திரும்பும் திசையெல்லாம் ஆலய கோபரங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட புண்ணிய திருப்பூமி என எம்மவர் பெருமைப்பட்டு கொள்ளும் தமிழர் தேசம் எங்கும் இளம் தலைமுறைகளின் சிறப்பாக, பல்கலைகழக மாணவர்களின் தொடர்ச்சியான இழப்புகள் கல்விச்சமூகத்தை திணரச்செய்திருக்கிறது. எவனோ எங்கேயோ என கடந்து செல்ல வேண்டிய விடயமாக நாம் இதனை கருதக்கூடாது. இரண்டு நாள் தலைப்பாரம், உடல் சூடு, சளி என அறிகுறிகள் காட்டிக்கொண்டு வரும் நோயல்ல இது, எம்மோடு இன்று சாதாரணமாக கலந்து பேசி சிரித்து வாழ்கின்ற ஒருவர் மறூநாள் இல்லாமல் போகும் சாபநிலை. அன்பர்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் ஒரு மனிதனை சக மனிதன் கொல்வது எவ்வளவு பாரதூரமான குற்றமோ!! பாவச்செயலோ!! அதை விட பல மடங்கு பாரிய குற்றம் அல்லது பாவச்செயல்தான் தற்கொலை.
வேறு நாடுகளை விடுங்கள்! எமது தேசத்தை பொறுத்த வரையில் ஒருவர் கற்றுத்தேர்ந்து பல்கலைக்கழகம் செல்வது என்பது ஒரு தனிமனிதனின் முயற்சி என்பதை தாண்டி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியின் விளைவு. குறித்த மாணவர் தன்சார்ந்தோரின் பிரதி விம்பமாகவே பல்கலைகழகத்திலும் சரி, அதன் பின்னரான எதிர்காலத்திலும் திகழ வேண்டும். அந்த கடமையை ஒவ்வொரு பல்கலைகழக மாணவரும் நெஞ்சில் நன்றாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் இழந்து நிற்கின்ற இந்த அருஞ்செல்வங்களின் எதிர்கால பெறுமதி, அவர் சார்ந்தோர் அவரினால் அடையவிருக்கும் பெரும் அடைவுகள் எல்லாம் கணநேரத்தில் தவிடு பொடியாகிறதே! இது எம் சமூகம் இன்று காணும் பேரனர்த்தம். இது இன்று நேற்றல்ல காலம் தோறும் எம் சமூகத்தில் நிகழ்ந்து வரும் அவலநிலை. தற்போது நிகழ்வேகம் அதிகரித்திருக்கிறது. இதிலிருந்து இளைஞவர்களை மீட்டெடுப்பதில் இச்சமூகம் தோற்று நிற்கின்றது என்பதை எல்லோரும் ஏற்று கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக கவலரணாக இருக்க வேண்டிய கல்விச்சமூகம், கல்விச்சமூகத்தில் தம்மை பெரும் ஆளுமையானவராக திகழச்செய்திருக்கும் அனைவரும் வெட்க வேண்டும்.மரணம் என்பது சமத்துவமானது அனைவர்க்கும் நிச்சயம் கிடைக்கக் கூடியது, ஆனால் அதை தெரிவு செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது.
ஒருவர் தற்கொலை செய்வததன் பின்னர் அந்த மாணவனின் குடும்பத்தின் நிலையை சற்று எண்ண வேண்டும். பாலூட்டி உணவூட்டி வளர்த்த தாய், தோளில் போட்டு தாலாட்டி நீ படியென முதுகெலும்பாய் உரம் தந்த தந்தை, பாசமாக நேசமாக உடனிருந்த உடன்பிறப்புகள், உற்ற உறவாடி நம் பலம் இவன் / இவள் என எண்ணியிருந்த உறவுகள், தோழோடு தோள் நின்ற தோழமைகள் இவர்களை சற்று எண்ணி பார்க்க வேண்டும். உங்கள் தாய்க்கு தந்தைக்கு சகோதரர்களுக்கு நீங்கள் ஒரு பிரதியிட முடியாத சொத்து என்பதை ஏன் எண்ண மறுக்கிறீர்கள்.ஒரு பல்கலைகழக மாணவர் தற்கொலை செய்கிறார் என்றால் யார் பொறுப்பு? முதலாவது தன் சார்ந்த சமநிலையை அவர் இழக்கிறார்! இரண்டாவது அவரை அப்படி செய்யத்தூண்டிய தூண்டல் காரணி! நாம் அனைவரும் இரண்டாவதாக குறிப்பிட்ட தூண்டல் காரணியை செய்தியாக அறிந்து கடந்து செல்ல மாத்திரமே கற்றுக்கொண்டுள்ளோம். மாற்றாக குறித்த நபரை இவ்வாறான தன் சமநிலை இழப்பிலிருந்து பாதுகாக்க தவறியிருக்கிறோம். ஒரு மாணவரின் அடைவுகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அனைத்து கல்வி நிறுவனங்களும் பொறுப்புதாரர்கள்தான். ஒரு மாணவன் தற்கொலை செய்யுமிடத்து அந்ந மாணவரின் பாடசாலை தோற்று நிற்கிறது. குறித்த பல்கலைகழகம் தோற்று நிற்கிறது. நாம் கல்விமானர்களை உற்பத்தி செய்கிறோமே தவிர, நல்ல தற்சமநிலை மிக்க மனிதர்களை உற்பத்தி செய்ய தவறுகின்றோம்.
