இதழ் 64

சித்திராங்கதா -60

குற்றம் புரிந்தேன்

‘நீங்கள் செய்வது சரியா தந்தையா?’ நல்லைப் பேரவையில் அரச அதிகாரத்தை நோக்கி இப்படியொரு கேள்வியை மாருதவல்லி எழுப்பியிருந்தாள்.
இதற்கு மேலும் அமைதி காப்பது பெருங்குற்றமென உணர்ந்தே அவள் அவையில் அங்ஙனம் கேட்டாள். ஆனால் யாரைப் பார்த்துக் கேட்டாள்?

சிந்தனையில் மூழ்கி இருந்த சங்கிலிய மகாராஜாவின் கண்களை அந்தக் கேள்வி பெரிதாக்கியது. ‘என் மகள் என்னையா தந்தை என்று அழைத்தாள்..? இப்பெருஞ்சபையில் நான் செய்வது சரியா என்று இத்தனை தைரியமாக என்னை கேட்டது என் மகளா? அல்லது என் கல்யாணிதேவியே கண்முன் வந்து என்னைப் பார்த்து கேட்கிறாளா?…’ எதுவும் புரியாத குழப்பத்தில் மஞ்சரிதேவியை பார்த்தார் சங்கிலிய மகாராஜா.

உணர்ச்சி மிகுதியில் ஒருவேளை மஞ்சரி தேவி மாருதவல்லியிடம் உண்மையை கூறியிருப்பாரோ என்கிற சந்தேகம் சங்கிலிய மகாராஜா மனதில் தோன்றியது. ஆனால் மஞ்சரி தேவியின் முகமும் அதே குழப்பத்திலே இருந்ததை கவனித்தார் அரசர்.

உண்மையில் மாருதவல்லியின் கண்கள் மந்திரி ஏகாம்பரம் தொண்டமனாரை நோக்கியே இருந்தன.
‘சொல்லுங்கள் தந்தையே.. அரச காரியங்களில் நான் தலையிடக்கூடாது என்பது தங்கள் ஆணை தான். ஆனால் என் தந்தைக்கு இங்ஙனம் பெருங்களங்கம் வருகின்ற போதும் நான் அமைதி கொண்டு தங்கள் ஆணை காக்க முடியுமா…. சொல்லுங்கள் தந்தையே…

தஞ்சை வீரர் எழுதி அனுப்பிய மடலை கேட்டீர்களா? வருணகுலத்தாரின் பெருங்காதலை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? தந்தையே, இதற்குப் பிறகும் சித்திராங்கதாவை இங்ஙனம் நாம் நடத்துவது எத்தனை பெரிய குற்றம் என்று அன்று தொட்டு நான் கூறியதன் பொருள் விளங்குகிறதா தந்தையே?’

இராஜமந்திரியாரை பார்த்து அவரது மகள் கேட்ட கேள்விகள் சங்கிலிய மகாராஜாவை எப்படி உருக்குலைத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. மன்னரது நா பேசும் திரானியற்று வரண்டு கிடந்தது.

இராஜமந்திரியார் பேசினார்.
‘மகளே, தஞ்சை வீரரிற்கு யுத்தத்தில் ஏதாவது நேர்ந்து விட்டதோ என்கிற அச்சம் சாதாரணமானது அல்ல மகளே.. அது நம் தேசத்தையே மீள முடியா களங்கத்தில் மூழ்க வைத்திருக்கும். அப்படியொரு அச்சம் சூழ்ந்த தருணத்தில் எடுத்த முடிவே அதுவாகும். இதில் குற்றம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நேரத்து நியாயத்தையே நாம் ஆற்றினோம் மகளே..’

‘இல்லை மந்திரியாரே.. இல்லை..’ சங்கிலிய மகாராஜா அதை ஆவேசமாக மறுத்தார்.
‘இதில் எந்த நியாயமும் இல்லை என்பதே உண்மையாகும்’
அவையோர் வியந்து அரசரை நோக்கினர்.

