விழித்தவரெல்லாம் பிழைத்துக்கொள்வர் எனும் செயற்திட்டத்தின் கீழ் அபயம், சிவபூமி, துமி அமைப்புகள் ஒன்றிணைந்து பாடசாலை தோறும் நடாத்திய கருத்தரங்குகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள் நிகழ்வுகள் யா/இராமநாதன் கல்லூரியில் 12.08.2023 அன்று நடைபெற்றன.
நேர் சிந்தனைகள் எவ்வாறு எங்கள் வாழ்வை முன்னேற்றும் என்பது தொடர்பாகவும், பாடசாலைப் பருவத்தில் கல்வி அதிலும் குறிப்பாக ஆங்கிலக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது தொடர்பாகவும், சமூகவலைத்தளங்களுக்குள் அடிமையாகாது எவ்வாறு வினைத்திறனாக அவற்றை பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும், நாளாந்த கருமங்களை திட்டமிட்டு செய்யவேண்டியதன் அவசியத்தையும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ள மனக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தையும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை முன்னிறுத்தி ஆன்மீகச் சுடர். ரிஷி தொண்டுநாத சுவாமிகள் வழங்கியிருந்தார்கள். மிகவும் சுவாரசியமாக நடந்த இந்த கலந்துரையாடலில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சுவாமி பதில்களை வழங்கியிருந்தார்.
கட்டிளமைப்பருவத்தில் ஏற்படும் பாலியல் ரீதியான சவால்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதற்கான சவால்களை மாணவர்கள் கையாளுதல் எனும் தொனிப்பொருளில் வைத்தியர் ரஜீவ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
எமது மண்ணில் போதைப்பொருட் பாவனையின் இன்றைய நிலவரங்கள் பற்றியும், எவ்வாறு ஒருவன் தன்னை போதைப் பொருளுக்குள் இழக்கிறான் என்பது பற்றியும், போதைப்பொருள் சம்பந்தமாக சமூகத்தில் நிலவும் மௌனம் கலைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், போதைப்பொருள் பாவனையிலிருந்து மாணவர்கள் விலத்தியிருப்பதற்கான வழிவகைகள் பற்றியும், அவற்றில் பெற்றவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் வகிபாகத்தைப் பற்றியும் வைத்தியர். சிவகணேசன் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். சின்னப் பிரச்சினைகளுக்காக போதைப் பொருள் எனும் பெரிய பிரச்சனைக்குள் தாம் சென்றுவிடக்கூடாது என்பது தொடர்பான நல்ல வழிகாட்டலை அவருடனான கலந்துரையாடல் மூலம் தாம் பெற்றுக் கொண்டதாக மாணவர்கள் கூறினார்கள்.
இந்த நிகழ்வுகளின் சிறப்பம்சமாக பங்குபற்றிய மாணவர்கள் முழுமையாக தங்களை இந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்தியிருந்தார்கள். விடயங்களை முழுமையாக உள்வாங்கி இருந்தார்கள். ஒவ்வொரு வளவாளரின் கலந்துரையாடலின் நிறைவிலும் வெவ்வேறு பாடசாலை மாணவர்கள் யாவரும் ஒற்றுமையாக தாமாக எழுந்து, கரகோசத்தோடு வளவாளர்கள் தங்களுக்கு வழங்கிய பயிற்சிக்கு நன்றி கூறியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஒவ்வொரு பாடசாலையிலும் நடைபெற்ற எமது விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர் கருத்தரங்குளின் போது தாமாக எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வந்த மாணவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதை நிறுவுவது போல் இவர்கள் செயற்பாடுகளும் இடம்பெற்றன. இங்கு பெற்ற வாழ்வியல் பயிற்சிகளை தங்கள் பாடசாலையிலும் தாங்கள் வாழும் சமூகத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பதை உணர முடிந்தது.
மீண்டும் மறுநாள் இறுதிநாள் பயிற்சிப்பட்டறைக்கு சகல மாணவர்களும் உரிய நேரத்திற்கு சமூகமளித்திருந்தமை அவர்களின் ஆர்வத்தை காட்டுவதாக இருந்தது.
மாணவர்களுடன் மிக உற்சாகமாக தனி நடிப்பு மூலமும், குழுச் செயற்பாடுகள் ஊடாகவும், வினாக் கொத்துப் படிவங்களை வழங்கியும் மதுபானங்களை எங்கள் வாழ்வில் தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளர் திருமதி. ர. மைதிலி வழங்கியிருந்தார்.
எந்த ஒரு நிகழ்வுக்கும் ஆயத்தமாகும் போது ஒத்திகை பார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதிகரித்து வரும் தற்கொலைகளை தவிர்க்க எவ்வாறு எங்களை மனரீதியாக தயார் செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும், நல்ல நண்பர்களைத் தேடிக் கொள்வதற்கான தேவையையும் பற்றி கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள் மாணவர்களோடு கலந்துரையாடினார். தெரிவு செய்யப்பட்ட இந்த மாணவர்களிடம் இந்த பயிற்சிப் பட்டறை மூலம் பெற்றுக் கொண்ட விடயங்களை பாடசாலையிலும், சமூகத்திலும் கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
நாங்கள் எவ்வாறு எங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் மற்றும் எங்கள் நேரத்தை எவ்வாறு வினைத்திறனாக பயன்படுத்த முடியும் என்பது சமபந்தமாக புவியியல்த்துறை விரிவுரையாளர் திரு. இ. தனுசன் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களை குழுக்களாக இணைத்து, அவர்களின் சிந்தனையாற்றலை தூண்டும் விதமாக ஒரு கலந்துரையாடலை வைத்தியர் ரஜீவ் அவர்கள் மேற்கொண்டிருந்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் அவர் வழங்கிய நடைமுறை பிரச்சனையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை வினைத்திறனாக முன்வைத்திருந்தார்கள்.
இருநாள் பயிற்சிப்பட்டறை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இதில் தாங்கள் கற்ற விடயங்களை சமூகத்திடம் கொண்டு சேர்க்க சகல வழிகளிலும் முயற்சிப்பதாக மாணவர்கள் உறுதியெடுத்துக் கொண்டார்கள். அதன் முதற்கட்டமாக பாடசாலை காலை பிரார்த்தனைகளில் இதனைப் பற்றி மற்றய மாணவர்களுடன் கலந்துரையாடுவதாகவும், சமூகத்தின் மௌனம் கலைக்க தாங்கள் முயல்வதாகவும் மாணவர்கள் கூறினார்கள்.
முதல்நாள் நிகழ்வுகளைப் போலவே மதிய போசனத்தோடு இறுதிநாள் நிகழ்வுகளும் அனைவருக்கும் மனநிறைவானதாக நிறைவு பெற்றன. பங்குபற்றிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வுகளுக்கான அனுமதியினை வழங்கிய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட வட மாகாண கல்வி அமைச்சிற்கும், தமது பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் அனுப்பி வைத்த பாடசாலை அதிபர்களுக்கும், வருகை தந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக நிகழ்வுகளுக்கான மண்டபம் உட்பட சகல வசதிகளையும் ஏற்படுத்தி தந்த யா/இராமநாதன் மகளிர் கல்லூரி அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்திற்கும், தமது பெறுமதிமிக்க நேரத்தையும் கருத்துக்களையும் மாணவர்களுக்கு வழங்கிச் சென்ற சிறப்புமிக்க வளவாளர்களுக்கும், நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்கமைக்க ஆரம்பம் முதல் கடுமையாக உழைத்த நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
1 comment