இதழ் 63

வினோத உலகம் – 28

மனித உடலிலுள்ள 423 உள் உறுப்புகளின் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி பொகவந்தலாவையைச் சேர்ந்த கனிஷிகா என்ற 8 வயது பாடசாலை மாணவி சோழன் உலக சாதனை புத்தகத்தில் அதிக ஞாபகசக்தி கொண்டவர்களுள் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

நல்ல வாசனை மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் என ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றனர். முதலில் இவர்களின் ஞாபக சக்தி, வாய்மொழி கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உட்பட பல நரம்பியல்-உளவியல் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பிறகு ஆராய்ச்சியாளர்கள் இவர்களை இரு குழுக்களாக பிரித்தனர். அவர்களில் ஒரு குழுவினரிடம் ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் முதலிய வாசம் கொண்ட இயற்கையான எண்ணெயை தொடர்ந்து நுகர வைத்தனர். ஒரு கருவியை கொண்டு காற்றில் செலுத்தப்படும் இந்த வாசத்தை தினமும் இரவில் 2 மணி நேரம், வீட்டில் பல இடங்களிலிருந்தும் அவர்கள் முகரும்படி செய்யப்பட்டது. இதே போன்று தினமும் 2 மணி நேரம், மற்றொரு குழுவினரிடம் தரமான வாசமில்லாத ஒரு பொருள் முகர செய்யப்பட்டது. 6 மாதங்கள் இந்த நடவடிக்கை தொடர்ந்தது. 6 மாதங்கள் கடந்ததும், அவர்களிடம் மீண்டும் நரம்பியல்-உளவியல் திறன் பரிசோதிக்கப்பட்டது. இதில் நல்ல வாசனையை முகர்ந்தவர்களின் முடிவெடுக்கும் திறன் முன்பிருந்ததை விட அதிகரித்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். மேலும், அந்த குழுவில் உள்ளவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைத்ததாகவும் கண்டறிந்துள்ளனர். நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நல்ல வாசம் இருக்கும்படியாக வைத்து கொண்டால் நமது மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் என்றும் வயதானால் தோன்றும் ஞாபக சக்தி குறைபாடுகள் சம்பந்தமான நோய்கள் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

சீனாவில் செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இது தொடர்பாக சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரமும் 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் 2 மணி நேரம் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போனில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட கூடாது. 18 வயதுக்குட்பட்டவர்கள் மொபைல் சாதனங்களில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை இணையத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் பேஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது. குழந்தைகளின் வயதை உறுதி செய்வதற்கான அமைப்பும் ஸ்மார்ட்போனில் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவை வழங்குபவர்கள், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேர வரம்புகளில் இருந்து விலக்கு பெற பெற்றோர் கேட்டுக்கொண்டால் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடல்கள் மற்றும் ஆடியோ உள்ளடக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் செய்தி சார்ந்த உள்ளடக்கம் மட்டுமே காட்டப்பட வேண்டும். தவறான பழக்கத்தை தரும் உள்ளடக்கத்தை வழங்காமல் இப்போதே உறுதி செய்யுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீனா அரசு அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அங்கெல்லாம் வீடுகளில் அறைகளை குளிரூட்ட ஏர் கண்டிஷனர்கள் அவசியமான சாதனமாகி விட்டது. இச்சாதனங்களின் உதவியால் வெப்பம் சார்ந்த உடல் ஆரோக்கிய குறைபாடுகள் குறைவது மட்டுமின்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் இது குறைக்கிறது. உயிர் வாழ்வதற்கே இவை அவசியமான கருவிகளாக மாறி விட்டன. ஆனால் ஏர் கண்டிஷனர்கள் அதிக மின் சக்தி தேவைப்படும் சாதனங்கள். இதனால் இவற்றின் அதிக பயன்பாடு பருவநிலை நெருக்கடிக்கு (climate crisis) ஒரு காரணமாக அமைகிறது. சர்வதேச ஆற்றல் ஏஜென்சி அளிக்கும் தகவல்களின்படி, உலகம் முழுவதும் வெளியிடப்படும் 37 பில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு அளவில், சுமார் 1 பில்லியன் மெட்ரிக் டன் அளவு வெளியேற்றத்திற்கு ஏர் கண்டிஷனிங் சாதனங்களே காரணமாகிறது. இதன் மூலம் மீண்டும் காற்றில் அதிக வெப்பம் உருவாகும். இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது. 2050 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஏர் கண்டிஷனர்கள் பொருத்தப்பட்ட குடும்பங்களின் விகிதம் 10% முதல் 40% வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏர் கண்டிஷனர்கள் பொதுவாக ஃப்ளோரோகார்பன் வாயுக்களை அதன் இயக்கத்திற்காக பயன்படுத்துகின்றன. அந்த வாயு வளிமண்டலத்தில் கலக்கும். எனவே, கரியமில வாயு வெளியேறுவதால் வரும் வெப்பமயமாதலை விட, இந்த வாயுவால் ஆயிரக்கணக்கான மடங்கு அதிக வெப்பமயமாதல் நிகழ வாய்ப்புண்டு. மேலும், மின்சாரக் கட்டணத்தின் விலை ஏறும் போது இவற்றின் பயன்பாடு குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை மாற்றியமைக்கலாம். புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி வழிகளை அதிகரிப்பதன் மூலமும், குறைந்த ஆற்றல் கொண்ட ஏர் கண்டிஷனர்களை உருவாக்குவதன் மூலமும், மற்றும் இதர குளிரூட்டும் தொழில்நுட்பங்களை பெருக்குவதன் மூலமும், இந்த தீய சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -07

Thumi202121

தமிழ் சமுதாயத்தில் உள ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வதில் ஏற்படுகின்ற சவால்கள்

Thumi202121

வெற்றிகரமாக நடைபெற்ற பயிற்சிப்பட்டறை

Thumi202121

Leave a Comment