இதழ் 64

கலைப்படைப்பிற்கும் அழகு எனும் எண்ணக்கருக்கும் இடையிலான தொடர்பு

கலைப்படைப்புக்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். சிறுகதை, கவிதை, ஓவியம், பாடல், கூத்து எனப் பல கலைப்படைப்புக்களை கண்டு இரசித்துள்ளோம். கலை என்ற சொல் மூன்று விதமான பொருள்களில் வழங்கப்பட்டு வருகிறது எனக் கலைக்களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. அழகியல் பொருள்கள் படைத்தல், செயற்கையாகப் பொருள்களைச் செய்தல், மனதில் தோன்றும் அழகுணர்ச்சியைக் குறித்தல் ஆகியனவே மேற்கூறப்பட்ட மூன்று விதமான பொருள்களாகும். கலைப் படைப்பு என்பது செயற்கையாக கலைஞனால் மேற்கொள்ளப்படும் ஒன்றாகும். உண்மையில் இயற்கையாக உள்ள மலைகள், நதிகள் போன்றவற்றை நாம் இயற்கைப் பொருட்கள் என்றே சொல்கிறோம். அவற்றினை மாறாக கலைப்படைப்புகள் என்று சொல்வதில்லை.

கலைப்படைப்புக்கள் செய்பண்டங்கள் ஆகும். ஒரு பொருளை கலைப்படைப்பென அழைப்பதற்குரிய ஆகக் குறைந்தபட்ச நிபந்தனைகள் பற்றி ஆராய்ந்தோரில் ஜோர்ஜ் டிக்கி (George Dickie) குறிப்பிடத்தக்கவர். இவர் ‘கலை” எனப் பெயரிட்டழைப்பதற்கு அப்பொருள் செய் பண்டமாயிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை வலியுறுத்தியுள்ளார். இந்தவகையில் கலைப்படைப்புக்கள் செயற்கையானவை என்பதனைப் புரிந்துகொள்ள முடியும். அனைத்து செய்பண்டங்களையும் ‘கலை” என்று பெயரிட்டு அழைக்க முடியுமா? எனும் வினா எழுகிறது. ஏனெனில் கலைஞன் அல்லாத வினைத்திறனான திறமை கொண்ட மனிதர்களால் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பாவனைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றினை கலைப்படைப்புக்கள் என்று பெயரிட்டழைக்க முடியாது மாறாக அவை அனைத்தும் விற்பனைப் பொருட்களாகும். இதிலிருந்து கலைகள் அனைத்தும் செய்பண்டங்களாகும். மாறாக செய்பண்டங்கள் அனைத்தும் கலைகளாவதில்லை என்பதனை முடிவாகப் பெற முடியும்.

அழகியல் சார்ந்த பொருட்களைப் படைப்புச் செய்தலே கலைப்படைப்பு எனவும் கூறிக்கொள்ள வேண்டும். பிறாங்சிப்லி என்பவர் கலைக்கண் கொண்ட காட்சியின் போது இரசனையும்இ மதிப்பீடும் தொடர்புபடுகின்றன என்கிறார். இவ்வாறாகக் கலைப்படைப்புக்களில் இருந்து காட்சியின் வாயிலாகப் பெறப்படும் அனுபவம் அழகியல் சார்ந்ததாகும். இந்தவகையில் அழகியல் இன்பத்தினைத் தருவதே கலைப்படைப்பாகும். கலைப்படைப்புக்கள் காட்சியின் வாயிலாகவே நுகரப்படுகின்றன. கலைக்கண் கொண்ட காட்சியானது சாதாரண காட்சியிலிருந்து பெரிதும் வேறுபட்டது.

கலைப் படைப்புகளிற்கிடையே பொதுப்படையான பண்புகளை உருவாக்குவதிலுள்ள இடர்பாடுகள்இ காலத்திற்குக் காலம் ‘கலை” பற்றிய கருத்துக்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்இ கலைப்பொருட்களை இனங்காண்பதிலுள்ள சிரமங்கள் ஆகியவை காரணமாக கலை பற்றிய தீர்க்கமான வரைவிலக்கணத்தையோ விளக்கத்தினையோ முன்வைப்பதில் சர்ச்சைகள் சிரமங்கள் ஏற்படுகின்றன. கலைப்பொருளும் அழகு எனும் எண்ணக்கருவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும். மானிடர் இயற்கைப் பொருட்களான சூரியன், சந்திரன், வானம், மேகம், மலைகள், நதிகள் ஆகியவற்றிலிருந்து அழகினைக் கண்டுணர்கிறனர். இவ்வழகு இயற்கையழகு என அழைக்கப்படுகிறது. அதேபோல் மனிதன் தன் செயலைக் கொண்டு செய்பண்டங்களான கலைகளை உருவாக்குகிறான். அவற்றில் ஒவ்வொருவரும் காணும் அழகு செயற்கையழகு ஆகும்.

