இதழ் 65

மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்

சுகாதாரத்துறை நெருக்கடியில் உள்ளது. வைத்தியர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம் இருக்கின்றார்கள். உலக சுகாதார நிறுவனமானது (2010) தனது சுகாதார உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச ஆட்சேர்ப்பு தொடர்பான உலகளாவிய நடத்தை விதித்தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின்” (பக்கம்.7) சுகாதார உத்தியோகத்தர்களை தொடர்ந்தும் ஆட்சேர்ப்பு செய்வதை உற்சாகப்படுத்தாமலிருக்கும் அதேவேளை, ‘புவியியல் ரீதியான சுகாதார உத்தியோகத்தர்களின் சமமற்ற விநியோகத்தை கருத்திற்கொண்டு அவர்களை வசதி வாய்ப்புகள் குறைவான பிரதேசங்களில் தக்கவைப்பதற்கான ஆதரவை வழங்க வேண்டும்” (பக்கம்.8).

சுகாதாரத்துறையில் நிலவும் மூளைசாலிகளின் வெளியேற்றம் குறிப்பாக வைத்தியர்களின் திரளான குடிபெயர்வை தடுக்க அரசாங்கம் என்ன செய்கின்றது? இந்த ஆக்கம் மருத்துவத்துறையில் நடைபெறும் குடிபெயர்வை ஊக்குவிக்கக்கூடிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகள் மீதான அவதானத்தை செலுத்துவதோடு பாரியளவிலான மாற்றங்களின் தேவைப்பாட்டை உணர்த்துகின்றது.

நகர்ப்புற – கிராமப்புற ஏற்றத்தாழ்வுகள்

நாட்டின் 13.3% மான நிலப்பிரதேசத்தையும் 5% மான சனத்தொகையையும் கொண்டுள்ள வடமாகாணமானது, அரசதுறையை சேர்ந்த 5%மான மருத்துவ நிபுணர்களையும் வைத்தியர்களையும் கொண்டுள்ளது. சதவீதத்தை பொறுத்தவரை இப்பகிர்வானது நியாயமானதாகக் காணப்பட்டாலும் நிலப்பரப்பை வைத்து பார்க்கும் போது வைத்திய நிபுணர்கள் பரவிக்காணப்படுவதோடு கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் மருத்துவ உதவிகள் பெறுவதற்காக நீண்ட தூரங்களை கடக்க வேண்டியுள்ளது. மறுதலையாக 11.2%மான நாட்டின் மக்கள்தொகையையும் வெறும் 1.08% நிலப்பரப்பையுமே கொண்ட கொழும்பு நகரமானது கிட்டத்தட்ட அதன் சனத்தொகையின் இரு பங்கான மருத்துவ நிபுணர்களை (கிட்டத்தட்ட நாட்டின் கால்வாசி வைத்தியர்களை) கொண்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏனைய மருத்துவ வேலைத்தொகுதிகளிலும் காணப்படுவதோடு மருத்துவ மூளைசாலிகள் வெளியேற்றமானது அதிகமாக கிராமப்புற மக்களையே பாதிக்கின்றதென புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
(அரச துறையில் காணப்படும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் பகிர்வு வீதம்- 2019)

ஏனைய நாடுகள் இவ்வாறான நெருக்கடிகளின் போது என்ன செய்திருக்கின்றன?

தாய்லாந்தில் இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டபோது கிராமப்புறங்களில் வைத்தியர்களை தக்கவைக்க பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். 1960 களிலிருந்தே நடைமுறைப் படுத்தப்படும் அரசாங்க பிணைகள் திட்டமானது குறிப்பிட்ட காலம் வரை வைத்தியர்களை கிராமப்புறங்களில் சேவை செய்ய நிர்ப்பந்திப்பதோடு, இல்லாத பட்சத்தில் பிணையை வழங்கும்படியாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. மேலதிகமாக, சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளும், கிராமப் புறங்களிலிருந்து பொதுப் பரீட்சைகளில் போதுமான புள்ளிகளோடு தேர்ச்சியடையாத மாணவர்களை பட்டப்படிப்பின் பின்னர் கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை தொடரும் தேவைப்பாடுகளோடு மருத்துவ கற்கைநெறிகளில் இணைக்கின்றன. இவ்வாறான தேவைப்பாடுகளோடு கற்று வெளியேறும் வைத்தியர்கள் தாய்லாந்தில் கிட்டத்தட்ட 30%ஆனோர் காணப்படுவதோடு இவர்கள் குறித்த கால எல்லையை தாண்டியும் தமது சேவைகளை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

