு பாமர மக்களும் படித்த மக்களும் இரண்டறக் கலந்து வாழ்கின்றனர். இந் நிலையில் மக்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட ரீதியிலான வார்த்தைப் பயன்பாடுகள் சவாலாக உள்ளது. அத்தோடு ஒப்பீட்டளவில் பெரும்பான்மையான ஆற்றுப்படுத்தல் சேவைகள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. இது தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
- சமூக பொருளாதார காரணிகள்: குறைந்த வருமான நிலை, வறுமை மற்றும் போக்குவரத்து தொடர்பான வரையறுக்கப்பட்ட அணுகுமுறைகளும் தமிழ் மக்கள் ஆற்றுப்படுத்தல் சேவையை பெறுவதில் பெரும் சவாலாக அமைகிறது.
- இறுக்கமான கட்டுப்பாடு : தமிழ் சமுதாயத்தில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தமது தனிப்பட்ட விடயங்களை பிறருக்கு வெளிப்படுத்தக் கூடாது என்ற கலாசார விழுமியம் சார்ந்த சிக்கல் தன்மை காணப்படுகின்றது. தமிழ் பண்பாட்டில், ஒருவர் தனது தனிப்பட்ட பிரச்சினைகளை வேறு ஒருவருக்குச் சொல்வது வழக்கமான ஒன்றல்ல. எனவே ஒருவரது பிரச்சினைக்கு செவிமடுப்பதும் அவரை அவரது பிரச்சினை பற்றிக் கூற ஊக்குவிப்பதும் கடினமாக காணப்படுகின்றது.
- மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் நிதி : எமது நாட்டைப் பொருத்த மட்டில் தமிழ் சமுதாயத்தில் ஆற்றுப்படுத்தல் சேவைகள் மிகவும் குறைந்தளவிலான வளங்களையே கொண்டுள்ளன. சிறுபாண்மையினரே தகுதி வாய்ந்த ஆற்றுப்படுத்துனர்களாகக் காணப்படுகின்றனர். சில ஆற்றுப்படுத்தல் நிலையங்கள் மற்றும் மனநல சேவை நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிதியுதவியே கிடைக்கப் பெறுகின்றன.
1.3.2) சமுதாய மக்களது தனிப்பட்ட மனப்பாங்கு சார் சவால்கள்
- மூடத்தனமான நம்பிக்கைகள் : தமிழ் சமுதாயத்தில் வாழும் மக்கள் தம் சமயப் பின்னணியின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கைகளையும் தாண்டி கண்மூடித்தனமான மூடத்தனத்தையும் கொண்டு காணப்படுகின்றனர். இது உள ஆற்றுப்படுத்தல் சேவைக்கு ஒரு வித சவாலாகவே காணப்படுகின்றது. உதாரணமாக உள ரீதியான குழப்பம் ஏற்பட்ட நபரை உள ஆற்றுப்படுத்தல் சேவைக்கு அழைத்து செல்வதைத் தவிர்த்து கடவுள் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையிலேயே குறித்த நபரின் பிரச்சினைக்கு தீர்வு காணாதிருப்பதைக் கூறலாம்.
- களங்கமான விடயமாக பார்த்தல் : பண்பாட்டு மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் காரணமாக தமிழ் சமூகத்தில் உள ஆற்றுப்படுத்தல் சேவை இன்றும் பல தடைகளை எதிர்கொள்கின்றது. உள ஆற்றுப்படுத்தல் சேவையை நாடுவது என்பது ஒருவரின் பலவீனம் மற்றும் தனிப்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதைக் குறிப்பதாக பலர் நம்புகின்றனர். பழைமைவாத சமூகங்களில் இது அதிகளவில் காணப்படுகிறது.
- விழிப்புணர்வின்மை : தமிழ் சமுதாயத்தில் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பலருக்கு உள ஆற்றுப்படுத்தல் சேவை குறித்தும் உளநலப் பிரச்சினைகளைக் கையாள்வதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு அற்ற நிலை காணப்படுகிறது.
