“அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது.’ என ஒளவையார் மனிதரின் பிறப்பு பற்றியும், வாழ்க்கை பற்றியும் கூறுகிறார். எத்தனை உயிரினங்கள் இருந்தாலும் கூட மனிதப் பிறப்பு அற்புதமானது. மனிதவாழ்க்கை இறைவனால் கட்டமைக்கப் படுவதுடன், மனிதவாழ்வில் பிறப்பு-இறப்பு என இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய வாழ்க்கை காணப்படுகிறது. சுவாரஸ்யமான மனிதவாழ்க்கையின் இறுதியில் மனிதன் இயற்கையாக இறக்கும் போது, ‘இயற்கை எய்தினான், இறைவனடி சேர்ந்தார், காலமாகினார், ஆத்மசாந்தி அடைந்தார்” எனக் கூறுவார்கள். மனிதன் இயற்கைக்கடுத்து ஒரு முழுமையான வாழ்க்கையை வாழமுடியாமல் ஏதோ ஒரு காரணத்தால் வாழ்க்கையை முடித்துக்கொண்டால் அதனை ‘செயற்கை மரணம் அல்லது துர்மரணம்” என முன்னோர்கள் கூறுவதுடன் ஆன்மா சாந்தியடையாது எனவும் கூறுவார்கள். இவ்வாறான துர்மரணமாக தற்கொலை காணப்படுகிறது.
தற்கொலை என்பது நம்மை நாமே கொலை செய்து கொள்வதாக காணப்படுகிறது. பொதுவாக சமயங்கள் தற்கொலையை இறைநம்பிக்கைக்கு எதிரானது என கூறுகின்றது.
(செப்டம்பர் 10) உலக தற்கொலை தடுப்பு நாளாகும். இந்நாளை 2003 இலிருந்து பிரகடனப்படுத்தப்பட்டு காணப்படுவதுடன் அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய நாளாகவும் காணப்படுகிறது. ஏனெனில் இன்றளவு எமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் எதிர்நோக்கும் ஓர் முக்கிய பொதுச்சுகாதாரப் பிரச்சினையாக தற்கொலை விளங்குகிறது. காலங்காலமாக செய்தித்தாள், சமூகவலைத்தளங்கள் போன்றவற்றிலும் நாள்தோறும் வரும் ஒரு துயரகரமான செய்தியாகவே இது காணப்படுகின்றது. மரணம் சோகமானது தான். அதிலும் தற்கொலை மிகுந்த சோகத்தை தருகின்றது. இது குறித்த நபரை மட்டுமல்லாது, சுற்றியுள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உலகளாவிய ரீதியில் தற்கொலை இன்னும் முற்றாக கட்டுப்படுத்தப் படாததும், அதேவேளை மிகச்சரியாக எதிர்வுகூறப் படாததுமான பிரச்சினையாகவே காணப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தற்போதைய ஆய்வுகளின்படி வருடத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர். அதாவது 40 செக்கனுக்கு ஒரு நபர் என்ற ரீதியில் இடம்பெறுகின்றது. குறிப்பாக 15-29 வயதுப் பிரிவினர் அதிகளவில் இறப்பதற்கு தற்கொலையே பிரதான காரணமாக விளங்குகின்றது. 15-44 வயதுவரை 55% வீதமானவர்களும், 45 வயதின்மேல் 45% வீதமானோரும் இறப்பதாக அமெரிக்க நோய்தடுப்பு மையம் கூறுகின்றது. பெண்களைவிட 2 மடங்கிற்கு மேல் ஆண்கள் தற்கொலை செய்வதுடன், தற்கொலைக்கான முயற்சியில் பெண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர்.
