இதழ் 63

சித்திராங்கதா -59

காவல் செய்யுங்கள்!

ஒரு செய்தி உண்மையாக இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் மனித மனம் அச்செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்றோ அல்லது பொய்யாக இருக்கவேண்டும் என்றோ தனக்கு இணக்கமான ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து நின்று சமாதானம் செய்யும். ஆனால் யார் என்ன சொன்னாலும் உண்மை என்பது தான் நம்புவது மட்டுமே என்று எண்ணவைக்கும் சக்தி காதலிற்கே உண்டு. சித்திராங்கதாவை பொறுத்தவரை வருணகுலத்தான் இறக்கவில்லை என்கிற செய்தியே உண்மை. அதில் அவளிற்கு துளியளவும் ஐயம் இல்லை. ஆதலால் மற்ற எந்த செய்தியையும் குறித்து அவள் கலங்கவில்லை. வருணகுலத்தான் உயிருடன் உள்ளான் என்கிற செய்தி கேட்டு அவள் எந்தப்பூரிப்பும் அடையாமைக்கும் அதுவே காரணம். வருணகுலத்தான் வழங்கியனுப்பிய ஓலையோடு வந்த பெட்டி சித்திராங்கதாவின் அருகில் வைக்கப்பட்டிருந்தது . பெட்டியை மீண்டும் மீண்டும் பார்த்தாள் சித்திராங்கதா. எங்கோ அவள் நினைவில் அந்தப்பெட்டி பதிந்திருந்தது. ஆனால் முழுதாய் ஞாபகத்தில் இல்லை.

நடுக்கூடத்தில் குற்றவாளியாய் கிடந்த சித்திராங்கதாவின் சிந்தையில் என்ன ஓடுகிறது என்பதை அங்கிருந்த எவராலும் ஊகிக்க முடியவில்லை. மஞ்சரி தேவியினதும் மாருதவல்லியினதும் கண்கள் செய்வன ஏதுமறியாமல் பரிதாபம் வழிய சித்திராங்கதாவை பார்த்துக்கொண்டிருந்தன. வருணகுலத்தானிடமிருந்த வந்த ஓலையை வாசிக்க ஆரம்பித்தான் சேவகன்.

‘நல்லை நெடுவேந்தரிற்கு வணக்கங்கள்.. போரின் வியூகங்களை கணத்திற்கு கணம் புதுப்பிக்கவேண்டியுள்ளன. களத்தில் என்ன நடந்தது என்பதை மகிழாந்தகன் தற்சமயம் உங்களுற்கு தெரியப்படுத்தியிருப்பான். உடனுக்குடன் தகவல் தர முடியாமல் போனதை நல்லை வேந்தர் பொறுத்தருள வேண்டுகிறேன். தீர்க்கமான சில முடிவுகளை திடுமென நான் எடுக்க நேர்கிறது. ஆனால் வெற்றிக்கனிக்கான வேட்கையில் நான் பினவாங்கப்போவதில்லை என்பதை இப்போதும் உறுதியளிக்கிறேன். வெற்றி என்பது எமக்கே சொந்தமானது. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் நிலையில் உள்ளேன். தயக்கமின்றி என் மீதான நம்பிக்கையை வேந்தர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிச் செய்தியோடு நல்லைமண்ணிற்கு விரைந்து வர காத்திருக்கிறேன்.

இந்த போராட்டத்திற்காக நல்லைமக்களும், அரசும் தஞ்சைவீரன் வருணகுலத்தான் எனக்களித்த மதிப்பிற்கும் உபசாரத்திற்கும் என அத்தனைக்கும் என் ஆயுள் கடைநாள் வரை கடன் பட்டு நிற்கிறேன்.. இச்சமயமும் தங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தே இவ்வோலையை வேந்தரிற்கு எழுதுகிறேன்.

இந்த விடயத்தை தங்களிடம் கூறுவதில் தயக்கம் என்னுள் இருந்தாலும் அதன் அவசியம் இப்போது அதிகம் என்று கருதுகிறேன்.

இப்போது இந்த ஓலையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் கணத்தில் உங்களோடு பேசிக்கொண்டிருப்பது இந்த வருணகுலத்தானின் இதயம் என்பதை அறிந்திடுக அரசே. போராடுவதற்காக தான் ஈழம் நோக்கி வந்தேன். இந்த போராட்ட களம் தான் என் நோக்கமாக இருந்தது.

