இதழ் 64

பெற்றோர்களே…. உங்களுக்குத்தான்…!

ஒவ்வொரு கவிஞர்களுக்குள்ளும் ஏதோ ஒரு விதை இருக்கிறது. அதிலிருந்துதான் கவிதைகள் பூக்கின்றன. அதனாலேதான் உண்மையான கவிஞர்களின் கவிதைகள் காலம் கடந்தும் நிற்கின்றன.

பனை ஓலையில், இரும்பு ஆணி கொண்டு எழுதிய பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிவந்து நிற்கின்றன.

திருக்குறளும், தேவாரமும், நாலாயிர திவ்ய பிரபந்தமும் எத்தனை காரியங்களுக்கும், தீக்கும், வெள்ளத்திற்கும் தப்பி காலத்தை வென்று நிற்கின்றன.

எப்படி ?

அதற்குள்ளிருக்கும் உண்மையின் சக்தியாக இருக்குமோ ?

பாரதியின் பாப்பா பாட்டு.

அவன் என்ன நினைத்து எழுதினானோ தெரியாது. இன்றும் நமது வாழ்க்கையில் அது மிக மிக அர்த்தம்  உள்ளதாக இருக்கிறது. காலத்தின் சத்தியத்தில் அது இன்றும் பரவலாக ஒலிக்கிறது.

தொலை நோக்கு கொண்ட நம் வீரத்தமிழனின் வரிகளை வெறும் நான்கு மதிப்பெண் பெறுவதற்காக பள்ளியில் படித்ததை மறந்து வாழ்விற்காய் ஒருமுறை வாசித்துப் பார்ப்போம்.

பாரதி மழலைகளிற்காக எழுதிய பாடல். ஆனால் மழலைகளிற்கு முன் பெற்றோர் அதை புரிந்து கொள்ள வேண்டிய தேவை சமூகத்தில் இன்றுள்ளது. என் குழந்தை Pழுபுழு பாத்தாதான் சாப்பிடுவான் என்று பெருமை பட்டுக்கொள்ளும் பெற்றோருக்கு தான் பாரதியின் பாப்பா பாட்டு புரியவேண்டிய அவசியம் அதிகம் இருக்கிறது. சிறுவர்களிற்கான இன்றைய தினத்தில் பெற்றோர் – கற்றோர் நாம் அனைவரும் இந்தப்பாடலை பொறுப்புடன் வாசிப்போம்.

‘ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா,”

இன்று கைப்பேசி , மடிக்கணினி தொலைக்காட்சி என்று எத்தனையோ சாதனங்கள் வந்து விட்டன. இந்த குறுத்திரை சாதனங்களோடு குறுகிவிட்டது குழந்தைகள் உலகம். பிள்ளைகள் வெளியே சென்று விளையாடுவது என்பது மிக மிக குறைந்து  விட்டது. வெளியில் சென்று விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் ?

முதலாவது, மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட கற்றுக் கொள்ளலாம். சமூகத்திறன் வளரத் தொடங்குகிறது.

இரண்டாவது,  அப்படிச் இப்படிச் செய் என்று சொல்லுவதிலும், அப்படி மற்ற குழந்தைகள் சொல்வதை கேட்பதிலும் ஒரு தலைமை பண்பு வளர வழி இருக்கிறது.

மூன்றாவது, வெளியில் விளையாடும் போது வெயில் பட்டு, விட்டமின் டி கிடைக்க வழி  பிறக்கும்.

நான்காவது, ஓடி விளையாடினால் தசைகள் வலுப் பெறும்.

ஐந்தாவது, ஓடி விளையாடும் போது மூச்சு  வாங்கும். அதிகமான பிராண வாயு உள்ளே செல்லும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படும். அது மட்டும் அல்ல உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பிராண வாயு  அதிகமாக கிடைத்து அவை நல்ல நிலையில் செயல்  படும்.