பாடசாலை கல்வி முடித்தால் பல்கலைகழக கல்வி சுலபம் என்ன பொய்யான மனநிலையை மாணவர்களுக்கு வழங்காதீர்கள். படிப்பு மேல்நோக்கி செல்ல செல்ல கடினமானதாகும் அதற்கு கடினஉழைப்புதான் மூலதனம் என சொல்லி கொடுங்கள். வாழ்க்கை கடினமானதுதான் என்ற கசப்பான உண்மையை தெளிவுபடுத்துங்கள் ஆனால் வாழ்வை வெல்ல வல்ல பல வழிகள் இருப்பதனையும் வழிகாட்டிடுங்கள். வயது ஏற ஏற உடல் ரீதியான , உள ரீதியான, குடும்ப மற்றும் சமூக ரீதியான சுமைகளும் பொறுப்புகளும் கனக்கும் என்பதை உதாரணங்களோடு தெளிவுபடுத்துவதோடு அதனை வெல்ல வல்ல வழிகளை காண்பியுங்கள். இவ்வளவு பெரிய உலகத்தில் இன்பத்தை, பொழுது போக்கை,கழிப்பை கைபேசியில் மாத்திரமின்றி சக மனிதர்கள் நாம் வாழும் சூழலில் இருந்தும் பெறலாம் என வழிப்படுத்துங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பல்கலைகழகம் பல கலை கழகம்தான் என்பதை சொல்லிக்கொடுங்கள். பல்கலைகழத்தில் கிடைக்கும் எல்லா கலைகளும் தேன் இனிப்பாக இராது என்பதை தெரியப்படுத்துங்கள். பல்கலைகழகம் எனும் சமுத்திரத்தை கடக்க பல முதலைகள், திமிங்கிலங்கள், எண்ணற்ற அலைகள் , ஏன் சுனாமியே ஆனாலும் துவண்டு விடாமல் கடந்து வரச்சொல்லிக்கொடுங்கள். குறிப்பாக நீங்கள் பல்கலை வாழ்வில் கடக்கும் வெறும் ஒருசில அலைகள்தான் இந்த அழகு சுந்தர சுந்தரிகள் என்பதை நினைவில் கொள்ள வையுங்கள். பல்கலையில் கற்கும் உங்கள் பிள்ளைகள், உறவுகள், நட்புகளின் நய சுகங்களை அவ்வப்போது கேட்டறியுங்கள், ஆரோக்கியமான உரையாடலுக்கான இடைவெளியை எப்போதும் அவர்களுக்கு வழங்குங்கள். மாற்றாக ஒருவர் இறந்த பின் அவரின் அந்தரங்கங்களை அறிந்து செய்திதாள் அச்சிட முயற்சிக்காதீர்கள். நாம் முன்னரே குறிப்பிட்டது போன்று தற்கொலை என்பது வெறுமனே தனி ஒருவரின் செயல்விளைவு அல்ல! அதனை தடுக்க வேண்டியது சமூக பொறுப்பு. பல்கலைகழக சமூகத்தில் ஆறு வருடங்கள் பயணித்தவன் என்ற ரீதியில் பல்கலைகழகங்களுக்குள் இடம்பெறும் முரண்களை நன்கறிவேன். அவ்வாறானவற்றை ஒழிக்க வலுவில்லா விட்டாலும் தவிர்க்கலாம்.
சரி சொல்லி கொடுங்கள், கற்றுக்கொடுங்கள், வழிப்படுத்துங்கள், நினைவில் கொள்ள செய்யுங்கள்,காண்பியுங்கள் தெளிவுபடுத்துங்கள் என்கிறேனே!!! நீங்கள் இதனை படர்க்கையாக உணர்கிறீர்களா? உணர்ந்தால் எம் இளையோர் மீண்டெழ காலம் நீடு செல்லும் எனலாம்.
தொடர்ந்து சிந்திப்போம்….