(‘ஆறிப்போன காயங்களின் வலிகள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்த ஓர் விமர்சனக் கண்ணோட்டம்)
இலக்கிய வடிவங்களுள் மிகவும் பழைமையானது கவிதையாகும். கவிதை என்பது ஒரு மொழியின் செம்மையான இலக்கிய வடிவம். கலை மயமாக்கப்படும் வாழ்க்கையாகும். கவிதைக்கு உணர்வு அடிக்கல். கற்பனை படிக்கல். கருத்து உள்ளிடம். ஓசையும் அணியும் ஒப்பனை என்றவாறு இலக்கிய அறிஞர் குறிப்பிடுவர். கவிதை என்னும் மாளிகை சொல்லினாலும், பாடுபொருளினாலும் ஒழுங்கமைந்த உத்திச் சிறப்பினாலும் கட்டப்படுவது. ஒரு மொழியானது வளர்ச்சியின் அதியுச்சத்தையும், சொற்களின் பயன்படு முதிர்ச்சியையும், வெளிப்படுத்தலின் நுட்பத்தையும் அடைவது கவிதையிலேதான்.
தான்வாழும் சமூகச் சூழலின் தாக்கத்திற்காளான ஒரு கவிஞன், தன்னை ஈர்த்துக் கொண்ட சமூகம், இயற்கை, பிரச்சினை பற்றியும், அக ரீதியான தனது உணர்வுகள் பற்றியும், செறிவும், இசைப்போக்கும் அணிநலனும் நிறைந்த மொழிநடையில் எழுதும் எழுத்துக்கள் கவிதையாக மலர்கின்றன. சமூகத்தில் அவனது இருப்பு, இன்ப துன்பங்களின் உணர்வுநிலை, சமூக அக்கறை ஆகியவற்றைத் தெருவிக்கத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியே கவிதையாகும். இது அவனால் உள்ளபடிக்கு உருவாக்கப்பட்ட உள்ளத்துணர்வின் படைப்பாகும்.
‘கருவிலே திருவுடையவன் கவிஞன்” என்றும், ‘கவிஞன் சூழலின் அனுபவத்தினால் உருவாகிறான்” என்றும் வேறுபட்ட கருத்துக்கள் உருவாயினும், ‘உள்ளத்து உள்ளது கவிதை” என்ற கவிமணியின் வாக்கும், ‘நமக்குத் தொழில் கவிதை” என்ற மகாகவி பாரதியின் கருத்தும், ‘அது ஒரு தொழில் உற்பத்தி” என்னும் மேலைத்தேய முற்போக்கு அறிஞர்களின் எண்ணமும் குறிப்பிடத்தக்கன.
ஏனைய இலக்கிய வடிவங்கள் வேலைக்காரருடன் உரையாடு வதைப்போல அமைகையில், கவிதையானது இளவரசியுடன் உரையாடுவது போன்ற மயக்கந் தரவல்லது என்றார் ஓர் கவிஞன். இன்று மரபுக் கவிதையின் இலக்கண வரம்புகளுக்குக் கட்டுப்படாது புதுக் கவிதை முயற்சிகள் வரவேற்புப் பெற்று வருகின்றன. மரபோ, புதுமையோ எதுவாயினும் உள்ளடக்கத்தினால்தான் சமுதாயப் பயன் எய்த முடியும் என்ற நிலை தற்காலக் கவிதைகளில் காணப்படுகின்றது. சொற்சிக்கனம், பேச்சுப்பாங்கு, உத்தி, குறியீடு, படிமம், வடிவமிழப்பு ஆகிய பண்புகள் கொண்டு புதுக்கவிதை மலர்ந்துள்ளது. இலக்கண மரபுகளை மீறியதாகவும், உணர்ச்சிக்கும் கருப்பொருளுக்கும் உயிர் கொடுப்பதாகவும் புதுக்கவிதை அமைந்துள்ளது. இதனால் மரபறியாத நூற்றுக் கணக்கானோர் கவிதையுலகில் பிரவேசித்து வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர்.
வளர்ந்து வரும் இளங் கவிஞர் முருகையா சதீஸ் என்பவர், தனது முதற் கவிதைத் தொகுதியான ‘ஆறிப்போன காயங்களின் வலிகள்”(2021) எனும் நூலினை ‘கவிஞர் முல்லை” என்ற புனைபெயரில் வெளியிட்டுள்ளார். இவர் தான் கண்டு, கேட்டு அனுபவித்த தரிசனங்களை – நிஜங்களை, அருட்டுணர்வுகளை 48 சிறியதும், பெரியதுமான புதுக்கவிதைகளாக இதில் படைத்துள்ளார். இளவயது இளைஞன் மனதில் எற்பட்ட இனிப்பான, கசப்பான அனுபவங்கள் எளிய சொல்லோவியங்களாகவும், உணர்வின் வெளிப்பாடுகளாகவும் விளங்குகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்பு நெறியைப் பயின்று நிறைவு செய்த இவர், அவ்வப்போது பல்கலைத் தமிழ்சார் மன்றத்திலும், ஏனைய இலக்கிய அமைப்புக்களிலும் பாடிய கவிதைகளும் இவற்றுள் அடங்கும். ஏடுகளில் வந்த சிலவும் உள.