தற்கொலை செய்தல் என்பது ஒருவன் தன் உயிரை மாய்க்கும் பொருட்டு திட்டம் தீட்டி, திட்டத்தினை நடைமுறைப்படுத்தி தனது உயிரை மாய்த்துக்கொள்ளல் ஆகும். தற்கொலைக்கான திட்டத்தினை தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் போது தடுக்கப்பட்டு அல்லது சிகிச்சையின் பின் காணப்படின் அதனை ‘தற்கொலை முயற்சி” எனலாம். ஒருவர் தற்கொலை செய்து இறக்கும் நேரத்தில் 10-15 மனிதர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதுடன் 100ற்கும் அதிகமானவர்கள் அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நமது நாட்டிலும் கூட ஒருவருடத்தில் சுமார் 3000 பேர் அதாவது ஒரு நாளுக்கு 8 அல்லது 9 பேர் சராசரியாக தற்கொலை செய்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
தற்கொலை மதம், இனம், மொழி, நாடு என இல்லாது மனிதர்களால் தனித்துவமாக செய்வதாக காணப்படுகிறது. ஏனெனில் பொதுவாக மனிதன் தவிர்ந்த ஏனைய உயிரினங்கள் தற்கொலை செய்வதில்லை. கொலைகள் மற்றும் போர்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்பை விட அதிகமாகவே உலக அரங்கில் பல்வேறு முறைகளில் தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன. வி~ம் குடித்தல், மாடியிலிருந்து குதித்தல், தூக்குமாட்டி இறத்தல், தூக்க மாத்திரை உண்ணல் முதலான பல முறைகளில்;;; தற்கொலைகள் இடமபெறுகின்றன.

என்ன காரணங்களின் அடிப்படையில் மனிதர்கள் தற்கொலை செய்கிறார்கள் என பார்த்தோமாயின் இவற்றிற்கு பல்வேறு காரணங்கள் வழிவகுக்கின்றன. மனச்சோர்வு, பொருளாதார பிரச்சினை, காதல் தோல்வி, குடும்பப் பிரச்சினை, பாலியல் இயலாமை, விவாகரத்து, சமூக ஊடகங்களின் தவறான செயற்பாடு, பரீட்சைத் தோல்வி, வேலையின்மை, தீராத நோய்கள், உளவியல் சார் பிரச்சினைகள், போதைப் பொருள் பாவனை எனப் பல காரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
- மனச்சோர்வு
மனச்சோர்வு என்பது பொதுவாக நாம் ஒரு பிரச்சினையிலிருந்து மீண்டெழ முடியாத நிலையாக காணப்படுகிறது. ஒரு பிரச்சினையின் போது நாம் “3F” என்ற முறையை பயன்படுத்துவோம். 3F (Fly – விலகிச்செல்லல், Fight – போராடல், Freeze – தேங்கிநிற்றல்). இதில் Fly, Fight என்பன ஒரு குறிப்பிட்ட பிரச்சினையிலிருந்து விடுபட ஆரோக்கியமானதாகவும், அந்த இடத்தில் தேங்கி நிற்பது (Freeze) மனஅழுத்தத்தை (Stress) ஏற்படுத்தி மனச்சோர்விற்கு (Depression) இட்டுச்செல்லும். தற்கொலை இறப்புக்களில் 90% ஆனவை மனச்சோர்வாலேயே நிகழ்கின்றன என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வேலையின்மை, அழுத்தங்கள், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை என பல்வேறுபட்ட காரணங்களின் அடிப்படையில் ஏற்படும் மனச்சோர்வு நிலைமூலமும் அதன் மூலம் உருவாகும் எதிரான எண்ணங்களும்(Negative Thougths) மூலமும் தற்கொலை செய்ய தூண்டுவதாக விளங்குகின்றன. - பொருளாதார பிரச்சினை
((Covid -19)) கொரோனாவின் பின் ஏற்பட்ட பொருளாதார சரிவுநிலை எமது நாட்டில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலை அதிகரிப்பு, அடிப்படை பொட்களின் தட்டுப்பாடு, கடன் பிரச்சினைகள் மற்றும் வேலையில்லா நிலைமைகள் ஏற்பட்டன. அத்துடன் பணி நீக்கம் மற்றும் வீட்டினுள் முடக்கப்பட்ட “Work from home” வேலை அழுத்தங்கள் மக்களுக்கு உடல், உள ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையில் உறுதியற்ற தன்மையையும் ஏற்படுத்தின. - போதைப்பொருள் பாவனை
இன்று உலகளாவிய ரீதியில் முக்கிய பிரச்சினையாக காணப்படும் போதைப்பொருள் பாவனை நமது நாட்டிலும் தற்காலங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவது நாம் அறிந்ததே. உணர்ச்சிரீதியாக நாம் கவலையிலுள்ள போது அதிக கவலையையும், சந்தோசத்திலுள்ள போது அதிக சந்தோசத்தையும் ஏற்படுத்தவல்ல இது சுய அறிவு, தன்னிலை தெரியாது ஒருவர் செயற்படவும், சமூகவிரோத செயல்கள் செய்யவும் காரணமாகின்றது. அதுமட்டுமல்லாது து~;பிரயோகங்கள், கொலை, கொள்ளை போன்ற சமூக எதிர்செயற்பாடுகளில் ஈடுபடவைத்து அழுத்தங்களிற்கு உள்ளாகி தற்கொலை செய்யவும் வழிவகுக்கின்றது. - சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் தவறான செயற்பாடுகள்
