இதழ் 66

மார்கழிக் கோலங்கள்

மார்கழி ஒரு தெய்வீக மாதம். இந்துக்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் முக்கியமானதாக உள்ளது. இதனால்த்தான் கிருஷ்ண பரமார்த்மா “மாதங்களில் தான் மார்கழி” என்று கூறியுள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் நிறைந்த மார்கழி மாதத்தில், சில்லென்ற பனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் அதிகாலை நேரத்தில், பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் இடுவார்கள். மிகச்சில கிராமங்களில் வசிக்கும் பெண்கள் இன்றும் இதை பின்பற்றி வருகிறார்கள். வாழ்க்கை முறை மாற்றத்தால், நகர்ப்புறங்களில் குறைந்துவிட்ட கோலமிடும் வழக்கம், மார்கழி மாதத்தில் மட்டும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும்.

மாட்டு சாணம் தரையை ஈரப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. சில கலாச்சாரங்களில், மாட்டு சாணம் நுண்ணுயிர் எதிப்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது, எனவே வீட்டிற்கு பாதுகாப்பு வழங்குகிறது. இந்த மாட்டுச் சாணத்தால் மெழுகிய தரையில் மாவினால் கோலம் போடுவதை பழந்தமிழர் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

அரசர்கள் போரில் வெற்றி பெற்று நாடு திரும்புகின்ற நேரங்களில் ஆரத்தி எடுத்து, அந்நீரை வாசலில் உள்ள கோலத்திற்கு கொண்டுச் சென்று கொட்டும் பழக்கம் இருந்துள்ளது.
அதே போல் மகாபாரதம், இராமாயாணம் போன்ற இதிகாச நூல்களில் கோலங்கள் இடம்பெற்றுள்ளன.

அதுமட்டுமல்லாமல் வாசலில் கோலமிடுவது தமிழரது மரபாக கடைபிடிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் மூலிகைகள், மருதாணிப் பொடி, பச்சிலைப் பொடி, மஞ்சள் பொடி, பல வகை மலர்களைக் காயவைத்து சேகரித்தப் பொடி ஆகியவற்றைக் கொண்டு கோலங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

கோலங்கள் வெறுமனவே அழகுக்காக மட்டும் போடப்படுபவை அல்ல. அரிசிப் பொடி, ஊறவைத்து அரைத்த பச்சரிசி மாவு இவற்றால் இடப்படும் கோலங்கள்தான் உயிரினங்களுக்கு உணவு கொடுப்பவை. எறும்புகள் தொடக்கம் பல பறவையினங்களுக்கும் வயிறாற சத்தான உணவை அளிப்பவை இந்த கோலங்கள் ஆகும். அதிலும் மழைகாலமான மார்கழியில் உணவு கிடைப்பது உயிரினங்களுக்கு சிக்கலாக இருக்கும் என்றும் இதனை இலகுபடுத்தவே மார்கழிக் கோலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கருதுவோரும் உண்டு.

புனையா ஓவியங்கள் என்றும் வண்ண ஓவியங்கள் என்றும் குறிப்பிடப்படும் கோலங்கள் செடியில்லாமலே பூக்கும் பூக்கள் என்றும் கருதலாம். மேனியைக் குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அழகுபடுத்துவதுபோல் பூமியை இந்தக் கோலங்கள் அழகுபடுத்துகின்றன என்பதால் இதற்குத் தொய்யில் என்றும் ஒரு பெயர் இருக்கிறது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை ஆகும்.

சைமேடிக்ஸ்’ என்ற சிறப்பு அறிவியல் கூற்றின்படி, ஒரு வடிவத்தை வண்ணங்கள் மூலமாக அலங்கரிக்கும்பொழுது, அதில் இருந்து நேர்மறை சக்தி மற்றும் அமைதி கிடைக்கும். இந்தக் கூற்றை உறுதி செய்வது நமது பாரம்பரிய கோலங்கள். கோலம் மங்களகரமான வடிவமாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் கோலம் இடும்போது, அதைப் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கோலங்களை எளிதாக வரைந்து விட முடியாது. அந்தந்த வடிவங்களுக்கு ஏற்றவாறு, கைகளை வளைத்து போடும் போது மட்டுமே நமக்குத் தேவையான வடிவம் கிடைக்கும்.

கோலங்கள் இடுவது கைகளுக்குப் பயிற்சியாகவும் கருதப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் குனிந்து நிமிர்வதால் உடற்பயிற்சி செய்வது போலவும் ஆகும். அதே நேரம் நடுப்புள்ளியில் தொடங்கி, தேவைக்கேற்ப வட்டமாகவோ, முக்கோணமாகவோ நீட்டப்படும் கோலங்கள் மூளைக்கு நல்ல வேலையையும் வழங்குகின்றன. பொதுவாக கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைக்கப்படுகிறது. பூசணிப் பூவின் மகரந்த வாசனை உடலுக்கு இதத்தைக் கொடுக்கும்.

இன்று எல்லாவற்றுக்கும் மாற்றீடாக சில எளிய வகைகள் வந்திருப்பது போல இந்தக் கோலங்களுக்கும் வந்திருக்கின்றன. அதுதான் ஸ்டிக்கர் கோலங்கள்! குனியத் தேவையில்லை, வளையத் தேவையில்லை, ஒரு முறை ஒட்டி விட்டால் பல நாள் கிடக்கும். ஆனால் பயன்தான் என்ன? பாரம்பரிய கோலத்தின் தனித்துவமும் மகத்துவமும் கிடைக்குமா? எறும்புக்கு உணவு கிடைக்குமா? அதிகாலை உடற்பயிற்சி கிடைக்குமா? சிந்தனாசக்தியுடன் கோலம் போட்டு முடித்த ஆத்ம திருப்தி கிடைக்குமா? எதுவும் இல்லை! ஆக, ஸ்டிக்கர் கோலங்கள் எறும்புகளை மட்டும் ஏமாற்றும் வேலையல்ல! எங்களை நாங்களே ஏமாற்றும் வேலை!

கோலம் போடுவதற்கும், நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடும் போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின்பு எப்படிக் கோலாகலமாக அழகுடன் இருக்கிறதோ அதுபோல ஒவ்வொரு விடயத்திலும் நாங்கள் எடுக்கும் முயற்சிகள் சில வேளை குழப்பமாக மற்றவர்களுக்கு தெரியலாம். ஆனால் நாம் தெளிவான சிந்தனையோடு தொடர்ந்து முயற்சித்தால் இறுதியாக வரும் அழகான கோலம் போல எமது முயற்சியும் அழகான வெற்றியை தரும்.

எனவே கோலங்கள் நிலத்தை மட்டுமல்ல எங்கள் நலத்தையும் அழகாக்கும்!

Related posts

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

Thumi202121

சிதைக்கப்படும் உயிர்மம்

Thumi202121

அவனருளாலே அவன்தாள் வணங்கி…!

Thumi202121

Leave a Comment