இளவயதுக்குரியதாய் எழுச்சியூட்டும் காதல், இனிய கிராமத்து நினைவுகள், தாயின் மீதான பக்தி, கல்வி தந்த ஆசான்கள், பல்கலைக்கழக வாழ்வின் இனிமைகள், தாய் மண்ணின் நினைவுகள், அவற்றை இழந்துவிட்ட வலிகள், அவற்றைப் பற்றிய மீள் திரும்பும் நினைவுகள், யுத்த காலக் கெடுபிடிகள், எழிலான இயற்கை வளம், ஏழ்மை, சமகாலக் கொரோனா, முதுமையின் தவிப்பு, சுனாமி அவலம், உறவுகள், நட்பு, கிட்டாத சுதந்திரக் காற்று, தாலாட்டு, சுதந்திர தாகம், மலையகத்தோர் வாழ்வு, சிங்களத் தோழன், புதிய திருப்பம் முதலான பல பாடுபொருள்களைத் தழுவிய கவிதைகள் முல்லைக்கவியின் நூலில் இடம்பிடித்துள்ளன. இவையாவும் 2012 – 2021 வரையான காலப்பகுதிக்குரியவையாகும்.
கவிதைகளை நோக்கும்போது, தமிழ் மொழியாளுமை வளர்ச்சியையும், கவிதை பற்றிய புரிதலையும் படிப்படியாகக் கவிஞரிடையே கண்டுகொள்ள முடிந்துள்ளது. தனது மனதைக் கலவரப்படுத்திய, தாக்கமுறச் செய்த சம்பவங்களை ஏக்கத்துடனும், தாக்கத்துடனும், வீறாப்புடனும் எழுத்தில் வடித்திடத் துடிக்கும் ஆர்வம் இவற்றினூடே பட்டுத் தெறிக்கிறது.
‘தலை கோதிப் பிடரி தடவி
இமை மூடி இதழ் விரித்து
நீ பேசும் வார்த்தைகள்
இரகசியமாய்
என்னுள்ளே கேட்கின்றன.
படிப்பம் படிப்பம் என்று
புத்தகத்தைத் திறந்தாலும்
உனது முகம்தான்
பிம்பமாய்த் தெரிகிறது.
ஓ!
என் மனமே உன்னில்
மண்டியிடுவது புரிந்தது”
(‘காதல் விதை” கவிதையிலிருந்து, பக்:99 – 100)
‘வெட்கம் வெட்கம் என்று
மனசு சொன்னாலும்
உதடு எப்பவும்
உன் பெயரைத்தான்
உச்சரித்துக் கொண்டிருக்கும்”
(‘புதிய அத்தியாயம்” கவிதையிலிருந்து, ப:96)
‘வெட்கிச் சிவந்த
அந்தி வானத்தில்
கூதற்காற்று மெல்ல வீசும்
இமை மூடித் திறக்கையில்
அடிவயிற்றில் குரலெடுத்து
ஒரு பறவை கத்திச் செல்லும்
தனிமையின் துயரில்
அதுவும் பயணிக்கிறதோ?”
(‘என் அவள்” கவிதையிலிருந்து, ப:87)
கவிஞர் முல்லையின் காதல் கவிதைகளின் பரிமாணங்களுக்கு இவை சில சான்றுகள். உணர்வு, மொழியழகு, எளிமை, யதார்த்தம் ஆகியவை கலந்து இளங்காதலானாலும் காதல் கொண்டோர் அனைவரது எண்ணங்களுக்கும் பொதுவானவையாக விளங்குகின்றன. புதுக் கவிஞராயினும் அவருக்குப் புதுக்கவிதை வாலாயமாய் வந்துள்ளது.
‘அந்தி வானத்து
மாலைப் பொழுதுகள்
ஊர்கூடி மகிழும்
ஆலமரத்து நிழல்.
விறகுச் சுமையுடன்
அன்ன நடைபோடும்
பெண்கள்.”
(‘நினைவுகள்” கவிதையிலிருந்து, ப:01)
கடந்தகால ஊர் பற்றிய நினைவுகளை இசைமீட்டிக் கழிவிரக்கம் கொள்ள வைக்கிறது இக்கவிதை.
‘வானிலே பறக்கும்
நூலறுந்த பட்டங்களாய்ச்
சுற்றித் திரிந்த அந்தப்
பள்ளியின் நாட்கள் – இப்போ
ஆறிப்போன காயங்களாய்
வலிக்கின்றன.”
