இதழ் 67

சித்திராங்கதா -63

முடிவுரை

நல்லை அரசவையின் நடுக் கூடத்தில் குருதிப் பெருக்கு ஓடிக் கொண்டிருந்தது. குருதி வடிய வடிய அந்த அழகிய வதனம் கூடத்தில் கிடந்த கோலத்தை சொல்லுவது அவ்வளவு எளிதல்ல. அந்தக்கணத்தில் அது நிகழும் என்று அவையில் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சித்திராங்கதா ஏன் இப்படியொரு முடிவை எடுத்தாள்..? இனி இந்த ஆராய்ச்சி எதற்குதவப்போகிறது! மாண்டு போனவள் மீண்டும் நம்முன் வரப்போவது நடக்குமா என்ன!

குருதிக்கறையோடு கிடந்த சங்கிலியனது வாள் சித்திராங்கதாவின் கரங்களில் இறுகப்பற்றிக் கிடந்தது. வாசகர்களிற்கு ஞாபகம் இருக்கிறதா? அன்றொரு நாள்.. வருணகுலத்தானிற்கு வாள் வழங்கும் விழா நடந்த நாள்… வருணகுலத்தானது வாளினை வழங்கியபிறகு சங்கிலியனது வாளை எடுத்து வந்த குருக்கள் இடறி விழுந்து வீரமாகாளி சந்நிதியில் அந்த வாள் தவறி விழுந்தது. ஏதோ அபசகுனம் என்று எல்லோர் மனதிலும் அன்று தோன்றியது உண்மை. ஆனால் அந்த வீரமாகாளி உணர்த்திய உண்மையை புரிந்து கொள்ளும் வல்லோர் நல்லூரில் அன்று இருக்கவில்லையே. அதே வாளால் நல்லை அரசவையில் இப்படியொரு பெண்கொலை நடைபெறப் போகிறது என்று யாரும் அன்று ஆருடம் கூறவில்லையே.

போரிற்கு செல்ல முன் சங்கிலியனது வாளில் இப்படியொரு சாபவடு குருதிக்கறையாய் படிந்து விட்டிருக்கக் கூடாது. எப்படியோ நிகழ்ந்து விட்டது. ஆம் … எம் கதாநாயகி எம்மை விட்டுப் பிரிந்துவிட்டாள். வேதனை மிகுதி என்றாலும் உண்மை அதுதானே… நில்லுங்கள்… எம் வேதனை மிகுதி என்றால் எம் கதாநாயகன் நிலை? வருணகுலத்தான் பற்றி எம்மால் இக்கணம் சிந்திக்கவே முடியவில்லை… அவனது ஆசை நாயகி சிரம் நீங்கி கூடத்தில் கிடப்பதை அவன் சிந்தை எப்படி ஏற்கும்? மாவீரனிடம் இந்தச் செய்தியை யார் தெரிவிப்பார்கள்? எப்படி தெரிவிப்பார்கள்?

வீரத்திறன் குன்றாத வீரனின் தோள்களை களத்தில் கிழித்தது ஒரு வாள். எதிரியின் அந்த வாள் முதன் முதலாய் வருணகுலத்தான் குருதி கண்டது. என்ன நடந்து விட்டது? அவனிற்கு உண்மை தெரியாது. ஆனால் ஏதோ உணர்கிறான். இதுவரை நிதானம் குறையாத அவன் வேகம் தடுமாறுகிறது.

நல்லைக் கூடத்தின் குருதிவெள்ளத்தில் கூடிநின்றோரின் கண்ணீர் வெள்ளமும் கலந்தது. எல்லோரும் எழுந்து விழிநீர் வழிய நின்றனர். அச்சத்தில் மஞ்சரிதேவியை இறுகப்பற்றி கண்களை மூடி நின்ற மாருத வல்லி மெல்ல மெல்ல விழி திறந்தாள். வீரிட்டுக் கத்தினாள். அநியாயம் நிகழ்ந்துவிட்டதாய் பதறி துடித்தாள்.

தன்னால் தடுக்க முடியாமல் நிகழ்ந்துவிட்ட அநியாயத்தை ஏற்க இயலவில்லை சங்கிலிய மகாராஜாவால் .. இனி என்னவாகப்போகிறது? இப்படியொரு களங்கத்தில் இருந்து எப்படி விமோட்சனம் கிடைக்கப்போகிறது? எதுவும் புரியாமல் வடிந்த அரசரது கண்ணீர் அவையில் தெரிந்த அந்த இரத்தக் காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தது.

