இதழ் 65

வாழ வைத்து வாழுங்கள்

இன்று பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் எந்த மனிதனைப் பார்த்தாலும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அழுத்தத்திற்காவது உட்பட்டவனாகத் தான் இருக்கிறனான்.

வருடத்தின் 364 நாட்களும் தமது ஊழியர்களை அழுத்தத்தில் வைத்திருந்து விட்டு, ஒரு நாள் மட்டும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று செயலமர்வு நடத்தும் நிறுவனங்களை இன்று எல்லா இடங்களிலும் காண முடிகிறது. இலக்கு என்பது தேவைதான். ஆனால் சக்திக்கு அப்பாற்பட்ட இலக்குகளை தொடர்ச்சியாக வழங்கி, அவற்றை அடைய வைப்பதற்காக அவனுக்கு உச்சபட்ச அழுத்தத்தை பிரயோகித்து, அவனை தனி மனித வாழ்விலிருந்தே பிரித்து விடும் உத்தியைத்தான் இந்த வியாபார உலகம் இன்று கையாள்கிறது. இந்த உத்தி உயரதிகாரியில் இருந்து கீழ் நிலை ஊழியர் வரை படிப்படியாக பிரயோகிக்கப்பட்டு அலுவலகத்தில் அனைவருமே அழுத்தத்திற்கு உள்ளானவர்களாக வாழப் பழகிவிட்டார்கள்.

தனியே அலுவலகங்கள் மட்டுமல்ல, சாதாரண வருடந்தோறும் நடக்கும் தவணைப் பரீட்சைகளில் கூட சிறு பிள்ளைகள் மீது அதிக புள்ளிகள் எடுத்தேயாக வேண்டும் என்கிற அழுத்தம் பிரயோகக்கப்படுகிறது.
இது பல்கலைக்கழகம் வரை தொடர்கிறது. பாடசாலையில் சாதித்தவனால் பல்கலைக்கழகத்தில் எதிர்பார்த்தளவு சாதிக்க முடியாமல் போகலாம். வெற்றிகளையும் பாராட்டுக்களையும் மட்டுமே கண்டவன் முதல் தடவையாக தோல்வியையும் அவமரியாதைகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் போது அதற்கு தன்னை தகவமைத்துக் கொள்ளமுடியாமல் போகிறது. அதனால் ஏற்படும் அதீத அழுத்தம் அவனையும் நிலைகுலைய வைக்கிறது.

விஞ்ஞானத்தில் ஓரலகு பரப்பளவில் செங்குத்தாக தாக்கும் விசையை அழுத்தம் என்கிறார்கள். அந்த ஓரலகு பரப்பளவு சிறிதாக இருந்தால் அது தாங்க வேண்டிய அழுத்தம் பெரிதாக இருக்கும். அதற்கு அந்த பரப்பின் தன்மையும் வலிமையற்றதாக இருந்தால் அந்த அழுத்தத்தை தாங்க முடியாத அந்த பொருள் உடைந்து விடும். சனநெருக்கடியான பேருந்தில் நுன்னிய அடிப் பரப்பைக் கொண்ட கீல்ஸ் பாதணிகளை அணிந்த பெண்களின் முழு உடல்ப் பருமனும் அந்த நுன்னிய அடிப்பரப்பினூடாக அழுத்தப்படும் போது அதனால் தவறுதலாக மிதி வாங்குபவரின் கால்களில் அலவாங்கு ஏறியது போல் பாரிய வலியை உணர்வார். அதுவே சாதாரண செருப்பு அணிந்தவர் ஏறி மிதிக்கும் போது அந்தளவிற்கு வலியை உணர மாட்டார்கள்.

எனவே இவ்வாறான அழுத்தங்களை பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், வேலைத்தளங்களில் சந்திப்பவர்கள் அவற்றில் இருந்து மீள முடியாமல் தமது தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு தீர்வாக அவர்களிடம் எதுவுமே இல்லாத போது இந்த உலகை விட்டு ஓடி விடுவதை தெரிவு செய்கிறார்கள். அதிகரிக்கும் தற்கொலைகளுக்கு அடிப்படைக் காரணம் இதுதான்.

அதே போல, அதிகரிக்கும் விபத்துகளுக்கும் இதுதான் காரணம் என்பது ஒரு யதார்த்தமான உண்மை. இவ்வாறான மீள முடியாத மன அழுத்தங்களோடு வாகனங்களை செலுத்தும் போது அவர்கள் கவனம் வீதியிலோ, வாகனத்திலோ இருப்பதில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

எனவே, தெரிந்தோ தெரியாமலோ பலரை கொலை செய்து கொண்டிருக்கிறோம். வியாபார உலகத்தின் ஓட்டம் சற்றே குறைக்கப்பட வேண்டும். கொரோனோ போன்றவை அவற்றை ஓரளவு எமக்கு மீள நினைவு படுத்தியிருந்தாலும் திரும்ப ஓடத் தொடங்கிவிட்டோம்.

ஒரு நல்ல தலைவன் என்பவன் தானும் அழுத்தங்களுக்கு தலைசாய்க்காதவனாக இருப்பதுடன், தன் அழுத்தங்களை இன்னொருவர் தலைக்கு மாற்றி விடாதவராகவும் இருக்க வேண்டும். நாளை என்பதே நிச்சயமில்லாத ஒரு முறைதான் வாழ முடியும் என்கிற மாதிரியான வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் ரசித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

வாழ வைத்து வாழுங்கள்…
வாழ்க்கை இனிதாகும்…

Related posts

சித்திராங்கதா -61

Thumi202121

உளவியல் ஆய்வுகளில் எதிர்கொள்கின்ற சவால்கள்

Thumi202121

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 02

Thumi202121

Leave a Comment