இதழ் 66

சித்திராங்கதா -62

சாபம்

துயரம் எல்லை தாண்டும் போது உள்ளத்தில் ஒரு கம்பீரம் உருவாகும். உருவாகின்ற கம்பீரத்தை யாராலும் எது கொண்டும் அடக்கியாள முடியாமல் போகும். குற்றவாளி என்று அடையாளப்படுத்தி நடுச்சபையில் நிறுத்தியபின் உண்மை தெளிந்து ‘குற்றமற்றவள்’ என்று வெகு இலகுவாய் சொல்லிவிட்டால் அது எல்லா அவமானங்களையும் அகற்றிவிடுமா என்ன?

கூடத்தில் குற்றவாளியாய் கிடந்த சித்திராங்கதாவின் மனதினை இனி ஏது கொண்டு ஆற்றமுடியும்? துயரில் தோய்ந்த அவளது கம்பீரம் அவளை ஏதோ ஒரு பாதையில் தீர்க்கமாக அழைத்துச் செல்கிறது. அரசவை, அரசர், மரியாதை, சரி, பிழை என எது பற்றியும் எண்ணாது அவள் கம்பீரம் அவளை பேச வைக்கிறது.

பெருஞ்சபையில் தன்னிலை விளக்கமாய் மந்திரியாரது கேள்விக்கு அவள் பதில் பேசிக்கொண்டிருந்தாள்.
‘பொறுத்தாள எனை வேண்டுகிற பெரியோரே… இந்த சித்திராங்கதா… ஆடலரசி சித்திராங்கதா.. பொறுத்தாண்ட காலம் போதவில்லையா தங்களிற்கு? என் தாய் முகம் நான் மறந்து நாட்களாகிவிட்டது… தாயை மறந்த நான் என் தாய்நாட்டையே தாயாய் நினைத்தேன். அதற்காக இன்று நான் பெற்ற பரிசு தங்களனைவரிடமும் துரோகி என்னும் நாமம்… இப்போது சொல்கிறேன் பேரவைக்கு… என்னிலை விளக்க இறுதிவாய்ப்பு இதுவென்பதால் உரைக்கிறேன். வெள்ளைக்காரனுக்கு அடி பணிய வழிகாட்டினாளா சித்திராங்கதா…? இல்லை.. பறங்கியனை எதிர்க்கும் பலவான் என்னவர் சுயாதீனமாய் இயங்க வேண்டும் என்றே எண்ணம் கொண்டேன். அடிபணியும் பழக்கம் அவரிடத்தில் ஆகாது என்றே வழி காட்டினேன்.

பறங்கியர் பக்கம் என்பது படுகுழியின் பக்கம் என்பது என்னவருக்குத் தெரியாதா அல்லது எனக்குத்தான் தெரியாதா? அபாண்டமான பழி என்மீது சாடிய மேலோரே கேளுங்கள். ஈழத்தில் தென்னிலங்கை பணிந்தது போல் நாமும் பணியக்கூடாது. பறங்கியனை எதிர்க்க படைபலம் மட்டும் போதாது. எதற்கும் பணியாத மனோபலமும் வேண்டும். என்னவரிடத்திலே அது உண்டு என்பதை எச்சபையிலும் உரத்துச் சொல்வேன். அவரின் வீரம் சுதந்திரம் கொண்டால் வெற்றி நம்மை சேர்வதில் தடையில்லை. அதற்காகவே வன்னியத்தேவன் சொன்ன வழியைக் கேட்டேன். என்னவரின் சுயாதீன வழியே நல்லூரைக் காக்கும் என்பதில் ஐயமற்றிருந்தேன். உங்கள் குறிக்கோள் உங்கள் இராச்சியம். என் குறிக்கோள் என் நாடு… என் மக்கள்., தமிழாண்ட தேசம் தகுதியற்றோரால் மாற்றான் கைக்கு மாறி விடக்கூடாது என்பதுதான் என் அச்சம். அதற்கு உங்கள் இராச்சியம் மட்டுமே குறிக்கோளாய் போன உங்கள் மொழியில் எனக்களித்த பெயர் துரோகி…. இப்போது சொல்கிறேன்… நல்லை அரசவையில் உரத்து சொல்கிறேன்… இந்த நாடு மீது நான் கொண்டிருந்த பற்று உண்மையென்றால் என்னை வதைத்த துரோகம் என்ற சொல் இந்த நாட்டின் சாபக்கேடான சொல்லாக பதிந்து நிற்கும்..’ அவளது குரல் அரண்மனை சுவர்களில் எதிரொலித்தது.


பெருமூச்செடுத்தாள். நிதானத்தை பற்றிக் கொண்டு தொடர்ந்தாள்..


‘போரின் குணம் என்னவர்; கலையின் மகள் நான்; எங்கள் பொன்வாழ்வில் மண்ணை அள்ளித் தூவிய இந்த நல்லைமண்ணில் என் சாபம் குடிகொண்டு நிற்கும் என்பதை மறவாதீர். எங்களை வாழவிடாத வஞ்சகர் கூட்டம்.-மக்களது மடமையை கொண்டே வாழும் கூட்டம் – இராச்சியத்திற்கு துரோகம் செய்ததாய் இந்த அபலை மீது அழிபழியிட்ட நல்லைஅரசவை துரோகத்திலே மடியும். இன்னும் பெரிய எத்தனை இராச்சியங்கள் இத்தேசத்தில் உருப்பெற்று வந்தாலும் அத்தனையின் அழிவும் துரோகத்தாலே நிகழும். ஆம்…’ அவள் கண்களின் தீ அவையோரை சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

‘பெண்ணே பெருஞ்சையில் நின்று ஆத்திரத்தில் சாபவார்த்தைகளை உதிர்க்காதே. பொறுமை காக்க வேண்டியது இப்போது அவசியம் பெண்ணே… நாட்டிற்காக சிலகணம் நிதானங்கொள்… இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு மன்னிப்பு வேண்டி நிற்கிறார் மாமன்னர்… ‘ சாந்தமான தொனியில் பேசிக்கொண்டிருந்த மஞ்சரிதேவியை மேலும் பேச விடாது இடைமறித்தாள் சித்திராங்கதா.

