இதழ் 63

வயற்காடு…! (சிறுகதை)

நேற்றுப் பின்னேரம் சூரியன் மெல்ல மெல்ல மறையத் தொடங்கிய நேரம்;. வீட்டு முற்றத்துக் கதிரையிலிருந்து கண்ணில் படும் காட்சிகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன். பறவைகள் தம் தொழில் முடித்துக் கூடுகளுக்கு விரைந்து கொண்டிருந்தன. விவசாயிகளும் வயல் வேலைகளை முடித்துவிட்டு மாட்டு வண்டில்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். தொலைவிலே மாடுகளைச் சாய்த்துக் கொண்டு ஐயா ஒருவர் பட்டியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். சூரியனும் மறைந்து இருள் கௌவியது. இப்போதுதான் அப்பாவும் வயல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருந்தார்.

‘தம்பி வண்டில்ல மம்பட்டி கிடக்கு அதக் கீழ எடுத்து வைச்சிட்டு, மாட்டக்கொண்டுபோய் பட்டீல கட்டீற்று வா…”

அப்பா கூறும் சத்தம் கேட்டது. நானும் எழும்பி மாட்டை அவிட்டுப் பட்டியில் கட்டிவிட்டு வந்தேன். அப்பா குளிப்பதற்காகக் கிணற்றடிக்குச் செல்லுவது விளங்கியது. நானும் அப்பாவின் சாறத்தையும், துவாயையும் எடுத்துக்கொண்டு சென்று கிணற்று வளையில் போட்டுவிட்டு வந்தேன். குளித்துவிட்டு வந்தவர் அவசரமாக எங்கேயோ போவதற்கு வெளிக்கிட்டார்.

‘அப்பா எங்க இவ்வளவு வேகமா வெளிக் கிடுறிங்கள்?”

அப்பாவின் அருகில் சென்று மெல்லக் கதைகேட்க ஆரம்பித்தேன்.

‘தம்பீ…. அவசரமா ஒருக்கா கொழும்புக்குப் போகோணும்… பத்து மணிக்கு கொழும்பு பஸ் இருக்காம்.. அதுதான் கடையடியில் விசாரிச்சுட்டு வரப்போறன்…”

‘எதுக்கப்பா கொழும்புக்கு?”

‘என்ரை ஐசி புதுப்பிக்க பதிஞ்சு அனுப்பினான். கனநாளா வரேல… இண்டைக்கு விடிய கோல் எடுத்து, போம் நிறப்பினதில ஏதோ பிரச்சினயாம்.. நாளைக்கு வந்து அதக்கிளியர் பண்ணீட்டு அப்பிடியே ஒருநாள் சேவையில எடுக்கட்டாம் எண்டு சொன்னவங்கள்…”

‘அப்ப நீங்க போனா இண்டைக்கு யாரப்பா வயல்ல காவல்?”

‘அதான் தெரியேலடா அப்பு… பக்கத்துக் காணிக் காரன் நாதனும் வரமாட்டானாம் எண்டு சொன்னவன்…. இவளோ நாளும் காவல் காத்திட்டு இண்டைக்குப் போகாட்டி கஸ்ரம்…. யானை இறங்கீற்றெண்டா கொஞ்ச நேரத்தில வயல நாசம் கட்டீடும். என்ன செய்யிற எண்டு தெரியாமக் கிடக்கு…”

‘அப்பா நான் இண்டைக்குக் காவலுக்குப் போகட்டே?… பக்கத்துக் கொட்டில்ல ஆக்கள் நிப்பினதானே…. பயம் இல்லப்பா…..”

‘என்ன சொல்லுறாய்… நித்திர கொள்ளாம இருக்கோணும்… கவனமாக் கிடப்பியே… பண்டியளும் இறங்கும் கவனம்!”

‘ஓமப்பா… தீவறை மூட்டுவன்தானே… அப்ப ஒண்டுக்கும் பயப்பிடத் தேவேல்லப்பா….. தீப்பந்தம் மற்றது யான வெடியளும் கிடக்குத ;தானேப்பா… நான் பாத்துக் கொள்ளுவன் நீங்க வெளிக்கிடுங்கோப்பா…”

‘ம்… சரி… சரி… அம்மாட்டச் சொல்லிச் சாப்பாட்டக் கட்டிக்கொண்டு வெளிக்கிடு…. தீவறைக்கு விறகெல்லாம் எடுத்துப் போட்டிற்றுத்தான் வந்தனான். போனோடன தீவறைய மூட்டீற்றுப் பறனில ஏறியிருந்து லைற்றடிச்சுப் பாத்தி யெண்டா ஏதும் இறங்கினாத் தெரியும்….”

அப்பாவின் அறிவுறுத்தல்களைக் கேட்டபடியே நான் வயலுக்குப் போகத் தயாராகினேன். அம்மா கட்டித் தந்த சாப்பாட்டுப் பார்சலையும் எடுத்துக்கொண்டு லைற்று, போர்வை என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வயலை நோக்கிச் சைக்கிளில் புறப்படத் தொடங்கினேன்.

‘தம்பீ… கவனமாக் கிடக்கோணும்…. லைற்ற வடிவாக் காலடிக்குப் புடிச்சுப் போகோணும்….”