அன்று இந்து மகாசமுத்திரத்தில் வங்காள விரிகுடாவை கிழித்துக் கொண்டு என் படைக்கப்பல்கள் ஈழம் நோக்கி வந்தபோது ஈழத்தின் கரைகண்ட கணத்தில் நான் கண்டு வியந்த பேரழகுக் காட்சி – முத்து குளித்து மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிகள் தான். இந்த சிப்பிக் குவியல்களில் இருந்த முத்துக்களின் பேரழகை என் கற்பனைக்கண்களால் அன்று எண்ணிப்பார்த்து வியந்தேன்.
இத்தனை முத்துக்கள் நிறைந்த பொக்கிச தீவிற்குள் நான் நுழையப்போகிறேன் என்ற எண்ணத்தில் களித்தேன். ஆனால் இந்த பெருஞ்சமுத்திரத்தின் முத்தாகவே மின்னும் தீவிற்குள் தான் வந்துவிட்டேன் என்று அன்று முழுதாய் உணரவில்லை.

வந்த நாள் முதல் கொண்டு எனக்கும் படை வீரர்களிற்கும் தேவைக்கதிகமாக எல்லாவற்றையும் உவந்தளித்தீர்கள். வாள் வழங்கும் விழாவில் வாளொடு நீங்கள் வழங்கிய அஸ்வதமங்கல புரவியை போன்றொரு பரிசு வீரனிற்கு வேறிருக்கமுடியுமா? இன்று வரை என்னுடன் என் வழிகாட்டியாய் அதுவே பிரியாதிருக்கின்றது. அனைத்தையும் பார்க்க பார்க்க ஈழத்தின் ஆச்சரியங்களிற்குள் நானே தொலைந்து போனேன். நான் சற்றும் எதிர்பாராத சமயம் என் வாழ்வின் அர்த்தத்தையே காட்டுவது போல் ஒரு நாட்டிய நிகழ்வை நீங்கள் தான் நடத்தி வைத்தீர்கள். இந்த முத்து தீவின் மொத்த அழகும் ஒன்றாய் சேர்ந்து வந்து அபிநயம் கூட்டியது போல் ஓர் உருவம் . பெருவணிகர் மகள் சித்திரங்கதாவை பற்றித்தான் கூறுகிறேன் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். ராணி கல்யாணிதேவியை பற்றி நீங்கள் சொன்னபோது உங்கள் கண்களில் கண்ட அதே பிரகாசத்தை இப்போது என்கண்களிலும் நீங்கள் காண்லாம். சித்திராங்கதாவை நேசிக்கிறேன் என்பது சதாரண வார்த்தைதான். என் நேசத்தை விளக்க ஓர் வார்த்தையை எந்த சமுத்திரத்தில் குளித்தாலும் என்னால் கண்டடைய முடியாது. அவளிற்காகவே பிறந்ததாய் நினைத்தேன். அவளிற்காகவே படைபலம் பெற்றேன். அவளிற்காகவே ஈழம் வந்தேன் என்றும் நம்பத் தொடங்கினேன்.

அவளை சந்திக்கும் நாளிற்காய் நான் தவம் இருந்தேன். அப்படியொரு பொழுதில் அவளுடனான சந்திப்பின் சிறு வாய்ப்பில் தான் அவள் இந்த மண்ணின் மீது கொண்ட காதலையும் புரிந்து கொண்டேன். அவள் என் மீது கொண்ட காதலின் ஆழமே இந்த மண் மீது கொண்ட அன்பின் அக்கறையில் தான் உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன்.