பொதுவில் ‘அழகு” என்பதற்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் ஒன்றினைப் பெறுதல் கடினமானது. ஏனெனில் அழகு என்பது ஒவ்வொரு நபரினதும் மனதினைச் சார்ந்த ஒன்றாகும். Grube (1927) என்பவர் கிரேக்க கலாசாரத்தில் ‘அழகு” மானுடமையத்தை மையமாகக் கொண்ட உடல் கவர்ச்சியைக் குறிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளமையினை எடுத்து நோக்குவது அவசியமானது.

கலைப்பொருளினை இரசிப்பவர் நுகர்வோர் அல்லது சுவைஞர் எனப்படுவார். நுகர்வோர் கலைப்பொருளை இரசிப்பதற்கான காரணம் அப்பொருளில் அழகினை கண்டுகொண்டமையாக இருக்கலாம். றிச்சேட் பிறைஸ் ‘அழகு பார்க்கும் பொருளிடத்தே உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக, ‘சிகிரியாக் குன்றில் காசியப்ப மன்னனால் வரையப்பட்ட ஓவியங்கள் அழகானவை” எனும் கூற்று பொதுவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும். இக்கூற்று கலைப்பொருளை மையமாகக் கொண்டு அழகினை சுவைஞன் பெறுகிறான் என்பதனை தெளிவுபடுத்திக் காட்டுகிறது.

கலைஞன் கலைப்பொருளைப் படைப்புச் செய்யும் பொழுது சில சமயங்களில் அக் கலைக்கே உரிய அமைப்பு முறைகளைப் பின்பற்றுவது அவசியமானது. எடுத்துக்காட்டாகஇ ஆரம்பத்திலும் தற்காலங்களிலும் ஆலயங்களில் தேர் செய்யும் சிற்பிகள் தேரின் வடிவ அளவுத்திட்டத்திற்கு ஏற்பவே தேரினைச் செய்வதனைக் குறிப்பிடலாம். ஏனெனில் தேரின் அழகு அதன் சரியான அளவுத் திட்டத்திலேயே தங்கியுள்ளது. தற்காலத்தில் மரபுவழிக் கவிதையினைத் தழுவாத புதுக்கவிதை எழுதும் மரபும் வளர்ந்துள்ளது. இங்கு எவ்வித விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இருப்பினும் புதுக்கவிதையை விரும்பி நுகர்பவர்களைக் காணக் கூடியதாகவுள்ளது. நா.முத்துக்குமார் மற்றும் வைரமுத்து கவிதை வரிகளை விரும்பி இரசிப்பவர்கள் பலரை கண்டுள்ளோம். இதன் மூலம் கலைப்பொருளின் ஒழுங்குமுறை அல்லது அமைப்பு முறை என்பது மட்டுமே அழகினை நிறுவிக்காட்டாது என்பதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கலைஞர்கள் கலைப்படைப்பினை படைப்புச் செய்யும் பொழுது நுகர்வோரால் விரும்பப் பட வேண்டும் எனும் நோக்கினைக் கொண்டிருப்பார்கள். சாதாரணமாக நமது வாழ்விலே ஒரு பொருளை வாங்கும் பொழுது அது நமக்குப் பிடித்திருந்தால் மாத்திரமே வாங்கிச் செல்வோம். ஆகையினால் ஒவ்வொரு நிறுவனமும் எமது விருப்பங்களைக் கருத்திற் கொண்டே பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அதேபோல் கலைஞனும் தன்னுடைய கலைப்படைப்பை பார்வையாளன் விரும்ப வேண்டும் எனும் நோக்கிலே படைப்புச் செய்வார்.