பின்னால் அம்மாவின் சத்தமும் ஒலித் தோய்ந்தது. காட்டினை ஊடறுத்த ஒற்றையடிப்பாதை. அந்தப் பாதையில்தான் நான் செல்ல வேண்டும். அப்பாதையின் இருமருங்கும் ஓங்கி வளர்ந்து நிற்கின்ற அடர்ந்த மரங்கள். அவற்றில் இருக்கும் குரங்குகள், கிளைகளில் பாய்ந்து திரியும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. காட்டுப் பறவைகளின் சத்தமும், தொலைவிலே நரிகள் ஊளையிடும் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன. எங்கோ யானைகள் பிளிறும் சத்தமும் என் காதில் விழுந்தது. அவை அனைத்தையும் கேட்டபடியே நான் வயலுக்குச் சென்று கொண்டிருந்தேன். மனம் பயத்தால் பதறியபடியிருந்தது. வந்த வழியைத் திரும்பிப் பார்த்தேன். என் பின்னால் யாருமே வரவில்லை. என் முன்னால்கூட யாருமே செல்லவில்லை. என் இதயம் பயத்தால் வேகமாகத் துடித்துக்கொண்டிருந்தது.

‘பிள்ளையாரப்பா நீதானப்பா காப்பாத் தோணும்..”

என்று பிள்ளையாரப்பாவை நினைத்துக் கொண்டு வேகமாகச் சைக்கிளை உழக்கிக் கொண்டிருந்தேன். வானத்திலே பௌர்ணமி நிலவும் எறித்துக் கொண்டிருந்தது. அது வான் மேகங்களைக் கிழித்துக்கொண்டும் பயணித்துக் கொண்டிருந்தது. அவ்வெளிச்சத்தின் உதவியுடன் சற்றுநேரத்தில் வயலை அடைந்து விட்டேன். வயலை அடைந்ததும்தான் தாமதம் தொலைவிலே யானை பிளிறும் சத்தமும் ஒலித் தோய்ந்தது. சைக்கிளைப் பாலை மரத்தில் சாத்திவிட்டுப் பயத்துடன் காவல் குடிலை நோக்கி நடந்தேன். அந்த நிலா வெளிச்சத்தில் காவல் குடில் தெளிவாகவே தென்பட்டுக்கொண்டிருந்தது. அது காட்டு மரங்களால் அமைக்கப்பட்டு தென்னோலையால் மேயப் பட்டிருந்தது. அக்கொட்டிலுக்குள் மழை நேரங்களில் படுப்பதற்காகப் பறனும் அமைக்கப்பட்டிருந்தது.

நான் கொண்டு வந்த சாப்பாட்டுப் பையைப் பறனில் வைத்துவிட்டுத் தீவறையை மூட்டத் தொடங்கினேன்.
திடீரென மேலே கூரைக்குள் ஏதோ சத்தம் கேட்டாற்போல் இருந்தது. உடனே லைற்றை எடுத்து அடித்தபடி மேலே அண்ணாந்து பார்த்தேன். சாரைப்பாம்பொன்று கொட்டில் முகட்டுக்குள் சுருண்டு நெளிந்துகொண்டிருந்தது. அதன் வாயில் எலியொன்று அகப்பட்டிருப்பதும் தெரிந்தது. எனக்கோ பெரும் பயம் கிளம்பியது. உடனே அங்குமிங்கும் பார்த்தேன். உடல் பதறியது. அருகிலே அவசரத்திற்குத் தடிகள் கூடத் தென்படவில்லை. பாய்ந்து சென்று தீவறை மூட்ட அருகில் கிடந்த பெரிய விறகுத் தடியை எடுத்துவந்து அண்ணாந்து பார்க்கும்போது, பாம்பையே காணவில்லை. எனக்கோ பெரும் அச்சம் கிளம்பியது.

‘அப்பனே சிவசிவா…”
என்று மனதுக்குள் சிவனைக் கூப்பிட்டபடி திருநீறைச் சாத்திவிட்டுக் குசினிப் பக்கம் வந்தேன். என் மனதிற்குள் வயலின் நினைவுகளே ஓடிக்கொண்டிருந்தன. அம்மா தந்த றொட்டித் துண்டைச் சாப்பிட்டபடி தேனீரைக் குடித்துவிட்டுச் சுவரிலிருந்த மணிக்கூட்டைப் பார்த்தேன். மணி இப்போது ஏழைத் தாண்டிக்கொண்டிருந்தது.

‘கடவுளே என்ன கோதாரியப்பா… எனக்கு வந்த சோதினை..”

என்று மனதுக்குள் நினைத்தபடி விறகுத் தடியால் கிடுகுச் செத்தைகளைக் குத்திக் குத்திப் பார்த்தேன். ஒரு சத்தமும் இல்லை. பறனுக்குக் கீழே போத்தலில் வைத்திருந்த தீவறை மூட்டும் மண்ணெண்ணையை எடுத்து முகட்டிலும், வளைகளிலும், கூரைகளிலும் தெளித்துவிட்டுப் போத்தலை மூடியபடி கீழே குனிந்தேன். அருகில் ஏதோ விழுந்தது போன்ற உணர்வு. பதறியபடி திரும்பினேன். பாம்பு எலியை விழுங்கியும் விழுங்காமலும் இருந்த நிலையில் வயலுக்குள் வேகமாய் நகர்ந்து மறைந்தது. இப்போதுதான் என் மனதுக்குள் ஒரு வித நிம்மதி பரவியது. இல்லையென்றால் இரவிரவாக எப்படிப் பறனில் கிடந்திருப்பேன்? தீவறை நெருப்படியில்தான் குந்திக் கொண்டு இருந்திருக்க வேண்டியிருக்கும்.