காட்சிகள் மறைந்தன. காலங்கள் மாறின.

நல்லூரில் போர்மேகம் மூண்டது. தமிழர் படையும் பறங்கிப்படையும் ஒரு முடிவை நோக்கி முன்னேறி வந்தன. வெற்றிகளும் இழப்புகளும் மாறி மாறி போரிட்டுக் கொண்டன. நல்லூர் படையும் தஞ்சைப்படையும் இணைந்து பெரும்படையாய் நிற்கையில் பறங்கியன் படைக்கு வெற்றியின் பாதை தொலைதூரத்திலே இருந்தது.

ஆயினும் போர்தர்மங்கள் என்பதெல்லாம் தமிழர் படைக்குத் தானே.. பறங்கியனிற்கு வெற்றி மட்டுமே இலக்கு. அதை எந்த வழியில் பெறுவதற்கும் அவர்கள் தயார் நிலையிலே இருந்தார்கள். வன்னியத்தேவன் என்கிற நச்சு வலையை அதற்காக பயன்படுத்திக்கொண்டனர் பறங்கியர்.

போரின் வெற்றி வெகு அருகில் என ஐயமின்றி இருந்த இரவொன்றில் சங்கிலியனை தனிமையில் சந்தித்து சமாதானம் பேசி மன்னிப்புகோர விரும்பியதாய் வன்னியத்தேவனிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்தது. தமிழ் மன்னர்களின் ஒற்றுமையை எப்போதும் விரும்பும் சங்கிலியமகாராஜா வன்னியத்தேவன் கேட்டதை கடைசியாய் ஒருமுறை நம்பினார்.

வன்னியன் வஞ்ச நெஞ்சினால் விரித்த துரோகத்தின் வலையில் தான் சங்கிலிய மகாராஜா சிக்கிக் கொண்டார். போர்ப்பாசறையில் நிராயுதபாணியாய் நின்ற மகாராஜாவை மறைந்திருந்த வெள்ளெலிகள் சுற்றி வளைத்தன. விசாரணைக்காக என்றே போர்த்துக்கீசர் அரசரை அழைத்துச் சென்றனர். ஆனால் விசாரணைக்குப் பின் சங்கிலிய மகாராஜா திரும்பவில்லை. அடிமை சாசனத்தை ஒப்புக்கொள்கிறாயா என்ற கேள்விதானே அவர்களது விசாரணை. மறுத்த மகாராஜாவை நாடுகடத்த பறங்கியர் முனைந்தனர். பதினைந்து நாட்கள் கடற்பயணத்திற்கு பின் பாரதத்தின் மேற்கு கடற்கரையை ஒட்டிய கோவா தீவிற்கு சென்ற சங்கிலிய மகாராஜாவிற்கு தூக்குமரமே காத்திருந்தது.

சித்திராங்கதா மறைவிற்குப் பின் வருணகுலத்தான் யாரும் நெருங்கமுடியாத தொலைவில் தன்னிச்சையானான். அவனது போக்கும் நடத்தையும் பார்ப்போருக்கு புதிராய் தெரிந்தது. மிகவும் வித்தியாசமானான். அவனது சோகத்தை யாருடன் பகிர்ந்துகொள்ள அவன் விரும்பவில்லை. ஈழத்தில் தனித்து நின்றான். துணை என்று நினைத்தவள் துடிதுடித்து மாண்டதை அவன் காணவில்லை. கண்டவர்கள் சொன்னதையும் அவன் கேட்க விரும்பவில்லை. அவனது உலகில் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவன் உயிர் கொண்டிருந்தான்.

ஆயினும் தன்பணி மறவாது களமாடினான். பெருப்படைத் தளபதியாய்- உணரச்சியற்ற ஒரு சடப்பொருள் போல் – ஈவு இரக்கம் எதுவும் அறியா ஒரு அரக்கன் போல் – அவன் போரிட்டுக் கொண்டிருந்தான்.
சங்கிலிய மன்னன் சிறைபிடிக்கப்பட்ட அன்று கூட வருணகுலத்தான் ஒரு காத தொலைவில் நடந்த போரில் மாபெரும் வெற்றி கண்டிருந்தான். அவன் எதிரினில் அவனை வெல்லும் துணிச்சல் அன்று யாருக்கும் இருக்கவில்லை.

