இதழ் 67

தமிழரின் தனித்துவம் பொங்கல்

தமிழர் வாழ்வில் தைத்திங்களுக்கு ஒரு மரியாதை உண்டு. ‘போனதெல்லாம் போகட்டும், வருவதாவது நலம் பயக்கும்’ என்ற நம்பிக்கையில் தமிழர் அனைவரும் தை மாதத்தை வரவேற்பதற்காக தவமிருப்பது வழக்கம். அந்த நம்பிக்கையில் பிறந்ததுதான் ‘தைப்பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற வழக்கம். அந்தத் தை மகளை வரவேற்கும் திருநாள்தான் தைத்திருநாள்.

இந்த உலகத்தின் சுழற்சி உழவர்களின் மேழி (ஏர்) வழியே செல்கிறது என்று மேழியின் மேன்மையை ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்றார் வள்ளுவர். மாறி மாறி வேறு பல தொழில்கள் செய்து வந்தாலும், ஏரால் உழுது பயிர் விளைவிக்கும் உழவுத் தொழிலைச் சார்ந்தே உலகத்தார் வாழவேண்டியிருக்கிறது. ஏர்க்காலின் தயவிலே செங்கோலும் நடப்பதினால் ஏர்க்காலைத் தவிர எவர் காலையும் பிடிக்காதவர்கள் உழவர் பெருமக்கள். இந்த உழவர் பெருமக்கள் உழைப்பின் பயனை அனுபவித்துக்கொண்டாடும் திருநாளே உழவர் திருநாள். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்றான் எட்டயபுரத்து எழுச்சிக்கவிஞன் பாரதி. அந்த உழவனைப் போற்றும் நாள் தான் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள்.

பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். களைந்து போட்டால் அது வெண்மையாகப் பொங்கும். மேகத்தின் பொங்கலாடுதல் போல் இருப்பதால், அந்த உணவுக்கும் பொங்கல் என்ற பெயர் வந்தது. பஞ்சு போல வெண்மையாக மேலெழுந்து மேகம் நின்றால் அதற்குப் பொங்கலாடுதல் என்று பெயர்.

“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே’’ என்ற புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.

முதலாம் இராஜேந்திரன் சோழர் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டில் ‘புதியீடு’ என்ற குறிப்பு உள்ளது. ‘புதியீடு’ என்பதற்கு ‘முதல் அறுவடை’ என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் பொருள் குறிப்பிடுகின்றனர்.