இவ்வாறு வெயிலில் ஓடியாடி விளையாடும் சில சிறுவர்களை அட்டையில் பார்க்கிறீர்கள். பாரதி அடையாளப் படுத்தியதும் இவர்களைத் தான். இந்த வயதில் ஓடிக் களைத்து விழுந்து எழும்பி விளையாடாமல் பிறகு எந்த வயதில் விளையாடப் போகிறார்கள்?

வீட்டுக்குளே இருந்து கொண்டு கைப்பேசியோடு  அடைந்து கிடந்தால், இது ஒன்றிற்கும் வழி  இல்லை.

‘ஒரு குழந்தையை வையாதே பாப்பா”

ஓடி விளையாடுதல் இன்பம். அதில் குரோதமும் பகையும் உள்நுழைய இடந்தரல் ஆகாது என்று மழலைக்கு புரியும்படி பாரதி சொல்கிறான்.

குழந்தைகளிற்கு இன்றைய பெற்றோர்கள் பலவிடயங்களை சொல்வதில்லை. சொன்னால் புரியாது என்று சாட்டு மட்டும் சொல்வார்கள். புரிவது போல் சொல்ல பெற்றோர்க்கு தெரியவில்லை என்பதே இன்றைய சமூகத்தின் அவலமாயுள்ளது. பாரதி தெளிவாய் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து புரியவைக்கிறான் பாருங்கள்.

‘சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா”

இயற்கையை இரசிக்கப்  பழகு. நம் உயிர் உள்ளவரை இந்த உலகை – மக்களை இரசிக்க தெரிந்தால் மட்டுமே இன்பம் எம் மனதில் நிலை கொள்ள முடியும். இரசனை அறியா மானிடர் வாழ்வில் இன்பம் என்பதை இரவலாக எத்தனை நாட்களிற்குத் தான் புகுத்த முடியும்? இயல்பான இன்பத்திற்கு இரசனை மறவா உள்ளமே வழி என்று மழலைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். எந்த துன்பத்திலும் அவர்களுக்கான இன்பத்தை அனுபவிக்க கற்றுக் கொடுங்கள்.

‘கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா”

சமுதாயத்தில் பசித்தவர்கள் இருப்பார்கள். பசிக்காக திருடிவிட்டால் அவர்களைப் புரிந்து கொள். அவர்கள் மேல் இரக்கம் கொள்.  திருடும் காக்கையை காட்டி கற்றுக் கொடுங்கள். ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே” என்று எண்ணுகிற மனம் எத்தகைய நிம்மதியளிக்கும் என்று குழந்தைகளிற்கு புரியவையுங்கள்.

‘பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா.”

வீட்ட்டில் வேலைக்கு இருப்பவர்களை சில எஜமானர்கள் அடிமைகளை போல நடத்துவார்கள். மரியாதை எல்லார்க்கும் உண்டு என்று அவர்கள் அறிவதில்லை. தினம் ஒரு வசவு தான். நமக்கு கீழே வேலை செய்பவர்களை நாம் தான் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள் மழலைக்கு.  குதிரையும், மாட்டையும், ஆட்டையும் ஆதரித்துப் பழகி விட்டால் பின்னாளில் தனக்காக வேலை செய்பவர்களின் உழைப்பை மதிக்கும் மனம் தானே வளரும். மழலைகள் மனதில் இதனை கவனமாய் விதையிட வேண்டியது நம் பொறுப்பல்லவா?

மழலை மாறாத வயதிலேயே பள்ளியில் நாளின் பாதி நேரம் செலவிட வைத்து, மாலை வீடு திரும்பியவுடன் தனி வகுப்பு சென்று பாடம், இரவு வீடு திரும்பியவுடன் பள்ளி வீட்டு வேலைகள் என்று விளையாட வேண்டிய இந்த வயதில் காலை முதல் மாலை வரை புத்தக மூட்டை சுமக்கும் சுமை தாங்கியாக சிறார்களை மாற்றியுள்ளது இன்றைய உலகம். 

என்னதான் மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க அரசு முப்பருவமுறையை கொண்டு வந்தாலும், இன்று மாணவர்கள் மன நிலை ஒரு இயந்திரம் போலவே மாறி வரும் அபயத்தை நாம் ஏன் இன்னும் உணரவில்லை?

