இதழ் 63

கறுப்புகளின் வெறுப்பு

பெரிய கடல் வெளி. கரையோரமாய் ஒரு கம்பம். தொடக்கத்தில் அந்தக் கம்பத்தை ஒரே ஒரு கறுப்புத்தான் பற்றிக் கொண்டிருந்தது. காற்றும் பஞ்சமின்றி வீசியது. கம்பத்தை பற்றியிருந்த கறுப்பும் காற்றின் தயவில் கவலை மறந்து ஆடிக் கொண்டிருந்தது. ஒரு நொடியில் அதன் நிம்மதி குலையும்படி ஒரு சம்பவம் நடந்தது. எங்கிருந்தோ அந்தக் கொடிக்கம்பத்தில் வந்தமர்ந்தது இன்னொரு கறுப்பு. வந்த கறுப்பு தன் சிறகுகள் களைப்பாற அமைதி கொள்ளையில் இருந்த கறுப்பு ஆவேசமாய் சிறகடித்தது. களைப்பில் வந்த கறுப்பிற்கு கோபம் தலைக்கேறியது.

‘உனக்கு என்னதான் ஆகிவிட்டது?’

‘நீ என்னில் இருப்பதுதான் ஆகக்கூடாதது. ஆகிவிட்டது’

‘ஏன் அப்படி?’

‘இது என்னுடைய கம்பம். எனக்காக மட்டுமே நடப்பட்டுள்ளது. நீ இப்படி வந்தமர்வது அநாகரிகமாக தெரியவில்லையா உனக்கு?’

‘ஓகோ.. அப்படியா?? கலகலவென்று கரைந்தது காகம்.
‘உனக்கான கம்பம் இதென்றால் நீ ஏன் இன்னும் இதைப் பற்றியிருக்கிறாய்?? விட்டுப் பறந்து செல்ல வேண்டியதுதானே… உனக்கானது மட்டுமே இது என்றால் இக்கம்பம் உன்னைத் தேடி வருமல்லவா??…’

‘நான் தனியாய் பறப்பதா? கம்பத்தை விட்டு எப்படி என்னால் தனியாக பறக்க முடியும்? அது முடியாது…’

‘என்னால் முடியுமே.. தனியாக மட்டுமல்ல; உன் கம்பத்தை சுமந்துகொண்டு கூட என்னால் பறக்கமுடியுமே… இப்போது சொல் கம்பம் யாருக்கு சொந்தமானது?’

‘என்ன குழப்பம் விளைவிக்கவென்றே வந்தாயோ’ கோபமாய் கேட்டது கொடி.

‘குழப்பம் விளைவிப்பது உன் வேலையல்லவா? ஊரெல்லாம் குழப்பம் என்பதை அறிவிக்க உன்னை தூக்கிக் கொண்டுதானே ஊர்வலம் போகிறார்கள்.. குழப்பத்தின் குறியீடே நீதான்.. நீ என்னை குழப்பம் விளைவிக்க வந்ததாய் சொல்கிறாயா… வேடிக்கை!..’

‘ஆகா…. ஊரெல்லாம் சுற்றி வருபவனல்லவா நீ… அந்த அனுபவத்தி்ல் ஆணவம் காட்டுகிறாயா என்னிடம்… பேதைக் காக்கையே புத்தன் கூட சுற்றித்திருந்த வரை ஞானம் கைகூடவில்லை. ஓரிடத்தில் நிஷ்டை கொண்டபின்தான் ஞானம் பெற்றான். நீ சுற்றிச் சுற்றி உலகறிந்ததை விட ஓரிடத்தில் நின்று சிந்தையில் நான் அறிந்தது அதிகம். அதை மறந்துவிடாதே..’

‘ஆமாம் ஆமாம் உன் சிந்தையை நிந்தை செய்ய என்னால் முடியுமா? அசைய முடியா அதிசய பறவையே.. நின்ற இடத்திலே ஞானம் பெற்ற மேதாவியே… ஒன்றைப் புரிந்து கொள்.. தங்கள் மூதாதையரின் பிரதிநிதியாக மட்டுமன்றி, எல்லாம் வல்ல சனிபகவானின் பிரதிநிதியாகவும் என்னை வணங்கி, என் வரவுக்காக காத்திருந்து, நான் உண்ட பின்புதான் இந்த மானிடர்கள் உணவையே உண்கிறார்கள் என்றால் என் சிறப்பை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.”