அதையே எதிரிகளும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள் என்று எனக்கன்று சந்தேகம் வந்தது. என் காதல் தேவதையை எதிரிகளிடம் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும்; அவளிற்காக – அவளைக்காப்பதற்காகவே அவளுடன் வன்னிக் கோட்டைக்கு சென்றிருந்தேன். அங்கு ராணி இராஜகாமினி, வன்னியத்தேவனை சந்தித்தது- அதனூடாக நான் கொண்ட ஐயங்கள்- தாங்கள் அவற்றை எனக்கு தெளிவுபடுத்தியது பற்றி எல்லாம் தாங்களே அறிவீர்கள். இந்த எந்த தெளிவும் சித்திராங்கதாவிற்கு கிடைக்கவில்லை. அவளது பதில் கிடைக்காத ஐயங்கள் தங்கள் மீதான பகையாக மாறி இருப்பதை அறிகிறேன். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றாள்; என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பது கூட எனக்குத் தெரியாது. களம்புக முன்னர் கூட அவளை சந்திப்பதற்கு எத்தனையோ முயற்சிகளெடுத்தேன். வேண்டுமென்றே தான் என் சந்திப்பை அவள் நிராகரித்திருக்கிறாள்.

எதார்த்தமாக நான் அவளை சந்தித்தது எத்தனையோ முறை. அவளை நான் சந்திக்க நினைத்தால் அல்லது அவள் என்னை சந்திக்க நினைத்தால் எம் சந்திப்பை இயற்கை நடத்தி வைக்கும். ஆனால் களம்புக முதல் நான் அவளை சந்திக்க எத்தனையோ முயற்சியெடுத்தும் அது நடக்கவில்லை என்றால் அது அவளது கோபத்தின் பலன்தான். அவள் இக்கணம் என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிற்காக நான் என்ன செய்தேன் என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. ஆனால் ஒன்று அவள் எதை எதிர்பார்த்தாளோ- இந்த தேசம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தாளோ அதற்காகவே நான் போராடுகிறேன் என்பதை அவளிற்கு நிச்சயம் புரியவைப்பேன். போரில் வெற்றிவாகை கொண்டு அவள் வேண்டிய தேசத்தை அவளிற்காக நான் கொண்டுவரும் போது அவள் நிச்சயம் என்னை புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையிலே நான் முன்னேறுகிறேன்.

அதுவரை அவளை எந்த ஆபத்தும் சூழ்ந்து கொள்ளாமல் எப்படி காப்பது என்று அறியாமல் குழம்புகிறேன் இச்சமயம். ஆனால் நல்லை வேந்தர் அதை அறிவார் என்று நம்புகிறேன். என் மனதின் ஒரே ஒரு வேண்டுகோள் இதுதான் அரசே. நான் உங்களிடம் இதை கேட்பது முறையாகுமா என்று எனக்கு தெரியவில்லை. கல்யாணிதேவியை காக்க தவறியதாய் நீங்கள் நித்தமும் கொள்கிற வேதனையை நான் நன்கறிவேன். அந்த தைரியத்திலே கேட்கிறேன். என் வேதனையை தங்களை மிஞ்சி அறிய யாருமில்லை. எனக்காக என்னவளை காவல் செய்யுங்கள். இதோ இந்த ஓலையோடு அனுப்பி வைத்துள்ள பெட்டிக்குள் இருப்பது சித்திராங்கதாவின் தகப்பனார் எச்சதத்தனார் எனக்களித்த முத்துக்களாலான மணிமாலையாகும். இந்த மணிமாலையை அவையில் என்கரங்களினால் அவளிற்கு அணிவித்து அவளை மணஞ்செய்ய வல்ல விதியை வேண்டி நிற்கிறேன். அதுவரை அவளை காக்க வேண்டி உங்களிடம் தயவு கூருகிறான் இந்த தஞ்சைவீரன் வருணகுலத்தான். அத்தனைக்கும் நன்றி அரசே!

ஓலை வாசித்து முடிந்தது. அவையில் அமைதியை தவிர எந்தக்குரலும் இல்லை. குளமாகி நின்ற சங்கிலியன் கண்கள் மெல்ல நிமிர்ந்தன.

‘இப்போதாவது சொல்லுங்கள் தந்தையே! நீங்கள் செய்வது சரியா?’

அவையின் மௌனத்தை குலைத்து ஒலித்தது அந்தக்குரல்.

Related posts

மாணவர் மத்தியில் கொரோனாவின் தாக்கம் -07

Thumi202121

வெற்றிகரமாக நடைபெற்ற பயிற்சிப்பட்டறை

Thumi202121

என்னென்ன மாற்றங்கள்

Thumi202121

Leave a Comment