இதைப்போல, கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மருத்துவ கற்கைநெறிகள், பொது சுகாதாரம் மற்றும் முதனிலை பராமரிப்பை அழுத்தமாகக் கொண்ட பாடநெறிகள், கிராமப்புறங்களில் அமைக்கப்படும் பயிற்சிகள், தாய் மொழியில் வழங்கப்படும் கற்கைநெறிகள் என சுகாதார உத்தியோகத்தர்களை தக்கவைக்கும் ஏனைய நிகழ்ச்சி நெறிகளும் இங்கு காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக கிராமப்புறங்களில் சேவையாற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கில் சிரமங்களுக்கான கொடுப்பனவு, மிகைநேர கொடுப்பனவு மற்றும் இன்னோரன்ன தொழில் அபிவிருத்தி வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இவ்வாறான ஏற்பாடுகளின் பின்னணி மற்றும் தூரநோக்கு சுகாதார வாய்ப்பு வசதிகளை கிராமப்புறங்களுக்கும் வாய்ப்பாக்குதலே அன்றி சுகாதார உத்தியோகத்தர்களின் சேவையை வரையறுப்பதற்கல்ல.

இதற்கு முரணாக, இலங்கையில் மேற்கொள்ளப்படும் கொள்கைகள் சுகாதார உத்தியோகத்தர்களை குடிபெயர்க்கும் படியாக இருக்கின்றன. உண்மையில், தற்போது முன்மொழியப்பட்டுள்ள பாதீடானது, கிராமப்புறங்களில் சுகாதார உத்தியோகத்தர்களை தக்கவைக்கும் கொள்கைகளை பலவீனப்படுத்தும்.

இலங்கையில் இலவசக்கல்வியை பெறும் மருத்துவ பட்டதாரிகளுக்கு பிணைகள் காணப்படுவதில்லை. அதாவது, இளம் மருத்துவர்கள் பட்டம் பெற்ற பின்னர் அதிக வாய்ப்புகள் உள்ள நாடுகளுக்கு குடிபெயர்ந்து, அந்நாடுகளிலுள்ள பரீட்சைகளை தோற்றி அந்நாட்டில் சேவையை தொடர இருமுறைகள் யோசிக்க வேண்டியதில்லை. மேலும் மருத்துவத்துக்கான பட்டப்பின்படிப்பு நிலையமானது (PGMI), நிலையத்தின் சான்று பெறும் பொருட்டு காலனித்துவ கொள்கைகளை கைக்கொண்டிருப்பதோடு விசேட நிபுணர்கள் தேர்ச்சிபெற குறிப்பிட்ட காலம் வெளிநாட்டு பயிற்சியை, (பொதுவாக உயர் வருமானம் பெறும் நாடுகளில்) பெற்றிருக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதித்திருக்கின்றது. சுகாதார அமைச்சானது இத்தகைய பயிற்சிகளுக்கு பிணைகளுடன் கூடிய உதவித்தொகை வழங்குவதோடு இத்தகைய பயிற்சிகளை செலவு குறைந்த, மருத்துவ குடிபெயர்வுகளுக்கு அதிகமாக விரும்பப்படாத, தொழிநுட்பங்கள் வளர்ந்துவரும் தென்கிழக்காசிய நாடுகளில் மேற்கொள்ள அனுமதிக்க முனையலாம்.

மூன்றாவதாக, தற்போது இலங்கை மருத்துவ சங்கத்தின்(SLMC) சான்றளிப்பு அங்கமானது மருத்துவ கற்கைக்கான உலக ஒன்றியத்தின் (WFME) உள்நாட்டு சான்றளிப்பு முகவராக ஆகும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மருத்துவ கற்கைக்கான உலக ஒன்றியத்தின் சான்று பெற்ற நிலையங்களில் கல்விகற்று வெளியேறும் பட்டதாரிகள் WFME சான்றை ஏற்கும் பட்டப்பின்படிப்புகளை தொடர முடியுமாயிருப்பதோடு அந்தந்த நாடுகளில் தொழில்வாய்ப்புகளை பெற ஏதுவாகவும் அமையலாம்.