விவசாயிகள் ‘அறுவடையில் ஒரு பங்கை’ அரசனுக்கு/கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக அது இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ‘புதியீடு’ என்பது, புதுஇடு என்று பிரிபடும். புதிய  (அறுவடையில்) ஒரு பங்கு  என்று பொருள் கொள்ள முடியும். அறுவடைக்கு காரணமான இயற்கைக்கும், அதற்காகப் பயன் பட்ட உழவு மாடுகள், வீட்டில் உள்ள பால் தரும் பசுக்கள் மற்றும் கலப்பை போன்ற கருவிகள் அனைத்தையும் வணங்கும் திருநாளே பொங்கலாக அன்று கொண்டாடப்பட்டுள்ளது.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆரம்பம் ஆகும் விழாவறை காதையில் “இந்திர விழா” என்ற பெயரிலேயே பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டிருக்கவேண்டும் என அறிய வருகிறது. முதல் முதல் இந்திரவிழா கொண்டாட ஆரம்பிக்கையில் அதைப் பொது மக்கள் மன்றத்தில் முரசறைந்து தெரிவிக்கப்பட்டதாகவும், சுமார் 28 நாட்கள் விழா நடந்ததாகவும் தெரிந்து கொள்கிறோம். மேலும் அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் இந்திரன் பூம்புகாருக்கு வந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. தற்காலங்களில் பொங்கலுக்கு முன்னர் வீட்டை அலங்கரித்துச் சுத்தம் செய்து பழையன கழிதல் போல் அந்தக் காலங்களிலும் வீட்டை மட்டுமின்றி நாடும், நகரங்களுமே சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். கமுகுக் குலைகளும், தென்னை ஓலைத் தோரணங்களும், வாழை மரங்களும் கட்டப்பட்டு, பொன்னாலான பாலிகைகள், பூரண கும்பங்கள் ஆகியவற்றால் வீடுகள், கோயில்கள், அரண்மனைகள் அலங்கரிக்கப்பட்டன. காவல் தெய்வங்கள் முதல் அனைத்துத் தெய்வங்களுக்கும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன. இயற்கையை இறைவனாகப் போற்றிய இனம் தமிழினம். வான் மழைக்குத் தலைவன் இந்திரன். மழைத் தெய்வம் ஆன இந்திரனைச் சிறப்பிக்கும் வகையில் அவனுக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்பட்ட இந்த விழா நாளில் பகைமையும், பசியும் நீங்கச் சிறப்பான பிரார்த்தனைகள் செய்யப்பட்டதோடு ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட வேண்டாம் என்பதும் வலியுறுத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் பகையுள்ளவர்கள் விலகி இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இப்படியாக ஆரம்பித்த இந்த விழா பின்னர் நாளாவட்டத்தில் கண்ணுக்குத் தெரியும் ஒரே கடவுளான சூரியனுக்காகக் கொண்டாடப்படும் விழாவாக மாறி இருந்திருக்கலாம். ஏனெனில் சூரியன் இருப்பதாலேயே நமக்கு மழை, ஒளி, எல்லாம் கிடைப்பதோடு உயிர்கள் வாழவும் முடிகிறது. மனிதர்களின் கண் கண்ட ஒரே தெய்வமாக சூரியனே இருந்து வருகிறது.

இப்பொங்கல் நாளனது சூரியனின் வான்வழிப் பயணத்தில் சூரியன் மகரராசிக்கு மாறும் நாள் என இந்துக்களால் நம்பப்படுகிறது. வான்வெளியில் வடக்கு நோக்கி சூரியன் நகரும் இந்த நாளில் இருந்து பகல் நேரம் அதிகரிக்கும் என்பதாலும் இது கொண்டாட்டத்தின் முக்கியகாரணமாகிறது. ஆடி மாதம் சூரியன் தென் திசை நோக்கிப் பயணம் செய்யும் காலத்தில் விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் இதற்குள் பூரணமாக அறுவடை செய்யத் தயாராகக் காத்திருக்கும். வருடத்தின் முதல் அறுவடையை அமோகமாகத் தங்களுக்கு அளித்த சூரியனுக்கு நன்றி கூறி மகிழ்கின்றனர் உழவர் பெருமக்கள்.

மேலும் பொங்கல் வைப்பதன் தாற்பரியம், உணவுக்கு நமக்கு உதவி செய்த பஞ்சபூதங்களையும் போற்றுவது ஆகும். மண்ணிலிருந்து நமக்குக் கிடைத்த பொருட்களை வைத்துச் சமைப்பது- முன்பெல்லாம் மண்ணாலாகிய அடுப்பிலேயே, மண்பானைகளிலேயே பொங்கல் வைப்பார்கள். காலக்கிரமத்தில் இது மாறிவிட்டாலும், மண் அடுப்பும், மண்பானையும் பூமித்தாயையும், அதில் பொங்கலுக்கு ஊற்றப்படும் பாலும், நீரும், தண்ணீரையும், எரியும் நெருப்பு அக்னியையும், பொங்கல் வேகும்போது கிளம்பும் ஆவி வாயுவையும், வெட்டவெளியில் பொங்கல் சமைத்துப் பின்னர் வெட்டவெளியிலேயே வழிபாடு நடத்துவது ஆகாயத்தையும் குறிக்கும் என்பார்கள்.