ஆயினும் துரோகத்தால் சங்கிலிய மகாராஜா வீழ்த்தப்பட்ட உண்மை வருணகுலத்தானிற்கு தாமதமாகவே தெரிந்தது. மிக்கபிள்ளை ஆராச்சியும், வருணகுலத்தானும் விரைந்து மன்னரை விடுவிக்க செல்கையில் மகாராஜாவை கொழும்பு கோட்டைக்கு கொண்டு சென்று விட்டதாய் தெரிவித்தனர். மன்னரைத் தேடிச் சென்ற அவர்களது அயராத முயற்சிகள் யாவும் காலம் கடந்துவிட்டன. மாமன்னரின் மரணச்செய்தியே அவர்கள் செவியை எட்டியது.

மாமன்னரின் மரணம் வெறுமனே செய்தியாக வந்தால் யார்தான் நம்புவார்கள்? அன்றும் யாரும் நம்பவில்லை.

களம்புகுந்து வெற்றி காணமுடியாத கயவர்கள் துரோகத்தின் போர்வையின் துணைகொண்டல்லவா ஈழவேந்தனை வீழ்த்திவிட்டார்கள்.

அரசரிற்கு உதவிப்படையாய் வந்தவன் அரசரின் முடிவோடு தஞ்சைக்கு திரும்பியிருக்க வேண்டும்.. ஆனால் வருணகுலத்தான் செல்லவில்லை. அவனது ஆடலரசி… அவள் கண்ட கனவு.. அன்று முதல் வருணகுலத்தான் கொண்ட பணி ஆனது. இராச்சியம், பரிபாலனம் எல்லாம் பறங்கியர் வசமானாலும்- அவளது கனவு அவனிடமிருந்து அகலவில்லை. எல்லாம் இழந்தபின்னும் அவள் நாட்டைக் காக்க அவன் நின்றான். தன்னவள் தாயாய் எண்ணிய நாட்டிற்காய் நின்று போராடுவதே தன்னவளின் உயிர் சுமந்து தான் நிற்பதன் சாட்சி என்று நம்பினான்.

யாழ்ப்பாணத்தை ஒட்டிய தீவுகளிலும் காடுகளிலும் நெடுநாள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த வருணகுலத்தான் பறங்கியர் ஸ்தம்பித்திப்போகும் படி தொடர் தொல்லைகளை விளைவித்துக் கொண்டே இருந்தான்.

மாருதவல்லி அரசரின் மகள் என்ற உண்மை வெளியில் தெரிந்த பின் சங்கிலிய மன்னரின் சகாப்தமும் சரித்திரமும் இன்னும் முடியவில்லை என்று கூறி மாருதவல்லியை வருணகுலத்தான் மணந்து கொள்ளும்படி எல்லோரும் வற்புறுத்தினர். அடியோடு மறுத்து விட்டான் வருணகுலத்தான். சித்திராங்கதா உள்ளத்தில் எழுந்த முதல் அச்சம் உண்மையாகக்கூடாது என்பதில் அவன் உறுதி கொண்டிருந்தான். அவள் தன் காதலையே தனக்கு துணையாய் விட்டுச் சென்றதாய் நம்பினான். அவன் அந்தக் காதலின் துணையிலேயே களமாடிக் கொண்டிருந்தான். தன் காதலி கண்ட கனவு தேசத்தின் கதாநாயகனாய் தன்னை உருமாற்றிக் கொண்டான். அவளது எண்ணப்படி தானே முடிக்குரிய வேந்தனாகி களங்கமற்ற சித்திராங்கதாவின் சத்தியத்தை சாட்சியாக்கி முடியாள வேண்டும் என்று முடிவு கொண்டான்.

சங்கிலியன் மறைவிற்குப் பின் போத்துக்கீசரின் நேரடிஆட்சிக்குள் யாழ்ப்பாணம் உட்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போத்துக்கீசர் அங்கிருந்த பல கோவில்களையே தமது உறைவிடமாக்கினர். இந்நிலையில் 1620 இன் தபசு காலத்தில் அதாவது யேசு உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு முன்வரும் நாளொன்றில் வருணகுலத்தான தன் முதலாவது அதிரடித்தாக்குதலை ஆரம்பித்தான்.