பாம்பைக் கண்டதிலிருந்து அடிக்கடி அங்குமிங்கும் லைற்றை அடித்துப் பார்த்தபடி தீவறை வெப்பத்தில் குளிர்காய்ந்து கொண்டிருந்தேன். முன்னிரவு நேரம் ஆகையால், பால் நிலா வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது. பனியும் பொழிய ஆரம்பித்து விட்டது. தொலைவுகளில் உள்ள கொட்டில்களில் எரியும் தீவறை வெளிச்சங்களும், காவல்காரர்கள் அடிக்கும் லைற் வெளிச்சங்களும் தென்பட்டுக்கொண்டிருந்தன. பொழுதும் போகவில்லை.
‘போன பாம்பு திரும்பியும் வந்திடுமோ?…”

என்று மனதில் அடிக்கடி நினைத்துக் கொண்டேன். இப்போது வீட்டில் இருந்திருந்தால் ‘பாக்கியலட்சுமி” நாடகம் பார்த்துக் கொண்டிருப்பேன்.
‘என்ன செய்யலாம்?” என்ற நினைப்போடு பறனைக்கூட்டி, விரிப்பினை விரித்துவிட்டுக் கூரையை நோட்டமிட்டேன். அப்பாவின் பழைய சொனி ரேடியோ ஒன்று கொட்டில் கப்பில் கொழுவிக் கிடந்தது. றேடியோவை இயக்கினேன். ‘வசந்தநிலா” நிகழ்ச்சியில் இனிமையான இடைக்காலப் பாடல்கள் போய்க்கொண்டிருந்தன.

‘பாடல்களோடு இரவைக் கழிக்க வேண்டியதுதான்…”

என்று நினைத்துக்கொண்டு மீளவும் தீவறை வெப்பத்தில் உடலைச் சூடேற்றிக் கொண்டிருந்தேன். பொழுதும் நகர்ந்து கொண்டிருந்தது. பாடல்களை இரசித்தபடி மனக்கண்களில் வந்த காட்சிகளையும் இரசித்துக்கொண்டிருந்தேன். வானத்து நிலாவும் ஆங்காங்கு தெரியும் நட்சத்திரங்களும் கருமுகில்களைக் கிழித்துக்கொண்டு எங்கோ வேகமாய் நகர்வதுபோன்று இருந்தன. சுய நினைவுக்கு வந்தவனாய் வானத்தை மீளவும் நோட்டமிட்டேன். தொலை வானிலிருந்து கருமுகில்கள் கூடி ஒளியை மறைக்கத் தொடங்கின. கூதற் காற்றும் பலமாக வீசத்தொடங்கியது. நான் உடனே பறனுக்குக் கீழே இருந்த தறப்பாழை எடுத்துக் கூரைக்கு மேலே போட்டுக் கட்டினேன். காற்றோடு மழைவந்தால் குடில், ஒழுக்காலும் தூவானத்தாலும் நனைந்துவிடும். நானும் உள்ளே இருக்க முடியாது. தறப்பாழைக் கட்டிக்கொண்டிருக்கும்போதே மழை தூறத் தொடங்கியது. தீவறையைக் குடிலுக்குள் அரக்கி மூட்டிவிட்டுப் பறனில் ஏறிக் குந்திக்கொண்டேன். மழையும் பொழியத் தொடங்கியது. காற்றும் பலமாக வீசி நடுங்கவைத்துக் கொண்டிருந்தது. அருகிலே நின்றிருந்த பாலைமரக் கிளைகள் பலத்த காற்றினால் முறிந்து விழும் சத்தமும் கேட்டது. லைற்றை அடித்துப் பார்த்து அதை உறுதிப்படுத்திக்கொண்டேன்.

‘பிள்ளையாரப்பா…. தனியக் கிடக்கிறன்…. ஒண்டும் ஆயிடக்கூடாதப்பா…”

என்று என் ஊர்ப் பிள்ளையாரை நினைத்துக்கொண்டேன். ஓங்கி அடித்த மழை சற்றுக் குறைவது தெரிந்தது. அதற்கிடையில் கட்டிக்கொண்டு வந்த சாப்பாட்டைப் பசியில்லாமல் வயிற்றுக்குள் தள்ளிவிட்டுக் கையைக் கழுவிக்கொண்டேன். பயத்தில் எனக்கு அவ்வளவாகப் பசி எடுக்கவில்லை என்பது தெரிந்தது. தனிமைதான் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. மழைத் தூவானம் அணைத்திருந்த தீவறையைத் திருப்பவும் மூட்டியபடி வயலைச் சுற்றி லைற்றை அடித்து ஒரு நோட்டம் போட்டுக்கொண்டு, வானொலியில் போன பாடல்களை இரசிக்கத் தொடங்கினேன். பொழுதும் இரவு பத்தைக் கடந்திருக்க வேண்டும். மழையும் தூறியபடியே இருந்தது. காற்றும் சற்றுவேகம் குறைந்து குளிரைத் தந்து கொண்டிருந்தது. என்னையறியாமல் நித்திரை, தலையைத் தூக்கிப்போட்டுக் கொண்டிருந்தது. அப்படியே பறனில் ஏறிக் கிடந்துகொண்டேன். என்னை அறியாமலேயே இரவு நகர்ந்தது. என்னை அறியாமலேயே மழையும் பொழிந்துகொண்டிருந்தது. என்னை அறியாமலேயே குளிர்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. என்னை அறியாமலேயே இரவு பகலாய் மாறியது. தூக்கம் கலைந்து கண்விழித்தேன். என்ன ஆச்சரியம் சூரியக் கதிர்கள் தெறித்துக் கொண்டிருந்தன.

