இதழ் 66

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 03

பருவக் கோளாறுகளும், மனநிலை பாதிப்புகளும் பரவலாக தற்கொலைக்கு பலரைத் தூண்டுகின்றன. பெண்கள் தற்கொலைக்கு மாதவிடாய் பிரச்னைகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நமது நாட்டை பொறுத்தவரை இளவயதுப் பெண்களின் தற்கொலைகள் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. ஆண்டுதோறும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான தற்கொலைகள் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நிகழ்கின்றன என்றாலும், எந்தவொரு தற்கொலைக்கும் தனிப்பட்ட பிரச்னையே காரணம் என்று கூறிவிட முடியாது. எந்தவொரு தனி மனிதனும் தீவு அல்ல என்பதும், தனிப்பட்ட பிரச்சனைக்கு சமூகக் கோணமும் உண்டு என்பதும் மறந்துவிடக் கூடியவை அல்ல. ஒட்டுமொத்த சமுதாயமும் ஏதாவது ஒருவகை அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது, தற்கொலை இயல்பை அதிகரிக்கும் என்பது ஆய்வுகள் வெளிப்படுத்தும் செய்தி. சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதும், பலவீனமான மனங்கள் அதனால் பாதிக்கப்பட்டு தற்கொலை சிந்தனைக்கு தூண்டப்படுவதும் நீருபிக்கப்பட்ட உண்மைகள்.

உலகளவில் தற்கொலை அதிகரித்து வருகிறது, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இறப்புகள் நிகழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் தற்கொலை விகிதம் 30% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, மேலும் 2016 ஆம் ஆண்டில், 10-34 வயதிற்குள் இறப்பவர்களின் இரண்டாவது முக்கிய காரணம் தற்கொலை ஆகும். கடந்த தசாப்தத்தில், தற்கொலை எண்ணங்கள் அல்லது நடத்தைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் இரட்டிப்பாகியுள்ளது.

இந்த உயரும் தற்கொலை விகிதங்கள் நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்த மற்றும் நேசிக்கும் நபர்கள் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதில் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும். ஒருவரின் வாழ்க்கை வெளியில் நன்றாக இருப்பதாகத் தோன்றுவதால், அவர்களின் தனிப்பட்ட தருணங்களில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தமல்ல.

இன்றைய சூழலில் ‘மன அழுத்தம்” என்ற வார்த்தையை கடந்து வராதவர்களே இருக்க முடியாது என்ற நிலை உள்ளது. ஏதேனும் ஒரு கட்டத்தில், அனைவரும் மன அழுத்தத்துக்கு ஆட்படுகின்றனர்.

ஆனால், அதிலிருந்து அனைவரும் மீள்கிறார்களா என்பதுதான் இங்கு பிரச்சினை. தொடர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.

கணவன் – மனைவி இடையிலான பிரச்சினை, குடும்ப உறவுகளில் சிக்கல், கடன் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், நோய்களால் நீண்ட நாட்கள் பாதிப்பு, தாங்க முடியாத வலி, மது, போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல், தேர்வுகளில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் போவது என தற்கொலை எண்ணத்துக்கு பல காரணங்கள் வித்திடுகின்றன.

ஒருவர் தற்கொலைக்கு முயல்கிறார் என்றால், அது திடீரென தோன்றும் எண்ணம் கிடையாது. கண்டிப்பாக முன்கூட்டியே அதற்கான அறிகுறிகள் அவர்களிடம் தென்படும். பேசும் விதம், நடவடிக்கைகளில் சிறிய மாற்றங்கள் இருக்கும். ‘நான் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறேன்”, ‘என்னால் யாருக்கும் பயனில்லை”, ‘எனக்கு வாழ தகுதியில்லை” போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். தாழ்வு மனப்பான்மையும் இருக்கும்.

இதுபோன்று இருப்பவர்களை கவனமுடன் கையாள வேண்டும். அவர்களுக்கு அவ்வப்போது மது அருந்தும் பழக்கம் இருந்தால், அது திடீரென அதிகரிக்கும். பிடித்தமான பொழுதுபோக்குகளை தவிப்பார்கள். நண்பர்கள், உறவினர்களை விட்டு விலகி தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதிகமாக கோபப்படுவது, எந்த செயலிலும் விருப்பம் இல்லாமல் இருப்பது போன்றவையும் மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான். எனவே, அவ்வாறு இருப்பவர்களுக்கு தற்கொலை எண்ணம் இருக்கலாம் என கருத வேண்டும்.

அலட்சியப்படுத்தக்கூடாது: ‘நான் இறந்துவிடுவேன்” என்று ஒருவர் திரும்பத் திரும்ப கூறுவதை கவனம் ஈர்ப்பதற்காக கூறுவதாகவும், அவ்வாறு கூறுபவர்கள் தற்கொலை செய்துகொள்ளமாட்டார்கள் என்றும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு, அதில் யாரேனும் தன்னை குறித்து ஏதேனும் தவறான பதிவுகள், புகைப்படங்கள் பதிவேற்றுவதும் சிலரை தற்கொலைக்கு தூண்டுகிறது. தற்கொலை எண்ணத்தை தகுந்த ஆலோசனைகள் அளித்து தடுக்க முடியும். இதற்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் அவசியம். அறிகுறிகளை கண்டறிந்தால், அவர்களிடம் பிரச்சினை குறித்து விரிவாக பேசி ஆதரவாக இருக்க வேண்டும். மன நல ஆலோசகரை அணுகுவதை பலர் இங்கு களங்கமாக கருதுகின்றனர்.

ஆனால், அது இயல்பான ஒரு விஷயம். எப்படி சளி, காய்ச்சல், தலைவலி பாதிப்பு வந்தால் மருத்துவரை அணுகுகிறோமோ, அப்படித்தான் மன நல மருத்துவரையும் அணுகுகிறோம் என்ற எண்ணம் உறவினர்களுக்கு இருக்க வேண்டும். தற்கொலை எண்ணத்துக்கான காரணத்தைக் கண்டறிந்தால் தான் தீர்வை அளிக்க முடியும். மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகளோடு, எண்ணங்களை மாற்ற தகுந்த ஆலோசனைகளை மருத்துவர் வழங்குவார். மன அழுத்தத்தை நிர்வகிக்க மன அழுத்தம் வராமல் இருக்க நண்பர்கள், குடும்பத்தினருடன் சிரித்து மகிழும் விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி, ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். தூக்கமும், மன அழுத்தமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மன அழுத்தம் தூக்கத்தை பாதிக்கும். தூக்கமின்மையானது அதிக மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே, தினமும் இரவு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்குவது சிறந்தது. இதமான, இருண்ட மற்றும் அமைதியான அறையில் தூங்க வேண்டும்.

தொடர்ந்து சிந்திப்போம்………..

Related posts

மழை வேண்டும்வெள்ளம் வேண்டாமா?

Thumi202121

வினோத உலகம் – 30

Thumi202121

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

Thumi202121

Leave a Comment