யாழ் பண்ணைத் துறையில் அமைந்திருந்த மாதாகோவிலுக்குள் பதுங்கியிருந்த போத்துக்கீசரை குறிவைத்தே இத்தாக்குதலை வருணகுலத்தான் நடத்தினான். எனினும் போத்துககீசருடன் இணைந்திருந்த வன்னியர் படையினர் ஆலயத்தின் பின்புறமாக உள்ளே நுழைந்தனர். இதனால் பலம் பெற்ற போத்துக்கேயர் வருணகுலத்தான் தாக்குதலை முறியடித்தனர்.

மனம் தளராத வருணகுலத்தான் மீண்டும் அடுத்த நாள் நல்லூரில் தங்கியிருந்த போத்துக்கீசரின் தளபதியான பிலிப் டி ஒலிவேராவின் மீது மற்றுமொரு தாக்குதலை நடத்தினான். தஞ்சைப்படையும் எஞ்சிய நல்லைப்படையும் கொண்டே அவன் போராட்டங்களை வேகமாக முன்னெடுத்தான். ஆனாலும் நவீன துப்பாக்கிகள் சகிதம் போராடிய போத்துக்கீசர்களே மீண்டும் வெற்றி பெற்றனர்.

எதனாலும் தன் இலக்கினின்று விலகாது தன்னவளின் கனவை நனவாக்க விடாது போராடினான் வருணகுலத்தான். தொடர்ந்த நாட்களொன்றில் பூநகரியில் ஈழவூர் என்னும் இடத்தில் பறங்கியருடன் மோதலில் ஈடுபட்டான். அந்த மோதலிலும் வெற்றி இல்லை. ஆனால் விவேகத்துடன் தப்பித்துக் கொண்டான்.

மீண்டும் 1620 கார்த்திகை மாதம் ஆயிரம் தஞ்சாவூர் படைகளை வருவித்து வருண குலத்தான் தெண்டைமானாற்றில் தரை இறக்கினான். வேகமாய் அப்படை நல்லூர் வரை முன்னேறிச் சென்று போராடியபோதிலும் அம்முறையும் அவனுக்கு தோல்வியே கிடைத்தது. எனினும் அந்தத் தாக்குதலில் பிலிப் டி ஒலிவேராவை பலமாக காயப்படுத்தினான் வருண குலத்தான். மீண்டும் அதே வேகத்தில் அடுத்த தாக்குதலுக்கு தன்னைத் தயாராக்கினான்.

போத்துக்கீசருக்கு எதிரான இத்தகைய கொரில்லாத் தாக்குதல்களை நல்லூர் சுதேச சமூகத்தின் உதவியுடனும் கடல் கடந்துவந்த தஞ்சைப்படைகளின் துணையுடனும் தொடர்ச்சியாக வருணகுலத்தான் மேற்கொண்டு வந்தான்.

வருணகுலத்தான் யாழ்ப்பாணத்தை வெல்ல முறையாக வியூகம் அமைத்து ஒரு பெருமுயற்சி செய்தான். நாகபட்டினத்திலிருந்து புதிதாக ஒரு பெரிய சேனையை வரவழைத்தான்.

நாகைபட்டணத்தில் இருந்து படை வந்து பருத்தித்துறையில் தரையிறங்கப் போகின்ற செய்தி ஒலிவேராவின் செவியை எட்டியது. உடல் காயமடைந்திருந்த ஒலிவேரா தனது மருமகனான தெமற்றே (Antonio de Mota Galuao) என்பவனோடு ஒருபறங்கியர்சேனையை அவசரமாய் அங்கனுப்பினான்.

நாகைபட்டிணத்திலிருந்து வந்த தஞ்சை சேனை வல்வெட்டித்துறையில் கரையிறங்கி அங்கிருந்த புட்கரணி குளக்கரையில் ஒரு பனந் தோப்பில் பாளையமிட்டிருந்தனர்.

இதனை எப்படியோ அறிந்த தெமொற்றா பறங்கிபடையுடன் அங்கு இரகசியமாக வந்து பதிவிருந்து மூன்றாம் சாமமாகும்போது போர்ப்பறை அறைந்து கூக்குரலிட்டான்.