இருப்பினும், சர்வதேச தர நியமங்களுக்கேற்ப மருத்துவ கர்கைநெறிகளை வடிவமைப்பதானது உள்நாட்டுக்கு தேவையான விடயங்களை புறக்கணிக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது. உதாரணமாக, 2018ல் வெளியிடப்பட்ட SLMCயின் மருத்துவ கல்வியின் குறைந்தபட்ச தரங்களில், கிராமப்புறங்களில் மருத்துவ பயிற்சிகளை பெற்றிருப்பது காணப்படவில்லை, எனினும் பல மருத்துவர்கள் தமது முதல் நியமனங்களை கிராமப் புறங்களிலேயே பெறுகின்றார்கள்.

அநேகமாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரைகளின் படியே அரச துறைக்கான மருத்துவ நியமனங்கள் நிறுத்தப் பட்டிருக்கின்றன. இக்கொள்கை எத்தனை தூரம் சுகாதாரத்துறைக்கு பாதிப்பானதாக அமையக் கூடும் என்பதை நிர்ணயிக்க முடியாமல் இருப்பதுடன், எதிர்காலத்தில் பொதுத்துறையில் மருத்துவர் களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப் படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வேலை வாய்ப்புகளை உறுதி செய்தல் மற்றும் பட்டப்பின் படிப்புகளுக்கான கற்கைகளை அரசாங்க அமைப்புகளில் தக்கவைப்பதானது, பொதுத் துறையில் மருத்துவர்களையும்இ மருத்துவ நிபுணர்களையும் ஈடுபடுத்துவதற்கும் தக்கவைப்பதற்குமான வாய்ப்பாக இருக்கின்றது. அரசியல்மயமாக்கம் காணப்படுதல், குறிப்பாக மாற்றலாகும் மருத்துவர்களின் பட்டியல்களில் அரச மருத்துவர்கள் சங்கத்தின் செல்வாக்கு இருத்தல், மேலும் இது போன்ற பல சிக்கல்களை விடுத்து, இந்த அமைப்பானது, புதிய மருத்துவர்களை கிராமப்புற நிலையங்களுக்கு சேவைகளில் அமர்த்த ஏதுவாயிருக்கின்றது. பொதுத்துறையில் மருத்துவ நியமனங்கள் நிறுத்தப்படுமாயின், வேலைவாய்ப்புகள் தொடர்பான நிச்சயமின்மைகள் உருவாவதோடு அதன் விளைவாக மருத்துவ மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும்.

தனியார் மயப்படுத்தலும் கிராமப்புறங்களில் தக்கவைத்தலும்

இலங்கையில் மருத்துவக் கல்வியானது அரசின் மேற்பார்வையில் இயங்கும் வேளையில் 11 பீடங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) கீழும் ஒரு பீடமானது பாதுகாப்பு அமைச்சின் கீழும் இயங்குகின்றன. பல தசாப்தங்களாகவே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மருத்துவக்கல்வியை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. குறிப்பாக, பெற்றோர் அதிகமாக தம் பிள்ளைகள் மருத்துவக்கல்வியை தொடர வேண்டுமென விரும்பும் தென்னாசிய அமைப்பில், பட்டப்படிப்புகள் லாபகரமான தொழில்வாய்ப்புகளாக பார்க்கப்படுகின்றன. இன்னமும் இலங்கை எதிர்த்து வெற்றி கண்ட SAITM படுதோல்வி எம் நினைவுகளில் இருக்கக்கூடும்.

இருப்பினும் இலங்கை அரசாங்கங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் முயற்சியை கைவிடவில்லை. மாணவத் தலைவர்கள் மீதான தாக்குதல்களை தாண்டி SLMCயின் சான்றளிக்கும் பிரிவானது நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளையும் சான்றுபெரும் விண்ணப்பங்களை கோரியுள்ளது; இருப்பினும் எந்த இடத்திலும் அரச பல்கலைக்கழகங்கள் குறிப்பிடப்படவே இல்லை. சான்றளிக்கும் பொறுப்பை ஒரு ‘தன்நிலையான” அமைப்பொன்றுக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கமானது UGCயின் தொந்தரவான நிர்வாக செயன்முறைகளை தந்திரமாக ஏமாற்றி மருத்துவ கல்வியின் மீதான வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கின்றது. இந்நோக்கமானது 2018ல் வெளியிடப்பட்ட குறைந்தபட்ச தகுதி நிலைகளிலிருந்து வெளிப்படுகின்றது.

