சமூகத்தின் அமைதியான இருப்பை கேள்விக்குறியாக்கக்கூடிய சமூக, உள, ஆன்மீகப் பிரச்சனைகளில் ஒன்றாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இப்போதைப் பொருள் பாவனையானது வருடா வருடம் தவறாது உயர்ந்து கொண்டே செல்வதனைUnited Nations office on Drugs and Crime (UNOD) இனுடைய அறிக்கையின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. மேலும் 2030ம் ஆண்டாகும் போது வருமானம் குறைந்த நாடுகளில் போதைப்பொருள் பாவணையாளர்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையை விட மேலும் 43%அதிகரிக்கும் எனவும் நடுத்தர வருமானம் குறைந்த நாடுகளில் தற்போது காணப்படும் அளவினை விட மேலும் 10% அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு தரவுகளின் படி இலங்கை போதை பொருள் பாவனையில் உலகளாவிய ரீதியில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
மேலும் இப்போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டிளமைப் பருவத்தை ஒட்டிய பாடசாலை மாணவர்கள் ஆவர். இப்போதைப் பொருட்களில் பல வகைகள் காணப்படுகின்றன. மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான்மசாலா, கொக்கைன், எதனால், நிகாட்டின் போன்றவை ஆகும். மேலும் இப்போதைப்பொருட்கள் உள்ளிழுத்தல், ஊசி மூலம் ஏற்றுதல், உட்செலத்துதல், நாக்கின் கீழ் வைத்தல், தோலின் ஊடாக உறிஞ்ச வைத்தல் போன்ற முறைகளின் மூலம் நுகரப்படுகின்றது.
போதைப் பழக்கத்தை பல காரணிகள் தூண்டுகின்றன. போதைப் பொருட்கள் குறித்து கேள்விப்படும் தகவல்கள் மூலம் இளைஞர்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். ‘அதில் என்னதான் இருக்கிறது பார்த்து விட வேண்டும்” என்ற ஆர்வம் இவர்களை தூண்டுகின்றது. மேலும் பிறரிடம் இருந்து கற்றுக் கொள்கின்றனர். போதை பொருள் பாவனைக்கு முக்கிய காரணமாக அமைவது புறக்கணிப்பு ஆகும். குடும்பத்தினராலோ, சமூகத்தாலோ புறக்கணிக்கப்படுபவர்கள் தற்காலிக மகிழ்ச்சிக்காக போதைப் பழக்கத்தை நண்பர்களாக்கிக் கொள்கின்றனர்.
போதைப் பொருட்கள் மத்திய நரம்பு மண்டலத்தின் செயற்பாடுகளையும், மனித செயற்பாடுகள் மற்றும் மனநிலையை பாதிக்க கூடியவையாக காணப்படுகின்றன. இதன் மூலம் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை நோக்கும்போது முதலில் மரணம், தற்கொலை முயற்சி, தன்னைத்தானே காயப்படுத்தல், மூளை நரம்புத் தொகுதி நிரந்தரமாக பாதிக்கப்படல், இதய அமுக்கம், மூச்சுவிடல் பாதிப்பு, நாக்கின் சுவை அரும்புகள் பாதிக்கப்படல் , இரப்பை புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், காயங்கள் விரைவில் குணமடையாமை போன்ற உடல் ரீதியான பாதிப்புக்களை போதைப் பொருள் பாவனை ஏற்படுத்திவிடுகின்றது.
போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் உளவியல் பாதிப்புகளாக சிந்தனைப் பிறழ்வு ஏற்படல், பிரம்மைகள் தோன்றுதல், தீர்மானம் எடுக்கும் ஆற்றல் குறைவடைதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமை, சந்தேக மனப்பான்மை ஏற்படல் , மறதி ஏற்படல் அதாவது மூளையில் உள்ள கலங்கள் மதுவினால் நிரப்பப்படுவதனால் தகவல்களை சேகரித்து வைக்க கூடிய கலங்கள் அதன் செயல்களை இழக்கும். அதே போன்று தாழ்வான சுயமதிப்பீடு ஏற்படல் போன்ற உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் குடும்ப ரீதியான பாதிப்புகளாக குடும்பத்தவர்களுடைய வெறுப்புக்கு ஆளாதல், குடும்ப பொறுப்புகளை எடுத்து முடியாத நிலைக்கு தள்ளப்படுதல், பிள்ளைகள் போதையாளரை வெறுப்பவர்களாக அல்லது அவர்களை பின்பற்றுவர்களாக காணப்படுதல்,பிள்ளைகளுடைய கற்றல் செயல்பாடு பாதிக்கப்படல், பொருளாதார ரீதியான பின்னடைவினை குடும்பத்தினர் எதிர்நோக்குதல் போன்ற பல்வேறுபட்ட குடும்ப ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றது.
போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் சமூக ரீதியான பிரச்சனைகளாக குழு மோதல் ஏற்படல், பொது சொத்துக்களை சேதமாக்குதல், சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்தல், வீட்டு வன்முறை செயல்கள் அதிகரித்தல், விபத்துக்கள் அதிகரித்தல், குற்றச் செயல்கள் அதிகரித்தல் போன்ற பல சமூக பாதிப்புகளையும் போதைப்பொருள் பாவனை ஏற்படுத்திவிடுகின்றது.