‘நாட்டியசாஸ்திரம்” என்ற நூலின்படி நடிகர்கள் பார்வையாளரிடம் இரசனை அனுபவத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாயுளர். நடிகர்களுடைய ‘பாவனை” சுவைஞருக்கு இரசனையை ஏற்படுத்துகிறது. நாடகப்பாத்திரங்கள் நடிப்பின் மூலம் சுவைஞரிடத்து உளக்கிளர்ச்சியை ஏற்படுத்த வல்லவர்களாயுளர். இனம்புரியாவகையில் படிப்படியாக இவ்வுணர்ச்சி ஏற்படுகிறது. நடிகர்களின் நடிப்பினால் அழகியலிற்குரிய இவ்வுணர்ச்சிகள் பார்வையாளரின் கற்பனையில் உருவாகிறது. இந்தவகையில் நாட்டிய சாஸ்திரம் நூல் கலைஞன் சுவைஞனை ஈர்க்க அழகுடன் கலைப்படைப்பினைப் படைப்புச் செய்கிறான் என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கலைப்பொருள் கலைஞனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அழகினைக் கருத்திற்கொண்டு படைக்கப்படுவதில்லை என்றும் கூறக்கூடும்.

கலைப்படைப்பின் அமைப்பு முறையினை அடிப்படையாகக் கொண்டு அழகினைத் தீர்மானிக்க முடியாது என எடுத்துக் கொள்வோமானால்இ கலைப்பொருள் ஒன்றினை நுகர்பவரை அடிப்படையாகக் கொண்டு அழகினை கலைப்பொருளுடன் தொடர்புபடுத்த முடியும்.

நவீன மெய்யியலாளர்களான டேவிட்ஹியூம் எனும் அறிஞர் ‘அழகு என்பது பொருளைச் சுவைக்கும் ஆளினது (விடையியின்) மனநிலையிலேயே தங்கியுள்ளது.” என்றார். மற்றும் ஜோன்லொக் மனித மனத்தை ‘ரபுல ரச”(Tabulla Rasa) என்று குறிப்பிட்டார். எந்தவிதமான அடையாளமும் அற்ற தூய வடிவினதாக இருக்கும் நிலையை இது குறிப்பிடுகின்றது. அனுபவங்கள் வாயிலாக அதாவது புலன் உணர்வு வழியாக மனித மனத்துடன் அழகு பற்றிய காட்சி தொடர்புபடுத்தப்பட்டு விளக்கப்படல் வேண்டும் என்கிறார். கர்நாடக இசைக் கச்சேரிக்கு செல்லும் நபரொருவரிற்கு சுருதிஇ லயம்இ பண்இ தாளம் போன்றன பரீட்சயம் இல்லாது இருந்த போதும் அந்நபர் இசைக் கச்சேரியை இரசிக்கின்றார் எனின் அந்நபர் புலக்காட்சி வழி மனதிற்குப் பெறப்பட்ட இசையில் கண்டுணர்ந்த அழகே காரணமாகும்.

உலகப்புகழ் பெற்ற லியானோ டாவின்சிஇ பிக்காஸோ போன்றோரது ஓவியங்கள் அழியாத அமரத்துவம் பெற்றமை மற்றும் இரவீந்திரநாத் தாகூரின் வங்கமொழிக் கவிதையான ‘கீதாஞ்சலி” நோபல் பரிசு பெற்றமை ஆகியன கலைக்கும் அழகுணர்விற்கும் இடையிலான தொடர்பினை வெளிக்காட்டுவனவாக உள்ளன. கலையும் அழகும் இணைந்தே காணப்படுகின்றன. ஒன்றில் கலைஞன் வாயிலாகவோ அல்லது கலைப்பொருள் வாயிலாகவோ அல்லது கலைப்பொருளை சுவைக்கும் நுகர்வோன் வாயிலாகவோ கலைஇ அழகு இணைந்தே உள்ளன எனும் முடிவுக்கு மேற்கூறப்பட்ட விளக்கங்களில் இருந்து வரக்கூடியதாகவுள்ளது.

Related posts

செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சை நன்மையா…? தீமையா…?

Thumi202121

கவிதையும் கவிஞர் முல்லையின் கவிதைகளும்

Thumi202121

ஆச்சரியப்படுத்தும் நான்காம் கைத்தொழில் புரட்சி

Thumi202121

Leave a Comment