தமிழர் படையினர் திகிலடிபட்டு குதிரைகளில் ஏறிப்போவோரும் திசைதப்பி அலைவோருமாய் கலைவுற்றனர். பறங்கி படையினர் பின்தொடர்ந்து அவர்கள் சிரங்கொய்தனர். எதிர்பாராமல் முற்றுகையிட்டுத் தாக்கிய போத்துக்கீசப் படையை முறியடிக்க நெடுநேரம் போராடினர் தமிழர் படையினர். நள்ளிரவில் நடந்த இத்தாக்குதலில் புட்கரணி குளக்கரையில் மூன்று மணித்தியாலத்தில் எண்ணூறு போர்வீரர்களும் அழிக்கப்பட்டதாக குவேரஸ் பாதிரியார் தன் நூலில் குறிப்பிடுகின்றார்.

விழுத்தப்பட்டவர்களுள் யாழ்ப்பாண சிங்காசனம் வகிக்கும் நோக்கமாய் வந்திருந்த சேனநாயகமும்(தளபதி) ஒருவனாவன் என வருணகுலத்தானின் வீரமரணத்தை வரலாறு கூறுகின்றது.

ஆம்.. தன்னவளின் தாய்மண்ணிலே வீரமரணமடைந்தான் வருணகுலத்தான்.

நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் கொண்ட பீரங்கிகளுடன் தற்துணிச்சலை மட்டும் துணையாகக் கொண்ட வருணகுலத்தானின் தொடர்ச்சியான இப்போராட்டங்கள் எதிரிகளாலும் அன்று மெச்சப்பட்டது.

நீண்டகூந்தலுடனும், அழகான தாடியுடனும் காணப்பட்ட வருணகுலத்தானது பெரிய தலை வெட்டப்பட்டு மரக்கிளை யொன்றில் குத்தப்பட்டு பறங்கியரால் காட்சிப்படுத்தப்பட்டது.

அந்த முகத்தைப்பார்த்த போர்த்துக்கேய கட்டளைத்தளபதி கொன்ஸ்டன் டீ சா
‘எப்படியொரு வீரப்பொலிவு.. இந்த கம்பீர முகத்தையுடைய மனிதன் இப்போது என் எதிரே நின்று விழிகளை திறந்து நோக்கினாலும் என் இதயம் அச்சத்தால் நடுக்கமுறும் என்பதில் சந்தேகம் இல்லை..’ என சபையில் வெளிப்படையாக கூறினான்.

கடைசி வரை தன்னவள் கடைசியாய் சொல்லிவிட்டுப்போன வாக்கிற்காய் தன் மரணம் வரை விடாது முயன்றான் வருணகுலத்தான். எல்லாவற்றையும் இழந்த பின்னும் நல்லை மண்ணில் அவன் பொக்கிசமாய் காத்து வந்தது ஒன்றைத்தான். சங்கிலிய மகாராஜாவின் இராஜவாள்!

தன் கரங்களால் தன் சிரத்தையே கொய்த வீரமங்கையின்- தன் நாயகியின் – மணந்து கொண்ட மனையாளின் கடைசி கரமும் குருதி கறையும் பட்ட அந்த வீரவாளினை அருச்சொத்தாய் எண்ணி பேணி வந்தான்.

அந்த வாளே அவள் காதலின் – வீரத்தின் அடையாளச் சின்னம். காதலும் நிறைவேறவில்லை. கடமையும் நிறைவேறவில்லை. அவள் கனவும் நிறைவேறவில்லை.

விதி எல்லாவற்றையும் நடத்தி முடித்து விட்ட வெற்றிக் களிப்பில் இருந்தது.

வருணகுலத்தான் மரணம் உறுதியான பின் இராஜவாள் இராஜமந்திரியார் கைகளால் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் சேர்க்கப்பட்டது. ஆடலரசி கண்ட
கனவு போல் தமிழர்களின் மானமும் வீரமும் தலைநிமிர்ந்து நிற்கும் அந்தநாளிற்கான
உறுதியான இராஜ கங்கணத்தை அன்னை வீரமாகாளியே அன்று முதல் ஏற்றுக் கொண்டு விட்டாள்.

நன்றி!
விடைபெறுகிறாள் சித்திராங்கதா..!

Related posts

தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 04

Thumi202121

கிளிநொச்சியில் நடமாடும் நூலகம்!

Thumi202121

சிதைக்கப்படும் சிலைகள்

Thumi202121

Leave a Comment