- தம் பிரச்சினையை தாமே தீர்க்க வேண்டும் என்ற மனநிலை : தமிழ் சமுதாயத்தில் வாழும் மக்களில் பலரிடம் காணப்படும் ஓர் பண்பாக தனக்கான பிரச்சினையை தானே தீர்த்துக் கொள்ள வேண்டும்; வேறு யாரிடமும் அதைப் பகிர்வதோ உதவி கேட்பதோ முறையற்றது என்ற எண்ணப்பாடு காணப்படுகின்றது.
- உள ஆற்றுப்படுத்தல் சார் விருப்பின்மை : குறித்த உளப் பிரச்சினைக்கு தன்னிடமும் தன் உறவுகளிடமும் கிடைக்காத ஆறுதல் வேறு எங்கும் கிடைக்காது என்ற எண்ணமும் தன் பிரச்சினையை முகம் தெரியாத நபருக்கு எவ்வாறு வெளிப்படுத்துவது என்ற சிந்தனை காரணமாகவும் உள ஆற்றுப்படுத்தல் குறித்து மக்களிடையே காணப்படும் விருப்பின்மையும் பெரும் சவாலாக உள்ளது.
1.3.3) தமிழ் சமுதாய உள ஆற்றுப்படுத்துனர்கள் சார் சவால்கள்
தமிழ் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் சமுதாயம் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் காணப்படும் தடைகளோடு உள ஆற்றுப்படுத்துனர்கள் சார்ந்து காணப்படும் சவால்களும் ஏராளம் உள்ளன. இவை இன்றும் உள ஆற்றுப்படுத்தல் சேவையில் காணப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவை பின்வருமாறு;
- தேர்ச்சி பெற்ற உள ஆற்றுப்படுத்துனர்கள் இன்மை: உள ஆற்றுப்படுத்தல் வழங்கும் போது உள ஆற்றுப்படுத்துனர்கள் பல்வேறான திறன்களையும் தகைமைகளையும், பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும். எமது நாட்டில் தமிழ் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் சுனாமி மற்றும் யுத்தகாலத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் உடனடியான புனர்வாழ்வின் அவசியம் கருதி அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் எந்தவித கல்வித் தகைமைகளும் பாராது மிகக் குறுகிய காலத்தில் உள ஆற்றுப்படுத்தல் வழங்குவதற்காக பலர் பயிற்றுவிக்கப்பட்டதுடன் அவர்களால் உள ஆற்றுப்படுத்தலும் வழங்கப்பட்டது. இந்தப்படி உள ஆற்றுப்படுத்துனர்களது கல்வித் தகைமை மற்றும் தகுதி ஆகியனவும் ஓர் சவாலாக உள்ளது.
- உள ஆற்றுப்படுத்துனருக்குரிய ஒழுக்க நெறிகள் பேணப்படாமை: உள ஆற்றுப்படுத்துனர்களுக்கென்று சில ஒழுக்க விழுமியங்கள், விதிகள், சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக இரகசியம் பேணலை குறிப்பிடலாம். முறையான காரணமின்றி இரகசியம் பேணலை ஆற்றுப்படுத்துனர் கடைப்பிடிக்காத பட்சத்தில் அது ஒரு சவாலாக மாறுகிறது.
- உள ஆற்றுப்படுத்தல் சேவையில் துஷ்பிரயோகம்: உள ஆற்றுப்படுத்தலின் போது துணைநாடியின் பிரச்சினைகளை பகிருதல், துணைநாடியிடம் அதிக பணத்தை அல்லது பொருளை எதிர்பார்த்தல் ஆகியன மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. இன்றைக்கும் நம் தமிழ் சமுதாயத்தில் இத்தகைய நோக்கோடு செயற்படும் ஆற்றுப்படுத்துனர்கள் காணப்படுகின்றமை மன வருத்தத்தை ஏற்படுத்துகின்றன..
- உள ஆற்றுப்படுத்துனருக்கான அங்கீகாரம் கிடைக்காமை : மேலைத்தேய நாடுகளில் உள ஆற்றுப்படுத்தல் சேவை என்பது பாரியதும், அளப்பரியதும், அத்தியாவசியமான சேவையாகக் காணப்படுகின்றது. ஆனால் நம் சமுதாயத்தில் போதைப் பொருள் ஒழிப்புத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் அனுமதிகளும் ஊக்குவிப்புக்களும் கூட உள ஆற்றுப்படுத்துனர்களுக்கு கிடைப்பதில்லை.
