இதழ் 66

மழை வேண்டும்வெள்ளம் வேண்டாமா?

பருவ மழையைக் காணவில்லை, மழை இந்த முறை ஏமாற்றி விட்டது, இனி அரிசி சாமான் எல்லாம் விலை கூடப்போகிறது என்று புலம்பித் தள்ளியவர்கள் எல்லோருடைய வாய் மட்டும் அல்லாமல் மனமும் குளிருமாறு தொடர்ச்சியாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பரவலாக வட பகுதி எங்கும் மழை பெய்வது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஆனால் மழையை விரும்பும் எல்லோரும் வெள்ளத்தை விரும்புவதில்லை. எங்கள் வீட்டில் வெள்ளம் நிற்கக்கூடாது என்று வீட்டுக் காணிகள் முழுவதும் மண் போட்டு உயர்த்துகிறார்கள். அதுமட்டுமின்றி முற்றம் எல்லாம் நிலமே தெரியாதவாறு கல் பதித்து கொங்கிறீட் போடுகிறார்கள். தங்கள் வீட்டு வளவிற்குள் வெள்ளம் நிற்காமல் இருக்க வேண்டும் என்பது இவர்களுடைய முதல் பிரயத்தனம். அது நிறைவேறி விட்டால் அடுத்து தங்கள் வீதியில் வெள்ளம் நிற்க கூடாது என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இயன்றவரை தொந்தரவு கொடுத்து வீதிகளை எல்லாம் உயர்த்தி காப்பெட் போடுவார்கள்.

இப்படி எல்லாரும் வேண்டாம் என்றால் மழை வெள்ளம் எங்கேதான் போவது? இதில் பெரும்பாலானவர்களின் வீடு கட்டப்பட்டிருப்பதே குளங்களிலும் குட்டைகளிலும் தான். குளங்களைத் தேடி மழை வெள்ளம் ஓடி வருமாறு இயற்கைத் தரைத்தோற்றம் தானாக அமையப் பெற்றிருக்கும் அந்த இடத்தில் வீட்டைக் கட்டிவிட்டு வெள்ளம் வருகிறது என புலம்பித்தள்ளி, மண் போட்டு குளங்களை நிரவி விடுகிறார்கள்.

பெருமளவில் வரும் மழை வெள்ளம் குளங்களில் தேங்கி மெல்லம் மெல்லமாக மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீரை சென்றடையும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். குளங்களை மூடி விட்டால் மழை நீர் சேகரிக்க முடியாமல் போகும். அதே போல மண் தரைகளையும் கொங்கிறீட் தரைகளாகவும், காப்பெட் வீதிகளாகவும் மாற்றி மழை நீருக்கும் மண்ணிற்குமான தொடுகையை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம்.

எமது முன்னோர்கள் மண்ணிற்குள் இருந்து நிலத்தடி நீரை எடுத்து பாவித்த போதும், பாவித்த நீரின் அளவின் பன்மடங்கு மழை நீரை சேகரித்து மீள மண்ணிற்குள் அனுப்பினார்கள். இதனால்த்தான் இன்றும் நாம் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. ஆனால் நாம் சுயநலமாக நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறோமே தவிர மீள மண்ணிற்குள் நீரை அனுப்புவதில் அக்கறையற்று இருக்கிறோம். இதனால் நிலத்தடி நீரே இல்லாத எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

யாழ் மாவட்ட விவசாயம் மழையையும் நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பி உள்ள நிலையில் நிலத்தடி நீர் வற்றி வருவது எச்சரிக்கை சமிக்ஞை என்பது எங்களுக்கு இன்னும் புரிவதாக இல்லை. யோசித்துப் பாருங்கள். உங்களிடம் கிணறுகளும் இல்லை, குளங்களும் இல்லை, ஆறுகளும் இல்லை என்றால் கோடை காலத்தில் எவ்வாறு விவசாயம் செய்வீர்கள்?

என்ன செய்வது என்று குழம்பத் தேவையில்லை. புதிதாக எதையுமே நீங்கள் கண்டுபிடித்து செய்யத் தேவையில்லை. உங்கள் முன்னோர் செய்ததை செய்தாலே போதுமானது. குளங்களை குளங்களாகவே இருக்க விடுங்கள். வீடுகள் தோறும் மழை வெள்ளத்தை நிலத்திற்குள் அனுப்பும் வழிகளை உரிய ஆலோசனைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்துங்கள்.

மழையை நேசிப்பதைப் போல மழை வெள்ளத்தையும் நேசியுங்கள். மழை வெள்ளம் தேவதையின் பரிசு. அதை பூரணமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

Related posts

அவனருளாலே அவன்தாள் வணங்கி…!

Thumi202121

திருமணத்தில் பலதாரம் ஓர் முடிவிலியா… ?

Thumi202121

சிதைக்கப்படும் உயிர்மம்

Thumi202121

1 comment

Leave a Comment