தற்கொலைசார் செய்திகள், அது எப்படி நடந்தது, எங்கே இறந்தார் என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஒன்றையே Focus பண்ணி (முன்னிலைப்படுத்தி) காட்டுவதன் மூலம் மாணவர்களின் மனநிலை பாதிப்படையும். அதாவது, ‘இறுதி தற்கொலை தான்” என்ற எண்ணம் ஏற்பட்டு தற்கொலை செய்ய ஓர் உந்துசக்தியாக விளங்குகின்றது. - மனநலப் பிரச்சனைகள்
மனச்சோர்வு உட்பட எண்ணச்சுழற்சி நோய் (OCD)), இருதுருவக்கோளாறு (Bipolor), மனச்சிதைவுநோய் (Schizophernia), இல்பொருள்காட்சி (Hallucination) முதலான மனநிலை நோய்கள் மனிதர்களில் அதீதசந்தேகம், தனிமையை ஏற்படுத்தி தற்கொலை எண்ணம் அடிக்கடி ஏற்பட்டு தற்கொலை செய்ய இவை அத்தியாவசியமாகின்றன. - காதல் தோல்வி
பொதுவாக எல்லோரும் இளவயதினர் இறந்துவிட்டாலே காதல் பிரச்சினை என பேசத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இது பிரதான காரணம் அன்று. இது தற்கொலை ஏற்பட ஒரு காரணமாக காணப்படுகின்றது. காதலில் ஏமாற்றம், பிரிவு, புரிந்துணர்வின்மை, சந்தேகம் என்பன குறிப்பிட்ட ஆணையோ, பெண்ணையோ தன்னைத்தானே அழிக்கச் செய்கின்;றது. - குடும்பம் மற்றும் உறவு பிரச்சினைகள்
குடும்பத்தில் ஏற்படும் சிறுபிரச்சினைக்காக நான் சாகப் போகின்றேன் எனக்கூறி இறந்த சம்பவங்கள் நாம் அறிந்ததே. குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், மனக்கசப்புக்கள், விரோதம் என்பன உச்சமடைந்து தற்கொலை செய்யவும் காரணமாகின்றது. கணவன் – மனைவி உறவுநிலை அதாவது, புரிந்துணர்வின்மை மிகப்பெரிய காரணமாகின்றது. நல்ல சீரான நட்புவட்டாரங்கள், சமூக குழுக்கள் காணப்படாமையும், அதனால் ஏற்படும் தனிமை மற்றும் சிக்கல்கள் தற்கொலை செய்ய தூண்டுகின்றன. - தொழில்நுட்ப சாதன ஆளுகை
பொழுதுபோக்கு மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் நவீன வளர்ச்சியில் அதீத வளர்ச்சி அடைந்தாலும் கூட மனிதனுக்கு நன்மையைவிட அதீக தீயதாக்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக சினிமாவை எடுத்துக் கொண்டால் அதில் காட்டப்படும் தற்கொலைசார் பாடல்கள், காட்சிகள் பரவலாகவும் முன்னிலைப்படுத்தி காட்டப்படுவதால் குழந்தைகள் இதனைப் பார்க்கும் போது ‘பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பது..” போன்றாகிவிடும். சிறுவயதில் இதனைப் பார்த்து இதுதான் இறுதி என நினைத்து அவர்களும் கற்றுக் கொள்கின்றார்கள். மனிதன் தொடுதிரைக்கு அடிமைப்பட்டவனாகி முடங்கிய நிலையில் இருக்கின்றான். மனிதன் இன்னொரு மனிதனுக்கு தொடர்பின்றி தொடுதிரைகள் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பாடல் ஏற்படவும், நிகழ்நிலை விளையாட்டுக்கள் மற்றும் பாதுகாப்பில்லாத தகவல்கள், புகைப்படங்கள் பகிர்வதன் மூலம் ஏற்படும் தாக்கங்களினால் மனிதன் தன் உயிரை மாய்த்துக்கொள்கின்றான். - குழந்தைப்பருவம் முதல் தவறான அழுத்தங்கள் மற்றும் அறியாமை
பெற்றோர்கள் குழந்தைகள் சீரான முறையில் உரிய அன்பு, அரவணைப்பு இன்மை, பாதுகாப்பில்லாத முறையில் வளர்ப்பு மற்றும் முறையற்ற திணிப்புக்கள் அதாவது பெற்றோரின் விருப்பத்தின் பொருட்டு கல்வியை பிள்ளைகளில் திணித்தல் மற்றும் சமூக கட்டுப்பாடுகள் என்பன குழந்தையின் மனதில் பயம் ஏற்படுகின்றது. அதுமட்டுமன்றி குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே எதிர்பாலினம் மற்றும் அவர்கள் பற்றிய புரிதல்கள், பிரச்சினையால், சூழலுக்கேற்ப செயற்படுதல் என்பன கற்பிக்கப்படாதவிடத்து ஏற்படும் நிலை விரக்தி மற்றும் மனப்பக்குவமற்ற நிலையை உண்டாக்கி தற்கொலைக்கு அத்திவாரமிடுகின்றது.