‘மன்னிப்பு….! எத்தனை மன்னிப்பு எத்தனை மீட்சி வந்தாலும் எனக்குத் தேவையில்லை.. என்னை காக்கவும் தண்டிக்கவும் ஆளவும் இந்த அவையில் யாருக்கும் தகுதி இல்லை… சித்திராங்கதாவின் முடிவை இந்த அவை இப்போது கேட்கட்டும்..’
விழிகளை மேலும் விரித்து அந்த அரசவையை சுற்றி நோக்கினாள்.

‘மாமன்னரே… மகாராணி மஞ்சரிதேவியே… நல்லை அரசமங்கை மாருதவல்லியே… என்னவர் மடலை என்னிடம் சேர்ப்பித்து என் தலையை நிமிரவைத்த சேனாதிபதியே எல்லோர்க்கும் சொல்கிறேன்…

முடிந்துவிட்டது.. இனி என்னவர் வரும்போது எல்லாவற்றையும் சொல்லுங்கள்…களம் வென்று வருபவரிடம் என் கடைசிச் செய்தியை சொல்லிவிடுங்கள்…ஆகாய சூரியனிற்காய் மலர்ந்த இந்த தடாகத்து தாமரை குற்றவாளியாக கூடத்தில் நின்ற கதையை மறைக்காமல் என்னவரிடத்தில் சொல்லுங்கள்… என்நிலை புரிந்தவர் அவரே.. இப்படியொரு அநியாயம் நிகழ்ந்த பின் உயிர் தாங்கி இருக்கமாட்டாள் இந்த சித்திராங்கதா என்று என்னவர் அறிவார். என் களங்கத்தை களைந்து என்னை குற்றமற்றவள் என நிரூபித்த என்னவரிடத்தில் மறக்காமல் சொல்லுங்கள்… தங்களையே துணை என்று நம்பியிருந்த தங்கள் மனையாள் இந்த அகிலத்தை விட்டு களங்கமற்றவளாய் விடைபெற்றாள் என்று… இவள் கொண்ட இறுதி இன்பம் இதுவே என்பதையும் சொல்லிவிடுங்கள்…’
கண்களில் அருவி பெருகியது.

சுழன்ற அவள் விழிகள் எங்கோ ஒரு திசையில் குத்தி நின்றன. யாருமற்ற அந்த திசையில் யாரையோ கண்டது போல் பேசத்தொடங்கினாள்.

‘என்னவரே… எல்லாவற்றிற்கும் மேலானவரே…… கொடுத்த வாக்கை தாங்கள் காத்துவிட்டீர்கள். நானும் காப்பாற்ற போகிறேன். என்றும் நான் உங்களுடையவளே… என் உயிரிலும் உயர்ந்தவர்க்கு என் உயிரையே பலியாக்குகிறேன். நல்லை இராச்சியத்தின் முடி வேந்தராய் தாங்கள் ஆகப்போகிறீர்ஙள். அறிவுக்கண திறக்கும் அந்த ஆட்சியில் களங்கமற்றவளாய் அந்த கல்யாணிதேவி ராணி போல் நானும் வீற்றிருக்கவே என் இன்னுயிரை பலியிட்டு என்னை சுத்தமாக்கி கொள்கிறேன் இப்போது.… என் கடைசிப் பிழைக்காய் என்னை மன்னியுங்கள் ஐயனே….மன்னியுங்கள்…’

அன்னை வீரமாகாளியே…. ஈழத்தில் இனி பிறக்கும் எந்தப்பெண்ணிற்கும் என்னிலை உருவாகக்கூடாது தாயே… பெற்றுக்கொள் என்னுயிரை… என்னுயிரை பலியிடுகிறேன் உன்னிடத்தில்… என்னவரின் எந்நாட்டின் வெற்றி இனி உன் கையில் தாயே…
வீரமாகாளி தாயே…’

என்று கூறியவள் அடுத்து என்ன செய்யப்போகிறாள் என்று புரியாமல் மாருதவல்லியும் மஞ்சரிதேவியும் விரைந்து அவள் அருகே ஓடினர். கணநேரத்தில் என்ன நடந்தது என்று ஊகிக்கவும் முடியவில்லை. தரையில் கிடந்த சங்கிலியனது பெருவாளை விரைந்து சென்று எடுத்தாள் சித்திராங்கதா. கண்ணசைக்கும் நேரத்தில் அவ்வாள் அவள் கரங்களால் அவள் கழுத்தையே அறுத்துக் கொண்டது. நல்லை அரசவை நடுக்கூடம் சிவந்தது.

தொடரும்….

Related posts

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

Thumi202121

அவனருளாலே அவன்தாள் வணங்கி…!

Thumi202121

சிதைக்கப்படும் உயிர்மம்

Thumi202121

Leave a Comment