” நல்ல பகிடி… பிரதிநிதியாரே… புரட்டாதி சனி தவிரத்து இன்னொரு நாளையேனும் யோசித்துப்பாரும். புரட்டாதி ஞாயிறை யோசியும்… கள்ளனான நீ எதையாவது களவெடுத்து விடுவாயோ என்று கல்லாலடித்துக் மனிதர்கள் கலைப்பதை மறந்துவிட்டாயா? வருடம் முழுவதும் கல்லடி வாங்கும் உனக்கு ஓரிரு நாட்கள் ஏதோ இரக்கம் காட்டினால் கடவுள் என்று உன்னை நினைத்துக் கொள்வாயோ?”

“போதும் நிறுத்து! உனக்கு என்மேல் என்ன பகை? இப்படி எதற்கு காற்றின் துணையோடு படபடத்துக் கொண்டே பேசுகிறாய்? நான் என்ன செய்தேன் உனக்கு? எதிர்ப்பின் அடையாளமாகவே மாறிவிட்டதால் எல்லோரையும் எதிரி என்றே நினைத்து பழகிவிட்டாயோ?”

‘பின்னே நீ என்னுடன் நட்பு பாராட்டவா வந்தாய்? வந்ததுமே என் கொடிக்கம்பத்தை பங்கு போடுகிறாய்.. உன்னை எதிரி என்று உணராமல் நட்பு என நம்பி ஏமாறச் சொல்கிறாயா?’

‘முட்டாளே… கரவா கரைந்துண்ணும் காக்கை நானாவேன். பகிர்ந்துண்பதே எம் மரபின் பழக்கம். அதை அறியமாட்டாயா நீ..’

‘ஆமாம் ஆமாம் பகிர்ந்துண்பது உன் பழக்கம்தான்… ஆனால் நீ பகிர்வது உங்களிடத்தில் தானே. எங்கே உங்கள் எதிரி ஆந்தையுடன் பகிர்ந்துண்ணுங்கள் பார்ப்போம்.. பயந்து விலகியே விடுவாய். இப்போது என்னிடம் வீரம் பேசுகிறாய்’

‘எம் எதிரியை பார்த்து நாம் அஞ்சுவது கூட நம் அறிவின் பலம் தான் பேதைக் கொடியே.. பகலில் பார்வை தெரியாத ஆந்தையை எம்மாலும் வெல்ல முடியும். நாம் கணம் பார்த்து பதுங்கியிருக்கிறோம். பயந்தல்ல. “பகல் வெல்லும் கூகையை காக்கை” என்று வள்ளுவரே கண்டறிந்து எழுதிவிட்டார். இது தெரியாமல் எம் பலவீனத்தை பற்றி பேசுகிறாய் நீ..’

‘போதும் நிறுத்து .. உன் ஈனச் செயல்களுக்கும் தந்திரங்களுக்கும் விளக்கங்கள் எனக்கெதற்கு.. ஐந்தறிவு காக்கையே. உன் அறிவுத்திறன் கொண்டு என்னை முட்டாளாக்க முயலாதே. வடை சுட்ட பாட்டியை நீ முட்டாளாக்கியதால் நரி உன்னை முட்டாளாக்கிய கதையெல்லாம் உலகறியும். எப்போதும் அதி புத்திசாலி நீதான் என்ற எண்ணத்தை மாற்று . அஃறிணை நானாலும் என் பறத்தலில் இந்த சமூகத்திற்கு ஒரு செய்தி இருக்கிறது. இந்த சமூகத்தின் பெரிய மாற்றங்களின் முதல்புள்ளி நானாவேன்.’

‘இதில் உனக்கு இத்தனை கர்வமா? ஏன் என் பறத்தலில் மட்டும் செய்தி இல்லையா? சென்று கேட்டுப்பார்.. என் கரைதல்தான் ஒவ்வொரு வீட்டிற்கும் இங்கு செய்தி சொல்லும். என் செயலெல்லாமே சமூகத்திற்கான எச்சரிக்கைதான். வானம் தோன்றிய காலம் தொட்டு சகுனம் சொல்லும் “சகுனப்புள்” தான் என் பெயரே..’