‘என்னடாப்பா… அதுக்குள்ள விடிஞ்சிட்டு….”

என்றபடி பறனிலிருந்து இறங்கினேன். கால்கள் வெள்ளத்தில் நனைந்து மறைந்தன. அப்படியே வயலை எட்டிப் பார்த்தேன். எங்கும் வெள்ளம். பயிர்கள் வெள்ளத்துக்குள் மறைந்து கிடந்தன. பயத்தில் அங்குமிங்கும் கண்கள் ஓடித்திரிந்தன. தொலையில் உள்ள வயல் குடில்களில் யாரும் தென்படுவதாய்த் தெரியவில்லை. எங்கும் வெள்ளக்காடாகவே இருந்தது. கடல் வெளியாய்க் காட்சி தந்தது. நான் பயந்து விட்டேன். எனக்கு என்ன செய்வதென்று கூடத் தெரியவில்லை. வெள்ளம் முழங்கால் மட்டத்திற்கு உயர்வாகவே இருந்தது. வயல் வரம்புகள் ஒன்றும் கண்களுக்குத் தென்படவில்லை. ஒருவிதமாகச் சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு, சைக்கிளையும் வெள்ளத்துக்கால் உருட்டியபடி வீதியை வந்தடைந்தேன்.

‘பிள்ளையாரப்பா இண்டைக்கு வெள்ள மெல்லாம் வடிஞ்சிடோணும்… அப்பாவும் இல்ல… பின்னேரம் காவலுக்கும் வரோணும்…”

என்று மனதுக்குள் நினைத்தபடி வீட்டை நோக்கிச் சைக்கிளை மிதித்தேன். வெள்ளத்தின் யோசனையில் வந்ததால் வீடு வந்ததும் தெரியவில்லை.

‘இண்டைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியா… அப்பா வந்திட்டாரென்றாப் பிரச்சனை யில்லை.. நான் எப்படி உந்தத் தண்ணிக்கால வயலுக்குள்ள போறது? பாம்புகள் வேற பறனில சுருண்டு கிடந்தாலும் தெரியா…”

என்ற எண்ணத்துடன் சைக்கிளால் இறங்கி வீட்டுக் கடப்பைத் திறந்து உள்ளே சென்றேன். சட்டி, பானை கழுவிக் கொண்டிருந்த அம்மாவும் என் வரவைக் கண்டுவிட்டார்.

‘தம்பி.. வந்திட்டியோடா.. வயலில எதும் நடக்கேல்லத்தானேயப்பு?… இரவிரவா நித்திரையும் இல்ல.. உன்ன நினைச்சுட்டுத்தான் இருந்தன்… என்னடாப்பு… வெள்ளமாம் எண்டு எல்லாரும் சொல்லீட்டுப் போறினம்.. அதுதான் யோசிச்சிட்டு இருந்தன்…. வற்றாப்பிள்ளைக்கு நான் வைக்காத நேத்தியில்ல… கடவுள்தான் நல்ல வழியத் திறக்கோணும்…. “

‘ஓமணே… இரவிரவா நல்ல மழையணே… விடிஞ்சதும் தெரியேல்ல… பறனில பேசாம ஏறிக் கிடந்திட்டன்…. முழங்கால் மட்டத்ததுக்குத் தண்ணியணே… பயிர மூடிப் பாயுது… மழை வராட்டிப் பின்னேரத்துக்கிடேல வடிஞ்சிடும் போலதான் கிடக்கு…. மற்றது, போனோடனயே குடில் முகட்டுக்க சாரப்பாம்பு வேற…. ஒருமாதி மண்ணெண்ணைய ஊத்திக் கலைச்சிட்டுத்தான் மற்ற வேலையளப் பாத்தது….”

‘பாத்தியே அதுதான் பயம்.. பாம்பு பல்லியளெண்டு கொட்டிலுக்குள்ளதான் ஏறிக் கிடக்குங்கள்… கவனமாத்தான் பாத்துப் பறனில இருக்கோணும்… அதுதான் இரவும் பயந்தனான். யானையளும் இறங்கினாத் தனிய என்னதான் செஞ்சிருப்பியோ?…. இண்டைக்கு அப்பா வந்திட்டேரெண்டாப் பறவாயில்ல… எல்லாம் வற்றாப்பிள்ள ஆச்சிதான் பாத்துத் தரோணும்… வாற வைகாசிக்குப் போய் பொங்கலும் போடோணும்…”

‘ஓமணே.. இண்டைக்கு அப்பா வந்திட்டே ரெண்டாப் பறவாயில்ல…. கொஞ்ச நேரத்தால போன் அடிச்சுப் பாருங்கோம்மா…”