ஜஸ் போதை பொருளுக்கு அடிமையானவர்கள்
ஜஸ் போதை பொருளின் தாக்கங்கள்
பொதுவாக போதைப்பொருளைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பான நிலை இல்லை. எந்தவொரு மருந்தின் பயன்பாடும் எப்போதும் சில ஆபத்தைக் கொண்டுள்ளது. எந்த வகையான மருந்துகளையும் எடுத்துக் கொள்ளும்போது கவனமாக இருப்பது முக்கியம். ஜஸ் போதை பொருளின் தாக்கங்கள்; 12 மணி நேரம் வரை நீடிக்கும், ஆனால் மருந்தைப் பயன்படுத்திய பிறகு சில நாட்களுக்கு தூங்குவது கடினமாக இருக்கலாம். ஜஸ் போதை பொருள் ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது, ஆனால் விளைவுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:
- மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் உணர்வுகள்
- அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் ஆற்றல்
- திறந்த மற்றும் உலர்ந்த வாய்
- பற்கள் நறுமுதல் மற்றும் அதிக வியர்த்தல்
- வேகமான இதய துடிப்பு மற்றும் சுவாசம்
- குறைந்த பசி
- அதிகரித்த பாலுந்தல்
- ஊசி மருந்துகளை உட்கொண்டால், அதிக
- தொற்று,நரம்பு சேதம்,எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்
- மூக்கின் சுவாச பாதையை சேதப்படுத்தும் மற்றும்
- மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
ஜஸ் போதை பொருள் பாவனையின் குறுகிய கால தாக்கங்கள்
- அதிரித்த இதய துடிப்பு மற்றும் நெஞ்சு வலி
- சுவாச பிரச்சனைகள்
- தளர்சியான அல்லது கட்டுப்பாடற்ற அசைவுகள்
- தீவிர கிளர்ச்சி, குழப்பம், கூச்சம்
- திடீரென கடுமையான தலைவலி
- மயக்கம்
- பக்கவாதம், மாரடைப்பு அல்லது சில சமயம் இறப்பு.
- தூங்குவதில் சிரமம் மற்றும் சோர்வு
- மங்கலான பார்வை
- சித்தப்பிரமை, பிரமைகள் மற்றும் குழப்பம்
- எரிச்சல்
ஜஸ் போதை பொருள் பாவனையின் நீண்ட கால விளைவுகள்
- பசியின்மை காரணமாக தீவிர எடை இழப்பு
- அமைதியற்ற தூக்கம்
- உலர் வாய் மற்றும் பல் பிரச்சினைகள்
- சளியுடன் காய்ச்சல்
- கவனம் செலுத்துவதில் சிக்கல்
- மூச்சுத்திணறல்
- தசை விறைப்பு
- கவலை, சித்தப்பிரமை மற்றும் வன்போக்கு
- மனச்சோர்வு
- இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள்
உள பிரச்சனைகள்
சித்தப்பிரமை, மாயத்தோற்றம் மற்றும் வினோதமான, வன்முறை நடத்தைகளால் மாணவர்கள் பாதிக்கப்டுகிறார்கள். ஒரு நபர் ஜஸ் போதை பொருளினை பயன்படுத்துவதை நிறுத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் பொதுவாக மறைந்துவிடும். தொடர்ந்து ஜஸ் போதை பொருளினை பயன்படுத்துபவர்கள் விரைவில் மருந்தைச் சார்ந்து இருப்பார்கள். வேலை செய்தல், படிப்பது மற்றும் பழகுவது போன்ற அவர்களின் இயல்பான செயல்களுக்கு ஜஸ் போதை பொருளினை தேவை என்று அவர்கள் உணரலாம்.
ஜஸ் போதை பொருளினை வழக்கமாகப் பயன்படுத்தும் மாணவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் குறைவான மகிழ்ச்சியை உணர ஆரம்பிக்கலாம். அவர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம் மற்றும் அவர்களின் மனநிலைகள் மிக விரைவாக மாறுபடும்;. இந்த மாற்றங்கள் கவலை மற்றும் மனச்சோர்வுடன் நீண்ட கால பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஜஸ் போதை பொருளினை பாவிப்பதை நிறுத்திய பின்பும் குறைந்தது பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு இந்த விளைவுகளை உணரலாம். நீண்ட காலமாகப் பயன்படுத்திய பிறகு, அதைக் கைவிடுவது சவாலானது, ஏனென்றால் உடல் இது இல்லாமல் செயல்படப் பழக வேண்டும். திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் பொதுவாக ஒரு வாரத்திற்குப் பிறகு மெதுவாக மறைந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு பெரும்பாலும் மறைந்துவிடும்.
பெற்றோர்களின் கவனத்திற்கு
- உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள்
போதைப்பொருள், மது பாவிப்பதால் ஏற்படும் உடல், உளவியல் மற்றும் சமூக பாதிப்புகளைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். - ஆவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்
உங்கள் பிள்ளைகள் தங்கள் பயங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும்போது, பொறுமையாகக் கேட்பவர்களாக இருங்கள்.