‘இணைப்பினூடாகவோ அல்லது இரட்டை மருத்துவ கற்கை நெறிகளினூடாகவோ இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் காணப்படும் எல்லா அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களும், நிலையங்களும், தமது மருத்துவ கற்கைகளை வழங்கும் நடைமுறையில் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிநிலைகளை பேணி நடக்க வேண்டும்.”

மருத்துவக் கல்வியை தனியார் மயப்படுத்துவதானது, மருத்துவர்களின் மக்கள் கணிப்பியலை பொதுவாக நாட்டில் இருக்க திட்டமிடாத மேற்குடியை நோக்கி விலகலடையச் செய்யவல்லது. இம்மாற்றங்களுக்கு பங்களிக்கும் வகையில் அரசானது வெளிநாட்டு கல்வித்தகுதிகளோடு வரும் மாணவர்களை மருத்துவகல்வி உட்பட கட்டணம் அறவிடப்படும் கற்கைநெறிகளுக்கு உள்நாட்டு பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்குள் அனுமதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகளில் அதற்கான வரையறுக்கப்பட்ட அனுமதிகள் காணப்படினும், வெளிநாட்டு கல்வித் தகுதிகளோடு நுழையும் மாணவர்களின் அனுமதியை அதிகரிப்பதானது ஏற்கனவே அழுத்தமாகியுள்ள அமைப்பொன்றில் உள்நாட்டு மாணவர்களின் அனுமதியானது சமாந்தரமான வகையில் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். வெளிநாட்டு மாணவர்களின் அனுமதி நாட்டிலுள்ள மூளைசாலிகளின் வெளியேற்றத்தை குறைக்க எவ்வகையிலும் உதவியாக இராது.

2023க்கான பாதீட்டு முன்மொழிவுகளில் உயர்தர வணிகக்கல்வி, தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் கணிதத்துறை மாணவர்களின் திறமை அடிப்படையிலான அனுமதிகளை 40%த்திலிருந்து 50% வரை அதிகரிக்கும் திட்டங்கள் காணப்படுகின்றன. அதாவது, இவ்வாறான அனுமதிகள், வன்னி மற்றும் ஊவா போன்ற வசதிகுறைந்த மாவட்டங்களிலிருந்து மாவட்ட ஒதுக்கீட்டு அனுமதிகளின் மூலம் மருத்துவ கற்கைகளுக்கு தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களே அதிகமாக கிராமப்புறங்களில் சேவைபுரியும் நிலையில் திறமை அடிப்படையிலான தேர்வானது கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு பலமான அடியாக இருக்கப்போவதோடு மருத்துவக்கல்வியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும்.

கசப்பான தோல்வி

ஏற்கனவே சுகாதரத்துறையானது பல நெருக்கடிகளுக்குள் சிக்கித்தவிக்கும் நிலையில், அரசாங்கத்தின் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்த அல்லது அவற்றை முன்மொழிய அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்வது மருத்துவ மூளைசாலிகள் வெளியேற்றத்தை மேலும் அதிகரிக்கும். கடுமையான வளத் தட்டுப்பாடுகளால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பொது சுகாதார அமைப்பில் உலக வங்கி- சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களூடாக வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் பாரிய மாற்றங்கள் கட்புலனாகின்றன. ஏனைய நாடுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு மருத்துவ மூளைசாலிகளின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் சுகாதார ஊழியர்களை வசதிகுறைந்த பகுதிகளில் தக்கவைத்து கிராமிய சுகாதார அமைப்புக்கு நேரும் நெருக்கடிகளிலிருந்து நாட்டை பாதுகாப்போம்.

Related posts

வாழ வைத்து வாழுங்கள்

Thumi202121

சுதந்திர தேவியின் கதை

Thumi202121

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 02

Thumi202121

Leave a Comment