‘ம்… சரி தம்பி நீ போய் கை, காலக் கழுவீட்டு வா.. தேத்தண்ணி வைச்சுத் தாறன்…”

அம்மாவுடன் கதைத்துக்கொண்டே சைக்கிளை மாமரத்தில் சாத்தினேன். சைக்கிள் கான்ரிலில் தொங்கிய சாப்பாட்டுப் பையை முற்றத்தில் இருந்த கதிரையில் எடுத்து வைத்துவிட்டுக் குந்தில் கிடந்த பற்பொடியை எடுத்துப் பல்லை மினுக்கிக் கொண்டு கிணத்தடியை நோக்கிப் பயணித்தேன். முகம்; கழுவ வாளியில் தண்ணியள்ளியபடி,

‘இரவிரவா உந்த வயல் சுணேக்க கிடந்தது…. வெள்ளத்துக்கால வேற வந்தது.. ரெண்டு வாளிய வாத்திட்டுப் போவம்.”

என்று நினைத்துக்கொண்டு ஐஞ்சாறு வாளித் தண்ணீரை மேலில் வாத்துவிட்டு வந்தேன். வந்தனான் சுவாமி அறைக்குச் சென்று,

‘அம்மா ஏழுமணியாகீட்டு… சாப்பாட்ட வேகமாக் கட்டித்தாணே…”

என்றபடி ஓடிச்சென்று பள்ளிக்கூடத்திற்கு வெளிக்கிட்டுப் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வருகையில், சாப்பாட்டுப் பார்சலையும், தண்ணிர்ப் போத்தலையும் அம்மா, கொண்டுவந்து புத்தகப்பைக்குள் வைத்துவிட்டார். வைத்ததும் தான் தாமதம்,

‘அம்மா பாய்…. பாய்…. அப்பாவோட கதையுங்கோ மறக்காம…”

என்று கத்தியபடி மாமரத்தில் சாத்திக் கிடந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தை நோக்கி மிதிக்கத் தொடங்கினேன்.

‘ஓமப்பு… பாய்…பாய்;… கவனமாப் பாத்துச் சிலோவாப் போவப்பு…”

என்று அம்மா கூறுவது என் காதுகளுக்குக் கேட்டது. பள்ளிக்கூடம் வழமையாகவே நகர்ந்தாலும் என் மனம் அமைதியிழந்திருப்பதை உணர்ந்தேன். வயலின் நினைவுகள் மனதில் வந்து வந்து போனபடியே இருக்க, ஒருமாதிரி எப்போது பள்ளிக்கூடம் விடும்? என்ற நினைப்பில் அன்றைய பாடங்களை விருப்பமின்றியே படிக்கவேண்டியிருந்தது. அம்மா தந்த சாப்பாட்டையும் என் நண்பர்களே உண்டார்கள். வயலில் நடந்த நிகழ்வுகளை என் நண்பர்களிடம் கூறி ஆறுதல் தேடிக் கொண்டேன். பள்ளி முடியும் மணி ஒலித்ததும்தான் தாமதம், சற்றும் தாமதிக்காமல் சைக்கிளை எடுத்து மிதித்தபடி வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். அப்பா வந்திருப்பார் என்ற நினைப்பே மனதில் இருந்தது. வீட்டிற்குச் சென்றவுடன்தான் அப்பா வரவில்லை என்பது தெரிந்தது.

‘அம்மா… அம்மா…..அப்பா போன் எடுத்தவரா?…”

‘விடிய எடுத்தனான் கோல் தூக்கேல்ல… ஏதும் அலுவலா நிண்டிருப்பேரோ தெரியா.. பேந்து நான் திருப்பி எடுக்கேல்ல… பாத்திட்டு எடுப்பே ரெண்டு விட்டிற்றன்…”

என்றபடி அடுப்படிக்குள்ளிருந்து அம்மா வெளியேறினார்.

‘அப்ப திருப்பி ஒருக்கா எடுத்துப் பாப்பமணே…. இண்டைக்கு வாரேரோ எண்டு கேளுங்க….”

‘முதல் சாப்பிடு… பிறகு எடுத்து கதைப்பம்.. வா.. வா… கை, கால்களக் கழுவீட்டு வா…”

என்றபடி அம்மா மீண்டும் குசினிக்குள் சென்றார்;. எனக்குச் சாப்பாடு போடுவதற்காகவே அவர் குசினிக்குள் செல்வது எனக்குப் புரிந்தது. நானும் கழுசான்களை கழற்றிக் கொடியில் பொட்டுவிட்டுக் கை, கால்களைக் கழுவிவந்து அம்மா போட்டுத் தந்த சாப்பாட்டை உண்டேன். என்னவோ தெரியவில்லை. இன்று பள்ளிக்கூடத்திலும் சாப்பிடவில்லை. ஆனாலும் இப்போதும் பசிக்காமலே இருந்தது.

‘அப்பா ஏன் போன் எடுக்கேல்ல?”

‘முதல்ல நீ கதைக்காமச் சாப்பிடு… பேந்து கோல் எடுத்துப் பாப்பம்..”