தீர்ப்பளிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். - போதைப்பொருளை எதிர்க்க உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும். அவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகமல் பாதுகாக்க வழிகளை செய்யுங்கள்.
- முன்மாதிரியாக இருங்கள்
பொறுப்புள்ள பெற்றோராக இருங்கள். புகைபிடிக்கும் அல்லது போதைப்பொருளை பாவிக்கும் பெற்றோரின் குழந்தைகள் சிகரெட் அல்லது போதைப்பொருளுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம். - உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பான உறவு இருந்தால், உங்கள் பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாகாமலிருக்கும்
உளவியல் சிகிச்சை முறைகள்
- ஆசை மறுத்தல் பயிற்சி சிகிச்சை முறை
பொருளுக்கு அதாவது போதைப் அடிமையானவர்களுக்கு அவர்களுடைய குடும்பம் மற்றும் உடல் ரீதியாக ஏற்படுகின்ற பாதிப்பு நிலைமைகள் குறித்து விளங்கப்படுத்தி போதைப்பொருள் மீதான ஆசையினை மறுக்க செய்து அவர்களை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரும் ஓர் உளவியல் சிகிச்சை இதுவாகும். - வெகுமதி முறை.
இதனை உங்களுக்கு விளங்கும் வகையில் கூறின் ஒருவர் ஓர் நாளைக்கு 5 சிகரட்டினை பாவிப்பவராக இருப்பின் அதனை நான்காக குறைக்கும் போது அவருக்கு ஏதாவது ஒரு பரிசு பொருளை வெகுமதியாக வழங்குவதன் மூலம் போதைப் பொருள் அடிமையிலிருந்து படிப்படியாக அவரை குணப்படுத்த முடியும் . இதுவே வெகுமதி அளித்தல் சிகிச்சை முறையாகும். - வெறுப்பூட்டல் சிகிச்சை முறை
அதாவது குறித்த நபர் போதையை உள்ளெடுக்க முற்படும் போது வெறுப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்துவதன் மூலமாகவோ அல்லது போதைப் பொருளை உள்ளெடுக்கும் போது அதனோடு வாந்தி மாத்திரைகளை கலந்து கொடுப்பதன் மூலம் குறித்த நபருக்கு போதைப் பொருள் குறித்து வெறுப்பூட்டலை ஏற்படுத்தி போதைப்பொருள் பாவனையை குறைக்கும் ஓர் சிகிச்சை முறையாக இது காணப்படுகின்றது . உதாரணமாக போதைப் பொருளை பாவிப்பதனால் ஏற்படும் உடல் பாதிப்பை வெளிப்படுத்தக்கூடிய வீடியோ காட்சிகளை, படங்களை காட்டுவதன் மூலம் போதைப் பொருள் குறித்து வெறுப்பூட்டலை ஏற்படுத்தி போதைப் பொருளிலிருந்து மீண்டுவரச் செய்யமுடியும். - அறிகை சிகிச்சை முறை
போதைப் பொருள் தொடர்பாக சில தவறான அறிகைகள் போதை மீதான நாட்டத்தை ஏற்படுத்தும் உதாரணமாக போதைப் பொருட்கள் உடலுக்கு உற்சாகமளிக்கும், கவலைகளை மறக்கச் செய்யும், உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும், உடல் களைப்பை குறைக்கும் இவ்வாறான தவறான அறிவுக் கருத்துக்களை அறிகை சிகிச்சையின் ஊடாக மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும் . ஆகவே போதைப் பொருள் பாவனையானது உடல், உளம் . சமூக ரீதியாக எவ்வாறு பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்கின்ற யதார்த்த ரீதியான விடயங்களை கற்றுக் கொடுப்பதற்கு அறிக்கை சிகிச்சை முக்கியத்துவம் பெறுகின்றது. - Token Economy
ஒரு பொருளின் பாவனையை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ள செய்து வெறுக்க வைத்தல் முறை இதுவாகும் உதாரணமாக ஒரு மணித்தியாளத்துக்குள் அளவுக்கு அதிகமான சிகரெட்டுகளை பிடிக்கச் செய்து அதனை வெறுக்க செய்தலாம் . இச்சிகிச்சை முறையும் போதைப்பொருள் பாவணையில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு உதவி புரிகின்றது.
இவற்றினை விட குடும்ப உள ஆற்றுப்படுத்தல் சிகிச்சைமுறை, குழு சிகிச்சைமுறை , போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக உடல், உள ஓய்வு பயிற்சிகளை வழங்குதல், போதைப் பொருள் பாவனையிலிருந்து சரியான முறையில் வெற்றி கண்ட நபர்களுடைய வாழ்க்கை கதைகள் மற்றும் அனுபவங்களை காட்சிப்படுத்தல் போன்ற உளவியல் முறைகளை பயன்படுத்துவதன் மூலமாக போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை படிப்படியாக குணப்படுத்தி சாதாரண வாழ்வியலுக்கு அவர்களை கொண்டுவர முடியும்.