- வருமான நோக்கம் கொண்ட உள ஆற்றுப்படுத்துனர்கள் : ஒரு சில உள ஆற்றுப்படுத்துனர்கள் ஆற்றுப்படுத்தல் சேவையை வெறுமனே பணம் ஈட்டிக் கொள்ளும் நோக்குடனேயே மேற்கொள்கின்றனர். இந்த நிலையானது சேவை மனப்பாங்கோடு செயற்படும் ஆற்றுப்படுத்துனர்களையும் தேவைகளோடுள்ள மக்களையும் பெரிதும் பாதிக்கின்றது.
- நிபுணத்துவம் பெற்ற உள ஆற்றுப்படுத்துனர்களின் தலையீடு : சாதாரணமாக பயிற்றப்பட்ட ஆற்றுப்படுத்துனர்களை கல்வித்தகைமையால் உயர்வான ஆற்றுப்புடுத்துனர்கள் தட்டிக்கழிப்பதும் பொருத்தமற்ற வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதும் சிறந்த உள ஆற்றுப்படுத்தல் சேவைக்கு சவாலாக உள்ளது.
- உள ஆற்றுப்படுத்துனரின் சய கவனமற்ற செயற்பாடுகள் : தமிழ் சமுதாயத்தில் மிகக் குறைந்த அளவிலான ஆற்றுப்படுத்துனர்களே காணப்படும் இந்நிலையில் பல்வேறு வகையான பிரச்சினைகளோடு வரும் மக்களை வழிப்படுத்துவதற்கென தமது உடல், உள ஆரோக்கியம் போதுமான ஓய்வு, முறையான உணவு போன்றவற்றில் ஆற்றப்படுத்துனர்கள் அக்கறை செலுத்தாது செயற்படுகின்றனர். இந்நிலையில் மேற்கொள்ளப்படும் ஆற்றுப்படுத்தல் சேவை சிறந்ததாக அமையுமா? என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
1.3.4) ஏனைய சவால்கள்
தமிழ் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மொழியிலும் தமிழ் கலாசாரத்திலும் வரையறுக்கப்பட்ட தொழில்முறைப் பயிற்சி பெற்ற ஆற்றுப்படுத்துனர்களே காணப்படுகின்றனர். கல்வி மட்டம் குறைந்த மக்களோடு ஒரு சில கல்வியறிவு படைத்தோரும் உள ஆற்றுப்படுத்தலை தேவையற்ற விடயமாக நினைக்கும் போக்கு காணப்படுகின்றது. உளவியல் பயிலும் மாணவர்கள் மத்தியில் உள ஆற்றுப்படுத்தல் அறிவை வளர்த்தெடுப்பதற்கான தமிழ் மொழியிலான புத்தகங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. உள ஆற்றுப்படுத்தல் தொடர்பான கற்கை நெறிகள் பெரும்பாலும் கோட்பாடுகள் சார்ந்த வகையில் கற்பிக்கப்படுவதோடு அவை செயன்முறைக்கல்வியாக மேற்கொள்ளப்படுவது மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால் சிறந்த ஆளுமைகள் நிரம்பப் பெற்ற தமிழ் உள ஆற்றுப்படுத்துனர்களை உருவாக்குவதில் கடினத்தன்மை காணப்படுகின்றன. இவை யாவும் தமிழ் சமுதாயத்தில் உள ஆற்றுப்படுத்தல் சேவையின் சவால்களாகவே காணப்படுகின்றன.
1.4) சவால்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.
பின்வரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் சமுதாயத்தில் உள ஆற்றுப்படுத்தல் சேவையை வளர்தெடுக்க முன்வருவோம்.
- தமிழ் சமுதாய மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
- ஆற்றுப்படுத்தல் சேவையை மேலும் விஸ்திரப்படுத்தல்.
- ஆற்றுப்படுத்தல் கற்கை நெறிகளை செயன்முறைக் கல்வி;யோடு இணைத்துக் கற்பித்தல்.
- ஆற்றுப்படுத்துனர்கள் ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றல்.
1 comment