‘என்ன தொன்று தொட்ட பெருமை பாடுகிறாயா? நான் சொல்லவா? கறுப்பிலும் நான்தான் தூய்மையானவன். பெருந்தலைவர்கள் பலர் என்னைத் தூக்கியே பல களங்களில் வெற்றி கொண்டுள்ளனர். என் புனிதம் உன்னிடம் இல்லை. உன்னிடம் பேசுவதில் கூட இப்போது என் புனிதம் கெடலாம்.’

‘ஓகோ புனிதமானவரே.. நீ சொல்கிற பொருந்தலைவர்களின் சிலைகளின் சிரம்தான் இன்று பெரும்பாலும் என் கழிவறை.. உன் புனிதத்தை இதைவிடவா நான் கெடுக்க முடியும்…’ கலகலவென கரைந்தது மீண்டும்.

பகை முற்றியது. காற்றும் பரபரப்பானது.

‘போதும் நிறுத்து.. இப்போது சொல்கிறேன். என் கம்பத்தை விட்டு விலகிச் செல். உனக்கு இங்கு இடம் கிடையாது. வேறெங்காவது உனக்கேற்ற அழுக்குகளை போய் பற்றிக்கொள்…’

‘அழுக்குகளையும் என் அலகு கொண்டு அழகாக்குபவள் நான்… உன்னைப் போல் அர்த்தமற்று எதற்கு பயனின்றி ஆடிக் கொண்டிருப்பவள் நானல்ல…’

கறுப்புகள் இரண்டுபட்டதால் காற்றுக்கு கொண்டாட்டம். இன்னும் ஆனந்தமாய் ஆவேசமாய் வீசியது.

கொடி வேகவேகமாய் படபடத்து கொடிக்கம்பத்தையே அசைக்க நினைத்தது. காகத்தை அப்புறப்படுத்த அது முயற்சித்துக் கொண்டேயிருந்தது.

‘முட்டாள் கொடியே.. நான் நம்பியிருப்பது உன் கம்பத்தை அல்ல. என் சிறகுகளை.. என்னால் எக்கணத்திலும் இதிலிருந்து பறக்க முடியும். எந்த கம்பத்திலோ மரத்திலோ சென்றமர முடியும். நீதான் இந்தக் கம்பத்தை மட்டுமே நம்பியிருக்கிற ஜீவராசி. என்னை கலைப்பதாய் நினைத்து உன் ஆதாரத்தையே அழித்து விடாதே அமைதி கொள்..… செல்ல முதல் இறுதியாய் ஒன்று சொல்கிறேன் கேள். என் சிறகுகள் என் சுதந்திரம்.. நீ உரிமை கொண்டாடுகிறாயே இந்தக் கொடிக்கம்பம் .. இது உன் சிறை…. மறந்துவிடாதே..’

சொல்லிவிட்டு சிறகடித்துப் பறந்தது காகம்.

ஒரு வகையில் தோற்றுப்போன கண்களைப்போல் காகம் மறையும் வரை கொடி பார்த்துக் கொண்டேயிருந்தது.

காகம் பறந்து சென்றது. அதன் பாதை நீண்டு கொண்டே போனது. பெருங்கடல் பயணத்தில் அது அமர்வதற்கு சிறுதடி கூட ஏதுமில்லை. சிறகுகள் களைத்தன. இதோ இன்னும் சில நொடிகளில் காகம் கடலில் மூழ்கிவிடும். இன்னும் சில நொடிகள் தான்…

அடித்த காற்று பெருங்காற்றானது. அசைந்த கொடியின் வேகம் கொடிக்கம்பத்தையே பெயர்த்துவிட்டது. கடலில் மூழ்கி மிதந்து கொடி அலையோடு கலந்தது. எதிர்ப்பை காட்டும் கொடிக்கு எதிர்நீச்சல் தெரியவில்லை. ஊருக்கு சகுனஞ் சொன்ன பறவைக்கு தன் விதி புரியவில்லை.

இரண்டு கறுப்புகளும் பெருங்கடலில் சங்கமித்து மறைந்தன. இப்போது அலைகளின் தாலாட்டில் அந்தக் கடல் அமைதியாக உறங்கத் தொடங்கியது.

Related posts

வயற்காடு…! (சிறுகதை)

Thumi202121

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -07

Thumi202121

மரண ஊர்வலத்தில் வெடி வெடிக்கும் கலாசாரம் பேராபத்து

Thumi202121

Leave a Comment