ஒருமணிநேரம் கூட ஓய்வில்லாத கல்வி எதற்குதவப் போகிறது?

‘காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.”

எத்தனை திறமான நேரசூசி. படிப்பு மனதில் பதிய நல்ல நெகிழ்வான மனம் வேண்டும். மனதை நெகிழ்விக்கும் இசை மற்றும் கலைகளை மழலைகள் பழக வேண்டியதும் அவசியமே. நமக்கான நாளை நல்லமுறையில் அமைக்க பட்டியல் போட்டு தருகிறான் பாரதி.

‘பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா”

தவறுகள் செய்வது கூடாது. பாவங்கள் செய்வது ஆகாது. பொய் சொல்வது தவறு. ஆதலால் கூடாது என்றான். ஆனால் ஆபத்திற்கு சொல்லலாம். தவறிற்கு தண்டனை பெறலாம். ஆனால் புறம் பேசுதல் பாவம். எந்தக் காரணத்திற்காயும் அதைச் செய்தல் ஆகாது என்பதை வலியுறுத்திச் சொல்கிறான்.

ஒரு வேளை மற்றவர்கள் மேல் பழி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணம் வரலாம். அந்த எண்ணம் உருவாகுவது மனதில் தோன்றுகிற அச்சத்தினாலே ஆகும். அந்த அச்சம் நீங்கி துணிவு வருமாயின் எதற்காகவும் ஒருவன் பாவம் செய்யமாட்டான். அந்த துணிவையும் தன் பாடல் வரிகளிலே தருகிறான் பாரதி.

‘தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா.”

துணிவாய் உண்மை சொல். பொறுப்பை ஏற்றுக் கொள். துன்பம் வரலாம். தீங்கு வராது. உண்மை சொல்லி வாழ்ந்தால் தெய்வம் உனக்கு துணையாக இருக்கும். பயப்படாதே என்று தைரியம் சொல்லித் தருகிறான்.

பெண்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்கள். எதற்கு எடுத்தாலும் ஒரு ஆணின் துணையை நாடுபவர்கள். தவறு செய்பவர்களைக் கண்டால் பயந்து ஒதுங்கக் கூடாது. சண்டை போடு அவனிடம். அவனை அவமரியாதை செய். துணிந்து நில் என்று பெண்குழந்தையிடத்தில் தைரியத்தை விதைக்கிறான்.

‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா”

இத்தனையும் ஒரு குழந்தைக்கு தாய் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் பாரதி சொல்லிக் கொடுக்கிறான். சொல்லிவிட்டு இதையும் சொல்கிறான்.

‘தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்தொழுது படித்திடடி பாப்பா”

மொழியின் மேல் மதிப்பு வேண்டும். நாட்டையும், மொழியையும் மதிக்கத்தெரியாதவன் எவனோ அவன் இந்த நொடியே இறந்து போகலாம். அவனால் இந்த உலகிற்கு எந்த நன்மையும் வரப்போவதில்லை.

தமிழில் நமக்கு நூல்களை தந்தவர்கள் மகான்கள். வள்ளுவரும், இளங்கோவும், கம்பனும், ஆழவார்களும், நாயன்மார்களும் நாம் உய்ய வேண்டும் என்று தாங்கள் தேடிக் கண்ட உண்மைகளை பாட்டாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். நன்றி வேண்டும். அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக , தமிழை தொழுது படித்திடச் சொன்னான்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். 


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது

வாழும் முறைமையடி பாப்பா”

இப்படித்தான் ஒரு தமிழ் மகள் வளர வேண்டும் என்றான்.

சொல்லித் தருவோம் – அடுத்த தலைமுறைக்கு. அது நம் அதற்கடுத்த தலைமுறையையும் காக்கும்.

Related posts

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள்

Thumi202121

நேர்த்தி முறைகள் எல்லை மீறுகின்றனவா…?

Thumi202121

விற்பனைப் பொருளாகும் உடல்

Thumi202121

Leave a Comment