இதழ் 66

திருமணத்தில் பலதாரம் ஓர் முடிவிலியா… ?

இவ்வுலகிலே பலதரப்பட்ட மக்கள் தெரிந்தோ தெரியாமலோ பலதரப்பட்ட சமூகம் சார் பிரச்சனைகளுக்குள் சிக்கி தம் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பலராலும் வெளிப்படையாக பேசப்படாது காலம் காலமாக தொடர்ந்து வரும் ஓர் சமூகப் பிரச்சினையாக பலதார திருமணம் காணப்படுவது என்பது எவராலும் மறுக்க முடியாத ஓர் உண்மையே.

திருமணம் என்பது ஆரம்ப காலம் தொட்டு பல்வேறு சமூகங்களின் மத்தியில் நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆனால் இன்று திருமணம் எனும் பந்தம் தனது வடிவங்களில் பல்வேறு மாற்றத்தை கொண்டுள்ளது. இதில் இன்று அதிகரித்துச் செல்லும் ஓர் விடயமாக பலதார திருமணம் காணப்படுகின்றது. பலதார திருமணம் என்பது ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை கொண்டிருக்கும் வழக்கத்தினை குறிக்கின்றது. பலதார மணம் பற்றிய வாதமானது சமீபத்தில் அறிஞர்கள், பாரம்பரியவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் ஆகியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்கள் உரிமை விவகாரங்களில் ஒன்றாக விளங்கும் பலதார திருமணத்திற்கான காரணங்களானவை ஒவ்வொரு சமூகத்தின் பொருளாதார, கலாசார, கல்வி மற்றும் வளர்ச்சி போன்ற நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட வேண்டியதொன்றாகும். இவற்றில்
முதன்மையான காரணங்களாக, ஆணாதிக்கம் மற்றும் கலாசார ரீதியான காரணங்கள் குறிப்பிடத்தக்கவை.மேலும் திருமண வாழ்க்கையில் திருப்தியின்மை, குடும்ப வன்முறை, கல்வி அறிவின்மை, அதீத பாலியல் நாட்டம், பாலியல் உறவில் திருப்தியின்மை, சமூக மற்றும் தொலைத்தொடர்பு ஊடகங்களின் தாக்கம் மற்றும் இளவயது திருமணம் என்பன இதனை ஊக்குவிக்கின்றன என்பதில் ஐயமில்லை.

பலதார திருமணம் காரணமாக குடும்ப கட்டமைப்பு சீர்குலைதல், சிறுவர் துஷ்பிரயோகம், மனைவிகளுக்கு மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம், தனது விருப்பப்படி மனைவிகள் மற்றும் பிள்ளைகளை கைவிட்டு செல்லல், பிள்ளைகளின் உளநலம் பாதிப்படைதல், பெண்களின் உரிமை மறுக்கப்படல் ,பிள்ளைகள் சமூகத்தால் முத்திரை குத்தப்படல், சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்காமை, சமூக கலாசார சீரழிவு போன்ற குறிப்பிடத்தக்க சில விளைவுகள் ஏற்படுகின்றன.

விழிப்புணர்வு வழங்கல்

‘ஒருவனுக்கு ஒருத்தி” என்ற வாசகமானது எம் தமிழ் கலாசாரத்தில் திருமண பந்தத்தின் புனிதத்தினை புலப்படுத்தி நிற்கின்றது. ஆரோக்கியமான சமூகத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் இந்நிலை மாற வேண்டும். அந்த வகையில் இதனையொட்டிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டியது அவசியமானதொன்றாகும்.

மேலும் பலதார திருமணத்தால் ஏற்படும் அனைத்து விளைவுகள் மற்றும் பால்நிலை தொடர்பான அறிவினை பாடசாலை மட்டத்திலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டும். இதற்காக சமூக ஊடகங்களின் மூலமாக வழிகாட்டலும் காணப்பட வேண்டும். திருமண வாழ்வு பற்றியும் குடும்பம் பற்றியும் சரியான விளக்கமும் புரிந்துணர்வும் மத ரீதியாகவோ அல்லது சமூக ரீதியாகவோ திருமணத்திற்கு முன்னர் வழங்கப்பட வேண்டும்.

உள ஆற்றுப்படுத்துல்
பலதார மணம் பற்றிய ஆண்களின் மனநிலை மாற்றப்பட வேண்டும். இதற்காக இம் மனநிலை கொண்டிருப்பவர்களுக்கான உள ஆற்றுப்படுத்துதலை வழங்குவது அவசியமாகின்றது.

சட்டங்களை பலப்படுதல்
மிக முக்கியமாக இப் பலதார திருமணத்தை எதிர்க்கும் சட்டங்களை பலப்படுத்துவதும் முறையாக நடைமுறைப்படுத்துவதும் இன்றியமையாததாகும்.

குழுச் சிகிச்சை (Group therapy)
சமூகத்தில் உள்ள பலதார மணம் செய்தோரை ஒன்றாகச் சேர்த்து அதாவது 8 -12 பேரூக்குட்பட்டது. அவர்களது பலதார மணம் பற்றிய அனுபவங்கள் அதிலிருந்து மீண்ட அனுபவங்களை சிகிச்சையாளரின் முன்னால் பகிரும் முறை இதுவாகும். இச்சிகிச்சையின் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் குழு அங்கத்தவர்கள் வயதிலும், மொழியிலும் ஒத்ததாக இருத்தலே.

நடத்தை சிகிச்சை (Behavior therapy)
நடத்தை சிகிச்சையானது ஒழுங்கற்ற நடத்தைகளை சீராக்குவதற்கு முயற்சிக்கின்றது. e.g- குறித்த சூழல் தாக்கத்தினால் ஏற்படும் பலதார மணம் பற்றிய இந்தப் நடத்தையை இச் சிகிச்சை மூலம் மாற்றியமைக்கலாம்

எனவே இவை அனைத்தையும் தொகுத்து நோக்குகின்ற போது சமூகம் சார் பிரச்சனைகளில் இன்று அதிகரித்துச் செல்லும் விடயமாக விளங்கும் பலதார திருமணமானது உடல் உள தாக்கங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பாரிய அளவில் சமூக ரீதியாகவும் பல தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது ஆகவே எமது எதிர்கால சமூகத்தின் நலன் கருதி பலதார திருமணத்தை சமூகத்தில் இருந்து களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஒவ்வொருவரினதும் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

Related posts

சித்திராங்கதா -62

Thumi202121

சிதைக்கப்படும் உயிர்மம்

Thumi202121

வினோத உலகம் – 30

Thumi202121

Leave a Comment