(‘ஆறிப்போன காயங்களின் வலிகள்” கவிதையிலிருந்து, ப:27)
அடிபட்ட மனதில் ஆழப் பதிந்துள்ள வடுக்கள் எப்போதும் கடந்துவிட்ட காலத்தை நினைவூட்டுவன. இங்கே ஆறிப்போன இளமைப் பருவத்துப் பள்ளி வாழ்க்கைகூடக் கவிஞருக்கு வலிகளைத் தருவதைப் பார்க்கிறோம். இது போன்றதே தாய் மண்ணின் பிரிவு. இடப்பெயர்வுத் துயரங்கள், தமிழரின் தொன்மைகள் கபளீகரஞ் செய்யப்படல், மீண்டும் பிறந்த மண்ணிற்குத் திரும்பும்போது கண்ட துன்பகரமான காட்சிகள் என்றவாறு கவிஞரின் உள்ளம் இழந்துவிட்டவைகளுக்காக ஏங்கி ஏங்கித் துடிப்பதைப் பல கவிதைகள் துயரோடும் உணர்ச்சியோடும் நம்மிடையே இனம்புரியாத அவலத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. கவிஞரது சமூகப் பிரக்ஞைக்கு எடுத்துக்காட்டாக ‘வரட்சி” எனும் கவிதை விளங்குகின்றது.
‘காடழிப்பின் உக்கிரத்தால்
வான் மழையும் சிந்தவில்லை
மண்ணை நம்பி வாழ்ந்தவர்கள்
பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை!
ஏர் உழுத நிலங்களிலும்
ஏரிகளைக் காணவில்லை!
மாடு மேய்த்த பூமியிலும்
குளங்களையும் காணவில்லை!
ஆற்று மணல் எல்லாம்
அகழ்ந்து விலை போயிடிச்சாம்!” (ப:43)
சமகால யதார்த்த நிலை இதுதான். தமிழர் பிரதேசங்களின் வேதனை கலந்த விரக்திதான் கவிதையைப் படிக்கையில் நமக்கு ஏற்படுகிறது. வட்டுவாகல் பாலம், குருந்தூர் மலை, மலையக வாழ்வு முதலான தலைப்புக் கவிதைகளும் சமூகப் பிரச்சினைகளில் மையங்கொண்டு அரசியல் பேசியுள்ளன. முல்லை அவர்களின் தாயகப் பற்றும், தாயக விடுதலைக்கான ஏக்கமும் அவரது ‘நாளை?” என்ற கவிதையில் ஊடாடுகிறது. சொல்லாத சேதிகளைச் சொல்வது போலிருக்கிறது.
‘மண்மீது நேசம் கொண்டவர்களே
இன்றே தூங்கி விடுங்கள்.
இல்லையேல் – நாளை
எண்ணற்ற தகைமைகளோடு
கல்லறை சேர முடியாமல்
காற்றாகிப் போகலாம்.
நாளை விடியலைக் காண
இருக்க மாட்டோம் என்பதையா
இவை அடையாளப்படுத்துகின்றன?” (ப:65)
ஈழத் தமிழர் அனைவரது நெஞ்சங்களிலும் கனன்று எழும் சுவாலையாக இக் கவிதையின் பாடுபொருள் அமைந்துள்ளது. பாதை தெரியாத எமது பயணங்கள் காட்டிய படுகுழித்துயரம் நாம் அறிந்ததே. அதன் அழிவில் நாம் கண்ட பயங்கரம் எமது இனிய பழைமையான வாழ்வையும், எதிர்கால நம்பிக்கையையும் வெகுதூரம் தொலைத்து விட்டதும் உண்மையே. வெறும் வயிற்றுக்கு மட்டும் சொந்தமாகிப்போன மக்களாக வாழ்வதில் அர்த்தமில்லை. மானமும், உணர்வும், உரிமையும் மறந்து, பண்பாட்டை இழந்த மண்ணுக்கு விடுதலை எட்டாக்கனி என்பதை இளங்கவிஞர் முல்லை ஆணித்தரமாக வலியுறுத்தி நிற்கிறார்.
இவரது கவிதைகள் இயற்கை தொடர்பாகவும் இனிமை தருகின்றன. உறவு நிலையிலும் பெருமை சேர்த்துள்ளன. ஏதோ உன்னதத்தின் உச்சியைக் காட்டுவன என்று கூறவில்லை. உணர்வு கலந்து படையல்களை உண்மை வெளிச்சமாக – நிஜ தரிசனங்களாகத் தந்துள்ளார். காலம் அனுபவங்களினூடு கவிஞனைப் புடம் போடும். அதுபோல் கவிஞர் முருகையா சதீஸ் அவர்களும் எதிர்காலத்தில் ஈழத்தமிழர் இலக்கிய உலகில் தனக்கோர் இடத்தைப் பெறுவார் என நம்புவோமாக.