நான் அப்பாவுக்குக் கோல் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அம்மா போட்டுத் தந்த சாப்பாட்டைத் தின்றுவிட்டு எஞ்சியதை முற்றத்தில் வாய்பார்த்துக்கொண்டு நின்ற என் கண்ணமாவுக்கு வைத்துவிட்டு வந்தேன். கண்ணம்மாவும் வைச்ச சோற்றைத் தின்றுவிட்டு, என்பின்னாலேயே வாலையாட்டியபடி வந்து வீட்டு வாசலடியில் நின்றுகொண்டது.

சாப்பிட்ட கோப்பையை அடுப்படிப் பறனில் வைத்துவிட்டு, வீட்டு மேசையிலிருந்த போனை எடுத்து அப்பாவுக்குக் கோல் எடுத்தேன்.
‘கலோ…. கலோ….”
என்று அப்பா பேசுவதற்கிடையில் நான் முந்திக்கொண்டேன்.

‘அப்பா.. அப்பா… ஏனப்பா போனெடுக்கேல்ல?… ஐசி எடுத்தாச்சோப்பா?… எப்ப வாறியள்?…”

‘ஓம் தம்பி… அம்மா எங்க?… இப்பத்தான் அலுவல முடிச்சிட்டு வெளியில வந்தனான். இனித்தான் பஸ் எடுக்கோணும்… உங்க வர எப்பிடியும் பன்ரெண்டத் தாண்டீரும் எண்டு நினைக்கிறன்….”

‘அம்மா கிணத்தடியில உடுப்புத் தோச்சுக் கொண்டு நிக்கிறாப்பா… சாப்பிட்டீங்களோ?”

‘இனித்தான் சாப்பிடோனும்.. என்ன தம்பீ… இரவு சரியான மழையாம்.. சரியான வெள்ளமெண்டு பக்கத்து வயல் குமார் போனெடுத்துச் சொன்னவன்… பகலும் மழையோ தம்பீ?..”

‘ஓமப்பா.. இரவிரவாச் சரியான மழை… விடிய எழும்பீப் பாக்கிறன் சரியான வெள்ளம்…. வயலை எல்லாம் மூடிப் பாயுது… பேந்து மழை பெய்யேல்ல.. எப்பிடியும் இப்ப வடிஞ் சிருக்குமப்பா…”

‘தம்பி… வெள்ளம் வடிஞ்சா இரவைக்குக் காவலுக்குப் போ… நான் இரவைக்கு வந்திடுவன் தானே…”

‘ஓமப்பா… சரி போறன்…”

என்றபடி போனை நிப்பாட்டிவிட்டுப் போய் மாமரத்தில் கட்டியிருந்த அம்மாவின் சேலை ஊஞ்சலில் சரிந்தேன்… மாமரத்துக் குளிர்ந்த தென்றல் என்னைத் தாலாட்டித் தூங்க வைத்துக்கொண்டிருந்தது. பொழுதும் நகர்ந்து கொண்டிருந்தது. நேரம் மாலை நான்கு மணியிருக்கும்.

‘தம்பீ தம்பீ…”

‘என்னணே… நித்திர கொள்ளுறன் எழுப்பிறியள்…”

‘ஒருக்கா வயலடிக்குப் போயிட்டு வாப்பா… வெள்ளம் வடிஞ்சிட்டோண்டு பாத்திட்டு வா செல்லம்…. அப்பா எனக்கு இப்ப போன் எடுத்துக் கதைச்சவர்.. பஸ் ஏறிட்டேராம்…. இஞ்ச வர நடுச்சாமம் ஆகுமெண்டு சொன்னவர்… வெள்ளம் வடிஞ்சா உன்னக் காவலுக்கு அனுப்பச் சொன்னவர்.”

‘சரியணே… பாத்திட்டு வாறன்…”

மாமரத்தில் சாத்திக்கிடந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு வயலை நோக்கிப் புறப்பட்டேன். சூரியனும் தன் கதிர்களால் சூடேற்றுவதை இன்னும்தான் குறைக்கவில்லை. ஆனாலும் நேரம் மாலை நான்கைக் கடந்துகொண்டிருந்தது. வயலடிக்குச் சென்று பார்த்தபோது சற்று நிம்மதியாக இருந்தது. வெள்ளம் வடிந்திருந்தது.

‘கடவுளே பிள்ளையாரப்பா…. நீதான் எல்லாத் துக்கும் துணையப்பா…”

என்றபடி மறுபடியும் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். காட்டு வீதியில் வயல்களைப் பார்த்துவிட்டு வருபவர்களும், பார்க்கப் போய்க்கொண்டிருப்பவர்களுமே தென்பட்டனர். நான் வீட்டு வாசலில் சைக்கிளை நிப்பாட்டுவதை அம்மா கண்டு விட்டார்.

‘தம்பீ என்னப்பு.. வெள்ளம் என்னமாதி…?”

‘ஓமணே அம்மா… வெள்ளம் எல்லாம் வடிஞ்சிட்டு.. இரவைக்குக் காவலுக்குப் போகோணும்தான்… சாப்பாட்டக் கட்டுங்கோ… வெள்ளனப் போனாத்தான் தீவறைக்குக் கொஞ்சம் விறகுகள் தேடலாம்.”

