இதழ் 64

நேர்த்தி முறைகள் எல்லை மீறுகின்றனவா…?

எந்த ஒரு சமய வழிபாட்டு முறையையும் விமர்சிக்க வேண்டும் என்கிற நோக்கத்திலோ, கேலிக்குள்ளாக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடோ துமியின் இந்த ஆசிரியர் தலையங்கம் எழுதப்படவில்லை. தேவையற்ற சில புதுமையான நேர்த்தி முறைகள் உண்மையான பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதோடு, எதிர்கால சந்ததியினருக்கு வழிபாட்டு முறைகள் பற்றிய தவறான புரிதலை முன்னுதாரணமாக வழங்கிவிடக் கூடாது என்கிற ஒரு அச்சத்தில் இந்த ஆசிரியர் பதிவு எழுதப்படுகிறது. இது உண்மையான மெய்யடியார்களை மனம் நோகச் செய்யாது என்பது துமியின் திடமான நம்பிக்கை.

சமீபகாலமாக காவடிகள் மூலமாக அதிலும் பறவைக்காவடிகள் மூலமாக நேர்த்திக்கடன் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனது பறவைக் காவடி வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக சயன நிலை, தியான நிலை என்று பல்வேறு நிலைகளில் தம் உடலில் பல இடங்களில் அலகுகளை குத்தி, காவடி எடுக்கிறார்கள். அதுபோக சகோதரர்கள் சேர்ந்து, கணவன் மனைவியாக, கைக்குழந்தையுடன் தந்தையாக என்று பறவைக் காவடிகளில் ஏதேனும் புதுமைகளை புகுத்திக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையான பக்தியால் இவ்வாறு எல்லாம் செய்கிறார்களா என்றால் இல்லை என்பதே பலரது பதில் ஆகிறது. எனது காவடியைப் பற்றி எல்லோரும் கதைக்க வேண்டும், ஊடகங்களில் நான் வர வேண்டும், ஆலய திருவிழாவில் என் காவடி வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பது போன்ற ஆசைகளின் வெளிப்பாட்டிற்கே இவ்வகையான பறவைக்காவடிகள் தேவைப்படுகின்றன.

பறவைக்காவடிகளின் ஆரம்ப காலங்களில் அவை காவடி எடுப்பவரை அதிகம் வருத்தாததாகவும், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாததாகவுமே இருந்து வந்தன. உதாரணமாக நல்லூரை அண்டிய ஒரு ஆலயத்தில் ஆரம்பமாகும் காவடி நல்லூர் முருகன் கோயிலுக்காக எடுக்கப்படும். ஆனால் இன்று பருத்தித்துறையில் இருந்து நல்லூர்க்கும், காரைநகரில் இருந்து செல்வச்சந்நிதிக்கும் காவடிகள் எடுக்கப்படுகின்றன. இந்த மிக வெப்பமான காலநிலையில் உடல் முழுவதும் அலகு குத்தி மிக நீண்ட தூரம் காவடி எடுப்பது குறித்த நபருக்கு ஆரோக்கியமானதல்ல. அது மட்டுமல்லாமல் அவனுடன் ஒரு பெரும் கூட்டம் வீதியால் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்வதும், சந்திகள் மற்றும் இதர ஆலய வாசல்களை அண்மிக்கும் போது நடு வீதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு, அவற்றை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.

இந்த செயற்பாடுகள் போக்குவரத்து நெரிசல்களை மட்டுமன்றி உயிர் குடிக்கும் விபத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளன. யோசித்துப் பாருங்கள். நினைத்த காரியம் நடக்க வேண்டுமென நீங்கள் செய்யும் நேர்த்திக் கடன் இன்னொருவரின் உயிரையே பறிக்கும் அபாயம் இருக்கிறது என்றால் உங்கள் பக்தி உங்களுக்கு பலன் அளிக்குமா? அது புண்ணியமா? பாவமா? ஆலயத்தில் நேர்த்திக்கடன் செய்யலாம். ஆனால் வீதி தோறும் நேர்த்திக் கடன் செய்ய வேண்டுமா? நடு வீதியில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றச் சொல்லி எந்த ஆகமத்தில் உள்ளது? ஆண்டவனுக்காக நேர்த்தி என்றால் அதை ஏன் விதம் விதமாக படமெடுத்து
சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்கள்?

காவடியாட்டம் என்பது பழந்தமிழர் நடன முறைகளில் ஒன்று. இறை சிந்தையோடு தோளில் காவடியை ஏந்தி, காவடிச் சிந்து இசைக்க ஆடுவார்கள். காவுதடி எனும் சொல்லே காவடி என்று மருவியதாக கருதப்படுகிறது. சங்க இலக்கிய நூற்களில் ஒன்றான புறநானூற்றில் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் போது தங்களுடைய பொருள்களை ஒரு தண்டின் இரு முனைகளிலும் கட்டிச் சென்றனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. ஒளவையார் தமது உடைமைகளை இது போன்று தண்டில் கட்டிச் சென்றார் என்று புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது.

அகத்தியர் கூற்றுப்படி இடும்பன் இரு சிகரங்களை காவடியாக தூக்கி வந்த போது முருகன் அருள் இடும்பனுக்கு கிடைத்தாக கந்தபுராணம் கூறுகிறது.
ஆகவே, அபிசேக பொருட்களை காவடியாக எடுத்துச் சென்று கந்தனை வழிபட்டால் அருள் கிடைக்கும் என்கிற ஐதீகத்தில் ஆரம்பமான இந்த வழிபாட்டு முறையின் தார்ப்பரியத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது மதகுருமார்களதும் மத தலைவர்களதும் முதற்கடமையாக அறியுங்கள். பக்தர்கள் ஆயுதங்களால் உடலை வருத்தி நேர்த்தி செய்ய வேண்டியதில்லை என்பதை உறுதிபட கூறுங்கள்.

தயவு செய்து, உங்கள் சமயத்தின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். “அன்பே சிவம்” எனும் அமைதியான வழிபாட்டு முறையைக் கொண்ட சமயத்தில் புதுப்புது கேலிக்கைகளை புகுத்தி உங்கள் சமயத்தை நீங்களே நலிவடையச் செய்து விடாதீர்கள். இன்னொருவருக்கு இடையூறான வழிபாட்டை என்றென்றும் ஆண்டவன் விரும்புவதில்லை.

Related posts

இலங்கையில் இளையோர் உலகக் கிண்ணம் 2024

Thumi202121

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள்

Thumi202121

செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சை நன்மையா…? தீமையா…?

Thumi202121

Leave a Comment