இவ்வாறான பல்வேறுபட்ட காரணங்களின் அடிப்படையில் தற்கொலை எண்ணம் உண்டாகி தற்கொலை செய்கிறார்கள். தற்கொலை செய்பவர்களை நாம் பலவழிகளில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். உடல் உள நடத்தை ரீதியில் பலமாற்றங்களை கண்டுகொள்ளலாம். இதைப்பற்றி அதிகம் பேசுவார்கள் (பேசாமல் சாகலாம் போல, நான் இருந்து என்ன பயன்) உணவு மற்றும் உடை அதிகளவில் நாட்டமின்மை, தனிமையை விரும்பல், படிப்பில் நாட்டமின்மை, உடல்சோர்வு, வேலையில் தரம் குறைதல், பாலியல் விருப்பமின்மை, உணர்ச்சி வசப்படுதல், ஒதுங்கியிருத்தல், அடிக்கடி சோகம் முதலான பல்வேறுபட்ட அறிகுறிகள் மூலம் அவர்களை அடையாளம் காண முடியும்.
தற்கொலை காரணமாக பல விளைவுகளும், தாக்கங்களும் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இது தனியே ஒருவரை பாதிப்பதில்லை, ஒரு சமூகத்தையே பாதிக்கின்றது. ஒரு தனிநபர் இறக்கும் போது அவருடன் நெருங்கிய தொடர்புடைய 6 நபர்களை பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வாழ்க்கையின் முடிவு என கருதி செய்யும் தற்கொலை அவர்களின் குடும்பம் மட்டுமன்றி பலரையும் பாதிப்பது நாம் அறிந்ததே. சமூக ஊடகங்களின் தவறான செய்திபரப்புதல் மூலம் அதிகம் பரப்பப்பட்டு இதன்மூலம் பலர் தற்கொலைக்கு தூண்டுவதற்கும் மனப் பாதிப்புக்கள் உருவாகவும் வழிவகுக்கின்றது.

‘சுயதீங்கு” என குறிப்பிடப்படும் இந்த தற்கொலையை நாம் எவ்வாறு தடுக்கலாம் அல்லது தீர்வு காணலாம் எனப் பார்க்கலாம்.
- சீரான தொடர்பாடல்
தற்கொலை எண்ணம் உள்ளவரை நாம் அடையாளம் கண்டால் அவரை அழைத்து அவரின் பிரச்சினைகளை நாம் முழுமையாகக் கேட்கவேண்டும். நான் உன்னுடன் இருக்கிறேன். (I am here for you) என்ற நம்பிக்கையை அளித்தல் வேண்டும். அவர்களின் மனக்குமுறல்களை செவிசாய்த்து கேட்பதன் மூலம் தற்கொலையொன்றிலிருந்து மீள உதவியாக இருக்கும். பொய்யான நம்பிக்கையை நாம் வழங்ககூடாது. அவரை தனிமையிலே விடாது நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்களுடன் தமது பிரச்சினைகள் மற்றும்; கஸ்ரங்களை கூறுவதன் மூலம் குறித்த நிலையை கையாண்டு தற்கொலைக்கு தீர்வு காணலாம். அத்துடன் ஒவ்வொரு மனிதரும் சீரான நட்புவட்டாரம் மற்றும் குடும்ப உறவுகள் அமைத்தலும் சீரான தொடர்பாடல் மூலமும் இதனை தடுக்கமுடியும். - உளநல ஆலோசகரை நாடல்
உளவியல்சார் ஆலோசனை வழங்குவதன் மூலம் தற்கொலையை தடுக்க முடியும். உளவளதுணையாளரிடம் சேர்ப்பதன் மூலம் பிரச்சினையை இனங்கண்டு தீர்வு வழங்கவும் முடியும். அபிவிருத்தி அடைந்தநாடுகளில் உளவளத்துணை (Counselling) முக்கியமான தொன்றாக காணப்படுகிறது. ஆனால் எமது நாட்டில் இன்றும் அதற்கான பூரண அறிவு மக்களிடையே இல்லாமல் காணப்படுகிறது. இவ் உளவளத்துணையை சரியான முறையில் வழங்குவதன் மூலம் மனச்சோர்வை களைந்து தற்கொலை எண்ணத்தை நீக்கி மனிதனை சீராக வாழ ஆற்றுப்படுத்துகிறது. - ஆலோசனை மையங்களை நிறுவுதலும் வழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபடலும்
ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்ககூடிய ஆலோசனை மையங்களின் நிறுவுதல் மூலம் உதவுவது உடல் உளரீதியாக உதவியாக இருக்கும். உலகளாவிய ரீதியில் அபிவிருத்தி அடைந்தநாடுகளில் இவை பரவலாக செயற்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே. நமது நாட்டிலும் சுமித்ரயோ(Sumithrajo) என்ற அமைப்பு 1974ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்கொலைத் தடுப்புக்கான வழிப்புணர்வுகள், கருத்தரங்குகள் முன்னெடுத்து வருகின்றது. இதன் ஆய்வின்படி வவுனியா, மொனராகல மாவட்டங்களிலும் வடமேல் மாகாணங்களிலும் அதிக தற்கொலை இடம்பெறுவதாக கூறுகிறது. இவ்வமைப்பு பாடசாலை பல்கலைக்கழகம் பின்தங்கிய கிராமங்கள் என விழிப்புணர்வு சார் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - வாழும் திறன்களை வளர்ப்பு
நாம் வாழும் வாழ்க்கையில் பல்வேறுவிதமான ஏமாற்றம் தோல்வி என்பன அடிக்கடி ஏற்படும். இதற்காக நமக்கு பக்குவப்பட்ட மற்றும் தெளிவான உள்ளம் தேவை. இதற்காக வாழும் திறன்களான சமுதாயதிறன்கள் (Social skills) பிரச்சினையிலிருந்து எப்படி விடுபடுவது, கையாள்வது (Critical thinking), புதியனபற்றி யோசிக்கும் திறன் (Creative skill), பிரச்சினையை எதிர்கொள்ளல், தீர்த்தல் (Problem solving), மனித தொடர்பு(Interpersonal skill), தைரியமாக இருப்பது (நம்பிக்கை, வீரம்) ஆகியவற்றை வளர்த்துக்கொள்வதன் மூலம் உளரீதியான மேம்பாடு, தெளிவு மற்றும் பக்குவநிலை ஏற்பட்டு வாழ்க்;;;கை சிறப்பாக வழிவகுக்கும். - கல்விமுறை மற்றும் சுயமரியாதை மேம்பாடு
சிறுவயதிலிருந்தே moral education ஒழுக்கம் அறிவுசார் வாழ்வியல் கல்வியை சரியான முறையில் போதிப்பது அவசியம். வாழ்வின் சிறப்பு மற்றும் அதன் முக்கியத்தும் என்பன பற்றி கற்பித்தல் வேண்டும். இன்றைய கல்விமுறை தனியே பாடத்திட்டத்தை ஒட்டி அமைகிறதே தவிர வாழ்க்கை மற்றும் ஒழுக்கம் சார்ந்து அமைவது குறைவாகவே காணப்படுகின்றது. ஓவ்வொருவரும் தனது பலம், பலவீனம், வாய்ப்புக்கள் சாவால்கள் என்பவற்றை கண்டறிந்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அத்துடன் ஆரோக்கியமாக முடிவெடுக்கும் திறன், சுயமதிப்பு, சுயகட்டுப்பாடு, பணிவு, சட்டங்களை மதித்தல் என்பன சுயமரியாதையை மேம்படுத்தும். - போதைப்பொருள் தடுப்பு
போதைப்பொருளை இயன்றளவு குறைப்பதன் மூலம் தற்கொலைகள் நிகழ்வது மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் சீரழிவுகளை குறைக்க முடியும். சிறுவயதிலிருந்தே மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வுகளை குடும்பம் மற்றும் பாடசாலையிலிருந்து ஏற்படுத்துவது முக்கியமானதாகும். - சுயகட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை
சுயமதிப்பீடு போல சுயகட்டுப்பாடும் ஒருவனை குறிப்பிட்ட சூழலில் சரியான முறையில் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் அவசியமாகிறது. தன்னம்பிக்கை மற்றும் சுவாரஸ்யமான தருணங்களை தாங்கும்திறன் நல்லது – கெட்டது எது என அறியும் திறனை வளர்த்துக் கொள்வதும் முக்கியமாகிறது. மனித நல்லிணக்கம் மற்றும் சமூக உறவுகளை சீராக அமைப்பதன் ஊடே சுயகட்டுப்பாடு மற்றும் சமூகமனப்பான்மையை வளர்க்கலாம். கடந்தகால பிரச்சினையை நினைத்து தேங்கி நிற்காமல் அடுத்த திட்டத்திற்கு நகரும் உறுதியான மற்றும் பலமான மனம் வேண்டும். (The past, its done. move on) - தியானம் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி செய்தல்
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் மற்றும் மனம் இரண்டும் நலமான நிலையை அடைகிறது. இதுமட்டுமன்றி தியானம் மற்றும் யோகாசனம் என்பனவும் மனதை ஒருநிலைப்படுத்தவும், நேரான சிந்தனைகளை ஏற்படுத்தவும் மனம் தெளிவடையவும் தன்னம்பிக்கை யைக் கட்டியெழுப்பவும் உறுதுணையாக அமைகிறது. - ஆன்மீக செயற்பாட்டில் ஈடுபடல் மற்றும் இசை கேட்டல்
ஆன்மீகம் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி மனதை ஓர் பரிசுத்த நிலையை அடைய வழிவகுக்கிறது. அனைத்து சமயங்களும் பொதுவாக நல்ல கருத்துக்கள் மூலம் மனிதனை நேர்வழிநடத்தவே உதவுகின்றன. இவ்வாறான அறநெறி செயற்பாட்டில் ஆர்வம் கொண்டு ஈடுபடுவதன்மூலம் ஆரோக்கிய நல்வாழ்க்கையை கட்டியெழுப்பலாம். ‘இசையில் வசமாகா இதயம் ஏது?” எனக் கூறுவார்கள். நல்ல மனதிற்கு இனிமையான இசையை கேட்பதன் மூலம் தமது எண்ண ஓட்டங்களை சிறப்பாக்கவும் உணர்வுகளின் முகாமைத்துவத்திற்கும் உதவுகிறது.

மேற்குறித்த தடுப்புமுறைகள் மற்றும் தீர்வுகளை பின்பற்றுவதன் மூலம் தற்கொலையை தடுக்கலாம். அத்தோடு தற்கொலை தடுப்பு பற்றிய பரப்புரையை மக்கள் கருத்தாக மாற்றி அனைவரும் கரம்கோர்த்து செயற்பட்டால் தற்கொலை எனும் கொடிய பிரச்சினையை முற்றாக ஒழிக்க முடியும்.
ஆண்-பெண், இரவு-பகல், இன்பம்-துன்பம், வாழ்வு-தாழ்வு, பிறப்பு-இறப்பு என அனைத்தையும் இரண்டாகத் தந்த இறைவன் சிக்கல்-தீர்வு என்ற இரண்டையும் தந்துள்ளான். ஆதலால் ஒரு சிக்கல் ஏற்பட்டாலும் உரிய தீர்வை நாம் போராடி பெறவேண்டியது அவசியம். ஏனெனில் பிரச்சினையை எதிர்கொண்டு அதனை வெற்றிகொண்டு வாழ்வதனாலேயே இப்போட்டிநிறைந்த உலகில் வாழ முடியும்.
‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் பிரச்சினை இருக்கும்”
‘எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதிவரை அமைதி இருக்கும்”

வாழ்க்கை மீது நாம் எப்போதும் பெரிய நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏனெனில் அடுத்த நொடி என்ன நடக்கும் எனத் தெரியாத சுவாரஸ்யமான விளையாட்டுதான் வாழ்க்கை. தன்னை முதலில் நேசித்து பிறரையும் நேசிக்கும் வாழ்க்கை மனமகிழ்ச்சி, நிம்மதி தரக்கூடியது. இவ்வாழ்க்கை நமக்கு வரப்பிரசாதம் ஆகும். நம்பிக்கையுடன் வாழ்ந்தால் நலமான, சிறப்பான வாழ்க்கையை வாழலாம்.
1 comment