வயலில் விளைந்த அரிசியை புதுப்பானையில் இட்டு கருப்பஞ்சாறு, பசுவின் மடி சுமந்த பால், நெய்,  மழையில் நிறைந்த நீர் இப்படி இயற்கையின் கூறுகளை இணைத்து சுவையான பொங்கலைப் படைப்பர். வீட்டு முற்றத்தில் அழகான கோலம் இட்டு அதன் நடுவில் புது மண் பானையை  வைப்பர். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவிப்பர். பொங்கல் பொங்கி வரும்போது மனைவி மக்களுடன் கூடி நின்று ‘பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!’ என்று கூறி சூரியனுக்கு முதல் படைப்பை தருவார்கள்.

புதிய காய்கறிகளையும் சமைத்து தலை வாழையிலையில் படைப்பர். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து வணங்குவார்கள்.

பொங்கல் வழிபாட்டில் பொங்கலோடு சேர்த்துக் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவைகளோடு ஏழுவகைக் கறிகளும் செய்யப்படும். அனைத்தும் வழிபாட்டில் வைக்கப்படும். அநேகமாக வழிபாடுகள் வீட்டின் கிழக்கு வாசல் நோக்கியே செய்யப்படும். அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தாலும் வீட்டின் வெளியே வந்து சூரியனுக்குக் கற்பூரமாவது காட்டுவார்கள்.

கரும்பு இனிப்பான சுவையை உடையது. ஆனாலும் அடிக்கரும்பே தித்திப்பு அதிகம் உடையது. நுனிக்கரும்பு உப்பாகவும் இருக்கும். அதோடு கரும்பில் நிறையக் கணுக்களும் காணப்படும். இந்தக் கரும்பின் கணுக்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளைக் குறிக்கிறது என்றும் ஆரம்பத்தில் உப்புப் போல் கரிக்கும் வாழ்க்கை போகப் போக அடிக்கரும்பு போல் இனிக்கும் எனவும் கூறுவார்கள். மஞ்சள் கொத்துக்களும் வழிபடப்படுகின்றன. மேலும் பொங்கல் பானையில் மஞ்சள் கொத்துக் கட்டும் வழக்கமும் உண்டு. மஞ்சள் மஹாலக்ஷ்மிக்கு உரியது. மஹாலக்ஷ்மியாகவே கருதப்படும் மஞ்சளை அனைத்து சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம். மஞ்சள் இல்லாத மங்கல காரியங்களே இல்லை. ஆகவே மஞ்சளைப்பொங்கல் பானையில் கொத்தோடு கட்டும் வழக்கம் ஏற்பட்டது.

தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப் பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படும் வழக்கமாகும். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு ஆவினம் வணங்கப்படும். உழவுக்கும், பால் தரும் ஆவினங்களுக்கும் நன்றி சொல்லும் முகமாக மாடுகளை நீராட்டி மாடுகளின் கொம்புகளை சீவி, பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் அலங்கரிப்பர். பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக அந்நாளை கொண்டாடுகின்றனர். பொங்கிய பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுத்து மகிழ்வார்கள்.

நாம், நம் உறவு, சுற்றம், நட்பு , நமக்காக உழைக்கும் கால்நடைகள் ஆகியவற்றுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே பொங்கல் போன்ற பண்டிகைகளின் மகத்தான நோக்கம் ஆகும். நன்றியுணர்வு எல்லோர் மனதிலும் பொங்கிப் பெருகி வாழ்வு இன்பகரமாய் இனிக்க வாசகர் அனைவருக்கும் இனிய தமிழ்ப் பொங்கல் வாழ்த்துகள்.

Related posts

வற் வலி

Thumi202121

AI தொழில்நுட்ப சுவ சரியா அம்புலனஸ் முதல்கட்டமாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆரம்பிப்பு.

Thumi202121

மத வழிபாடுகளில் உள ஆற்றுப்படுத்தல் முறைகள்

Thumi202121

Leave a Comment