என்னுடைய கதையைக் கேட்டபடி குசிக்குச் சென்றவர், என்னைத் திரும்பிப் பார்த்தபடி,

‘தம்பி டேய்…. வெள்ளம் வடிஞ்சா நாதண்ணையும் லயலுக்குக் காவலுக்குப் போவாராம் எண்டு அப்பா சொன்னவர். ஏதும் பிரச்சினை எண்டா அவரக் கூப்பிடு என..”

‘ம்… சரியணே…”

பொழுதும் சென்றுகொண்டிருந்தது. நானும் வயலுக்குப் போவதற்குரிய ஆயத்தத்தோடு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வருகையில், அம்மாவும் சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு வந்து பைக்குள் வைத்து விட்டார்.

‘சரியம்மா… நான் வெளிக்கிடுறன்… நாதண்ணை வீட்டபோய் அவரயும் பாத்திட்டுப் போறன்…”

என்றபடி கான்ரிலில் சாப்பாட்டுப் பையைக் கொழுவிவிட்டுச் சைக்கிளை மிதிக்கத்தொடங்கினேன்.

‘தம்பி கவனமப்பு….”

என்று அம்மா சொல்லும் சத்தம் என் காதுகளுக்குள் விழுந்துகொண்டிருந்தது. போன வேகத்தில் கால்களால் பிறேக் பிடித்து நாதண்ணையின் வளவுவாசலில் சைக்கிளை நிப்பாட்டினேன்.

‘நாதண்ணோய்… நாதண்ணோய்…”

‘யாராடாப்பு?… வாவன் உள்ளுக்குள்ளை…”

சைக்கிளை உருட்டிக்கொண்டு வளவுக்குள் நுழைந்தேன்.

‘அட நீயே…. கொப்பர் சொன்னவர்… தான் கொழும்பில நிக்கிறேராம்… நீதான் காவலாமெண்டு… சரி ஒண்டும் யோசிக்காத பக்கத்தில நாங்கள் இருக்கிறம்தானே… கொஞ்சம் பொறு.. சாப்பாட்டக் கட்டீற்று வெளிக்கிடுவம்.”

என்றபடி வீட்டுக்குள் நுழைந்தவர், சிறிது நேரத்தால் தோளில் பை ஒன்றைச் சுமந்தபடி வெளியில் வந்தார்.

‘சரியடாப்பு… நாங்க வெளிக்கிடுவமே?…”

‘ஓமண்ண வெளிக்கிடுவம்..”

என்று அவருக்குப் பதில் சொன்னபடி சைக்கிளைத் திருப்பி வயலை நோக்கிப் பயணித்தோம். வயல்காட்டு வீதிகளில் காவலுக்குச் செல்பவர்களின் காட்சியே தென்பட்டுக் கொண்டிருந்தன. இருவரும் கதைத்தபடியே வயலை அடைந்தோம்.

‘தம்பி.. நான் என்ர கொட்டிலுக்கு வெளிக்கிடுறன்… நீ போய்த் தீவறையக் கொட்டிலுக்க போட்டிற்று இரு… ஏதும் பிரச்சினை எண்டா… சத்தம்போட்டு லைற்றக் கொட்டில்பக்கம் அடிச்சியெண்டா… வருவன்.. சரியே?…”

‘ஓம் நாதண்ண…”

நாதண்ணையும் அவரின் வயல் குடிலைநோக்கிப் புறப்பட்டார். நான் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்து குடிலுக்கு அருகில் இருந்த பாலைமரத்தில் சாத்தி விட்டு, குடிலுக்குச் சென்றேன். வயலில் தண்ணீர் வடிந்து பாதம் மூழ்கும் அளவிற்குப் பாய்ந்து கொண்டிருந்தது. எங்கட குடில், புத்துப் பிட்டியில் போட்டிருந்ததால் தண்ணீர் வெள்ளம் நன்றாகவே வடிந்திருந்தது. குடிலுக்குள் நுழைந்தவுடன் பறனைக் கிளீன் செய்துவிட்டுக் குடிலுக்குள் கிடந்த விறகுகளை எடுத்துத் தீவறை மூட்டினேன். வெள்ளத்தில் நனைந்து ஈரம் ஊறிப்போய்க் கிடந்த விறகுகள் என்றபடியால், நெருப்பு மூட்டக் கஸ்டமாய் இருந்தது. ஒருமாதிரி வயல் வெட்டை அருகுகளில் நின்ற பாலை மரங்களிலிருந்து விழுந்து கிடந்த விறகுகளைக் கொண்டு வந்து தீவறையை மூட்டினேன். விறகுகள் ஈரம் என்றாலும் சிறிது நேரத்தில் முயற்சி பலனளித்தது. கொட்டில் கூரையில் செருகிக்கிடந்த சொப்பின் பைகளையும், சாப்பாட்டுப்பார்சல் கடதாசிகளையும் பயன்படுத்தித் தீவறையை மூட்டிக் கொண்டேன். இருளும் சூழத் தொடங்கியது.