‘ஆம் இராஜமந்திரியாரே.. வருணகுலத்தானை தவறான வழிக்கு அழைத்துச் சென்றாள் என்றே குற்றம் சுமத்தி சித்திராங்கதாவை சிறைபிடித்தோம். அரண்மனை விசுவாசியான பெருவணிகரது மகளை இங்ஙனம் சிறைபிடிக்க நாம் சிறிதும் தயங்காமைக்கு காரணம் பெருவணிகர் அன்று சொன்ன வார்த்தைதான். என் மகளை சிறைபிடித்தாவது காத்தருளுங்கள் என்று வேண்டியது பெருவணிகர் தான். ஆனால் மாவீரர் வருணகுலத்தானது உள்ளத்தில் உள்ளது பற்றி நாம் சிறிதும் சிந்திக்க வில்லையே இராஜமந்திரியாரே..

இப்படியொரு செயல் சித்திராங்கதாவிற்கு நாம் இழைத்ததாய் அறிந்தால் தஞ்சைவீரர் எங்ஙனம் வேதனை கொள்வார் என்பதை எண்ணிப் பார்க்கவே என் மீதுள்ள குற்றம் என்னைக் கொல்கிறது மந்திரியாரே.. பெருங்குற்றம் ஆற்றியது நான்தான் மந்திரியாரே.. கல்யாணி தேவியின் கண்கள் என் உள்ளத்தில் முள்ளாய் நின்று குத்தி என்னை நோக்குகின்றன.. நான் என்ன பதில் சொல்லுவேன் இப்போது…..’

பெருஞ்சபையில் கலங்கி நின்றார் சங்கிலிய மகாராஜா. ஓடி வந்து அரசர் கரங்களை பற்றி தேற்றினார் மஞ்சரிதேவி.

இராஜமந்திரியார் எழுந்து பேசினார்.
‘அரசே. தஞ்சைவீரரே தற்சமயம் எம் பெருஞ் சொத்து. அவரிற்கு ஆபத்து சூழ்ந்துவிட்டது என்கிற தருணத்தில் நாம் எந்த நியாயத்தை பற்றியும் சிந்திக்காமல் செயற்பட்டது உண்மைதான். தஞ்சை வீரரது காதல் பற்றியும் நாம் அறியாமல் அல்ல. ஆனால் மோகவலையில் தஞ்சைவீரரை எதிரிகள் சிக்கவைத்ததாகவே எம் புரிதல் இருந்தது. அது உண்மையில்லை என்பதை இப்போதே புரிந்து கொண்டோம். வருணகுலத்தான் பெருங்காதலுக்கு மதிப்பளிக்க இந்த சபை கடன் பட்டிருக்கிறது. சித்திராங்கதாவை உடன் விடுவிக்க வேண்டும். மேலும் வருணகுலத்தான் வெற்றிவாகை சூடி வரும் வரை சித்திராங்கதாவை காப்பதும் இன்று முதல் எம் பணியே.
சித்திராங்கதாவை அந்தப்புரத்தில் அதிக வசதியுடன் ஈழத்தின் பெருஞ் சொத்தாய் பேணிக்காக்க நாம் ஆகுதி செய்ய வேண்டும். அதற்கான ஆயத்தங்களை விரைந்து நோக்க வேண்டும் வேந்தே..’

அதுவரை சபைநடுவே எந்த சலனமும் இல்லாமல் வருணகுலத்தானது ஓலையோடு வந்த பெட்டியை உற்றுப்பார்த்த வண்ணம் இருந்த சித்திராங்கதா மந்திரியாரது வார்த்தைகள் கேட்டு அவசரமாக தலை நிமிர்ந்தாள்.

தொடர்வாள்…

Related posts

கலைப்படைப்பிற்கும் அழகு எனும் எண்ணக்கருக்கும் இடையிலான தொடர்பு

Thumi202121

ஆச்சரியப்படுத்தும் நான்காம் கைத்தொழில் புரட்சி

Thumi202121

கவிதையும் கவிஞர் முல்லையின் கவிதைகளும்

Thumi202121

Leave a Comment