வயல் பகுதிகள் வழமைக்கு மாறாக அமைதியாகவே இருந்தன. யானைகளின் பிளிறல்களும், நரிகளின் ஊளைகளும் கேட்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரங்களில் காவற் குடில்களில் எரியும் தீவறை வெளிச்சங்களே தென்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்போது வயற்காவலுக்கு எல்லோரும் வந்திருப்பதை உணர்ந்தேன். இன்று மழை பெய்யவில்லை. இடி இடிக்கவில்லை. கூதற் காற்று வீசி என்னை நடுங்கவைக்கவில்லை. அமைதியாகவே பொழுது கழிந்து கொண்டிருந்தது. இன்று எனக்கு வேளைக்குப் பசிக்கத் தொடங்கியது. பறனில் ஏறி இருந்தபடி சாப்பாட்டுப் பார்சலைப் பிரித்துச் சாப்பிட்டு விட்டுக் கைகளைக் கழுவிக்கொண்டேன். நேரம் இப்போது ஏழைத் தாண்டிக்கொண்டிருந்தது.

குடில் தாவாரத்துக்குக் கீழால் தெரியும் வானத்தில், நட்சத்திரங்கள் ஒன்றிரண்டு மின்னிக்கொண்டிருந்தன. அப்படியே குடில் கப்பில் கொழுவிக் கிடந்த றேடியோவை எடுத்துப் பாட்டைப் போட்டுவிட்டு மறுபடியும் அப்படியே கப்பில் கொழுவிவிட்டேன். சூரியன் எப். எம்மில் அருமையான பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. பாடல்களைக் கேட்டுவிட்டுக் கற்பனைகளில் மனம் பறந்துகொண்டிருந்தது. ஏதோ நினைவு வந்து பறனிலிருந்தபடியே லைற்றை எடுத்து வயல்பகுதிகளுக்கு அடித்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டேன். நேரமும் சென்றுகொண்டிருந்தது.

பாடல்களில் மனதைப் பறிகொடுத்துவிட்டுப் பறனில் மல்லாக்காய்க் கிடந்தேன். வேளைக்குச் சாப்பிடதோ? என்னவோ? என்னை அறியாமலேயே கண்கள் மூடிக் கொண்டன. நல்ல நித்திரை. திடீரெனப் பெரிய சத்தம். காட்டு யானைகள் வயலுக்குள் இறங்கி விட்டன. லைற்றை அடித்துப் பக்கத்துக் கொட்டில்களில் கிடந்தவர்களைக் கூப்பிட்டுச் சத்தம் போட்டேன். யாரும் வரவில்லை. என் சத்தமும் அவர்களுக்கு விழுந்ததாய்த் தெரியவில்லை. ஓடவும் முடியாது. யானைகள் குடிலைச் சூழ்ந்த வரவைகளில் இறங்கிக் குட்டிகளோடு நாசப்படுத்திக்கொண்டிருந்தன. தீவறை விறகுகளை எடுத்துப் பொறி பறக்க எறிந்தேன். குடிலுக்குள் கிடந்த வெடிகளைக் கொழுத்தி எறிந்தேன். மண்ணெண்ணையைத் தோய்த்துத் தீப்பந்தத்தைக் கொழுத்திச் சூழற்றினேன். யானைகள் செல்வதாய் தெரியவில்லை. எல்லாம் வயல்களை நாசப்படுத்திக்கொண்டிருந்தன.

குடிலை, யானைகள் நெருங்காதபடி தீவறைகளைப் பெரிதாக மூட்டி, லைற்றை அடித்துப் பக்கத்துக் குடில்காரர்களைக் கூப்பிட்டுக் கத்தத்தொடங்கினேன். வயலுக்குள் இறங்கி ஓடவும் முடியவில்லை. குட்டிகளோடு யானைகள் நிற்பதால் அடித்துக் கால்களால் உழக்கியே கொன்றுவிடும்.

மனதுக்குள் பெரும் பயத்துடன் அழுதபடி நெருப்புக் கொள்ளிகளைக் கைகளில் வைத்துச் சுற்றிக்கொண்டு வாய்விட்டுக் குழறிக்கொண்டிருந்தேன். யானைகளும் நெருங்கிக் குடிலை நோக்கி வந்துகொண்டிருந்தன. பின்னால் நெருங்கிய யானை ஒன்று குடிலை இழுத்து விழுத்துவதை உணர்ந்தேன்.

‘என்ரை அம்மா….”

என்றபடி பெரியதாகக் குழறிக்கொண்டு பறனிலிருந்து குதித்துத் தீவறை விறகினை எடுத்துத் தணல் பறக்கச் செய்தபடி வயலுக்குள் இறங்கி ஓடியபோது, கால் தடக்கி நிலத்தில் சரிந்தேன். அதன்பின் என்னால் எழுந்து ஓட முடியவில்லை.

‘என்ரை ஐயோ… அம்மா…”

என்றபடி கண்களைத் திறந்தேன். பறனுக்குக் கீழே என் உடல் கிடந்தது. பொழுதும் விடிந்து கிடந்தது. யானைகளின் ஊசலாட்டமின்றி வயலும் அமைதியாய் இருந்தது. அப்போதுதான் நான் கண்டது கனவு என்பது புரிந்தது அதை உறுதிப்படுத்தும் விதமாய் கண்ணீரைத் துடைத்தபடி கைகள் இருக்க, கண்கள் வயலைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தன…

*************

Related posts

தமிழ் சமுதாயத்தில் உள ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வதில் ஏற்படுகின்ற சவால்கள்

Thumi202121

கறுப்புகளின் வெறுப்பு

Thumi202121

வெற்றிகரமாக நடைபெற்ற பயிற்சிப்பட்டறை

Thumi202121

Leave a Comment